வேலையின்மை பிரச்சினை என்பது அத்தியாவசியமாகக் கருதத்தக்க கவலைக்குரிய விஷயம். ஆனால், திறனையும் கல்வியையும் சார்ந்தவை என்ற அடிப்படையில், இப்பிரச்சினையை அரசுக் கொள்கைகளால் விளைந்த மிகப் பெரிய தோல்வியின் அறிகுறியாகவே விமர்சிக்க வேண்டியுள்ளது.
சமீபத்தில் தேசியப் புள்ளியியல் ஆணையத்தின் முதன்மைப் பொறுப்புகளில் இருந்தவர்களின் பதவி விலகல்களுக்கு இடையே தேசிய மாதிரி ஆய்வு அலுவலக (என்எஸ்எஸ்ஓ) ‘தொழிலாளர் திறன் ஆய்வு 2017-18’ ஆய்வறிக்கையின் முடிவுகள் கசிந்தன. அதன் மூலம், கடந்த 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்திருப்பது தெரியவந்தது. தேர்தல் காலத்தில் கடுமையான விமர்சனக் கணைகளால் எதிர்க்கட்சிகள் தாக்கும் என்பதால், மத்திய அரசு அந்த ஆய்வறிக்கையை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது என்ற உண்மை அப்பட்டமாகத் தெரிந்தது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பேரழிவு விளைவுகள் தரும் கொள்கை முடிவுகள் என்றும், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு வித்திடக்கூடிய சூழலை உருவாக்கவல்லது என்றும் அடிக்கோடிட்டுக் காட்டிய பொருளாதார நிபுணர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதும்தான் இந்த ‘ஒளித்துவைக்கும்’ உத்தியின் நோக்கம்.
வேலையின்மை பிரச்சினை என்பது அத்தியாவசியமாகக் கருதத்தக்க கவலைக்குரிய விஷயம். ஆனால், திறனையும் கல்வியையும் சார்ந்தவை என்ற அடிப்படையில், இப்பிரச்சினையை அரசுக் கொள்கைகளால் விளைந்த மிகப் பெரிய தோல்வியின் அறிகுறியாகவே விமர்சிக்க வேண்டியுள்ளது. சமீபத்திய பட்ஜெட் விவரங்களையும், அரசு நிர்வாகக் கணக்குகளையும் உற்று நோக்கும்போது கல்விக்கான ஒதுக்கீடு அதல பாதாளத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளது தெளிவு. 2014-15 மத்திய பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது, 2019-20 பட்ஜெட்டில் கல்விச் செலவினங்களுக்கான ஒதுக்கீடு 4.6 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக சரிந்துள்ளது.
ஒருபக்கம், ஒட்டுமொத்த பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு படுபாதாளத்துக்குப் போகிறது. மறுபக்கம், ஒதுக்கப்பட்ட தொகையைக் கல்வித் துறைக்குள் பிரித்துப் பயன்படுத்தும் விதமும் மாறிக்கொண்டே இருக்கிறது. விளைவு சார்ந்த அணுகுமுறையைப் பின்பற்றினாலும் கூட, முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை கவனிக்கத் தவறினால், கல்வித்தர மேம்பாடு கேள்விக்குறியாகிவிடும்.
ஆசிரியர்கள் பற்றாக்குறை
தற்போது, தொடக்கக் கல்வி அளவில் ஏறத்தாழ 5 லட்சம் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. மொத்தமுள்ள 66.41 லட்ச ஆசிரியர்களில் 11 லட்சம் பேர் போதுமான பயிற்சிபெற்றவர்கள் இல்லை. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு ரூ.500 கோடியை தாண்டியது இல்லை. 2017-18 நிதியாண்டில் ரூ.478 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அணுகுமுறையால் உரிய பலன் கிட்டாது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.) மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.) ஆகிய திட்டங்களின் கீழ் ஆசிரியர் பயிற்சிகளுக்காக நாளொன்றுக்கு ஓர் ஆசிரியருக்கு முறையே ரூ.100 மற்றும் ரூ.300 மட்டுமே செலவிடப்படுகிறது. சமீபத்தில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (எஸ்.எம்.எஸ்.ஏ.) மூலமாக ஒட்டுமொத்த ஆசிரியர் பயிற்சிகளுக்கான ஒதுக்கீட்டில் 2 சதவீதத்தை மட்டும் ஆசிரியர் பயிற்சிகளுக்கு அரசு ஒதுக்கியிருக்கிறது.
உயர் கல்வி
உயர் கல்வித் துறையின் அரசின் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டதால், நிட்டி ஆயோக்கின் அடுக்கு முறையின் முன்னுரிமைகளிலும் மாறுதல்கள் ஏற்பட்டன. இத்தகைய அணுகுமுறையாலும், தொழில்நுட்ப கல்வி மீதான அரசின் அதீத நாட்டத்தாலும் 2014-15 மற்றும் 2019-20 இடையிலான ஐ.ஐ.டி.களுக்கான ஒதுக்கீடு 60% அதிகரிக்கப்பட்டது. இதே காலக்கட்டத்தில், பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் மாநிலப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு தொடர்ந்து குறைவாகவே இருந்தது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில்தான் ஐ.ஐ.டி.களுக்கும், ஐ.ஐ.எம்.களுக்குமான நிதி ஒதுக்கீடு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு வரையிலும் முந்தைய மூன்று ஆண்டுகளுக்கு உயர் கல்வி நிதியில் 50% அளவை ஐ.ஐ.டி.கள், ஐ.ஐ.ஐடி.கள், என்.ஐ.டி.கள் மற்றும் ஐ.ஐ.எம்.களுக்கு அரசு ஒதுக்கீடு செய்தது. இந்தக் கல்வி நிறுவனங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 3% மட்டுமே. உயர் கல்விக்கான ஒதுக்கீட்டில் சமத்துவம் பேணப்படுவதில்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஏற்கெனவே மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடே பெறக் கூடிய உயர் கல்வித் துறையில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பயிலாத 97% இந்திய மாணவர்களுக்குச் சொற்ப நிதியே ஒதுக்குவதால் அவர்களால் எப்படித் தரமான கல்வியைப் பெற முடியும்?
திறன் மேம்பாடு
தற்போதைய அரசு 2014இல் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தை உருவாக்கியது. 2022-க்குள் 50 கோடி பேருக்குத் தொழில்திறனை மேம்படுத்துவது என்ற 2009-ல் நிர்ணயிக்கப்பட்ட அதி தீவிரமான இலக்கை அடைவதற்கு துணைபுரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த இலக்கை 2017இல் கைவிட்ட அரசு, பிரதம மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 2022க்குள் ஒரு கோடிப் பேரின் தொழில் திறனை மேம்படுத்த வேண்டும் என்ற புதிய இலக்கை நிர்ணயித்துக் கொண்டது. நவம்பர் 30, 2018 வரை, இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் வெறும் 36 லட்சம். அவர்களில் சான்றிதழ் பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 26 லட்சம். தான் நிர்ணயித்த இலக்கை எட்டுவதற்கே இன்னும் 74% தேவை என்ற நிலையில்தான் அரசு உள்ளது.
கட்டமைப்புக் கோளாறும் உடனடித் தீர்வும்
சீரான கட்டமைப்புக் கோளாறின் விளைவாகவே இந்தியாவில் வேலையின்மை பிரச்சினை நீடித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் பற்றாக்குறையான நிதி ஆதாரத்தை ஒதுக்கீடு செய்வதும், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைச் சரியாகப் பயன்படுத்தத் தவறுவதும்தான் நடந்து கொண்டே இருக்கிறது. இதனால், பொதுக் கல்வி அமைப்புக்கு பெரும் சுமையும், தொழில் திறனற்ற சூழலும், திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்க முடியாத நிலையும் ஏற்படுகின்றன.
அரசு இந்தத் தோல்விக்கு பதில் சொல்லாமல், அடிப்படை வருவாய் என்ற பெயரில் ஒரு தொகையைத் தருவதோ அல்லது விவசாயிகளுக்கு நேரடியாக வங்கியில் பணத்தை செலுத்துவதோ எவ்வித பலனையும் தராது. மாறாக, திறன்மிகு தொழிலாளர் சக்தியை நிலையாக உருவாக்குவதும், அந்தத் தொழிலாளர்களுக்கு அர்த்தமுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும்படியான பொருளாதார திட்டங்களை வகுப்பதும்தான் அரசின் கடமையாக இருக்கும். தேர்தல் ஆண்டை கடக்கும் இவ்வேளையில், பசியில் வாடும் மனிதருக்கு எல்லா வேளையும் மீனைத் தருவதைத் தவிர்த்துவிட்டு, அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவதுதான் அறிவார்ந்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
https://indianexpress.com/article/opinion/jobs-employment-data-nsso-survey-narendra-modi-rahul-gandhi-5580552/?fbclid=IwAR2Hm6oMjirX1uplPgA9vpniQN_n0ToypiKTPGK5CCwTQ_1XnUFuoMBaxH4