ராணுவம் எந்த நடவடிக்கையிலும் முன்னிலை வகித்தாலும் அது அரசியல் தலைமையின் வழிகாட்டுதலில்தான் செயல்பட வேண்டும்.
புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கான பதில் ‘மு தோட் ஜவாப்’ (பொருத்தமான பதிலடி) எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். தாக்குதல் நடக்கும்போதெல்லாம் அரசு கூறும் வழக்கமான சொற்றொடராக இது அமைகிறது. எதிர்வினையின் வடிவம், இடம் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்ய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்திருப்பதாக நாட்டின் தலைவர் சொல்வது எதை உணர்த்துகிறது? முரட்டுத்தனமான எதிரியுடன் மோதும்போது அவசியமான திடகாத்திரமான நிலைப்பாட்டின் தொடர்ச்சியை உணர்த்துவதற்கான தேர்தல் பிரச்சார முழக்கமாக இதைக் கருதுவதாக இல்லை எனில், இந்தக் கருத்து தவறானது, பல நிலைகளில் பிரச்சனைக்குரியது.
யாருக்கு சுதந்திரம்?
அணு ஆயுத சக்தி கொண்ட நாட்டை எதிர்கொள்ளும்போது, ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் அளிப்பதை தேசப் பாதுகாப்பு நோக்கில் ஏற்றுக்கொள்ள முடியாது. மாறாக, இன்னொரு அணு ஆயுத சக்தியை எதிர்கொள்ளும்போது, ஆழமான அரசியல் வழிகாட்டுதலும், கவனமும் அவசியம்.
இத்தகைய அரசியல் கவனம், பதில் நடவடிக்கைகளைத் திட்டமிடும்போதும், செயல்படுத்தும்போதும் அவசியம். நடைமுறையில், ராணுவ – சிவில் உரையாடல் இதற்குத் தேவை. நிச்சயம் பிரதமர் கூறியதுபோல முழுச் சுதந்திரம் அல்ல.
அரசியல் நோக்கங்களின் தெளிவு மற்றும் அரசியல் நோக்கிலான வரம்புகளைக் கண்டறிவது அரசியல் – ராணுவ உரையாடல் மூலமே சாத்தியம். இது அரசியல் வரைவுத் திட்டத்தை வரையறுக்க உதவும்.
எனவே ராணுவத்திற்கான சுதந்திரம் அரசியல் வரைவுத் திட்டத்தின் வழிநடத்தலைக் கொண்டிருக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, சிவில் – ராணுவ ஆலோசனை, வாய்ப்புள்ள அரசியல் மற்றும் வியூக சாதகங்களையும், ராணுவ பதிலடியின் இடர்களையும் பரஸ்பரம் மதிப்பிட்டிருக்க வேண்டும்.
எண்ணற்ற அம்சங்களைப் பரிசீலனை செய்த பிறகு, இறுதி வடிவம், நேரம், இலக்கு ஆகியவை அரசியல் தலைமையால் அங்கீகரிக்கப்படுகின்றன. இறுதி முடிவு எடுப்பதற்கு முன், அரசியல், ராணுவத் தலைவர்கள் பரஸ்பரம் தங்களின் தேவைகள், அரசியல் பலம், பலவீனங்கள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். தொடர் உரையாடல் இருந்தால் இத்தகைய புரிதலைச் சிறப்பான முறையில் சாத்தியமாக்கலாம்.
ராணுவத் தலைமைக்கான சவால் என்பது, அரசியல் நோக்கங்கள் ராணுவ நடவடிக்கை மூலம், வியூக விளைவாக வெற்றிகரமாக மாறுவதை உறுதி செய்வதுதான்.
வியுக விளைவு என்பது, இலக்குகளின் அரசியல் மதிப்பு மற்றும் தீவிரவாத, ராணுவ நிலைகள் மீதான சேதத்தின் தீவிரம் ஆகியவை இணைந்து அமையும்.
இதற்கேற்ப, ராணுவ பலத்தைப் பிரயோகிப்பது, எதிர்கொள்ளக்கூடிய எதிர்ப்புக்கு ஏற்பவும், உண்டாக்க வேண்டிய சேதத்தின் அளவிற்கு ஏற்பவும் அமையும். இத்தகைய எதிர்வினைக்கு, ராணுவம் அல்லாத அரசு அமைப்பு மூலமான உளவுத் தகவல்கள் தேவை.
உண்மை என்னவெனில், எந்தச் செயலிலும் ராணுவம் முன்னணியில் இருந்தாலும், அரசியல் வழிகாட்டுதலின்படியே அது செயல்படுகிறது.
எனவே, ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் அளிப்பதாகக் கூறும் பிரதமர் மோடியின் கருத்து தவறானதாகும். ஏனெனில் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் இடருக்கான சாத்தியங்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரம் அரசியல் தலைமைக்குத்தான் இருக்கிறது.
தவறான அறிகுறி?
அண்மையில் ஏற்படுத்தப்பட்ட, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான பாதுகாப்பு திட்டமிடல் குழு, ஆயுதப் படைகள் தாங்களாகவே செயல்படுவதை மேலும் கடினமாக்கியிருக்கிறது.
உயர் மட்ட முடிவு எடுக்கும் அளவில், ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் இல்லை, இருக்கவும் முடியாது. ஏனெனில் அதன் பணி செயலாக்க அளவிலானது. செயல்படுத்தும்போது, உத்தி அளவில்தான் ராணுவத் தளபதிகளுக்குச் செயல்பாட்டு சுதந்திரம் தேவை.
ஆயுதப் படையினருக்கு முழுச் சுதந்திரம் அளிக்கும் பிரதமரின் கருத்தை, அரசியல் அனுமதி, வழிகாட்டுதல் இல்லாமல் முடிவு எடுக்கப்படும் என்றும், வெற்றி தோல்விக்கு ராணுவமே பொறுப்பு என்றும் தவறாக அர்த்தம் கொள்ளக் கூடாது.
ராணுவத்திற்கான சுதந்திரம் என்பது, சர்வதேச அளவில் அதிர்வுகளை உண்டாக்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. பாதுகாப்பு நோக்கர்கள், இதை அணு ஆயுதப் பதற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அரசு அதன் சிவில் தலைமையின் கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாகச் செயல்படும் ஆற்றல் கொண்டது எனும்போது இது மிகவும் முக்கியமாகிறது.
இந்திய சிவில் – ராணுவ உறவில் உள்ள பதற்றம் இந்தச் சூழல் அணு ஆயுத மோதலுக்கு வழிவக்கலாம் எனும் கருத்தை முன்வைக்கவும் வித்திடலாம். இந்தியாவுக்கான சர்வதேச ஆதரவு எதிர்மறையாக அமையும் இது வழிவகுக்கலாம்.
ராணுவ நடவடிக்கையின் தன்மையையும், நோக்கத்தையும் அரசியல் தலைமைதான் தீர்மானிக்க வேண்டும். இந்தச் சூழலில் நோக்கம் என்பது, உணர்வெழுச்சியையும் பதிலடி கொடுக்க வேண்டும் எனும் மக்களின் இயல்பான வேட்கையையும் தணிப்பதாகும்.
இதற்கான தடை ஏதேனும் இருந்தால், சொற்பமாகவும், தற்காலிகமானதாகவும் இருக்கும். நீண்ட கால நோக்கில், இது பாகிஸ்தான் ராணுவத்தையும், தீவிரவாத பதிலிகளையும் வலுவாக்கும். ‘இந்தியா தாக்கக்கூடிய அபாயம்’ என்னும் அம்சத்தை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இருப்பினும், உரி சம்பவத்துக்குப் பிறகான சர்ஜிகல் தாக்குதல் பற்றி அதிகமாக பெருமைப்பட்டுக்கொண்டதாலும், அடுத்த 2 மாதங்களில் தேர்தலைச் சந்திக்க இருப்பதாலும் அரசு, துடிப்பான வகையில் எதிர்வினையாற்ற வேண்டும்.
இருப்பினும், பதிலடி நடவடிக்கையின் தன்மை, பிரதானமாக உள்ளூர் மக்களைத் திருப்பதிபடுத்துவதற்கானது என்பதை அரசியல் தலைமை ஒப்புக்கொண்டால், பல லாபங்களைப் பெறலாம்.
ராணுவம் முழுச் சுதந்திரம் கேட்பது இயல்பானது. எனினும் அரசியல் தலைவர்கள், பகுத்தறிவுசார் அணுகுமுறை மூலம் ராணுவத்துடனான உரையாடலின் தன்மையை அரசியல் தலைவர்கள் கட்டுபப்டுத்த வேண்டும். கார்ல் வான் கிலாஸ்ட்விட்ஸ், குறிப்பிட்டது போல், போருக்கு எனத் தனித்த இலக்கணம் இருந்தாலும், அது தனக்கான சொந்தத் தர்க்கத்தைக் கொண்டிருக்க முடியாது.
ஆணு ஆயுத ஆற்றல் படைத்த எதிரியை எதிர்கொள்ளும்போது, அதிகபட்சமான படையைப் பயன்படுத்துவதற்கான அரசியல் தலைமையின் சுதந்திரம்கூடக் கட்டுப்படுத்தப்படுகிறது.
விவேகத்தூடன் செயல்படுவது, எச்சரிக்கையுடன் இருப்பது, குழப்பமற்ற ராஜதந்திர இலக்கைக் கொண்டிருப்பது ஆகியவை அர்த்தமுள்ள பதிலடிக்கு உதவும். முழுச் சுதந்திரம் என்பது எதிர்பார்த்த பலனைத் தர வாய்ப்பில்லாத தீங்கான அணுகுமுறையாகும்.
லெஃப்டினென்ட் ஜெனரல் பிரகாஷ் மேனன்
லெஃப்டினன்ட் ஜெனரல் (டாக்டர்) பிரகாஷ் மேனன், பிவிஎஸ்எம், எவிஎஸ்ஏ, விஎஸ்எம், தட்சசீலா இன்ஸ்டிட்யூஷனின் வியூக ஆய்வு இயக்குனர். தேசியப் பாதுகாப்புக் குழுச் செயலகத்தின் முன்னாள் ராணுவ ஆலோசகர். ஸ்டிராட்ஜி டிராப்: இந்தியா பாகிஸ்தான் அண்டர் நியூகிலியர் ஷேடோ புத்தகத்தின் ஆசிரியர்.
நன்றி: தி ப்ரின்ட்
https://theprint.in/opinion/narendra-modis-free-hand-to-armed-forces-is-misleading-and-problematic/194855/