நிச்சயமற்ற தன்மைகளே நிறைந்து காணப்படும் 2019 மக்களவைத் தேர்தலில், எந்தவித ‘அலை’யும் வீசப்போவதில்லை என்பது மட்டுமே நிச்சயம். பிரதமர் நரேந்திர மோடிக்குப் பேராதரவு பொங்கி எழவோ அல்லது அவருக்கு எதிராக பெருந்திரளான கடுங்கோபமோ இல்லை. இதேபோன்ற நிலையுடன்தான் காங்கிரஸ் 2014 தேர்தலை எதிர்கொண்டது நினைவுகூரத்தக்கது.
அதேவேளையில், கள நிலவரத்தைக் காணும்போது, பொருளாதார விவகாரங்களில் பாஜக அரசு மீது கடுமையான அதிருப்தியும் கொந்தளிப்பும் நிலவுவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக, வேலையின்மை பிரச்சினைகளும், விவசாயிகளின் துயரங்களும் முன்னிலை வகிக்கின்றன. இவை பெரும் பின்னடவைத் தரக்கூடியவை. பாஜக அரசு தன் இடைக்கால பட்ஜெட்டில் நலத் திட்டங்களைத் தெளித்து, நிலைமையைச் சமாளிக்க முயற்சி செய்தது. அக்கட்சியிடம் இன்னோர் உத்தியும் இருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி நிலை குறித்த தலைப்புச் செய்திகள் கவனம் பெறாத வகையில், பிரச்சனைகளைத் திசைதிருப்புதல் எனும் பாணியைக் கையிலெடுப்பதே அந்தத் தேர்தல் வியூகம். இருக்கவே இருக்கிறது ‘இந்துத்துவா’ எனும் தேர்தல் தலைப்புச் செய்திகள். அத்துடன் இன்னொரு முக்கியமான விவகாரம் ‘ஊழல்’.
சாரதா சிட் ஃபண்ட் ஊழல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்கத்தில் சிபிஐ அதிரடி காட்ட முற்பட்டதும், பண மோசடி புகாரில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதும் அடுத்தடுத்து அரங்கேறியதும் பாஜகவின் வியூகத்தின் ஒரு பகுதியே. ஆனால், இதை பாஜக செயல்படுத்திய நேரம் முற்றிலும் தவறானது என்பதுதான் சிக்கல்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சாரதா சிட் ஃபண்ட் வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் நேரில் தங்கள் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை என்று சிபிஐ வாதிடுவது தர்க்க ரீதியில் சரியே. ஆனால், 2014இல் பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை இப்போது வாதத்திற்கு முன்வைப்பதில் இருந்தே அதன் கபட நாடகம் வெளிப்படுகிறது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடவடிக்கைகள் பெரிதாக எதுவுமில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதேவேளையில், அந்த வழக்கில் தொடர்புடைய முகுல் ராய் திருணமுல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய பிறகு, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதும் நடந்தேறியது. தூசி படிந்த வழக்குக் கோப்புகளை திடீரென எடுத்து, வேலைகளைத் துரிதப்படுத்துவதிலிருந்தே பாஜகவின் தாக்குதல் முறையைக் கண்டுகொள்ள முடிகிறது.
ஆம், மம்தா பானர்ஜி தலைமையிலான தர்ணாவில் காவல் துறை அதிகாரிகள் இணைந்தது முறையற்ற செயல்தான். ஆனால், அரசியல்மயமாக்கப்படுவதாக மேற்கு வங்கக் காவல்துறை மீது குற்றம்சாட்டும் பட்சத்தில், பாஜகவின் அரசியல் சதியாட்டத்திற்கான ஆயுதக் கருவியாகச் செயல்படும் சிபிஐ மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குவது அவசியம். இந்த வெற்று ஆட்டத்தில், பாஜகவால் நம்பகமான வழக்கை உருவாக்குவது என்பது மிகவும் கடினம்.
இதே தவறுதான் ராபர்ட் வதேரா விவகாரத்திலும் நடந்திருக்கிறது. 2014 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் சோனியா காந்தி குடும்பத்தையும், பிரியங்கா காந்தியின் கணவரையும் கிண்டல் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மோடி. காங்கிரஸை கலாய்க்கும்போது ‘மருமகன்’ எனும் சொல்லை அடிக்கடி பயன்படுத்த அவர் தவறவில்லை. அந்த நேரத்தில் வதேரா மீது மக்களிடம் அனுதாபம் அவ்வளவாக இல்லை. மோடி அரசின் துவக்க ஆண்டுகளில் வதேராவிடம் விசாரணை அமைப்புகள் விசாரித்தது, அரசியல் ரீதியிலும் நோக்கத்தக்கதுதான். சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்கில் வதேரா மீது குற்றம்சாட்டப்பட்டப்போது, ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சியில் இருந்தது. எனினும், இரு மாநிலங்களுமே பல ஆண்டுகளாக வதேரா மீதான வழக்கை முடிவுக்குக் கொண்டுவரவில்லை.
அதேபோல், லண்டனில் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரியுடன் தொடர்பு இருப்பதாகவும், அங்கே பினாமி பெயரில் சொத்து இருப்பதாகவும் வதேரா மீது எழுந்த சர்ச்சைகளும் புகார்களும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பேசப்பட்டவை. இது தொடர்பான செய்திகள் 2016இல் செய்தித் தொலைக்காட்சிகளில் வெளியாகின. எனவே, உறுதியான வழக்கைப் பதிவு செய்யும் வகையில் வலுவான ஆதாரங்கள் இருக்கும்பட்சத்தில், இவ்வளவு காலமாக பாஜக அரசும், சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளும் என்ன செய்துகொண்டிருந்தன?
வதேரா மீது விசாரணைகளை இப்போது முடுக்கிவிடப்படுவதை, மக்களவைத் தேர்தலையொட்டிய பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசத்துடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது இயல்பானதே. உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி தனது கணவருடன் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு வருகிறார்; தைரியமான அரசியல் கருத்துகளை உதிர்க்கிறார்; பின்னர், அங்கிருந்து தனது கட்சியின் தலைமையகத்துக்குப் பறக்கிறார். இந்த விவகாரத்தை எதிர்கொள்வதில் தானோ அல்லது தான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியோ எந்த விதத்திலும் வெட்கப்படவில்லை என்று பிரியங்கா தனது கருத்தை மிகத் தெளிவாக முன்வைக்கிறார். இது, மோடி அரசுக்கு எதிராகச் சவால்விடும் தொனியேயன்றி வேறேதுமில்லை. தன் கணவருக்கும் தன் குடும்பத்துக்கும் தான் உறுதுணையாக நிற்பதாக ஊடகங்களிடம் தெரிவிக்கிறார். அவர் இடத்தில் இருக்க நேர்ந்தால், கோடிக்கணக்கான இந்தியர்களும் அதையேதான் சொல்லியிருப்பார்கள்.
பிரியங்கா காந்தி அரசியல் பதவியில் பொறுப்பேற்கும் அதே வாரத்தில், வதேராவுக்கு எதிரான வேலைகளைச் செய்யத் தொடங்கி, பாஜக தவறான கணக்குப் போட்டுவிட்டது. இது பாஜகவின் உள்நோக்கம் மீது சந்தேகம் கொள்ள வைத்தது மட்டுமின்றி, அவர்களது பீதியையும் பறைசாற்றிவிட்டது.
உறுதியான ஆதாரங்கள் ஏதுமின்றி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சிபிஐ அமைப்போ அல்லது அமலாக்கத் துறையோ வழக்கைக் கட்டமைக்க முயற்சி செய்வது நடக்கிறது. இவை அனைத்துமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அரங்கேறுகின்றன. பாஜக தான் எய்த அம்புகளால் தானே தாக்கப்படும் அபாயத்தில் சிக்கியிருக்கிறது. இந்த வழக்குகள் மீதான எந்தச் செயல்பாடும் இல்லாமல் இத்தனை ஆண்டுகாலமாக அரசு முடங்கியிருந்ததன் காரணம் தெரியாமல் வலதுசாரி ஆதரவாளர்கள் விழிப்பிதுங்கிக் கிடக்கின்றனர்.
பதவிக் காலம் முடிவுக்கு வரும் தறுவாயில் ஊழலுக்கு எதிராகப் போர் முரசு கொட்டுவது சாமர்த்தியமான அரசியல் அல்ல. இத்தகைய செயல்கள் எதிரணிக்குச் சாதகமாகிவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பர்கா தத்
நன்றி: இந்துஸ்தான் டைம்ஸ்
https://www.hindustantimes.com/columns/the-bjp-has-got-its-timing-on-corruption-all-wrong/story-oqzIj0kf7Oip8x432mEtaJ.html