தி.மு.க. காங்கிரஸ் உறவை துண்டிக்க துடிக்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தி.மு.க. உயர்நிலை கூட்டம்
10&ந் தேதி அன்று மாலையில் அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பத்து தீர்மானங்களின் நகல்கள் எடுக்கப்பட்டு, தி.மு.க. அமைப்புச் செயலாளர் மூலமாக செய்தியாளர்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டுவிட்டன. கூட்டம் முடிந்து புறப்படுகின்ற நேரத்தில் பத்திரிகையாளர்கள் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பதற்காக காத்திருக்கிறார்கள் என்று சொன்னவுடன், நான் அதற்குச் செவிசாய்த்து செய்தியாளர்கள் அறைக்குச் சென்றேன்.
அந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் எப்போதும் வராத ஒரு சில செய்தியாளர்களும் வந்திருப்பதைப் பார்த்ததும், எதற்கோ அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளன. அதில் ஏதாவது, அந்தத் தீர்மானங்களைப் பற்றியோ அல்லது அவற்றின் தொடர்பாகவோ ஏதாவது கேட்க வேண்டுமென்றால் கேளுங்கள், பதில் கூறுகிறேன் என்று சொன்னேன்.
31 கேள்விகள்
அதைத் தொடர்ந்து அந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் 31 கேள்விகள் கேட்கப்பட்டு, ஒவ்வொன்றிற்கும் நான் அளித்த பதில் ஏடுகளில் வந்துள்ளது. மொத்தம் 31 கேள்விகளில் 22 கேள்விகள் காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் உள்ள உறவை எப்படியாவது துண்டிக்கவேண்டும், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து நான் ஏதாவது கூறி அதைப் பெரிதுபடுத்தி இருவருக்குமிடையே கலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு கேட்கப்பட்ட கேள்விகளா; அல்லவா? விருப்பு, வெறுப்பின்றி, நடு நிலையோடு செய்திகளைச் சேகரித்து, கலப்படமில்லாமல் மக்களுக்குக் கொண்டு சேர்த்திட வேண்டிய செய்தியாளர்களுக்கு ஏன் இந்த அக்கறை? அவசரம்? துடிப்பு?
ஒன்றிரண்டு கேள்விகள் இந்தப் பொருளைப் பற்றிக் கேட்டிருந்தால் அதன் உள் நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆனால் 31 கேள்விகளில் 22 கேள்விகள் காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் இடையே சிண்டு முடியும் குணம் கொண்டவை என்பதைக் கவனித்தால் பத்திரிகை தர்மத்தைக் குலைக்கும் செயலிலே செய்தியாளர்களே ஈடுபடலாமா என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?
அந்த கேள்விகளை கேட்டவர்கள் அங்கே செய்தியாளர்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட அனைவரும் அல்ல. குறிப்பாக ஐந்து பேர், ஒன்று சேர்ந்து அமராமல், ஆங்காங்கு அமர்ந்து கொண்டு இந்த கேள்விகளையெல்லாம் அவர்களே மாற்றி மாற்றி கேட்டதையும், அதற்கு நான் பதில் அளித்ததையும், அந்த செய்தியாளர்கள் கூட்டத்திலே அமர்ந்திருந்த மற்றச் செய்தியாளர்கள் புரிந்து கொண்டு தானிருப்பார்கள். இருந்தாலும் அவர்களால் இந்த ஐந்து பேர்களின் எரிச்சல் கக்கும் கேள்விகளை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கத்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
தொண்டர்கள் குமுறவில்லை
செய்தியாளர்கள் சந்திப்பின்போது கேள்வி கேட்டது மாத்திரமல்ல, 12ந் தேதி ஒரு நாளிதழில் ஒரு பெரிய கட்டுரை! அதன் தலைப்பே தி.மு.க. தயங்குவது ஏன் என்பதாகும். அந்தக் கட்டுரையில் காங்கிரசுடன் உறவை முறித்துக் கொள்ள கருணாநிதி தயாராக இருப்பதாகவும், ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சரான மு.க.அழகிரியும் தான் கூட்டணி முறிவைத் தள்ளிப் போட விரும்புவதாகவும் எழுதி, எந்த அளவிற்கு இந்தக் கூட்டணியை முறிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
அதே 12ந் தேதி மற்றொரு நாளிதழில் வந்துள்ள பெரிய கட்டுரையின் தலைப்பு கருணாநிதியின் முடிவால் அதிர்ச்சியான தொண்டர்கள் என்பதாகும். அந்தக் கட்டுரையை முடிக்கும் போது, எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம் என்று நினைக்குமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளதாக தி.மு.க. தொண்டர்கள் குமுறத் தொடங்கியுள்ளனர் என்று எழுதப்பட்டுள்ளது.
எந்தத் தி.மு.க. தொண்டர்களும் குமுற வில்லை. ஆனால் அந்த நாளேடுகள் தான் கழகத்தின் முடிவினால் கதறுகிறார்கள், குமுறுகிறார்கள். தங்கள் எண்ணம் நிறைவேறவில்லையே என எண்ணி கட்டுரை தீட்டுகிறார்கள். செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.