தேர்தல் நெருங்கிவரும் வேளையில், 45 ஆண்டுகளில் இந்தியா சந்தித்ராத மோசமான வேலையில்லா நெருக்கடியை உருவாக்கியதாகப் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இந்தியத் தலைநகரான டெல்லியின் புறநகர்ப் பகுதியின் ஒரு அமைதியான தெருவோரத்தில், சீரியஸான முகத்துடனான ஒரு இளைஞன் (grim-faced), தள்ளு வண்டிக் கடையில் வேகமாக முட்டைச் சிற்றுண்டியைத் தயார் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். கை வேலை செய்துகொண்டிருக்கும்போதே சுவைஇ எப்படி இருக்கிறதென்று வாடிக்கையாளர்களின் கருத்தையும் மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தி பேசும் நிலப்பகுதியில், மக்கள்தொகை மிகுந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு அருகில் இருக்கும் நோய்டாவிலுள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற 21 வயதான சாகர் குமார் கோபத்துடன் இருக்கிறார்.
தன்னுடைய தம்பி, தங்கைகளுக்குப் பள்ளிக் கட்டணம் செலுத்தவும், நோயுற்ற தந்தைக்கான சிறுநீரக டயாலிசிஸ் சிகிச்சைக்கான பணத்தைக் கொடுக்கவும் கடந்த ஓராண்டாகத் தெருவோர உணவுக் கடையில் வேலை செய்துகொண்டிருக்கிறார் சாகர். அரசாங்க வேலைக்காகப் பொறுமையிழந்து காத்துக்கொண்டிருக்கிறார்.
“நான் இரவில் படிப்பேன். மற்ற நேரத்தில் எல்லாம், இந்த வண்டிக் கடையில் உணவு விற்று ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிப்பேன். தெருவோரத்தில் முட்டை விற்பதற்கு வணிகவியல் பட்டம் எதற்கு?” என்கிறார் சாகர்.
புது தில்லி துக்லகாபாத் சேரியில், மத்திய காலத்தைச் சேர்ந்த கோட்டையின் எஞ்சிய பகுதிகளைச் சுற்றி வாழ்ந்துகொண்டிருக்கும் 24 வயதான சீமா, பகுதி நேரச் சமையல்காரராகப் பணிபுரிகிரார். விரைவில் அலுவலகச் செயலாளராக வேலை பெற விரும்புகிறார்.
“நான் வேகமாக டைப் செய்வேன். மனக்கணக்கும் நன்றாகப் போடுவேன். அரசு அலுவலகத்தில் எனக்கு ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் குடும்பம் படாயுனிலிருந்து (உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஊர்) டெல்லிக்கு வந்தது. ஆனால், இப்போது வரை எனக்கு வேலை கிடைக்கவில்லை. இங்கு ஒரு பெண்ணாக வேலை தேடுவதில் பாதுகாப்பு பிரச்சினையும் இருக்கிறது” என்கிறார் அவர்.
வெளியிடத் தடைசெய்யப்பட்ட கணக்கெடுப்பு
பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இந்தியா, ஒவ்வொரு ஆண்டும் வேலைச் சந்தைக்குள் நுழையும் 12 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் தோல்வியடைந்திருக்கிறது.
ஆண்டுதோறும் 10 மில்லியன் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாக வாக்குறுதியளித்து 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மீது, பல தசாப்தங்களாக நிலவாத மோசமான வேலையில்லா நெருக்கடியை உருவாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மையின் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தற்போது தொட்டிருப்பதாகக் கடந்த வாரம் கசிந்த அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
முதல்முறையாக, இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்களில் (15 வயதிற்கு மேல்) பாதிப் பேர் எந்த விதப் பொருளாதார செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்று, தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் தரவு பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவின் முதன்மையான அரசாங்க கொள்கை ஆய்வுப் பிரதிநிதியான நிட்டி ஆயோகிலுள்ள அலுவலர்கள், மேற்சொன்ன அறிக்கை இறுதியானது இல்லை என்றும், போதுமான அளவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
முன்னாள் நிதி அமைச்சர், அருண் ஜேட்லி, இது “தவறான தகவல்” என்று சொல்லி இந்தக் கணக்கெடுப்பு முடிவுகளை நிராகரித்துவிட்டார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகின் மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சியான 12% என்னும் அளவில் இந்தியா வளர்ந்துவருகிறது என்கிறபோது வேலைகள் உருவாக்கப்படவில்லை என்பது மிகப் பெரிய பொருளாதார அபத்தமாகும்”, என்று ஜேட்லி இந்தியச் செய்தி நிறுவனமான ANIயிடம் கூறினார்.
“வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை என்பது உண்மையென்றால், சமூக அமைதியின்மை ஏற்படும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த விதமான பெரிய சமூக கிளர்ச்சியும் ஏற்படாமல் அமைதியான காலமாக உள்ளது” என்கிறார் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கும் ஜேட்லி.
‘எங்களுக்கு வேலைகள் வேண்டும்’
பெருகிவரும் வேலை நெருக்கடி குறித்த எச்சரிக்கைகள் ஒன்றும் புதிதல்ல. தொழிலாளர் பங்கு விகிதம், அதாவது வேலைக்குச் செல்ல விருப்பமுள்ள நபர்களின் எண்ணிக்கை, 42%ஆகக் குறைந்துள்ளதாக இந்திய பொருளாதாரம் கண்காணிப்பு மையம் (CMIE) டிசம்பர் மாதத்தில் தெரிவித்தது.
மார்ச் 2018இல், பொருளாதார நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இணையதளமான CMIE மூலம் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், ஏறத்தாழ 31 மில்லியன் இந்தியர்கள் வேலை தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
கடந்த மாதம், இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை, பணமதிப்பிழப்பின்போது 85% பணம் தடை செய்யப்பட்டதை அடுத்து, 2016 முதல் 3.5 மில்லியன் வேலைகள் பறிபோயுள்ளன என்று கூறுகிறது.
இந்தியாவில் அரசு வேலைகள்தான் அதிகமாக விரும்பப்படுகின்றன. சமீபத்தில், இந்திய ரயில்வே துறையில் சுத்தம் செய்பவர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கான 63,000 காலியிடங்களுக்கு, 19 மில்லியன் விண்ணப்பங்கள் போடப்பட்டன.
பிகார் மாநிலத்திலுள்ள மதேபூராவிலிருந்து வந்த குடும்பத்தைச் சேர்ந்த சாகர், பட்டப்படிப்பு அவசியமில்லாத இந்த ரயில்வே வேலை உட்படப் பல அரசு வேலைகளுக்கும் விண்ணப்பித்துள்ளார்.
முதல்முறையாக வாக்களிக்கப் போகும் இவர், “அடுத்து யார் ஆட்சியைப் பிடித்தாலும், எங்களுக்கு உதவ வேண்டும்” என்கிறார்
மேலும், “எங்களுக்கு வேலை வேண்டும். உங்களால் அதைத் தர முடியாவிட்டால், சம்பாதிப்பதற்காவது உதவுங்கள். தொழில்முனைவோருக்கான கடனைப் பெறுவதற்கு நான் முயற்சித்தேன். அது பெரிய தொல்லை. எங்கு திரும்பினாலும் வழியே இல்லை. வேலைகளும் இல்லை, சிறுதொழில் செய்வதற்குக் கடன் பெறுவதும் சுலபம் கிடையாது”, என்று சொன்னார்.
உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு, 100 நாட்களுக்குள் பொதுத்தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. இந்த நாட்டில் வாக்களிக்கவிருக்கும் 13.3 கோடி இளைஞர்களில் சாகரும் ஒருவர்.
பொருளாதார வல்லுநர்கள் “வேலையில்லா வளர்ச்சி” என்று சொல்லக்கூடிய காலத்தில் இந்திய தத்தளித்துக்கொண்டிருக்கையில்தான் இந்த தேர்தல் வருகிறது.
“இந்த வேலை நெருக்கடி மிகவும் மோசமாக இருக்கிறது. சிறு, குறு தொழில்களும் வேளாண்மையும்தான் நம் நாட்டில் அதிகமான வேலையை ஏற்படுத்தும் துறைகள். மோசமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சேவை வரியான ஜிஎஸ்டியும் 2016ஆம் ஆண்டில் நடந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் சிறு தொழில்கள், முறைசாராப் பிரிவுகள் ஆகியவற்றின் முதுகெலும்புகளை உடைத்து பாதிப்பை ஏற்படுத்தின” என்று பொருளாதார வல்லுனரான ப்ரசஞ்சித் போஸ் ஜஸீராவிடம் தெரிவிக்கிறார்.
மேலும், “ஒழுங்கமைக்கப்பட்ட துறைகூட இந்த அரசாங்கத்தின் கீழ் வளரவில்லை. பொதுத் துறையில் முதலீடுகள் நடந்துள்ள போதிலும், அவை வேலைகளாக மாறவில்லை” என்றார்.
“உண்மை என்னவென்றால், பொருளாதார வளர்ச்சி குறித்த தரவுகள் மிக அதிக அளவில் மிகைப்படுத்தி மதிப்பிடப்படுகின்றன. 7% ஜி.டி.பி வளர்ச்சிக்கும் 45 ஆண்டுகள் காணாத அளவு அதிகமான வேலையின்மை விகிதத்திற்கும் இடையிலான இந்த முரண்பாட்டிற்கு வேறு எந்த விளக்கமும் இருக்க முடியாது.”
வேலையின்மை சமத்துவமின்மைக்கு இட்டுச் செல்கிறது
உலகிலேயே முதல்முறையாக வரலாறு காணாத அளவு இளைஞர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டிருக்கும் வேளையில், நாட்டின் 130 கோடி மக்களில் ஏறத்தாழ 50%க்கும் அதிகமானவர்கள் 25 வயதிற்கும் குறைவானவர்கள். இந்தச் சூழலில்தான் வேலைவாய்ப்பின் அளவு குறைந்துவருகிறது.
சாகர், சீமா போன்றவர்களின் கதையில், நிலையற்ற தொழிலாளர் சந்தை, சமூக பொருளாதாரக் காரணிகள், பொதுச் சேவைகளின் பற்றாக்குறை ஆகியவை அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கிவிட்டன.
வறுமையின் முதன்மையான காரணி வருமானமின்மை என்பதால், சமத்துவமின்மைக்கும் இது வழி வகுக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
சமீபத்திய தசாப்தங்களில் நிகழ்ந்த வேகமான ஆனால் சீரற்ற பொருளாதார வளர்ச்சியால், கிராமங்களுக்கும் சிறிய டவுன்களுக்கும் இடையிலான வித்தியாசம் குறைந்துவிட்டது. அதேவேளையில், இடப்பெயர்வு, அலைபேசி, தொலைக்காட்சி ஆகியவை, தங்கள் வாழ்க்கையைவிட மற்றவர்களின் வாழ்வு எவ்வளவு வேகமாக உயர்ந்துவருகிறது என்பதை இம்மக்களுக்குத் துல்லியமாகத் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், மேல்தட்டு நில உரிமையாளர்கள் அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு கேட்டுப் போராட்டங்கள் நடத்திவருகிறார்கள்.
வேலையில்லாத இளைஞர்களைச் சமாதானப்படுத்துவதற்கான அழுத்தத்தால், அரசாங்கம் கடந்த மாதம் பொதுத்துறை வேலைகளிலும் உயர் கல்வியிலும் மேல்த்தட்டு மக்களுக்கு ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொருளாதாரத்தின் திறனைத் தாண்டி மக்கள்தொகை அதிகரித்துவருகிறது. தனியார் துறைகளிலும் போதுமான வேலைவாய்ப்பு இல்லை என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தில் முதலீட்டின் அளவு 2011-12-ஐ விட மிகவும் குறைந்து போயிருக்கிறது என்றும், முறைசாராத் தொழில் துறையிலும் முதலீடுகள் குறைந்துவருவதாகவும், ‘பணமதிப்பிழப்பும் கறுப்புப் பொருளாதாரமும்’ என்னும் புத்தகத்தின் ஆசிரியரான பேராசிரியர் அருண் குமார் தெரிவித்தார்.
“அரசாங்கம் விவசாய நெருக்கடியைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். முறைசாராத் துறைக்கு ஊக்கம் தேவைப்படுகிறது, அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பும் கடனும் கொடுக்க வேண்டும். முறைசாராத் தொழில் துறை புத்தாக்கம் பெற்றால், தனக்கான புதிய தேவைகளை உருவாக்கிக்கொள்ளும்” என்று அல் ஜஸீராவிடம் குமார் தெரிவித்தார்.
வேலைகள் குறித்த தரவுகளை வைத்து நிகழும் கருத்து வேறுபாடுகள், வாதங்களுக்கு மத்தியில், வேலையின்மைக்கும் தகுதி குறைந்த வேலைகளுக்கும் இடையில் வேற்றுமைப்படுத்த வேண்டியது அவசியம் என்கிறார் பொருளாதார வல்லுனர் குமார்.
“வேலையற்றோருக்குச் சில நாடுகளில் இருப்பதுபோன்ற சமூகப் பாதுகாப்பு இந்தியாவில் கிடையாது. எனவே, ஒருவர் வேலையை இழந்துவிட்டால், வேலை செய்ய முடியாது என்று சொல்ல முடியாது. எல்லோரும் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் பட்டப்படிப்பு படித்தவர்கள் தள்ளுவண்டியில் வேலை செய்கிறார்கள். வேலையின்மையைவிடவும், தகுதி குறைவான வேலைகளைச் செய்யும் போக்கு இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. நம்முடைய முறைசாராத் தொழில் துறைதான் 93% மக்களுக்கு வேலை அளிக்கிறது என்பதுதான் இங்கு பிரச்சினை. இந்தத் துறை நெருக்கடியில் இருப்பதால், வேலைகளை இழக்கப்போகும் இந்த 93% மக்கள்தான் பிரச்சினையில் இருக்கிறார்கள்”, என்றார் குமார்.
முக்கியமான தேர்தல் பிரச்சினை
அதனால்தான் இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி தேர்தலை எதிர்கொள்ளப் பதற்றம் கொள்கிறது.
கடந்த ஆண்டு, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், பகோடா விற்பதும் ஒரு வகையான வேலைதான் என்றும், ஒரு நாளைக்கு 200 ரூபாயை அவரால் சம்பாதிக்க முடியும் என்றும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார்.
இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வேலைகள் கோரும் மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவில்லை என மோடி மீது எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தினர். இப்போது தேர்தல்களுக்கு முன்னால், வேலைகள் குறித்த தன்னுடைய அசாதரணமான வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தொடர்பான அழுத்தம் மோடி மீது பெரும் பாரமாகக் கவிந்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மே மாதம் வரவிருக்கும் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் கொண்ட வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதாக வாக்களித்துள்ளது.
எண்ணிக்கையில் அதிகமான மாநிலக் கட்சிகள், சாதியக் கூட்டணிகள் ஆகியவற்றுடன் பெரிதும் பிளவுற்றிருக்கும் இந்திய அரசியல் களம் மோடிக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கிறது.
சாகர், சீமா போன்றவர்களின் பொருளாதாரக் கனவுகள் ஒருபுறம் இருக்க, பிராந்திய, சாதி அரசியல் கணக்குகளும் மக்கள் வாக்களிக்கும் விதத்தில் பெரிய பங்கை வகிக்கும். அடுத்து வரும் அரசு எத்தகைய சித்தாந்தத்தைக் கொண்டதாக இருந்தாலும், தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் அதன் மாபெரும் சவாலாக இருக்கப்போகிறது.
ஜீனத் சபரின்
நன்றி: அல்ஜஸீரா.காம் (https://www.aljazeera.com/news/2019/02/studied-uni-sell-eggs-india-job-crisis-modi-190205171055108.html)
தமிழில்: ஆசிஃபா