மூன்று மாதம் முதல்வராக தாக்குப் பிடிப்பாரா என்று அரசியல் நோக்கர்கள் கருதிய நிலையில் ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக நடத்தி முடித்ததோடு இல்லாமல், இதர கட்சிகளுக்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பிஜேபியோடு கூட்டணியை அமைத்து முடித்து ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் எடப்பாடி. கூட்டணி அறிவிப்பு முடிந்த்ததும் அதிமுக தலைவர்கள் இடையே ஒரு வெற்றி பெருமிதம் தெரிகிறது. இது வெற்றிக் கூட்டணி என்று அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதிமுக கூட்டணி அறிவிப்பு வரும் வரையில் திமுக கூட்டணி அறிவிப்பு வெளிவரவில்லை. இதன் காரணாமாகவும், ஊடகங்கள் முதல்வர் பழனிச்சாமியை அரசியல் சாணக்கியர் என்று சில ஊடகங்கள் வர்ணிக்கத் தொடங்கின.
திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தாமதமானதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. கூட்டணி இறுதி செய்யப்படும் வரை, திமுக, அதிமுக இரு கட்சிகளிடமுமே பாமக பேசி வந்தது ஒரு முக்கிய காரணம். பாட்டாளி மக்கள் கட்சி திமுக பக்கம் வந்து விட்டால் அதற்கு ஆறுக்கும் குறைவான இடங்களை ஒதுக்க வேண்டும். அதை உறுதி செய்த பிறகே கூட்டணி இறுதி செய்ய முடியும் என்பதாலேயே இந்த தாமதம்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு மக்களவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடங்களும் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டணியை எடப்பாடியே முன்னின்று நடத்தி முடித்தார் என்றே அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி இந்த பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியதற்கு முக்கியமான காரணம், மக்களவை தேர்தல் அறிவிப்போடு சேர்ந்து, 21 சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்ந்து அறிவிப்பு வரப்போகிறது என்பதுதான். இந்த 21 தொகுதிக்கான தேர்தல்களில் வெற்றி பெறுவது எடப்பாடி அவரது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கு அவசியமாக இருக்கிறது. ஆட்சியை 2021 வரை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளார். ஜெயலலிதா போன்ற பெரிய தலைவர் இல்லாத நிலையில், தேர்தலில் கூட்டணி கட்சிகளின் பலம் இல்லாமல் 21 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என்பதை எடப்பாடி நன்றாகவே உணர்ந்துள்ளார். இதன் காரணமாகவே வாக்கு வங்கி சரிந்துள்ள நிலையிலும் பாமகவுக்கு 7 + 1 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். அந்த ஒப்பந்தத்தில் மிக கவனமாக 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு, நிபந்தனையின்றி, பாமகவின் ஆதரவை எடப்பாடி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜகவோடு கூட்டணியை பொறுத்தவரை, கூட்டணிக்கு நோ சொல்லும் நிலையில் அதிமுகவோ, எடப்பாடியோ இல்லை. மோடி நினைத்தால் எப்போதோ எடப்பாடி ஆட்சியை கலைத்திருக்க முடியும். இதை மனதில் வைத்தே, தமிழக நலனுக்கு எதிரான எத்தனையோ திட்டங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமியும், அவர் அமைச்சரவை சகாக்களும் பிஜேபிக்கு ஒத்து ஊதி வந்தனர்.
இது தவிர, வருமான வரித் துறை சில அதிமுக அமைச்சர்களிடமும் அவர்களின் பினாமிகளிடமும் நடத்திய சோதனைகளில் ஏராளமான ஆதாரங்கள் கிடைத்தும், வருமான வரித் துறையோ, இதர மத்திய புலனாய்வு அமைப்புகளோ அதிமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது நாடு முழுக்க இந்த தேர்தல் காலத்தில் கூட அதி தீவிரத் தன்மையோடு நடவடிக்கை எடுக்கும் மோடி அரசு, அதிமுக பிரமுகர்களை கண்டும் காணாமல் இருக்கிறது. அதிமுக அரசு மீதான ஊழல்கள் குறித்து திமுகவும், இன்று கூட்டணி கட்சியான உள்ள பாமகவும் அளித்த புகார்கள் மீது, “ஊழல் ஒழிப்பு போராளியாக” தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் ஆளுனர் பன்வாரிலால் புரொகித் கூட இந்த புகார்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று, திமுக கொறடா சக்ரபாணி தொடுத்த வழக்கில், இரு மாதங்களுக்கு முன்னதாகவே பெரும்பாலான வாதங்கள் முடிந்து விட்டன. கடந்த ஜனவரி 31 அன்று இறுதி விசாரணைக்கு பட்டியிலிடப்பட வேண்டிய இந்த வழக்கு, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பல முறை முறையிட்டும் பட்டியலிடப்படவில்லை. கடந்த வாரம் பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்த வழக்கு, மர்மமான முறையில் காணாமல் போனதும், அதிமுக-பிஜேபி கூட்டணியின் பின்னணியிலேயே. இத்தகைய ஆபத்துகளின் காரணமாகவே, சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிடும் என்பதை அறிந்தும், எடப்பாடி பழனிச்சாமி பிஜேபி கூட்டணியை தேர்ந்தெடுத்தார்.
அதே நேரத்தில், தேசிய கட்சியாகவும், மத்தியில் ஆளும் ஒரு சக்திவாய்ந்த ஒரு கட்சியாகவும் உள்ள ஒரு கட்சி 12ல் தொடங்கிய சீட் பேரத்தை, வெறும் ஐந்தாக குறைத்தது, எடப்பாடி பழனிச்சாமியின் சாமர்த்தியமே. இந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் தொடக்கம் முதலே, பிஜேபிக்கு ஒதுக்கப்படும் இடங்களில், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, இந்திய ஜனநாயக கட்சி பச்சமுத்து மற்றும், புதிய நீதிக் கட்சியின் ஏசி.சண்முகம் ஆகியோருக்கு தலா ஒரு சீட்டை ஒதுக்க வேண்டும் என்றும், அவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றுமே பேசப்பட்டு வந்தது. இறுதியாக அறிவிப்பு வெளியிடுகையில், அவர்கள் மூவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அறிவிப்பு வெளியானது. இதையும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் சாதுர்யம் என்றுமே பார்க்க வேண்டியதுள்ளது
சில அரசியல் நோக்கர்கள், இந்த கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. கடந்த கால தேர்தல்களில் இக்கட்சிகள் பெற்றுள்ள வாக்கு சதவிகிதங்களை வைத்துப் பார்க்கையில் இந்த கூட்டணி எளிதாக வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் இந்த கருத்தில் பலர் மாறுபடுகிறார்கள்.
மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மணி இது குறித்து கூறுகையில், “திமுகவை விட அதிமுக அரசையும் மத்திய அரசையும் எதிர்ப்பதில் பாமக முன்னணியில் இருந்தது. ஆளுநரை சந்தித்து, நீண்ட புகார் பட்டியலை அளித்தது பாமக. இந்த புகார்களின் மீது இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. அந்த புகார்கள் இன்னமும் அப்படியேதான் உள்ளன. அந்த புகார்கள் குறித்து இப்போது பாமக என்ன சொல்லப் போகிறது” என்றார்.
அதிமுக அரசை விமர்சிப்பதில், ராமதாசும், அன்புமணியும் திமுகவை விட தீவிரமாக இருந்தார்கள். தனது ட்வீட்டுகளாலும், ஆழ்ந்த அறிக்கைகளாலும், அதிமுக அரசை பாடாய் படுத்தி எடுத்தார். அன்புமணியோ இன்னும் ஒரு கட்டத்துக்கு மேலே போய், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை தரக்குறைவாக பேசினார். திமுக தலைவர்கள் கூட அமைச்சர்களை அப்படி விமர்சனம் செய்தது இல்லை.
இதன் காரணமாகவே இந்த கூட்டணியை தவிர்க்க அன்புமணி முயற்சித்தார் என்று தகவல்கள் கூறுகின்றன. கூட்டணி அறிவிக்கப்பட்டபோது கூட, அன்புமணியின் முகம் இறுக்கமாகவே இருந்தது. இப்படி விமர்சித்துவிட்டு அன்புமணி, எந்த முகத்தோடு எடப்பாடியோடும், பன்னீர்செல்வத்தோடும் ஒன்றாக பிரச்சாரம் செய்யப் போகிறார் என்று புரியவில்லை. “அரசியலில் கட்சிகள் மாறி மாறி கூட்டணி வைப்பது இயல்பான விஷயமே என்றாலும், பாமக தலைவர்கள் மற்றவர்களை விமர்சிக்க பயன்படுத்திய தடித்த வார்த்தைகளே அவர்கள் மீது இத்தனை விமர்சனம் எழக் காரணமாக இருக்கிறது” என்கிறார் மணி.
இதே போல, எடப்பாடி மிக பிடிவாதமாக செயல்படுத்த முயன்ற சேலம் 8 வழிச் சாலையை இரு ராமதாஸ்களும் தீவிரமாக எதிர்த்தார்கள். அன்புமணி, அப்பகுதிக்கு போராட்டம் நடத்த சென்றபோது, அப்போராட்டங்களுக்கு எடப்பாடி அரசு தடை விதித்தது. நீதிமன்றம் மூலம் போராட்டத்துக்கு அனுமதி பெற்ற பிறகு, தடை விதித்த தமிழக அமைச்சர்களை “அயோக்கிய பயல்கள்” என்று பேசினார் அன்புமணி.
பத்திரிக்கையாளர் லட்சுமி சுப்ரமணியம் இவ்வாறு குறிப்பிட்டார். “பாட்டாளி மக்கள் கட்சி, சேலம் 8 வழிச் சாலையை எதிர்த்து கடுமையாக போராடியது. சேலம், தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில், அதிமுகவோடு சேர்ந்து இக்கட்சி இப்போது எப்படி பிரச்சாரம் செய்யும்” என்று கேள்வி எழுப்புகிறார்.
சேலம் 8 வழிச் சாலையை கைவிடுகிறோம் என்று இதுவரை எடப்பாடி அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற விமர்சனங்களால்தான், அதிமுக-பாமக கூட்டணி முன்னெப்போதும் இல்லாத வகையில், சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதற்கு முன்பு, அதிமுக-பாமக கூட்டணி ஏற்பட்ட சமயங்களிலும், பாமகவினர், அதிமுக தொகுதிகளில் வேலை பார்க்கவில்லை. அதிமுகவினர் பாமக தொகுதிகளில் வேலை பார்க்கவில்லை. 2009 தேர்தலில், இப்போது போலவே அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகளை பெற்ற பாமக ஏழிலும் தோற்றது. இம்முறை, குறிப்பாக, ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது முதல், அதிமுக மீது வைத்த கடுமையான விமர்சனங்கள் வரை உன்னிப்பாக கவனித்து வரும், அதிமுக தொண்டன், இந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்பானா என்பது சந்தேகமே. மேலும், முன்பு போல இல்லாதவகையில், இம்முறை, அதிமுக தொண்டனுக்கு, டிடிவி தினகரன் என்ற ஆப்ஷன் உள்ளதை மறுக்க முடியாது. மேலும், எடப்பாடி பழனிச்சாமியோ, பன்னீர்செல்வமோ, ஜெயலலிதா போன்ற பெரும் ஆளுமைகள் இல்லை என்பதையும் மறுக்க இயலாது.
பாமக நிறுவனர் ராமதாஸை கைது செய்த ஜெயலலிதா, அக்கட்சியை தடை செய்யும் அளவுக்கு போனார் என்பதையும் நாம் இந்நேரத்தில் மறந்தி விடக் கூடாது. ஜெயலலிதா இவ்வாறு பேசியதையும், ராமதாஸை கைது செய்ததையும், பாமக தொண்டர்களொ, அதன் பிறகு பாமக தலைவர்கள், ஜெயலலிதாவையும், அதிமுகவையும் செய்த விமர்சனங்களை அதிமுக தொண்டர்களோ அத்தனை எளிதில் மறந்து விட மாட்டார்கள்
இந்த கூட்டணிக்கு வன்னியர் மற்றும் கவுண்டர்களின் ஆதரவு இருக்கும் என்பது உண்மையே. ஆனால், இதர கட்சிகளும் இதே சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களையே நிறுத்தப் போகின்றன. இதனால், இச்சமூகத்தின் வாக்குகள், ஒட்டுமொத்தமாக அப்படியே இக்கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. இது தவிர, பெரும்பான்மை சமூகத்தை சேராத இதர சமூகங்களின் வாக்குகளும், குறிப்பாக தலித் சமூகத்தினரின் வாக்குகள் மற்றும், சிறுபான்மையினர் சமூகங்களின் வாக்குகள், இந்த கூட்டணிக்கு கிடைப்பதற்கான சாத்தியங்கள் குறைவே.
பத்து அம்ச கோரிக்கைகளை அளித்து, அதை ஏற்றுக் கொள்வதாக அதிமுக கூறியதாலேயே கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம் என்று ராமதாஸ் கூறுவதை, பாமக தொண்டர்களே நம்ப மாட்டார்கள். ஒரு மூத்த பத்திரிக்கையாளர், 1996ம் ஆண்டு, மக்கள் மனதை புரிந்து கொள்ளாமல், அதிமுகவும் காங்கிரஸ் கட்சியும் வைத்த கூட்டணியை, மக்கள் முழுவதுமாக நிராகரித்தார்கள். இந்த கூட்டணிக்கும் அதே கதிதான் ஏற்படும் என்று கூறினார்.
அரசியல் கட்சிகள் போடும் கணக்குகளையும், கருத்துக் கணிப்புகளையும் மக்கள் பல நேர்வுகளில் நிராகரித்துள்ளார்கள். இந்தக் கூட்டணியும் அப்படி ஒரு தப்புக் கணக்கின் அடிப்படையிலேயெ என்று தோன்றுகிறது.
vanniyar trust act
Sir,
Kaduvetti Guru’s family are against Ramadoss family
Will it have major impact on PMK vote bank ?
Salem, dharmpuri, thiruvannamalai – is tight. U mentioned thiruvallur. Pls correct.
சில பத்திரிக்கைகளே
போலியான பிம்பத்தை உருவாக்கின்றன
Savuku, whatever you have said in this column is right my only doubt is if BJP can do A high level malpractice in EVMs then the possibility of ADMK front winning can’t be stopped, please tell me what’s your opinion
shankrish78@yahoo.co.in
உன்மை✌️✌️✌️
இதே கட்டுரையை ஆங்கிலத்தில் படித்த போது இருந்த சுவை, தமிழில் இல்லை.