பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள், தலைவர்கள், எம்.பிக்கள் ஆகியோர் மத்தியில் மக்களவைத் தேர்தல் குறித்த நம்பிக்கையின்மை நிலவுகிறது
கடந்த மாதம் கொல்கத்தாவில் இருபதுக்கும் மேற்பட்ட பிராந்திய மற்றும் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட எதிர்க்கட்சி ஒற்றூமைப் பேரணியின் பெரும் வெற்றி, பாரதிய ஜனதாகட்சியை (பாஜக) நம்பிக்கையிழக்கச் செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா ஆகியோரின் தைரியம் குறித்த கட்சித் தொண்டர்களின் சந்தேகம் அதிகரித்துவருகிறது.
டெல்லியிலுள்ள பாஜக மந்திரிகளுடனான என் தனிப்பட்ட உரையாடல்கள், சத்தீஸ்கரிலுள்ள சில தலைவர்கள், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மந்திரிகள், வேட்பாளர்களுடனான உரையாடல்கள் ஆகியவை அவர்களுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. மே மாதம் கட்சிக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றிய சந்தேகத்துடன்தான் அவர்கள் இருக்கின்றனர் என்பதை இந்த உரையாடல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவில் நிலவும் கருத்து
பாஜக தலைமை குறித்த கவலையும் பதற்றமும் நிலவிக்கொண்டே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் 2014ஆம் ஆண்டின் தோல்விக்குப் பிறகு உயிர்த்தெழ வாய்ப்பே இல்லை என்று நம்பிய கட்சிக்காரர்கள், தற்போது தேர்தலில் தங்கள் நிலையை நினைத்துக் கவலைப்படுகிறார்கள்.
அவர்கள்,
“நான் மீண்டும் தேர்தலில் நிற்க வேண்டுமா? அதில் வெற்றி பெற என்ன வாய்ப்பிருக்கிறது? முதலில் போட்டியிட எனக்கு இடம் கிடைக்குமா?
இப்போது நான் பாஜகவை விட்டுச் சென்றால், காங்கிரஸில் எனக்கு ஒரு இடம் கிடைக்குமா? மோடி அலை வேகமாக ஓயத் தொடங்கிவிட்டதா?
சிவ சேனா பிரிந்து செல்லுமா? அப்படிச் சென்றால் கட்சியின் நிலை என்ன?”
எனப் பல்வேறு கேள்விகளுக்கான விடையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான், பாஜக ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெறும் என்றும், மோடியின் வசீகரம், அமித் ஷாவின் அற்புதமான உத்திகள், ஆர்எஸ்எஸ் நெட்வொர்க், கட்சியின் பிரபலமான வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள், நிதித் திட்டங்கள் ஆகியவை பற்றியெல்லாம் இதே தலைவர்கள்தான் அவ்வளவு நம்பிக்கையுடன் இருந்தனர்.
இப்போது, பாஜக மக்களவைத் தேர்தலில் 200ல்லது 160 இடங்களுக்கும் கீழ் சென்றுவிடுமோ என்ற பயத்தின் காரணமாகவே அவர்கள் கவலையோடு இருக்கிறார்கள்.
இப்படியான ஒரு சூழலில், நரேந்திர மோடி பிரதமராக இருப்பாரா, என்று கேட்கிறார்கள். திரு. X என்ற அந்த நபர் புதிய தேசிய ஜனநாயகக் கூட்டணியை அமைக்க முடியுமா என்றும், எந்தக் கட்சிகள் பாஜகவுடன் இணையும் என்றும் அவர்கள் கவலை கொள்கின்றனர்.
‘பின்தங்கிய’ உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடும், முத்தலாக் விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடும் மக்களைப் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றே பலரும் நினைக்கின்றனர்.
இருப்பினும், முஸ்லிம்களுக்கு எதிரான எண்ணம் இன்னும் வலுவாக இருப்பதாகத்தான் பெரும்பாலானோர் நினைக்கின்றனர். மேலும், வாக்காளர்களைப் பிளவுபடுத்துவது வட இந்தியாவில் சாத்தியமாகலாம்.
பாஜக வேட்பாளராக நினைப்பவர்கள் ‘மஹாகட்பந்தன்’ தோல்வியடைந்ததையும், எதிர்க்கட்சி வரிசையில் பிரதமர் பதவிக்கான முறையான வேட்பாளர் இல்லை என்பதிலும், மோடி மட்டுமே முதலிடத்தில் இருப்பதிலும் ஒருவித நிம்மதியடைகின்றனர்.
சவாலாக யாரும் இல்லாத பட்சத்தில், மோடி தொகுதிகளை தன் பக்கம் வளைத்துவிடுவார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
தேர்தல் கணக்கு
எதிர்க்கட்சியும் கவலையிலும் நிச்சயமற்றதன்மையிலுமே இருக்கிறதென்றாலும், ஓராண்டு முன்புவரை மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் பாஜகவில்தான் இது அதிகமாக தெரிகிறது.
அரசியல் வல்லுனர்கள் பல்வேறு யூகங்களை முன்வைக்கத் தொடங்கிவிட்டார்கள். அந்த அளவிற்கு இந்த அவநம்பிக்கையும் தெளிவின்மையும் அதிகமாகியிருக்கின்றன.
இவை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சில விஷயங்கள்:
- பாஜக தனி பெரும் கட்சியாக இருக்கும். ஜனாதிபதி நரேந்திர மோடியை அரசமைக்க அழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். அப்படி அழைக்கும் பட்சத்தில், புதிய அல்லது பழைய கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு 275 எம்.பி.க்களின் ஆதரவை பாஜக திரட்டலாம். 1998, 1999ஆம் ஆண்டுகளில் அடல் பிஹாரி வாஜ்பாயியின் தலைமையிலான பாஜகவுக்கு வெறும் 182 இடங்களே கிடைத்தன. அந்தச் சமயங்களில் இதர கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மைக்க முடிந்தது. வாஜ்பாயியால் இதைச் செய்ய முடிந்தால், மோடியால் நிச்சயமாகச் செய்ய முடியும்!
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுவிடுவார். அதோடு, அடுத்த ஆறு மாதங்களில் கூட்டணிக் கட்சிகளும் வழிக்கு வந்துவிடும்.
- இரண்டாவது சாத்தியக்கூறு, வாக்காளர்களுக்கு மோடி மீது முழு நம்பிக்கை இல்லாமல் போகும் என்பதால் பாஜகவில் தலைமையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் என்ற பெயர்கள் கேட்கின்றன. ஆனால், இந்தத் தலைவர்களால் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று கட்சியில் எவ்வித நம்பிக்கையும் இல்லை.
- மக்களவையில் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், ஜனாதிபதி எதிர்க்கட்சியிலிருந்து இரண்டாவது பெரிய கூட்டணியை அரசு அமைக்க அழைக்க வேண்டியிருக்கும். அப்போது, அதிகாரத்திற்கான போட்டி நடக்கும்.
மம்தா பானர்ஜி முதல் மாயாவதி, சரத் பவார் என்ற வலிமையான வேட்பாளர்கள் முதல் சர்ச்சைகள் இல்லாத நவீன் பட்நாயக், சந்திரபாபு நாயுடு என்ற பெயரகளும் குறிப்பிடப்படுகின்றன.
- அனைவருமே காங்கிரஸ் கட்சியின் வலிமை அதிகரிக்கும் என்று நம்பினாலும், அதிகாரத்திற்கு வரும் அளவிற்கு அது போதுமானதாக இருக்காது என்றே கருதுகின்றனர். எந்த ஒரு சூழலிலும், ராகுல் காந்தி அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக உருவெடுக்க வாய்ப்பே இல்லை எறூம் சொல்கிறார்கள். காரணம், இந்தக் கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ்கு எதிராக இருந்த வரலாறு இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கையில் வியத்தகு முன்னேற்றம் இருந்தாலும், ராகுல் ஆட்சி அமைக்கும் முயற்சியை எடுக்க மாட்டார் என்று சிலர் நினைக்கிறார்கள்.
- இது மிக அரிதான ஒரு வாய்ப்பு: பிரணாப் முகர்ஜி அல்லது மன்மோகன் சிங் ஆகியோருக்கு அவ்வளவு பின்னடைவு இல்லை என்பதால், அவர்கள் உள்ளே கொண்டுவரப்படலாம் என்று தோன்றுகிறது. ஆர்எஸ்எஸ் கூட பிரணாப் முகர்ஜி பிரதமர் ஆவதை எதிர்க்காது என்று வாதிடுகிறார்கள்.
- வெகுசிலரின், ஆனால் முக்கியமான தலவர்களின் கருத்தானது, அனைத்து சாத்தியக்கூறுகளும் தவறு. ஏனென்றால், மோடி 250க்கு நெருக்கமான இடங்களை வென்றுவிடுவார் என்று சொல்கிறார்கள்.
- அதன்பிறகு, உண்மையான கேள்வி: யாராக இருந்தாலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்வார்கள்? நிச்சயமற்றதன்மை இடைத்தேர்தலுக்கு இட்டுச் சென்று, மோடியின் ‘உறுதியான தலைமை’யை மீண்டும் கொண்டுவந்துவிடுமா?
மோடியின் ஆதரவாளர்கள் 2024 வரை அவரே கதாநாயகனாக இருப்பார் என்று உறுதியாக நம்புகிறார்கள். அவரை எதிர்ப்பவர்கள், வாக்காளர்களால் அவர் வெளியேறுவார் என்று நம்புகிறார்கள்.
வாக்காளர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது குறித்தோ, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன் என்ன செய்வார்கள் என்றோ, ஜோசியக்காரர்களுக்கும் சரி அரசியல் விமர்சகர்களுக்கும் சரி, ஒருமித்த கருத்து எதுவும் இல்லை.
ஆனால், பாஜகவினுள் சந்தேக அலை அடிக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உறுதி!
குமார் கேத்கர்
நன்றி: தி பிரின்ட்
https://theprint.in/opinion/what-bjp-mps-are-talking-in-private-about-narendra-modi-and-2019/180629/
தமிழில்: ஆசிஃபா