ட்விட்டரில் ஆதிக்கம் செலுத்தி வந்த பாஜகவின் டிஜிட்டல் பிரச்சார உத்திகள் இப்போது தடுமாற்றங்களைச் சந்தித்து வருகின்றன.
மத்தியில் ஆளும் பாஜக, ட்விட்டர் தளத்தில் ஏற்படுத்திவந்த தாக்கத்தைப் படிப்படியாக இழந்துவருவது பல்வேறு அறிகுறிகள் மூலம் தெரியவருகிறது. நரேந்திர மோடியை விட ஐந்து மடங்கு குறைவாகவே பின்தொடர்வோரின் எண்ணிக்கை இருந்தாலும், அவருடன் ஒப்பிடும்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுகள் அதிக அளவில் ரீட்வீட் செய்யப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக பாஜக ஆதரவாளர்களின் செயல்பாடுகளும், பாஜக ஆதரவு விவாதங்களும் ட்விட்டரில் வீழ்ச்சி கண்டுள்ளன. இதை பாஜகவின் சமூக வலைதளங்களை நிர்வகித்த குழுவைச் சேர்ந்தவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். ட்விட்டரில் வெளியாகும் அரசியல் சார்ந்த கருத்துக் கணிப்புகள் பலவும் பாஜகவுக்குப் பின்னடைவைத் தரக் கூடியதாகவே உள்ளன என்றும், வலதுசாரிகள் மேற்கொள்ளும் கருத்துக் கணிப்புகளின் முடிவுகள்கூட பாஜகவுக்கு எதிராகவே அமைந்துள்ளன என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, பாஜகவின் ஐடி. பிரிவின் செயல்பாடுகளின் லட்சணத்தை அம்பலப்படுத்திய ஒரு செய்தியால் அந்தக் கட்சி பெரும் சங்கடத்தை எதிர்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியையும், கட்சியையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விமர்சிக்கும் பதிவுகள், பாஜக அமைச்சர்கள் மூலமே வெளியிடப்பட்டதும் அம்பலமாகியிருக்கிறது.
இது தொடர்பான வீடியோ பதிவை, உண்மை கண்டறியும் ‘ஆல்ட்நியூஸ்’ தளத்தின் இணை நிறுவனர் பிரதிக் சின்ஹா ஒரு வெளியிட்டார். ட்விட்டர் கோர்வையில் ஏற்கெனவே பகிரப்பட்ட கூகுள் டாக்குமென்ட் ஒன்றை எடிட் செய்து, அதன் உள்ளடக்கத்தில் உள்ள வரிகளை சிறு சிறு மாற்றம் செய்தால், வாக்கியங்களின் அர்த்தமே தலைகீழாக மாறக்கூடும் என்பதை அவர் செய்து காட்டினார். அப்படித்தான், பாஜகவின் ஐடி. பிரிவால் பகிரப்பட்டு, அக்கட்சியைச் சேர்ந்தவர்களால் பகிரப்பட்ட டாக்குமென்ட் ஒன்று எடிட் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். அவ்வாறாக எடிட் செய்யப்பட்ட டாக்குமென்ட்டிலிருந்து மோடிக்கு ஆதரவான ஹேஷ்டேகில் பகிரப்பட்ட பதிவுகளால் பாஜகவுக்கு பங்கம் ஏற்பட்டதை அறிய முடிகிறது.
அதாவது, சம்பந்தப்பட்ட ஆவணம் எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்று உணராத பாஜக தலைவர்களும், அக்கட்சியின் ஆதரவாளர்களும் பெருமிதத்துடன் காப்பி – பேஸ்ட் செய்து பதிந்த ட்விட்டர் கோர்வையை பிரதிக் சின்ஹா தெளிவாக ஸ்க்ரீன் ஷாட்ஸ் மூலம் விவரித்திருந்தார்.
உதாரணமாக, மோடியின் செயல்திட்டங்களைப் பாராட்டும்படியான ஒரு கூகுள் ஆவணத்தை ட்விட்டரில் பாஜக ஐடி பிரிவு பகிர்ந்திருந்தது. அந்த ஆவணத்தில் இருந்த வரிகள் பின்னர் எடிட் செய்யப்பட்டிருந்தன. அதைக் கவனிக்காத மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அஸ்ஸாம் பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளில் இந்தப் பதிவுகள் நகல் செய்யப்பட்டுத் தொடர் பகுதிவுகளாக வெளியிடப்பட்டன. ‘மத்திய தர மக்களுக்காகச் செயல்படுவதே மோடியின் முக்கிய நோக்கம்’ என்பதன் எடிட் செய்யப்பட்ட வடிவமான ‘மத்தியத்தர மக்களுக்காகச் செயல்படுவது என்பது மோடியின் முக்கிய நோக்கமல்ல’ எனும் அர்த்தம் தரும் வரிகளே பொன் ராதாகிருஷ்ணனின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தன. இதேபோல், ‘அரசு அனைவரயும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிச் செயல்படவில்லை’ எனும் தொனியில் அஸ்ஸாம் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.
இது தொடர்பான பிரதிக் சின்ஹாவின் ட்விட்டர் தொடர் பதிவுகள் வைரல் ஆகின. குதர்க்க நோக்குடன் எடிட் செய்யப்பட்டிருந்த தங்கள் ட்வீட்களை பாஜகவினர் அவசர அவசரமாக அழிப்பதற்கு முன்பாகவே அவை ஸ்க்ரீன் ஷாட்கள் எடுக்கப்பட்டு வைரல் ஆகியிருந்தன. பாஜக ‘பங்கம்’ ஆனது.
இதன் தொடர்ச்சியாக, வலதுசாரிகளுக்கு எதிராகவே ட்விட்டர் இயங்குவதாக பாஜகவினர் போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர். மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தங்களது ட்விட்டர் பதிவுகள் சென்சார் செய்யப்படுவதாகவும், தங்களது பக்கங்களின் பதிவுகள் பரவலாகாமல் வேண்டுமென்றே கட்டுப்படுத்தப்படுவதாகவும் பாஜக நிர்வாகிகள் பலரும் குற்றம்சாட்டினர். இத்தகைய சூழல்கள் ஒன்று சேர்ந்து, ட்விட்டரில் பாஜகவுக்குப் பீதிப்புயலை உருவாக வழிவகுத்தது.
வீழ்ச்சியை நோக்கி…
ஓராண்டுக்கு முன்பு வரை, இந்திய அரசியல் பேசும் ட்விட்டர் தளத்தில் பாஜகவின் தன்னிகரற்ற ஆதிக்கம் என்பது எளிதில் தகர்க்க முடியாத ஒன்றாகவே இருந்தது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்குச் சமூக வலைதளப் பிரச்சார உத்திகள் பெரும் பங்காற்றியதாகக் கொண்டாடப்பட்டது. அதற்கு ஓராண்டு கழித்துதான் 2015இல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் கணக்கையே துவங்கினார். இதனிடையே, கடந்த ஆண்டுகளில் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸப் எனப் பல தளங்களில் பாஜகவினர் கச்சிதமாக வியூகம் வகுத்துப் பதிவுகளைப் பரப்பிவந்தனர்.
குறிப்பாக, ‘ட்ரென்ட் அலெர்ட்’ எனப்படும் கூகுள் டாக்குமென்ட்டை முதன்மைக் கருவியாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அதைத்தான் பிரதிக் சின்ஹா கைப்பற்றி விளக்கினார். ஒரு குறிப்பிட்ட ஹேஷ்டேகை ஒருமித்த நடவடிக்கையுடன் ட்ரென்ட் ஆக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் உத்திதான் ‘ட்ரென்ட் அலெர்ட்’. இது தொடர்பாக பாஜகவின் முன்னாள் டேட்டா அனாலிஸ்ட் ஷிவம் சங்கர் சிங் கூறும்போது, “ஒரு கூகுள் ஆவணத்தை ஐடி பிரிவு உருவாக்கும். அதில், ஒரு குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக 15 முதல் 20 ட்வீட்கள் வரை பதியக் கூடிய உள்ளடக்கம் இடம்பெற்றிருக்கும். குறிப்பிட்ட ஹேஷ்டேகுடன் அந்த ஆவணத்தை வெவ்வேறு வாட்ஸப் குழுக்களிலும், ஃபேஸ்புக் குழுக்களிலும் பரப்பும்போது, அதிலுள்ள வாக்கியங்களை சில அமைச்சர்களும் அப்படியே காப்பே பேஸ்ட் செய்து, உரிய ஹேஷ்டேகுடன் தங்கள் ட்விட்டர் பதிவுகளில் பகிர்வர். அதேபோல் மக்களும் காப்பி – பேஸ்ட் செய்வர். அந்தக் குறிப்பிட்ட ஹேஷ்டேக் விரைவிலேயே ட்ரென்டிங்கில் வலம் வரும்” என்றார்.
அரசியல் சார்ந்த ட்விட்டர் கருத்துக் கணிப்புகளில் மக்களை வாக்களிக்க வைப்பது போன்ற பல்வேறு வழிகளிலும் ஆன்லைன் ஆதரவாளர்களை ஒன்றிணைப்பதற்காக ‘ட்ரென்ட் அலெர்ட்’களை பாஜக ஐடி பிரிவு பயன்படுத்திவந்ததாகவும் ஷிவம் சங்கர் கூறுகிறார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக அனைத்து வழிகளிலும் ட்விட்டரில் பாஜக பின்னடைவுகளையே சந்தித்துவருகிறது. இது தொடர்பாக அவர் மேலும் விவரிக்கும்போது, “கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டரில் பாஜகவின் செயல்பாடுகள் வீழ்ச்சி கண்டுள்ளன. இதற்கு, நடுநிலை ஆதரவாளர்கள் பலரும் பாஜகவுக்கு ஆதரவான ட்வீட்களைப் பதிவிட முன்வராததே காரணம். ட்ரென்ட் அலெர்ட் ஆவணங்களும் இப்போது பலன் தருவதில்லை.
மாறாக, இப்போதெல்லாம் பாஜகவுக்கு எதிரான ஹேஷ்டேகுகள் மட்டுமே ட்ரென்டிங்கில் பேசுபொருளாக அதிகம் வலம் வருகின்றன. இந்தப் போக்கை 2016 – 2017 காலக்கட்டத்தில் நீங்கள் பார்த்திருக்க முடியாது” என்றார் அவர்.
ட்விட்டரில் ட்ரென்டிங்கிற்கு மட்டுமின்றி, ஆன்லைன் கருத்துக் கணிப்புகளுக்குக்கூட ‘ட்ரென்ட் அலெர்ட்’ இப்போது உறுதுணைபுரிவது இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ட்விட்டரில் இந்திய அரசியல்வாதிகள் செயல்பாடுகளை ஆய்வு செய்த மிஷிகன் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் ஜோயோஜீத் பால் கூறும்போது, “ரீட்வீட் செய்யப்படும் பதிவுகளின் நம்பகத்தமை குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றாகவே தெளிவு இருக்கிறது. தற்போதைய சூழலில், காப்பி – பேஸ்ட் அணுகுமுறை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆபத்தான பின்விளைவுகளையே ஏற்படுத்தும்” என்கிறார்.
13 காரணிகள்
ட்விட்டரில் பாஜக தொடர்ச்சியாகப் பெரும் பின்னடைவைச் சந்தித்துவருவது ஏன்?
இது குறித்து ஷிவம் சங்கர் கூறும்போது, “சமூக வலைதளங்களில் மற்ற கட்சிகள் தங்களது இருப்பை வலுவாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், பாஜகவின் ஆதரவாளர்களே ட்விட்டரில் தீவிரம் காட்டுவதை வெகுவாகக் குறைத்துக்கொண்டதுதான் அக்கட்சியின் பின்னடைவுக்கு முக்கியக் காரணம். அதேவேளையில், தங்களுக்கு அனுப்பப்படும் பதிவுகளை பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து ட்வீட் செய்துவருகிறார்கள்” என்கிறார்.
உண்மை கண்டறியும் ‘பூம்’ தளத்தின் நிர்வாக ஆசிரியர் ஜென்ஸி ஜேக்கப் கூறும்போது, “ட்ரென்ட்டிங்கையும் ஹேஷ்டேகையும் கட்டமைப்பதற்கான கோட்டையாகவே பாஜக ஐடி பிரிவு பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவந்தது. ஆனால், அதுபோன்ற உத்திகளை நெட்டிசன்கள் அணுகும் விதம் மாறிவிட்டது. செயற்கைத்தனமாக ட்ரென்ட் செய்யப்படும் ஹேஷ்டேகுகள் குறித்த போக்குகளை மக்கள் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர். எனவேதான், பாஜகவினர் காப்பி – பேஸ்ட் உத்திகளை நிறுத்திக் கொண்டனர். ஆனால், அவர்கள் வேறு வடிவங்களில் செயல்படுகின்றனர். அப்படித்தான் பிரதிக் சின்ஹாவிடம் அவர்கள் வசமாகச் சிக்கினர்” என்கிறார்.
பாஜகவினர் தானியங்கி முறையைப் பயன்படுத்திவந்ததும் பின்னடைவுக்கு மற்றொரு காரணமாக இருக்கக்கூடும். தற்போது ட்விட்டர் பல வழிகளில் போலிக் கணக்குகளை நீக்கிவருகிறது. அதன் எதிரொலியாகக் கடந்த நவம்பரில் மட்டும் மோடியின் 100,000 ஃபாலோயர்களும், ராகுல் காந்தியின் 9,000 ஃபாலோயர்களும் அதிரடியாக நீக்கப்பட்டனர். போலிகளைக் களைவதில் தீவிரம் காட்டுவதாக, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ட்விட்டர் சிஇஓ ஜாக் டார்ஸி கூறியிருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இந்தப் பின்னடைவும்கூட ட்விட்டரில் பாஜகவின் இருப்பு மங்குவதற்கான மற்றொரு காரணமாகக் கருதப்படுகிறது. “பாஜக ஐடி பிரிவு ஊழியர்கள் ஒவ்வொருவரும் 50-ல் இருந்து 100 வரையிலான போலி ட்விட்டர் கணக்குகளை நிர்வகித்துவந்தனர். ட்ரென்ட் அலெர்ட் ஆவணத்திலிருந்து எடுத்து அவர்கள் ட்வீட்களைக் கொட்டிவந்தனர்” என்கிறார் ஷிவம் ஷங்கர். போலிக் கணக்குகள் வெகுவாக முடக்கப்படுவதால் இனி அதுபோன்ற தீவிரப் போக்கைப் பின்பற்ற முடியாது என்பது தெளிவு.
பாஜகவின் டேட்டா அனாலிஸ்ட் பொறுப்பிலிருந்து கடந்த ஆண்டு விலகிய ஷிவம் சங்கர் சிங், அக்கட்சி ஐடி பிரிவால் நிர்வகிக்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்குகள் குறித்து வெளியிட்ட தகவல்கள் புதிதல்ல. பாஜகவினரின் போலிக் கணக்குகள் குறித்து ஏற்கெனவே பல செய்திக் கட்டுரைகள் வெளியாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் ஒருவரை அணுகியபோது, “மக்களிடையே ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்குவதுதான் எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று. மக்கள் உரையாடுவதற்கு வகை செய்யும் எங்கள் தளத்தில் மோசடிகளுக்கு ஒருபோதும் இடமில்லை. இதற்காக, போலிக் கணக்குகளை நீக்குவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை ட்விட்டர் விதிமுறைகளின்படியே செய்துவருகிறோம். ஆண்டுதோறும் அகற்றப்படும் மோசடிக் கணக்குகளின் எண்ணிக்கை 214 சதவீதமாக இப்போது அதிகரித்துள்ளது” என்றார்.
இந்த விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுடன், பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியாவை அணுகியபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அமெரிக்கன் என்டர்பிரைசஸ் இன்ஸ்டிட்யூட்டின் ஆய்வாளர் சதானந்த் துமே கூறும்போது, “மக்களவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில், பாஜக ஒருவித குழப்பத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. போலிச் செய்திகளை உற்பத்தி செய்வதிலும், விமர்சகர்களை மிரட்டுவதிலும் பாஜக ஐடி பிரிவு சிறப்பாகச் செயல்பட்டது. இணையத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது இவை பலன்களைத் தந்தன. ஆனால், மற்ற கட்சிகளில் இன்னும் சிறப்பாக வியூகம் வகுத்து இணையத்தில் இயங்கும் தற்போதைய சூழலில், பாஜகவின் பழைய வியூகங்கள் அனைத்தும் தனக்குத் தானே குழி தோண்டிக்கொள்ளும் ஆபத்தாகவே அமைகின்றன” என்றார்.
அரியா தக்கர்
நன்றி: குவார்ட்ஸ் இந்தியா
https://qz.com/india/1549774/is-the-bjp-losing-its-grip-on-indian-twitter/