‘அமெரிக்கக் கனவுக்கோர் இரங்கற்பா’ என்ற அவரது புத்தகம் அந்நாட்டின் ஆழமான பிரச்சினைகளை எடுத்துரைப்பது மட்டுமல்லாமல், இந்தியாவில் ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதன் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
உலக அளவில் மக்களுக்கு மிகவும் தெரிந்த அறிஞர் என்றால் அந்த இடத்தில் நோம் சோம்ஸ்கி இருப்பார். மெசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திலிருந்து வந்தவரான இந்த 90 வயதுச் சிந்தனையாளர், இதுவரையில் நூறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மொழியியல் குறித்த ஆய்வுகள், போர்களுக்கு இட்டுச் செல்லும் மொழி வளர்ச்சி, உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலைமை என்று பல்வேறு உள்ளடக்கங்களை அவரது புத்தகங்கள் பேசுகின்றன. சமுதாயத்திலும் ஜனநாயகத்திலும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றி ஆழமான, விரிவான புரிதல்களை ஏற்படுத்துவதால் அவரது நூல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.
‘அமெரிக்கக் கனவுக்கு இரங்கற்பா – செல்வமும் அதிகாரமும் குவிக்கப்படுவதன் 10 கொள்கைகள்’ (Requiem for the American Dream – The 10 Principles of Concentration of Wealth and Power) (2017) அப்படிப்பட்ட நூல்தான்.நெட்ஃபிளிக்ஸ் இணையத்தள ஆவணமாகவும் கிடைக்கிற இந்தச் சிறப்பான நூல், அமெரிக்காவின் ஜனநாயகப் பயிரை வாடி வதங்கச் செய்யும் ஆழமான பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறது. அத்தோடு, இந்திய ஜனநாயகத்தின் தற்போதைய பிரச்சினைகள் வேர்விட்டது எப்படி என்பதன் மீதும் சிறு வெளிச்சம் பாய்ச்சுவது கவனத்திற்குரியது.
புத்தகத்தின் அறிமுக அத்தியாயம், அரசாங்கக் கொள்கைகளில் பொதுமக்களின் கருத்து தாக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும் அப்படி நடக்காமல் போவது பற்றி விளக்குகிறது. இதற்குக் காரணம் செல்வாக்கு மிக்கவர்களும் அதிகாரம் படைத்தவர்களும்தான் என்கிறார் அவர். ஜனநாயகத்தை ஒருபோதும் விரும்பாதவர்கள் அவர்கள். ஜனநாயகத்திற்கு எதிரான மிகப்பெரும் அச்சுறுத்தல்கள் பற்றி இவ்வாறு தொகுத்தளிக்கிறார் சோம்ஸ்கி:
“செல்வக் குவிப்பு அதிகாரக் குவிப்பை விளைவிக்கிறது. குறிப்பாக, தேர்தல் செலவுகள் வானத்திற்கு எகிறுகிறபோது அரசியல் கட்சிகளுக்குப் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பாக்கெட்டுகளுக்குள் மேலும் ஆழமாகப் புகுந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த அரசியல் அதிகாரம் விரைவில் சட்டமாக மாறுகிறது.அது செல்வக் குவிப்பை அதிகரிக்கிறது. ஆக, வரிக் கொள்கை, கட்டுப்பாடுகள் தளர்வு, கார்ப்பரேட் ஆளுமை விதிகள் போன்ற நிதிக் கொள்கையும், எல்லா வகையான நடவடிக்கைகளும் – செல்வமும் அதிகாரமும் குவிக்கப்படுவதை அதிகரிப்பதற்காக வகுக்கப்படும் அரசியல் வழிமுறைகளும் – அதே வேலையைச் செய்வதற்கான அதிக அரசியல் அதிகாரத்தை விளைவிக்கின்றன. இதைத்தான் நாம் பார்த்து வருகிறோம்.எனவே, நம்மை இத்தகைய ‘நச்சு வளையம்’ சூழ்ந்திருக்கிறது.”
கொள்கையை எப்படி எப்போதுமே அசாதாரணமான அளவுக்குச் செல்வந்தர்கள் தங்களின் பிடியில் வைத்திருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் சோம்ஸ்கி. 1776இல் ஆடம் ஸ்மித் தமது ‘தேசங்களின் செல்வம்’ (Wealth of Nations) என்ற புகழ்பெற்ற நூலில், இங்கிலாந்தைக் கட்டியவர்களின் தலைமை இடத்தில் அந்நாட்டின் தயாரிப்புத்தொழில்துறையினர் இருந்தார்கள் என்பதை விளக்குகிறார். சமுதாயமே அவர்களின் உடைமையாக இருந்தது. இங்கிலாந்து மக்களுக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் தங்களுடைய நலன்கள் நன்கு பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்திக்கொண்டவர்கள் அவர்கள்.
“மனித குல எசமானர்கள்” என்று அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார் ஸ்மித். “எல்லாம் எமக்கே உரியது, எதுவும் வேறு எவருக்கும் இல்லை” என்பதே அவர்களது “வெறுக்கத்தக்க கொள்கை” என்றார் அவர். இன்று மனித குலத்தின் எசமானர்களாக இருப்பவர்கள் நிதி நிறுவனங்களும் பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களும்தான் என்கிறார் சோம்ஸ்கி. “தங்களுக்குப் பயனளிக்கிற, மற்ற அனைவருக்கும் தீங்களிக்கிற கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறவர்கள்தான் அவர்கள்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
பணமும் அதிகாரமும் குவிக்கப்படுவதற்கு இட்டுச் செல்பவை என்று தாம் கருதுகிற 10 கொள்கைகள் பற்றித் தமது புத்தகத்தில் விளக்குகிறார் நோம் சோம்ஸ்கி. புத்தகத்தைப் படிக்கப்படிக்க சோம்ஸ்கி அமெரிக்காவைப் பற்றி எழுதுகிறார் என்பதையே மறந்துவிடுகிறோம்.அந்த அளவுக்கு அந்தக் கொள்கைகள் அப்படியே இந்தியாவுக்குப் பொருந்துகின்றன.
கொள்கை எண் 1: ஜனநாயகத்தைச் சுருக்கு
‘ஏதென்ஸ் சுதந்திர மனிதர்களுக்கான ஒரு ஜனநாயகமாக இருக்குமானால், ஏழைகளால் ஒன்றிணைய முடியும், பணக்காரர்களின் உடைமையைக் கைப்பற்ற முடியும்’ என்று அரசியல் பற்றி அரிஸ்டாட்டில் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் சோம்ஸ்கி. அதற்கான தீர்வு, சமத்துவமின்மையைக் குறைப்பதுதான் என்றார் அரிஸ்டாட்டில்.இன்றைய “மனிதகுல எசமானர்கள்” முன்வைக்கிற தீர்வு, ஜனநாயகத்தைக் குறைப்பதுதான் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியாவில் நிச்சயமாக இந்த நிலைமைதான். குறிப்பாகக் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஜனநாயகத்தை வலுவாக வைத்திருக்கும் நிறுவன அமைப்புகள் தொடர்ச்சியான, பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி வந்துள்ளன. தகவல் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்துவது முதல், பல்கலைக்கழகங்களில் மாற்றுக் குரல்களை ஒடுக்குவது வரையில், இந்தியாவை இன்று நிர்வகிக்கிற அதிகார பீடங்கள் “ஜனநாயகத்தைக் குறைப்பது” என்ற வேலையைத் தங்களால் முடிந்த அனைத்தையும் பயன்படுத்துகின்றன. (இந்தப் பின்னணியில்தான் தில்லி மாநிலம் முழுவதுமுள்ள பொதுப்பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் அரசமைப்பு சாசனத்தைப் பாடமாகக் கற்றுக் கொடுப்பது என்று அந்த மாநில அரசாங்கம் முன்வைத்துள்ள கல்வித்திட்டம் ஒரு சிறிய ஆனால் மிக முக்கியமான நடவடிக்கையாகிறது. இந்தியக் குடிமக்களுக்கு அவர்களது இளம் பருவத்திலேயே தாங்கள் ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்கள், ஆதிக்கக் கும்பல்களின் கைப்பாவைகள் அல்ல என்ற எண்ணத்தைப் பதிய வைக்கிற முயற்சி இது.)
கொள்கை எண் 2: சித்தாந்தத்தைச் செதுக்கு
1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் பரவிய சமத்துவ இயக்கங்கள் அரசியல் அதிகார அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குப் பீதியை ஏற்படுத்தியது பற்றிக் குறிப்பிடுகிறார் சோம்ஸ்கி. “மிதமிஞ்சிய ஜனநாயகம் வளர்ந்துகொண்டிருக்கிறது”, அதைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி லூயிஸ் எப்.பவெல் ஜூனியர், அந்நாட்களில் வணிக நிறுவனங்களின் மிக முக்கியமான அமைப்பாக இருந்த வர்த்தக சபைக்கு (சேம்பர் ஆப் காமர்ஸ்) ஒரு எச்சரிக்கை அறிவிப்பையே வெளியிட்டார். ‘பவெல் பத்திரம்’ (பவெல் மெமொரண்டம்) என்று மோசமான பெயர் பெற்ற அந்த அறிவிப்பில், சமுதாயத்தின் மீது வணிகத்துக்கு இருந்த “பிடி” தளர்ந்து வருகிறது, அந்த சக்திகளைத் “தடுத்து நிறுத்த” ஏதாவது செய்தாக வேண்டும் என்று நீதிபதி கூறியிருந்தார்.
இந்தியாவில் இன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற கல்வி வளாகங்கள் மீது வீசப்படும் வார்த்தைகளைப் போலவே ஒலிக்கும் சொற்களில் நீதிபதி பவெல், “தாக்குதல் தொடுக்கிறவர்கள் வெவ்வேறு வகையினராக, பரவலாகச் செயல்படுவோராக இருக்கிறார்கள். அவர்களில் கம்யூனிஸ்ட்டுகளும் புதிய இடதுசாரிகளும் இதர புரட்சிக்காரர்களும் இருப்பது எதிர்பார்க்க முடியாததல்ல. அவர்கள் அரசியலாகவும் பொருளாதாரமாகவும் ஒட்டுமொத்த அமைப்பையே சீர்குலைத்துவிடுவார்கள்,” என்று எழுதியிருந்தார்.
இந்திய அரசமைப்பு சாசனத்தை உருவாக்கியோர் உறுதிப்படுத்திய மதச்சார்பின்மை மாண்புகள் திட்டமிட்ட முறையில் உருக்குலைக்கப்படுவதை இந்தியா நிச்சயமாக அண்மை ஆண்டுகளில் கண்டுவருகிறது. கறாரான, மதவாதத்தில் ஊறிய வலதுசாரி சித்தாந்தம், பொதுவாழ்வின் அனைத்து மட்டங்களிலும் வலுக்கட்டாயமாகப் புகுத்தப்படுகிறது.
கொள்கை எண் 3: பொருளாதாரத்தை உருமாற்று
அமெரிக்காவின் தலைமை வங்கியாகிய ஃபெடரல் ரிசர்வ் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் ஆலன் கிரீன்ஸ்பேன். 1997ல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் அவர், பொருளாதாரத்தைத் தன்னால் வெற்றிகரமாக நிர்வகிக்க முடிவது எப்படி என்று விளக்கம் அளித்திருந்தார். “தொழிலாளர்களுக்குப் பெருமளவுக்குப் பாதுகாப்பற்ற” நிலை என்பதை அடிப்படையாகக் கொண்டுதான் அந்த வெற்றியை நிலைநாட்ட முடிந்தது என்றார். கிரீன்ஸ்பேன் கூறியதை சோம்ஸ்கி சுருக்கமான சொற்களில் பின்வருமாறு எடுத்துக்காட்டுகிறார்:
“தொழிலாளர்ளைப் பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருங்கள். அப்போது அவர்கள் கட்டுப்படுவார்கள்.கண்ணியமான ஊதியம் வேண்டும் அல்லது கண்ணியமான வேலை நிலைமைகள் வேண்டும் அல்லது சங்கம் சேரும் வாய்ப்பு வேண்டும் என்று அவர்கள் கோர மாட்டார்கள். தொழிலாளர்களை உங்களால் பாதுகாப்பற்ற நிலையில் வைத்திருக்க முடியும் என்றால் அவர்கள் அதிகமாக எதையும் வலியுறுத்தப் போவதில்லை. அவர்கள் ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். அழுகலான வேலைகள் தரப்பட்டாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள், கண்ணியமான ஊதியம் கோர மாட்டார்கள். கண்ணியமான வேலை நிலைமைகளைக் கோர மாட்டார்கள். வேறு பலன்ககளைக் கோர மாட்டார்கள்.”
இதைச் சொல்லிவிட்டு, “ஒரு கோட்பாடு போல, இதுவே ஒரு ஆரோக்கியமான பொருளாதாரம் என்று கருதப்படுகிறது,” என்று மனம் கைத்துப்போன நையாண்டியோடு கூறுகிறார் சோம்ஸ்கி.
இதனை இப்போது இந்தியக் காட்சியோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்பது ஒருபுறமிருக்க, படுதோல்யிடைந்த 2016ஆம் ஆண்டின் பணமதிப்பு ஒழிப்பு நடவடிக்கையும், அதன் பின் ஆறு மாதங்களில் கொண்டுவரப்பட்டு மோசமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி விரிவிதிப்புமாகச் சேர்ந்து, ஒரு கோடி வேலைவாய்ப்புகள் தொலைந்துபோகச் செய்துள்ளன. இதனை பிரதமர் நரேந்திர மோடி உதிர்த்த, “பக்கோடா தயாரித்து ஒரு நாளுக்கு 200 ரூபாய் சம்பாதித்தாலும் அதுவும் வேலைவாய்ப்புதான்” என்ற அரிய கருத்தோடும் ஒப்பிட்டுப்பார்க்கலாம். இந்தியாவிலும் பொருளாதாரம் எப்படி உருமாற்றப்படுகிறது என்ற வியப்பு ஏற்படாமலிருக்காது.
கொள்கை எண் 4: சுமையைத் தோள் மாற்று
அமெரிக்காவில் எப்படிப் பெரும் பணக்காரர்கள் குறைவாக வரி செலுத்தவும், இதர பகுதி மக்கள் தொடர்ந்து பெரும் வரிச்சுமைகளை ஏற்கவும் வழி செய்வதாக வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டது என்பதை எடுத்துக் கூறி அதனைக் கடுமையாகச் சாடுகிறார் சோம்ஸ்கி. இந்தியாவிலும் ஒவ்வொரு ஆண்டும் பெரும் வரிச்சுமைகளை நடுத்தர வர்க்கத்தினர்தான் தொடர்ந்து சுமக்கிறார்கள். மிகக் பெரும் பணக்காரர்களோ தங்கள் வளத்தைப் பெருக்கிக்கொண்டே போகிறார்கள். கடந்த ஆண்டு இந்தியாவின் பெருங்கோடீசுவரர்கள் பட்டியலில் மேலும் 18 பேர் இணைந்தனர்.தற்போது அவர்களின எண்ணிக்கை 119. அவர்களது மொத்த சொத்து மதிப்பு 2018-19 நிதியாண்டுக்கான மொத்த மத்திய பட்ஜெட்டை (ரூ.24,42,200 கோடி) விட அதிகம்.
உண்மையிலேயே சோகம் என்னவென்றால் – இந்திய மக்கள்தொகையில் 1% அளவுக்கே இருக்கிற இந்த ஆகப்பெரும் பணக்காரர்கள் தங்களது சொத்துகள் மீது கூடுதலாக வெறும் 0.5% வரி மட்டுமே செலுத்தினால்கூடப் போதும் – நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்திற்காக அரசாங்கம் செலவிடுவதை இரு மடங்காக்க முடியும், அந்த அளவுக்குப் பணம் கிடைத்துவிடும்.
சோம்ஸ்கியின் அறிவுரை நேரடியானது.
“வேலைவாய்ப்புகளையும் முதலீடுகளையும் அதிகரிக்க விரும்புவீர்களானால், தேவைக் கோரிக்கையை அதிகப்படுத்துங்கள். பொருள்களுக்கான தேவைக் கோரிக்கை இருக்குமானால், முதலீட்டாளர்கள் அதை ஈடுகட்டுத் தேவையான அளவுக்கு முதலீடு செய்யத் தயராக இருப்பார்கள். முதலீட்டை அதிகரிக்க விரும்புவீர்களானால், பணத்தை ஏழைகளிடமும் உழைப்பவர்களிடமும் கொடுங்கள். அவர்கள் உல்லாசப் படகுகளுக்காகவும் கரிபீயக் கடற்கரைப் பகுதிகளில் விடுமுறைகளைக் கழிப்பதற்காகவும் அல்லாமல், அந்தப் பணத்தைப் பொருள்களுக்காகச் செலவு செய்வார்கள். தாக்குப் பிடித்து உயிர்வாழ்ந்தாக வேண்டும் என்பதற்காகத் தங்களது வருவாயைச் செலவு செய்வார்கள். அது உற்பத்தியை ஊக்குவிக்கும், முதலீடுகளை ஊக்குவிக்கும், வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படுவதை ஊக்குவிக்கும், இன்னும் பல ஆக்கபூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும்.”
இந்தியாவுக்கும் ஏற்ற அருமையான அறிவுரை அல்லவா இது?
கொள்கை எண் 5: ஒருமைப்பாட்டைத் தாக்கு
ஒருமைப்பாடு என்றால் “மற்றவர்கள் மீது அக்கறை” என்று விளக்கமளிக்கிறார் சோம்ஸ்கி. ஏழைகளுடனும் பொருளாதாரத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுடனும் ஒருமைப்பாடு வெளிப்படுத்தப்பட வேண்டும், அவர்களுக்கு அது மிகமிகத் தேவைப்படுகிறது. மாறாக, அதை ஒழித்துக்கட்டுகிற முயற்சிகளில் கடுமையாக ஈடுபடுகிறவர்கள் “எசமானர்கள்”. அவர்களுக்கு அதனால் எந்தப் பயனுமில்லை என்கிறார் அவர். “ஏதேனும் ஒரு அமைப்பை நீங்கள் அழிக்க விரும்புகிறீர்களா? முதலில் அதற்கான நிதித்தளத்தைத் தகருங்கள். அதன் பின் அந்த அமைப்பு செயல்படாது.மக்கள் ஆத்திரப்படுவார்கள். வேறு ஏதாவது வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அந்த அமைப்பைத் தனியார்மயமாக்குவதற்கு இதுவே ஏற்ற வழி,” என்று கூறுகிறார்.
இதற்குச் சரியான எடுத்துக்காட்டுதான் கடந்த ஐந்தாண்டு கால மோடி அரசாங்கம். ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான நிதியை வெட்டியது; கிட்டத்தட்ட அந்தத் திட்டங்களையே அழித்துவிட்டது. உதாரணத்திற்குக் கல்வித்துறையை எடுத்துக்கொள்ளலாம். 2015-16 முதல் ஆண்டுதோறும் கல்விக்கான மத்திய நிதி ஒதுக்கீடு மொத்த பட்ஜெட்டில் 4%க்கும் குறைவாகவே இருந்து வருகிறது. 2018-19இல் ஒதுக்கீடு செய்யப்பட்டது 3.5% மட்டுமே. இது கடந்த பத்தாண்டு காலத்தில் செய்யப்பட்டதிலேயே மிகக்குறைவான ஒதுக்கீடாகும். (இங்கே மறுபடியும் தில்லி மாநில அரசாங்கத்தின் நடவடிக்கையை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. பொதுப் பள்ளி முறையை மேம்படுத்துவது என்று முடிவு செய்த தில்லி மாநில அரசாங்கம், அதற்காக அரசாங்கப் பள்ளிகளில் இன்றைய நவீன வசதிகளுடன் ஆயிரக்கணக்கான வகுப்பறைகளைக் கட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. இதுவரையில் மிகவும் புறக்கணிக்கப்பட்டிருந்த பள்ளிகள் அவை. அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. “மகிழ்ச்சிப் பாடத்திட்டம்” ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவெல்லாம் செயல்பாட்டுடன் இணைந்த ஒருமைப்பாடு என்பதற்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும்.)
கொள்கை எண் 6: முறைப்படுத்துவோரை விரட்டு
முக்கியமான ஜனநாயக அமைப்புகளைக் கீழ்நிலைக்குத் தள்ளுவது, அவற்றின் உயர் பதவிகளில் தனது சித்தாந்தவாதிகளை நியமிப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம், “முறைப்படுத்துவோரை விரட்டுவது” எப்படி என்று உலகத்துக்கே ஒரு மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தற்போதைய மத்திய அரசாங்கம்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகல், சிபீஐ இயக்குநர் அலோக் வர்மா நள்ளிரவு நீக்கம் போன்ற நிகழ்வுகளும், நாடு முழுவதும் ஆராய்ச்சி, பண்பாடு, கல்வி சார்ந்த நிறுவனங்களில் எண்ணற்ற இந்துத்துவா ஆட்கள் நியமனங்களும் மேற்படி கொள்கையை இந்த அரசாங்கம் எவ்வளவு முழு மனதோடு கடைப்பிடிக்கிறது என்பதற்குச் சான்றுகளாகும்.
கொள்கை எண் 7: தேர்தலைப் புரட்டு
அமெரிக்காவில் தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றில் (பக்ளீ எதிர் வேலியோ) நீதிமன்றங்கள் விசித்திரமான தீர்ப்பை அளித்தன (1970). அதாவது, பணம் என்பதேகூட ஒரு பேச்சு வடிவம்தான். நிறுவனங்கள் தாங்கள் விரும்புகிற அளவுக்குப் பணம் செலவிடுகிற பேச்சுரிமையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதே அந்தத் தீர்ப்பு!
அந்தத் தீர்ப்பு பற்றிக் கருத்துக்கூறிய சோம்ஸ்கி, “இதன் அர்த்தம் என்னவென்றால், சும்மாவே தேர்தல் முடிவுகளை விலைக்கு வாங்கிவந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இனி எவ்விதத் தடையுமில்லாமல் சுதந்திரமாக அதைச் செய்ய முடியும் என்பதுதான். எஞ்சியிருக்கும் ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்படுகிற மிகப்பெரும் தாக்குதலே இது,” என்றார்.
இந்தியாவிலும்கூட, 2017-18இல் மத்திய அரசு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அந்தப் பத்திரங்களை வாங்குவதன் மூலம் கட்சிகளுக்கு நிதியளிக்கிற ஏற்பாடு அது. பல்வேறு கட்சிகளும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்தத் திட்டத்தால் மிகப் பெரிய அளவுக்கு ஆதாயம் அடைந்தது பாரதிய ஜனதா கட்சிதான். வெளியிடப்பட்ட மொத்தப் பத்திரங்களில் 94.5% பங்குகள்அந்தக் கட்சிக்கே கிடைத்தன. அவற்றின் மதிப்பு சுமார் 210 கோடி ரூபாய். இந்தத் திட்டத்தில் பத்திரங்களை வாங்கும் நிறுவனங்களின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் என்பதால், மேற்படி பத்திரங்களை வாங்கியவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியவரப் போவதில்லை. கார்ப்பரேட் முதலாளி – அரசியல்வாதி கூட்டுக்கு இதை விடவும் சரியான எடுத்துக்காட்டு வேறு எதுவும் தேடினாலும் கிடைக்காது.
கொள்கை எண் 8: உழைப்பாளிக் கும்பலை ஒழுங்குபடுத்து
அமைப்பு சார் தொழிலாளர் கூட்டம், அது எவ்வளவு குறைபாடுகளோடு இருந்தாலும், அதுதான் அமைப்பாகத் திரண்டுள்ள படையாகும்.கார்ப்பரேட் அட்டூழியத்திற்கு அணை போடக்கூடியதாகும்.தொழிற்சங்கங்கள் மீதும், திரட்டப்பட்ட தொழிலாளர் கூட்டத்தின் மீதும் தீவிரமான, கிட்டத்தட்ட வெறித்தனமான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. அவை ஜனநாயகப்படுத்துகிற சக்தியாக இருப்பதே அந்தத் தாக்குதல்களுக்குக் காரணம். தொழிலாளர் உரிமைகளுக்கும் பொதுவாக மக்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்பான அரண்களை வழங்குபவை அந்த அமைப்புகள்தான்.
தமிழகத்தின் தூத்துக்குடி நகரில் சென்ற ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலை முன் போராடிய தொழிலாளர்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட காட்சி, வல்லமை மிக்க பன்னாட்டு நிறுவனங்களைக் களிப்போடு வைத்திருப்பதற்காக, உழைப்பாளிக் கும்பலை ஒழுங்குபடுத்தத் தேவையான எந்த வன்முறையையும் பயன்படுத்த அதிகாரத்தில் உள்ளோர் தயங்க மாட்டார்கள் என்பதற்கு சாட்சியாகும்.
கொள்கை எண் 9: ஒப்புதலை உருவாக்கு
விளம்பரப்படுத்துவது பற்றிப் பேசும் சோம்ஸ்கி, அதன் நோக்கம் தகவல்கள் போய்ச்சேராத நுகர்வோரை உருவாக்குவதுதான் என்கிறார். அவர்கள் பொருத்தமற்ற நுகர்பொருள்களைத் தேர்ந்தெடுக்கிறவர்களாக மாற்றப்படுவார்கள். விளம்பர வணிகம் சார்ந்தவர்கள் (மக்கள்தொடர்புத் துறையினர், அதிகார பீடத்தில் ஆள்பிடித்துத் தருகிறவர்கள் ஆகியோரும் சேர்ந்து) தேர்தல்களை நடத்துகிறார்கள் என்றால், அவர்களும் இதையேதான் செய்கிறார்கள். தகவல்கள் போய்ச் சேராத வாக்காளர் கூட்டத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கம். அந்தக் கூட்டம் பொருத்தமற்ற தேர்வுகளைச் செய்யும் – பல நேரங்களில் தனது நலன்களுக்குக் கேடாகக்கூட தவறான முடிவுகளை எடுக்கும். 2014 தேர்தலின்போது மோடியின் “அச்சே தின் ஆனா வாலே ஹைன்” (நல்ல நாள் வந்துவிட்டது) என்ற பாட்டைத் தாங்களும் சேர்ந்து பாடியவர்கள், இன்று அந்த நல்ல நாள் எங்கே வந்தது, எங்கே போனது என்ற திகைப்பில் இருக்கக்கூடும்.
2014 தேர்தலில் அதிரடி வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்த மோடி அரசாங்கம் இன்னமும் அந்தப் பிரச்சார உத்தியைக் கைவிடவில்லை. அதன் பிறகு கடந்த ஐந்தாண்டுகளில் இந்த அரசாங்கம் ஒப்புதலைச் செயற்கையாக உருவாக்குவதற்கான விளம்பரங்களில், 4,300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. தொடர்ந்து பணம் செலவு செய்துகொண்டிருக்கிறது.
கொள்கை எண் 10: மக்களை ஓரங்கட்டு
2014இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை பேராசிரியர் மார்ட்டின் கிலேன்ஸ், பொதுமக்கள் அணுகுமுறைக்கும் அரசுக் கொள்கைக்கும் இடையேயான தொடர்பு பற்றி ஒரு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களில் சுமார் 70 சதவீதத்தினருக்கு அரசாங்கக் கொள்கையை வகுப்பதில் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு காட்டியது. அப்படிப்பட்டவர்கள் மற்ற நாடுகளிலும் இருக்கக்கூடும். அவர்களுக்கே அது தெரிந்திருக்கவும் கூடும்!
கொள்கைகளில் தாக்கம் செலுத்த முடியாத இந்த நிலைமை எங்கே இட்டுச் சென்றது என்றால், பொதுமக்கள் ஆத்திரவசப்பட்டார்கள். அவர்களது இலக்கற்ற கோபம் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதாக, சிக்குகிற மற்றவர்களையும் தாக்குவதாக உருமாறியது. சமூக உறவுகளில் அரிமானம் ஏற்பட்டது. சமுதாய நல்லிணக்கம் சிதைந்துபோனது. ஆனால் (கொள்கையிலிருந்து மக்களைப் பிரித்துவைப்பதன்) நோக்கமே அதுதான் – மக்களிடையே பரஸ்பர வெறுப்பையும் பயத்தையும் ஏற்படுத்துவது.
இதற்கு, மோடி ஆட்சிக் காலத்தை விடப் பொருத்தமான சான்றைக் கண்டுபிடிப்பது கடினம்.
நம் ஜனநாயகத்தை மறுபடியும் சரியான தடத்தில் ஏற்ற வேண்டுமானால், பொதுமக்களாகிய நாமும் நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், மேலே பார்த்த பத்துக் கொள்கைகளுக்கும் நேரெதிராகச் செயல்பட்டாக வேண்டும். ஜனநாயகத்தை விரிவுபடுத்துவது, ஒருமைப்பாட்டைக் கட்டுவது, ஜனநாயக அமைப்புகளில் தன்னாட்சியை நிறுவுவது, உச்சப் பணக்காரர்களிடமிருந்து வரி வசூலிப்பது, வறுமையில் வாழ்வோருக்கான சமூகப் பாதுகாப்பை உருவாக்குவது, சுதந்திரமான நேர்மையான தேர்தல்களை உறுதிப்படுத்துவது, ஒதுக்கப்பட்ட மக்களுக்குக் குரல் கொடுப்பது, இந்தியப் பொருளாதாரத்திலும் சமுதாயத்திலும் வாய்ப்புகளை ஏற்படுத்துவது – இவற்றில்தான் நமக்கான மீட்சி இருக்கிறது.
இதுவே இந்தியாவில் அடுத்த அரசாங்கத்தின் செயல்திட்டமாக இருக்குமானால் நல்லது
ரோஹித் குமார்
(கட்டுரையாளர் உளவியல் சார்ந்த ஆசிரியர். பள்ளிக் குழந்தைகளுக்கு உணர்ச்சிப்பூர்வ அறிவுத்திறன், பதின்பருவப் பிரச்சினைகள் குறித்து வகுப்புகள் நடத்தி, பள்ளிகள் குழந்தைகளைச் சிறுமைப்படுத்துகிற இடமல்ல என்ற சூழலை உருவாக்க உதவுகிறவர்)
நன்றி: தி வயர்
தமிழில்: அ. குமரேசன்
அமெரிக்க அறிஞரின் சிந்தனைகள் வியக்கவைக்கும் உண்மையான புரிதல்களதான்…
Nice !
நன்றி..