மோடிக்குப் புகழாரம் சூட்டுவது, அவரது ட்வீட்களை ரீ-ட்வீட் செய்வது, அவர் குறித்த செய்திகளையும் கட்டுரைகளையும் அவரை மென்ஷன் செய்து பகிர்வது என ட்விட்டரைத் துதிபாடும் களமாகவே மத்திய அமைச்சர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
2014ஆம் ஆண்டில் மக்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சித் திறனால் வாங்கிய குத்துகளும், பெற்ற பூங்கொத்துகளும் ஏராளம். ஆனால், அவரது அமைச்சரவை சகாக்கள் பயபக்தி மிகுந்த வர்ணனைகளால் மட்டுமே ட்விட்டரில் அவரை ஆராதித்து வந்திருக்கின்றனர். “ஏழைகளின் காப்பாளர்” என்பதில் தொடங்கி “எழுச்சித் தலைவர்” வரை, “கங்கை போன்ற பரிசுத்தமானவர்” தொடங்கி “உலகின் வியத்தகு தலைவர்” வரை நீள்கின்றன, பிரதமர் மோடி குறித்த மத்திய அமைச்சர்களின் துதிபாடல்கள்.
சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் பிரதமர், தன் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களையும் ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தீவிரம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது அமைச்சரவை சகாக்களில் பெரும்பாலானோருக்கும் தங்களது தலைவர்களைத் துதிபாடி புகழ்வதற்கே ட்விட்டர் அதிகம் பயன்பட்டிருக்கிறது.
தற்போது மத்திய அமைச்சரவையில் இருப்பவர்களும், முன்னாள் அமைச்சர்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிந்த ட்வீட்களை ஆராய்ந்தால், அவர்களிடையே ஆதிக்கம் செலுத்திய ட்ரெண்ட் ஒன்றைக் கண்டுகொள்ள முடிகிறது. பிரதமரின் முக்கிய ட்வீட்டுகள், அவருக்கு சாதகமான செய்திக் கட்டுரைகளை ரீ-ட்வீட் செய்வதிலும், மோடியை ‘மென்ஷன்’ செய்து அவரது சாதனைகளையும் அதீதமாகப் புகழ்ந்து வார்த்தைகளை உதிர்ப்பதிலும் மட்டுமே ஆர்வம் காட்டியிருக்கிறார்கள் என்பதே அந்த ட்ரெண்ட்.
மோடியின் ‘மேன்மைகள்’!
எதிர்க்கட்சி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தியை வீழ்த்தி 2017ஆம் ஆண்டு குடியரசுத் துணைத்தலைவர் ஆனார் வெங்கைய நாயுடு. அதற்கு முன்னர், நாடாளுமன்ற விவகாரங்கள், வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு, நகர்புற மேம்பாடு, தகவல் மற்றும் ஒளிபரப்பு என பல துறைகளில் அமைச்சர் பொறுப்பு வகித்தவர் இவர்.
வெங்கைய நாயுடு தனது வண்ணமயமான வார்த்தை ஜாலங்களால் அதீத ஈடுபாட்டுடன் மோடிக்கு ட்விட்டரில் புகழாரம் சூட்டுவதில் மற்ற அமைச்சர்களை ஓரம்கட்டும் வல்லமை படைத்தவராகத் திகழ்ந்திருக்கிறார்.
இதோ ஒரு சாம்பிள்: “பிரதமர் மோடி “நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி தாம் ஓர் ‘ஏழைகளின் காப்பாளன்’ என்பதை நிரூபித்துவிட்டார். #IndiaWithPMModi” – பணமதிப்பிழப்பை மத்திய அரசு கொண்டு வந்து ஒரு மாதம் கழித்து, டிசம்பர் 2016இல் வெங்கைய நாயுடு தட்டிவிட்ட ட்வீட் இது.
மோடி மீது தனது பேரன்பை, அவரது பெயரின் எழுத்துகளுக்கு புதிய விரிவாக்கம் தந்து விழிகளை விரிக்க வைத்தார். மார்ச் 2017இல் அவர் பதிந்த ட்வீட் ஒன்றில், “நாம் விரும்பும் இந்தியாவின் ஒரே நம்பிக்கையான மோடியின் தலைமையின் கீழ்தான், வளர்ந்த இந்தியாவை உருவாக்கக் கூடியதான வளரும் இந்தியாவின் மனநிலை இருக்கிறது” என்று வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டில், வளரும் இந்தியாவின் மனநிலை என்பதை ‘Mood Of Developing India (MODI)’ என்றும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குதல் என்பதை Making Of Developed India (MODI)’ என்றும் குறிப்பிட்டிருந்தது, அவரது வார்த்தை வித்தைகளுக்குச் சான்று.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினத்தில், மோடிதான் கலாமின் கனவு இந்தியாவை உருவாக்கிவருவதாக வெங்கைய நாயுடு கூறியிருக்கிறார். “டாக்டர் அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் விதமாக நமது பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார்” என்ற அந்த ட்வீட் பதிவான நாள்: ஜூலை 27, 2017.
இது மட்டுமா, தனது சொந்த முன்முயற்சிகளுக்குக்கூடப் பிரதமரையே புகழ்ந்து தள்ளியிருக்கிறார் வெங்கைய நாயுடு. “பிரதமர் நரேந்திர மொடியின் ‘மினிமம் கவர்மென்ட், மேக்ஸிமம் கவர்னன்ஸ்’ என்ற கூற்றுக்கிணங்க, நகர்புற வளர்ச்சி அமைச்சகத்தையும், வீட்டு வசதி மற்றும் நகர்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தையும் ஒன்றிணைப்பதற்கு நான் பரிந்துரைத்துள்ளேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும்கூட, நன்றி கூறும் தறுவாயில் மோடிக்கு இதமூட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தத் தவறாத வெங்கைய நாயுடு, “என் வீட்டுக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தியதில் மிகவும் நெகிழ்கிறேன்” என்று ட்வீட்டியிருக்கிறார்.
அதன் பிறகு, குடியரசுத் துணைத் தலைவர் என்ற முறையில், வெங்கைய நாயுடு, புகழார ட்வீட்கள் பதிவிடுவதைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்.
‘பரிசுத்தமும் எழுச்சியும்’
ரவி சங்கர் பிரசாத்தும் இந்த அரசில் தொலைத்தொடர்பு, சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என பல முக்கியத் துறைகளில் பொறுப்பு வகித்தவர். பிரதமரைப் புகழ்வதில் குறை வைக்காத இவர், ஒருமுறை மோடியின் ‘பரிசுத்தத்தை’ கங்கை நதியுடன் ஒப்பிட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். அதோடு விட்டுவிடாமல், அந்த உவமையை ட்விட்டரிலும் பரப்பினார்.
“பிரதமரின் நேர்மையை சந்தேகப்படுவது என்பது நமது கங்கைத் தாயின் பரிசுத்தத்தை சந்தேகிப்பதற்கு ஒப்பனாது. கங்கைத் தாய் மீதும், பிரதமர் மோடி மீது இந்திய மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர்” என்று டிசம்பர் 2016இல் ட்வீட்டியதுடன், தனது செய்தியாளர் கூட்டத்தின் வீடியோ பதிவையும் இணைக்கத் தவறவில்லை.
டெல்லியில் கடந்த மாதம் நடந்த பாஜகவின் மெகா மாநாட்டுக்குப் பிறகு ஒரு ட்வீட் செய்த ரவி சங்கர் பிரசாத், “டெல்லியின் ராம் லீலா மைதானத்தில் நடந்த பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை எழுச்சி மிக்கதாக இருந்தது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலானது, ராஜ வம்சத்தை நம்புவோருக்கும் ஜனநாயகத்தை நம்புவோருக்கும் இடையிலானதாக இருக்கும். #NaMoAgain” என்று கூறியுள்ளார்.
இதேபோல், கடந்த அக்டோபரில் தொழிலதிபர்களுடனான கூட்டத்தில் பிரதமருக்குக் கிடைத்த கைத்தட்டலை ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டுப் பரப்ப முடிவு செய்தார். “பிரதமர் நரேந்திர மோடி குறித்து இந்தியத் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பேசுவதைக் கேட்டு, #Self4Society நிகழ்வில் அனைவரும் கைத்தட்டும் ஓசையைக் கேளுங்கள்” என்று அவர் ட்வீட்டியிருந்தார்.
இவரது அமைச்சரவை சகாவான பிரகாஷ் ஜவடேகர், மத்திய இணையமைச்சராக பதவி பெற்று, பின்னர் தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக வலம் வந்து, அதன்பின் 2016இன் மத்தியில் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக உயர்ந்தவர். பிரதமர் மோடியை முழு வீச்சில் புகழ்ந்து தள்ளுவதில் இவரும் வல்லவர். இதற்கு, இந்த ஆண்டு ஜனவரியில் இவர் பதிந்த ட்வீட்டுகள் மட்டுமே போதுமான சான்றாக அமையும்.
“மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, உங்களது வாழ்த்துக்கு நன்றி கூறுகிறேன். உங்களது எழுச்சியூட்டும் தலைமையின் கீழ் நம் நாட்டுக்குச் சேவையாற்ற என்னை மீண்டும் அர்ப்பணிக்கிறேன்” என்று தனது பிறந்தநாளில் வாழ்த்திய மோடிக்கு பதிலளித்துள்ளார்.
“மக்களுக்கு நரேந்திர மோடி ஆட்சி வேண்டுமா அல்லது அராஜக ஆட்சி வேண்டுமா என்பதுதான் எதிர்வரும் மக்களவைத் தேர்தலின் முக்கியப் பிரச்சினையே” என்று ட்வீட் செய்து, தனது செய்தியாளர் சந்திப்பின் வீடியோ பதிவையும் இணைத்திருக்கிறார் பிரகாஷ் ஜவடேகர்.
2017ஆம் ஆண்டு செப்டம்பரில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் புகைப்படத்துடன் ஆசிரியர் தினத்தையொட்டிய பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்ட அவர், அதிலும் பிரதமர் மோடியை ஆராதிக்க மறக்கவில்லை. “பிரதமர் நரேந்திர மோடியின் ‘மன் கி பாத்’ உரையில் சொல்லியிருக்கும் ‘மாற்றத்துக்குப் பயிற்றுவிப்போம்; அதிகாரமளித்தலுக்குக் கற்பிப்போம்; தலைமையேற்கக் கற்போம்’ என்பதை இந்த ஆசிரியர் தினத்தில் நினைவுகூர்ந்து செயல்படுவோம்” எனும் விதமாகக் கூறி, பிரதமரின் வானொலி நிகழ்ச்சியைப் பெருமிதத்துடன் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
‘உலகத் தலைவர்!’
தனது அமைச்சரவை சகாக்கள் சிலரால் உலகளாவிய வியத்தகு தலைவராகவும் மோடி போற்றப்பட்டிருப்பது, ட்வீட்டாராய்ச்சிகளில் தெரியவருகிறது.
2017ஆம் ஆண்டு ஜூனில், மோடியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான வீடியோ பதிவு ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜு, “நமது முன்னாள் பிரதமர்கள் அனைவருக்குமே சிறந்த முறையில் மரியாதையும் வரவேற்பும் அளிக்கப்பட்டன. ஆனால், மோடிஜிக்குதான் அனைத்துலகிலும் வியத்தகு வரவேற்பு கிட்டியிருக்கிறது என்பதும் உண்மை” என்று சிலாகித்து ட்வீட் செய்திருக்கிறார்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கடந்த மாதம் பதிவிட்ட ட்வீட்டில், “பிலிப் கோட்லர் விருதை முதன்முறையாகப் பெறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். பீப்பிள், ப்ராஃபிட், ப்ளானட் என்ற மூன்று அம்சங்களிலும் ஒருசேர கவனம் செலுத்தும் விருதைப் பெறுவது இந்தியாவுக்கு மிகுந்த பெருமைக்குரிய நிகழ்வு. இது, நம் பிரதமரின் தன்னிகரற்ற தலைமையையும் தன்னலமற்ற சேவையையுமே பறைசாற்றுகிறது” எனும் விதமாக ஆராதித்துள்ளார்.
மோடியின் அமைச்சரவையில் சிலருக்குச் சரிவர வாய்ப்புகள் கிடக்காமல் போகலாம். ஆனால், ட்விட்டரில் அவருக்குப் புகழாரம் சூட்டுவதில் யாரும் குறை வைக்கவில்லை.
இந்த அரசில் மதிப்பு மிக்க மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்த ஸ்மிருதி இரானி, சில சர்ச்சைகளுக்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஆனார். அந்தப் பொறுப்பும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. எனினும், பிரதமரை உத்வேக ஊக்கியாப் பார்ப்பதை மட்டும் அவர் குறைத்துக்கொள்ளவே இல்லை.
கடந்த டிசம்பரில் பதிந்த ஒரு ட்வீட்டில், “விஜய் மல்லையாவின் நாடு கடத்தல் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் மற்றொரு வெற்றி. கடந்த காலத்தைப் போல தவறிழைக்காமல், ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. நாட்டுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருவது மேன்மைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 2018இல் ஆறு நாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டதையும் பிரதமர் மோடியுடன் தொடர்புபடுத்தி அவர் வாழ்த்தியது மலைக்கத்தக்கது.
“ஜனநாயகத்தில் பங்காற்றவைத்து பிப்ரி கிராமத்தைச் சேர்ந்த குடிமக்களின் நம்பிக்கையை மீட்டுவிட்டார்” என்று மோடியைப் பாராட்டி, 2017 அக்டோபரில் இரானி இட்ட ட்வீட்டும் நினைவுகூரத்தக்கது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா, பிஹாரைச் சேர்ந்த ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் அமைச்சரவை மாற்றத்துக்கு முன்பு ஆகஸ்ட் 2017இல் பதவி விலகிய அமைச்சர்கள்.
அதன் பின் சில தினங்கள் கழித்து, மோடி தூய்மைப் பணியில் ஈடுபடும் புகைப்படங்களைப் பகிர்ந்த ராஜீவ் பிரதாப் ரூடி, “தூய்மைப் பணியில் பிரதமரின் தனிப்பட்ட ஈடுபாடு எழுச்சியூட்டுகிறது” என்று ட்வீட்டினார்.
அவரே இந்த ஆண்டு ஜனவரியில் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் புதிய உச்சத்தை வளர்ச்சி எட்டிவருகிறது” என்று குறும் வீடியோ பதிவொன்றையும் சேர்த்து ட்வீட் செய்தார்.
இதனிடையே, மோடி குறித்த நேர்மறையான செய்திகளையும், செய்திக் கட்டுரையும் பகிர்வதில் கல்ராஜ் மிஸ்ரா தீவிரம் காட்டிவந்தார்.
உலகின் மூன்றாவது நம்பிக்கைக்குரிய அரசைப் பிரதமர் மோடி வழிநடத்துவதாக ஓர் ஆய்வு முடிவுகள் குறித்த செய்தியை, நவம்பர் 2017இல் அவர் பகிர்ந்திருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகளாவிய வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேறிவருகிறது. இந்தியாவைப் பற்றி உலகம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்” என்று குறிப்பிட்டு ட்வீட் செய்த அவர், பன்னாட்டு நிதியம், உலக வங்கி போன்ற பல்வேறு அமைப்புகளின் பார்வையில் இந்தியா குறித்த ஒரு கிராஃபிக்கையும் பகிர்ந்திருந்தார்.
நம்பத்தக்க தலைவர்
ட்விட்டரில் பிரதமரைத் துதிபாடுவதில் தீவிரம் காட்டிய அமைச்சர்கள், மோடியை நம்பிக்கைக்குரிய தலைவராகவும், பாசத் தலைவராகவுமே முன்னிறுத்தினர்.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வைத்த நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாடாளுமன்ற உரை அமைந்திருக்கிறது” என்று ஜூலை 2018இல் ஸ்மிருதி இரானி ட்வீட்டினார்.
முன்னதாக, டிசம்பர் 2016இல் பதிந்த ட்வீட் ஒன்றில், தங்கக் கோயிலில் பிரதமர் உணவு பரிமாறுவது குறித்த செய்தியைப் பகிர்ந்த அவர், “தங்கக் கோயிலில் பரிமாறிய முதல் பிரதமர் நரேந்திர மோடி” என்று சிலாகித்தார்.
ஜூலை 2017இல், குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு, மோடியின் தலைமையை ‘நம்பக்கத்தன்மை’ மிக்கதாகப் போற்றியிருந்தார் வெங்கைய நாயுடு.
அது தொடர்பான ட்விட்டர் பதிவில், “என் சக இந்தியர்களுக்கு மிகப் பெரிய செய்தி. உலக அளவில் நம்பிக்கைக்குரிய தலைமைகளில் 74 சதவீத வாக்குகளுடன் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார்” என்று மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்தப் பதிவுக்கு சில மாதங்கள் முன்பு பிரதமரின் கடிதத்தைக் குறிப்பிட்டு, “கர்நாடகாவில் முஸ்லிம் சிறுமிகளின் கல்வி உறுதிசெய்யப்பட வேண்டும்” என்று அவர் ட்வீட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வடகிழக்கு மாநிலங்களிலேயே பேரன்புமிக்கத் தலைவராக மோடியைக் கொண்டாடுவதில் தன் சக்தியை முழுமையாகத் திரட்டி ட்வீட்டிக் கொண்டிருந்தார் ரிஜிஜு. கடந்த ஆண்டு இறுதியில் பதிந்த ட்வீட் ஒன்றில், “வடகிழக்கு மாநில மக்களின் மனதை மோடிஜி வென்றது எப்படித் தெரியுமா? இதோ, மக்களவையில் இன்று தனிநபர் மசோதா குறித்து நான் அளித்த பதிலை வீடியோ வடிவில் காணுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
முன்னதாக, பிப்ரவரி 2018இல் “அருணாச்சலப் பிரதேச மக்களின் ஆழமான தேசபக்தி மீது அன்பையும் அக்கறையும் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” என்று ட்வீட் செய்திருப்பது தெரியவந்தது.
இதனிடையே, செப்டம்பர் 2018இல் பிரதமர் மோடி தனது வாரணாசி பயணத்தின்போது ‘இளம் நண்பர்கள்’ உடன் இருக்கும் அற்புதப் புகைப்படம் ஒன்றுடான செய்தியைப் பகிர்ந்திருந்தார் கல்ராஜ் மிஸ்ரா.
தகவல், ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறைகளுக்கு தனிப்பொறுப்பு வகிக்கும் மத்திய இணையமைச்சர் ராஜ்வர்தன் ரத்தோர் மட்டும் சளைத்தவரா என்ன?
கடந்த மாதத்தின் துவக்கத்தில் ஒரு செய்திக் கட்டுரையைப் பகிர்ந்த அவர், “குஜராத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, 9 வயது நரேந்திர மோடி உணவுக் கடை திறந்து உதவுவதைப் பாருங்கள். நரேந்திர மோடியின் அதிகம் அறியப்படாத பால்ய கால நிஜங்களில் ஒன்று இது” என்று ட்வீட் மூலம் சிறப்பு செய்திருக்கிறார்.
சற்றே பின்னோக்கினால், மே 2017இல் பகிர்ந்த மற்றொரு செய்திக் கட்டுரையில், “கேதார்நாத்தில் ராணுவ வீரரின் குழந்தைக்காகத் தனது பாதுகாப்பு நெறிமுறைகளையும் தகர்த்திருப்பதில் தெரிகிறது பிரதமரின் இதமான இதயம்” என்று நெஞ்சுருகியிருக்கிறார்.
சாதகச் செய்திகள்
ட்விட்டரில் ஒருபக்கம் வார்த்தைகளாலேயே பூமழை தூவியும் பூங்கொத்து நீட்டியும் மோடியை வாழ்த்தி மகிழும் அவரது அமைச்சர்கள், மறுபக்கம் அவர் குறித்த சாதகமான செய்திகளைப் பகிர்வதிலும் பேரார்வம் காட்டியிருக்கின்றன. அந்த நேர்மறைச் செய்திகள் அனைத்துமே பிரதமரின் சொந்த செயலியிலிருந்து எடுக்கப்பட்டவை என்பது கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பாராட்டிய அறிக்கை, உயர்வாகக் காட்டும் தர வரிசைகளைப் பகிர்தல், வலுவான இந்தியாவை உருவாக்கும் மோடியின் முயற்சிகளைப் புகழ்தல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசியல் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பேசுதல், ட்விட்டரில் அதிகம் குறிப்பிடப்பட்ட நபராக மோடியை முன்னிறுத்துதல், மோடி எனும் ஆளுமையின் மேன்மைகளை எடுத்துரைத்தல்… – இதுபோன்ற காரணிகளுக்காகவே மோடியின் அமைச்சர்கள் தங்கள் ட்விட்டர் பக்கங்களைத் திறம்படக் கையாண்டிருக்கிறார்கள்.
மத்திய அமைச்சர்கள் சமூக வலைதளத்தை வெற்றிகரமாகவே பயன்படுத்திவந்திருக்கின்றனர். ஆனால், அவர்களில் பலரும் மோடியைத் துதிபாடுவதற்காகவே ட்விட்டரை இன்றியமையாத ஊடகமாக்கியிருப்பதும் தெளிவு.
ருஹி தெவாரி
நன்றி: தி ப்ரின்ட்
https://theprint.in/politics/a-messiah-pure-as-ganga-how-modis-ministers-described-him-over-the-years-on-twitter/189902/?fbclid=IwAR2rhwQinSJyuOVs2W9piMa0M4NvPoTCz3uiEFHGLrr1sNamU3-f4m6Q9KY