தில்லியில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசும்போது மகாபாரதத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். நம்மில் பலர் பாரதக் கதையின் நூறு கௌரவர்களின் பெயர்களில் இரண்டே இரண்டு பெயர்களை மட்டுமே நினைவுகூர்கிறோம், ஒன்று துரியோதனன் மற்றொன்று துச்சாதனன் என்றேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது ஒரு விஷயமல்ல, ஆனால் அங்கிருந்த பார்வையாளர்கள் நான் எதைக் குறிப்பிட்டேன் என்பதைப் புரிந்துகொண்டு பலத்த கை தட்டலுடன் வரவேற்றார்கள்.
மோடி ஒவ்வொன்றையும் தானே செய்ய வேண்டும் என விரும்பும் மனிதர், ஒவ்வொரு நாளும் வரலாற்றைப் படைக்க வேண்டும் என்பது அவருக்குள்ள போதை. டிம்பக் டூவுக்குப் பயணம் செய்யும் முதல் இந்திய பிரதமராகத் தான் இருக்கக்கூடுமென்றால் அதற்கு எந்த அவசியமும் பயன்மதிப்பும் இல்லாதபோதும் அவர் அதை மேற்கொள்வார். வேறெந்த இந்தியப் பிரதமரும் செய்யாத ஒரு காரியத்தை அவர் செய்திருக்கிறார்- ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசுத் திட்டங்கள் பலவற்றைத் தன் கையிலெடுத்துக்கொண்டு பெயர் மாற்றம் செய்திருக்கிறார், இப்போது அவரே அவற்றைச் செயல்படுத்தியவராகிவிடுகிறார், அவை அவரது சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுவிடுகின்றன.
இந்திய அரசின் முடிவெடுக்கும் அதிகாரங்கள் அனைத்தையும் பிரதமர் அலுவலகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் சிலரின் துணையோடு தன் வயப்படுத்திக்கொண்டிருக்கிறார் மோடி. பல தடிமனான பக்கங்களைக்கொண்ட கோப்புகளின் கத்தைகளைப் படிப்பதற்குப் பதிலாக பவர் பாயின்ட் படக் காட்சிகளின் மீது ஈடுபாடு கொண்டவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இது பரிதாபகரமானது. அமைப்பின் வரலாற்று ரீதியான அனுபவங்கள் கற்றுத் தந்திருக்கும் படிப்பினைகளை அவர் உள்வாங்கிக்கொள்ளவில்லை என்பதுதான் இதற்கு அர்த்தம். அவருக்குள்ள அறிவு முறையான பயிற்சியால் செறிவூட்டப்படாதது. அரசியல் அறிவியலில் அவர் பெற்றுள்ள முதுகலைப் பட்டத்தை இதுவரை யாருமே பார்த்ததில்லை.
இந்திய அரசின் நிர்வாகத்தை இயக்குபவை மூன்று அதிகார மையங்கள்தாம். முதலாவது பிரதமரும் அவரது அமைச்சகமும். இரண்டு நிதியமைச்சரும் அவரது அமைச்சகமும். மூன்றாவதாகத் திட்டக் குழு. முன்பு அரசியல் தலைவர்கள் திட்டக் குழுவின் தலைமைப் பொறுப்பை வகித்தார்கள், ஆனால் இப்போது அந்த அமைப்பு நிட்டி ஆயோக் என்னும் அமைப்பால் பதிலீடு செய்யப்பட்டு முடக்கப்பட்டுவிட்டது, அரசின் திட்ட மேலாண்மை குறித்து எதுவுமே தெரியாதவர்களை மோடி அதில் அமர்த்தியிருக்கிறார்.
இப்போது அரசை வழிநடத்துபவர்கள் இரண்டே இரண்டு பேர்கள்தாம் என்றாகிவிட்டது. அரசின் மீதான நிதி அமைச்சரின் பங்கு என்பது அறவே இல்லை என்பது இப்போது ஒவ்வொருவருக்கும் தெரிந்த செய்தியாகிவிட்டது. நிதியமைச்சரால் தனது சொந்த அமைச்சகத்தின் மீதுகூட அதிகாரம் செலுத்த முடியாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளில் நிதித் துறைச் செயலருக்குத்தான் அதிக வேலை இருந்தது, இந்திய நிதியமைச்சர் அதைப் பற்றி எதுவுமே தெரியாதவராக இருளில் மூழ்கிக் கிடந்தார். நிதித் துறைச் செயலாளரின் பிரதமருக்கான ஆலோசகர்கள் (மோடியின்) பழைய குஜராத் அரசின் நடைமுறைகளுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நிதியமைச்சகம் சுதந்திரமான அரசியல் தலைவர்களால் வழிநடத்தப்பட வேண்டும் என்பது அந்த அமைச்சகத்தின் செயல்பாடுகளைப் பற்றி அறிந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் தெரிந்த செய்தி.
துரதிர்ஷ்டவசமாக மோடி நிறுவனங்களைச் சகித்துக்கொள்ள முடியாத ஒரு மனிதராக இருக்கிறார். தான் ஒரு அரசன் அல்ல என்பதை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சியால், அரசியல் சாசனத்தின் எல்லைகளுக்குட்பட்டு அதன் கண்காணிப்புகளுக்கும் வழிகாட்டுதல்களுக்கும் கீழ் செயல்படும் அரசின் தலைவர் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளவிடாமல் மோடியின் சுய மோகமும் சுய பெருமிதமும் அவரைத் தடுக்கின்றன.
அரசு, மக்களவையில் 2018ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை எந்த விதமான விவாதங்களுக்கும் இடம் தராமல் நிறைவேற்றியதை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். இது நமது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் நெறிமுறைகளுக்குப் புறம்பான நடவடிக்கை. நாடாளுமன்றமானது முழு இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடத்துவதற்கான வாய்ப்புகளை மறுப்பது என்பது இந்தியக் குடிமக்கள் அது சார்ந்த தம் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை மறுப்பதாகும். எல்லாவற்றையும்விட கூட்டத் தொடரின் கடைசி நாளில், 2018 ஏப்ரல் 13ஆம் தேதி, போலித்தனமான உண்ணாவிரதப் போராட்டட்தை அவர் நடத்தினார். அந்தக் கூட்டத் தொடரை நடத்தவிடாமல் செய்ததற்கான தனது எதிர்வினை என இதைச் சொல்லிக்கொண்ட பிரதமர் அதற்காக காங்கிரஸ் கட்சியைக் குற்றம் சாட்டினார். ஆனால் அவர் சொன்னது தவறு. நாடாளுமன்றச் செயல்பாடுகளின் மீது உண்மையாகவே அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் மோடி கூட்டத் தொடர் முடியும்வரை காத்திருக்காமல் தொடக்கத்திலேயே எதிர்க்கட்சிகளுடன் பேசியிருப்பார், அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்பளித்திருப்பார், ஒற்றை அதிகாரம் அல்லது அதிகாரக் குவிப்பு என்பதைத் தவிர இதை வேறெப்படியும் அழைக்க முடியாது.
அமைச்சரவை என்பது ஒருங்கிணைந்த முறையில் மக்களவைக்குப் பொறுப்பானது. ஆனால் நடைமுறையில் அது பிரதமரின் முடிவுகளை அங்கீகரிப்பதற்கான ரப்பர் ஸ்டாம்பாக மாற்றப்பட்டிருக்கிறது. அமைச்சர்கள், அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்கும்போது தம் துறை சார்ந்து ஏதாவது முடிவெடுக்க வேண்டியிருந்தால் தவிர வேறு எதற்காகவும் பேச அனுமதிக்கப்படுவதில்லை எனச் சொல்லப்படுகிறது. மோடி தனது அமைச்சர்களிடமிருந்து வெகு தூரம் விலகியிருக்கிறார், அவர்களிடம் பேச அவருக்கு நேரமில்லை. அவர்கள் அவருக்ப்கு பொருட்டானவர்கள் அல்ல என்பதுதான் காரணம். அவர் அதிகாரவர்க்கத்தைக் கொண்டே ஆட்சியை நடத்துகிறார். அதையே தனது தாரக மந்திரமாகவும் கொண்டிருக்கிறார்.
நவம்பர் 2016இல் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கை பற்றிய செய்தியை தேசத்திற்கு அறிவிப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாகத்தான் தனது அமைச்சரவை சகாக்களுக்கே மோடி இதைத் தெரிவித்தார். அரசில் இடம்பெற்றுள்ள யாரோடும் எந்தவொரு கட்டத்திலும் அவர் எவ்விதமான ஆலோசனையையும் நடத்தவில்லை. ஒருவேளை அதுபோன்ற ஆலோசனைகள் நடத்தப்பட்டிருந்தால் அந்த நடிவடிக்கையின் மூலம் எந்த இலக்கை எட்டுவோம் என்று அந்தக் குளிர்காலம் முழுவதும் சொல்லிக்கொண்டிருந்தாரோ அந்த இலக்கை இன்னும் பயனுள்ள, அர்த்தமுள்ள வகையில் எட்டியிருக்க முடிந்திருக்கும்.
சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சருக்கு ஆச்சரியமளித்த மற்றொரு பயங்கரமான முடிவு காஷ்மீர் தொடர்பானது. பதற்றம் நிறைந்த, பயங்கரவாதத்தால் குதறிப்போடப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை, அக்கூட்டணி அரசில் அங்கம் வகித்த கட்சியான பிஜேபி 2018 ஜுன் மாதத்தில் விலக்கிக்கொண்டதுதான் அந்த முடிவு. மோடி, அமித் ஷா ஆகிய இருவர் மட்டுமே அதற்கான முடிவை எடுத்தவர்கள். இவ்வளவுக்கும் அப்போதைய உள்துறை அமைச்சர் அதற்குச் சில தினங்களுக்கு முன்னர்தான் ஜம்மு காஷ்மீருக்குப் போயிருந்தார், அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்கான முனைப்பு அவருக்கு இருந்தது. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பிஜேபி விலக்கிக்கொண்டதைப் பற்றிய அந்தச் செய்தியைக் கேட்டபோது மற்றவர்களைப் போலவே அவரும் அதிர்ச்சியடைந்தார், அதிகாரிகளையோ ஊடகவியலாளர்களையோ சந்திக்க விரும்பாதவராக உடனடியாகத் தனது இல்லத்தை நோக்கி விரைந்தார் அவர்.
இப்படி அவமதிப்புக்குள்ளாக்கப்பட்ட அமைச்சர்களின் பட்டியலில் நமது அயல்துறை அமைச்சரும் முன்பு மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்தவருமான சுஷ்மா சுவராஜும் அடக்கம். மனம் பிறழ்ந்துபோன சில சமூக ஊடகப் பதிவர்கள் அவரைக் கேலி செய்தபோது மோடி அவர்களில் சிலருக்கு இணையம் வழியாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். முக்கியமான கொள்கை முடிவுகளை எடுத்தபோது சுஷ்மா அவற்றிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார், பிரதமருடன் அயல் நாட்டுப் பயணங்களை மேற்கொள்ளக்கூட அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. வாஜ்பாய்க்கும் மோடிக்குமுள்ள முக்கியமான வேறுபாடு இது, 2002இல் நான் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அலுவல் நிமித்தம் நான் மேற்கொண்ட எந்தவொரு அயல்நாட்டுப் பயணத்திலும் பிரதமர் என்னுடன் பங்கேற்க விரும்பியதில்லை. ஆனால் தற்போதைய அரசில் பிரதமர் தான் மேற்கொண்டு வரும் வெளியுறவுத் துறை சார்ந்த பயணங்களில் ஒருமுறைகூட தனது அயல்துறை அமைச்சரை அழைத்துச் செல்ல வேண்டுமென விரும்பியதில்லை. அதுபோன்ற பயணங்களின்போது அவர் தனது பாதுகாப்பு ஆலோசகரை உடனழைத்துச் செல்கிறார். பிரான்சிலிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தபோது பிரதமர் தனது பாதுகாப்பு அமைச்சரைக் கலந்தாலோசிக்கவில்லை. வாஜ்பாய் ஒருபோதும் இப்படிச் செய்யக்கூடியவரல்ல.
ஆனால், நான் மோடியை வாஜ்பாயுடன் ஒப்பிடுவது தவறு.
யஷ்வந்த் சின்ஹா, ஆதித்ய சின்ஹா
(யஷ்வந்த் சின்ஹா, ஆதித்ய சின்ஹா அக்கியோர் எழுதிய ‘India Unmade: How The Modi Government Broke The Economy’ நூலிலிருந்து ஒரு பகுதி இங்கே பிரசுர்க்கப்பட்டுள்ளது. ஜக்கர்நாட் புக்ஸ் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது)
நன்றி: தி வயர் (https://thewire.in/politics/yashwant-sinha-india-unmade-book-excerpt)