புல்வாமா தாக்குதலையொட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த 72 மணி நேரத்துக்குப் பின்னர் உண்மையான ‘அரசியல்’ முகம் வெளிப்படத் தொடங்கியது. ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 44 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அரசியலாக்கத் தூண்டப்படுவதை அனைத்துக் கட்சிகளும் தடுத்திருக்க வேண்டும். ஆனால், நீதி விசாரணைக் குழுவைக்கூட மத்திய அரசு நியமிக்காத நிலையில், காஷ்மீர் மாநிலத்தையும், காஷ்மீரிகளையும், அவர்களது விற்பனைப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று பொதுவெளியிலேயே அழைப்பு விடுக்கப்படுகிறது. இதன் மூலம், அரசியல் தூண்டுதல்களைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பே சுக்குநூறாக்கப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் தங்கிப் படிக்கின்ற இளம் காஷ்மீர் மாணவர்களை மிரட்டும் பஜ்ரங் தளம் போன்ற பல்வேறு சங் பரிவார் அமைப்புகள் குறித்து எதுவும் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் போலவே பேரமைதி காக்கிறார். இதனிடையே பாட்னா, வாரணாசி முதலான இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பேசும் நரேந்திர மோடி, பழிதீர்ப்பது பற்றிப் பூடக மொழியில் முழங்குகிறார். பாட்னாவில் கொந்தளிப்புடன் கூடியிருந்த மக்களிடையே “உங்கள் நெஞ்சங்களில் பற்றி எரியும் நெருப்புதான் என் நெஞ்சிலும் கனன்று கொண்டிருக்கிறது” என்று அவர் கூறினார். துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டு மக்களுக்கு எதிராகப் பல்முனைகளில் ஏற்கெனவே தீயைப் பரவவிட்டிருக்கின்றனர். நச்சுப் பெரும்பான்மைவாதம் எனும் அந்தத் தீ, கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தொய்வின்றிப் பற்றவைக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய நிலையை பாரதிய ஜனதா கட்சி தனது அரசியலுக்குப் பயன்படுத்தி வருகிறது என்பதே உண்மை. வேலையின்மை மற்றும் வேளாண் பிரச்சினைகளை முழுமையாக திசைத்திருப்புவதற்கு தேசப் பாதுகாப்பு விவகாரமே மிகவும் பொருத்தமானது என்பதை மோடி உணர்ந்திருப்பது தெளிவு. தேசப் பாதுகாப்பை முன்வைத்து காஷ்மீருக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தை மென்மேலும் தூண்டுவிடுவதில் பாஜக கவனம் செலுத்துகிறது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், பாஜகவின் இந்தப் பிரச்சார உத்திகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
அதாவது, நாம் விரும்புகிறோமோ இல்லையோ, புல்வாமா தாக்குதல் சம்பவம் அரசியலாக்கப்படுவது உறுதி. இதற்கு, எதிர்க்கட்சிகள் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்வது அவசியம். புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் வீடியோ பதிவை வேறொரு கோணத்தில் அணுகி, அரசியல் ஆய்வாளர்கள் சில கருத்துகளை முன்வைத்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது கொள்கையாளர்களால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் அந்த வீடியோ செய்தி, பாஜகவின் பசு அரசியலை மேற்கோள் காட்டி, இந்துத்துவ பெரும்பான்மையினரின் ஒடுக்குமுறையைப் பற்றியே நிறையப் பேசுகிறது. இது ஒரு வகையில் விநோதமானது. ஏனெனில், கடந்த பல ஆண்டுகளாக அதிகபட்ச தன்னாட்சி அல்லது சுதந்திரம் குறித்துதான் காஷ்மீரின் பெரும்பான்மை இஸ்லாமியர்களின் குரல் எழுமே தவிர உத்தரப் பிரதேசம், பிஹார் குஜராத் அல்லது நாட்டின் மற்ற பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளவோ, ஈடுபாடு காட்டவோ மாட்டார்கள்.
காஷ்மீர் இஸ்லாமியர்கள் 2002 குஜராத் கலவரம் மீதான கோபத்தைக்கூட வெளிப்படுத்தவில்லை என்று ‘ரைஸிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரும், ஸ்ரீநகரில் பயங்கரவாதி ஒருவரால் கொல்லப்பட்டுவருமான ஷுஜாத் புகாரி ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார். அதேவேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இந்தச் சூழல் மாறலாம் என்றும் அவர் எச்சரித்தார். பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் வாழும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் நிலவும் மாட்டிறைச்சி விவகாரம் போன்ற பிரச்சினைகள் குறித்து காஷ்மீர் இளைஞர்கள் பேசத் தொடங்கிவிட்டதையும் அவர் குறிப்பிட்டார். புல்வாமா தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதியின் வீடியோ செய்தியைப் பார்க்கும்போது, ஷுஜாத்தின் எச்சரிக்கையை நினைவுகூர வேண்டியிருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளிலுள்ள இஸ்லாமியச் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் மீதும் காஷ்மீர் இளைய சமுதாயம் அக்கறை காட்டத் தொடங்கியிருப்பதைக் கண்டு பாகிஸ்தானும் மகிழ்ச்சியடையும் என்று கருதப்படுகிறது.
கடந்த காலங்களில் தங்களது முழுத் தன்னாட்சி அல்லது சுதந்திரம் குறித்து மட்டுமே கவலை கொண்டிருந்த காஷ்மீர் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் இப்போது இந்துத்துவம் குறித்தும், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் – குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் – நிலவும் அரசியல் குறித்தும் விவாதத்தில் ஈடுபடத் தொடங்கியிருப்பது ஏன்?
நாம் ஆழமாக உற்று நோக்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி இது. புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய சூழலைக் கொண்டுதான் பாஜக தனது இந்துத்துவ அரசியலுக்கு காஷ்மீரைப் பயன்படுத்துகிறது என்பதில்லை. புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய சூழல் என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரியக்கூடியதாக இருக்கிறது, அவ்வளவுதான். புர்கான் வானி கொல்லப்பட்டதன் எதிரொலியாக காஷ்மீரில் பிரச்சினை வெடித்தபோது நடந்த அனைத்துக் கட்சி கூட்டம் இங்கே நினைவுகூரத்தக்கது. மோடி தலைமையில் அந்தக் கூட்டம், 2017இல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு கூடியது.
காஷ்மீரில் பெல்லட் குண்டுகள் பாய்ந்து பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்று மோடியிடம் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் வாக்கு வங்கி அரசியலுக்கு காஷ்மீரைப் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. மோடியும் அப்படி நடக்கவே நடக்காது என்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளிடமும் உறுதியளித்தார். அதேவேளையில், உத்தரப் பிரதேசத் தேர்தலையொட்டி, அம்மாநிலத்தின் மேற்குப் பகுதியில் யோகி ஆதித்யநாத் நிகழ்த்திய பிரச்சார உரைகளைக் கேட்டவர்களுக்குத் தெரியும், பிரதமர் மோடி தான் அளித்த வாக்குறுதியைத் துளியும் காப்பாற்றவில்லை என்று.
அப்போது தனது வாக்குறுதியைக் காப்பாற்றாதவர், இப்போது காப்பாற்றுவார் என்று நம்புவதற்கான எந்த முகாந்தரமும் இல்லை. பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படுவது ஆபத்தானது என்று நம்பும் அரசியல் மேதையாகத் தன்னைக் காட்டிக்கொள்ளக்கூட மோடி விரும்பவில்லை. மோடி இதுவரை அறிவுத் திறனுடன் மக்களின் உணர்வுகளைப் படிப்பதாக மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறார். ஒன்று, நடுநிலையாக இருப்பது போலவோ அல்லது சில நேரங்களில் பூடக மொழியில் உணர்வுகளைத் தூண்டும் வகையிலோ மக்களை அணுகுவார். இதில் எந்தப் பிசகுமின்றி, இன்னும் இரண்டு மாதங்களில் வரவுள்ள மக்களவைத் தேர்தலையும் அவர் சந்திப்பார்.
காஷ்மீர் பிரச்சினை ஏறத்தாழ 70 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுவரும் விவகாரம் என்றாலும், பொதுத் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் மிகப் பெரிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்றாக இதுவரையிலும் இருந்ததில்லை. எனினும், இந்தப் பொதுத் தேர்தலில் காஷ்மீர் பிரச்சினை முக்கியப் பங்கு வகிக்கும். தேசியப் பாதுகாப்பு, பெரும்பான்மை அணிதிரட்டல் ஆகியவற்றைப் பற்றிப் பேசுவதன் மூலம் பாஜக இதைச் செய்யும். சமாஜ்வாதி கட்சி – பகுஜன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி உருவெடுத்துள்ளதால் பாஜகவுக்குப் பெருத்த சவால் நிறைந்த உத்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் போன்றோர் காஷ்மீர் பிரச்சினையைப் பிரச்சாரத்தில் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக, இந்தியாவில் நிலவும் இந்தப் போக்கை, பாகிஸ்தான் ராணுவத்துக்கும், அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானுக்கும் ஆலோசனை வழங்கும் வியூக வகுப்பாளர்கள் வெகுவாக வரவேற்கக்கூடும்.
எம்.கே.வேணு
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/pulwama-attack-narendra-modi-bjp-2019-elections
Yathartham