இரு தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியா பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று கூறினார். மற்றொரு தேர்தல் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “மோடி மீண்டும் பிரதமர் ஆனால்தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும்” என்று வெளிப்படையாக கூறினார். சரிந்து வந்த மோடியின் க்ராஃப், ஒரே நாளில் சரசரவென உயரத் தொடங்கியது.
பாகிஸ்தானிலிருந்தும் போர் வெறிக் குரல்கள் வரத் தொடங்கின. அதிகாலை 5.30 மணிக்கே இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரி, தாக்குதலில் ஒருவரும் இறக்கவில்லை என்று கூறி, தாக்குதல் நடந்த இடத்தின் புகைப்படங்களை வெளியிட்டார். சர்வதேச செய்தி நிறுவனங்கள், தனிப்பட்ட முறையில் புலனறிந்து, இந்தியா நடத்திய தாக்குதலில் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டது என்பதை உறுதி செய்தன. பலியானோரின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யாத இந்திய அரசு, தனிப்பட்ட முறையில் ஊடகங்களுக்கு 300, 400 என்ற எண்ணிக்கையை ‘போலி செய்தியாக’ திணித்துக் கொண்டிருந்தன.
இதற்கு முன்பும் கூட துல்லியத் தாக்குதல்களை, நம் ராணுவம் நடத்தியிருக்கிறது. குறிப்பாக உளவுத்துறை தருகிற தகவல்கள் அடிப்படையில் எதிரி முகாம்களை எல்லைத் தாண்டி சென்று அழித்திருக்கிறோம். இதைப் பற்றி அந்தத் தாக்குதல்களைப் பற்றி என்னிடம் தனிப்பட்ட முறையில் விரிவாகப் பகிர்ந்திருக்கிறார் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஒருவர். ஆனால், ஒருபோதும் ஆட்சியில் இருந்தவர்கள் இந்த விஷயத்தை வெளியே சொல்லி மார்தட்டிக் கொண்டதில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் நாம் பல முறை துல்லியத் தாக்குதல் நடத்தியிருந்தாலும், அதனால் தீவிரவாதம் குறைந்ததா என்றால் இல்லை என்பது தானே பதில். செப்டம்பர் 2016ல் ஒரு துல்லியத் தாக்குதலை நடத்தி, பல தீவிரவாத பயிற்சி முகாம்களை அழித்து விட்டோம் என்று கூறி அதை பெருமையாக மார்தட்டிக் கொண்டார் மோடி. அவர் ஆட்சிக்காலம் கூட முடியவில்லை. புல்வாமா தாக்குதல் நடந்திருக்கிறது. அதிலும் உள்ளூர் காஷ்மிரி இளைஞனைக் கொண்டே தாக்குதல் நடந்தேறியிருக்கிறது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த ஜமாத் உத் தாவா மற்றும் ஃபலா ஏ இன்சானியத் ஆகிய இரு அமைப்புகளை தடை செய்துள்ளார். பாகிஸ்தான், தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து பயிற்சி அளித்து வருகிறது என்று நாம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைக்கிறோம். அதை பாகிஸ்தான் அரசு மறுத்தே வருகிறது. இக்குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகளிடம் அளித்து, பாகிஸ்தான் மீது பொருளாதார தடைகளை விதித்து, அதை தனிமைப்படுத்துவது மட்டுமே இந்தியா மேற்கொள்கிற சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்? கோடிக்கணக்கான மக்களின் வரிப் பணத்தை செலவழித்து, நாடு நாடாக சுற்றி வந்த மோடியால் இதைச் செய்யவே முடியவில்லை என்பது தானே யதார்த்தமான உண்மை ?
இன்று பாகிஸ்தானோடு போர் தொடுக்கும் நிலையில் நாம் உள்ளோமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட இலக்கில் விமானத் தாக்குதலை நடத்தியதன் விளைவினாலே நாம் மிக் 21 போர் விமானத்தை இழந்ததோடு, ஒரு இந்திய விமானியை பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைப்பிடிக்க வகை செய்துள்ளோம். கடுமையான பனிப்பொழிவு காலம் இன்னும் முடியவில்லை என்பதால் இந்த சமயத்தில் தரைவழி தாக்குதல் தொடுக்க இயலாது. விமானத் தாக்குதல் தொடுத்தால் பாகிஸ்தான் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி திருப்பித் தாக்கும். பாகிஸ்தானின் காஸ்மீர் தவிர்த்து எந்த எல்லையைத் தாக்கினாலும் அவர்களும் பதிலுக்குத் தாக்குவார்கள். ஏவுகணைகளை செலுத்தினால் அவர்களும் செலுத்துவார்கள். பஞ்சாப் வழியாக பாகிஸ்தான் நகரத்தை கைப்பற்ற முயற்சித்தால், அது அணு ஆயுத போர் வரை செல்ல வகை செய்யும். பாகிஸ்தானில், அரசியல் மையத்தை விட, ராணுவம் பலம் வாய்ந்தது. அதிபர்களை பதவி விலக்கி இராணுவம் ஆட்சியைப் பிடித்ததெல்லாம் பாகிஸ்தானின் கடந்த கால வரலாறு. அந்தளவு அவர்கள் இராணுவத்தினை அதிகார மையமாக்கியிருக்கிறார்கள்.
இப்போது போர் தொடங்குமானால், நாம் இழப்பதே அதிகமாக இருக்கும். அப்படி ஒரு போரை சந்திப்பதற்கான நிலைமையில் பாகிஸ்தானும் இல்லை, இந்தியாவும் இல்லை.
ஒரு போரில், இரு தரப்பிலுமே அதிக உயிரிழப்பு இருக்கும். பலர் கை கால்களை இழப்பார்கள். தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் ‘போர் போர்’ என்று கூக்குரலிடுவோர் ஒருவர் கூட உயிரை இழக்கப் போவதில்லை.
ஆனானப்பட்ட அமெரிக்காவே, ஆப்கானிஸ்தானில், கடைசியில் தோல்வியைத் தான் சந்தித்துள்ளது. தற்போது அங்கே தாலிபானின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. அமெரிக்க துருப்புகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான மோடியின் வெளியுறவுக் கொள்கை முழுவதுமாக தோல்வியடைந்ததையே தற்போதுள்ள சூழல் காட்டுகிறது. 2014ம் ஆண்டு நவாஸ் செரீப்பை மோடி சந்தித்தது, பின்னர், லாகூர் சந்திப்பு, பதன்கோட் தீவிரவாத தாக்குதல், பலோசிஸ்தானை விடுவிக்க எடுத்த முயற்சி, செப்டம்பர் 2016ல் நடந்த துல்லியத் தாக்குதல் என்பது தொடங்கி தற்போது நடந்துள்ள விமானத் தாக்குதல் வரை, தொடர்ந்து தவறுகளையே மோடி செய்துள்ளார். வெளிநாடுகளுக்கு சென்று தலைவர்களை கட்டிப் பிடித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதை தவிர, மோடி வேறு எதுவும் செய்ததில்லை. நமது அண்டை நாடுகள் அனைத்துடனும் தற்போது நமக்கு சிக்கல் அதிகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. வெளியுறவுக் கொள்கை, ஆழ்ந்த ஆய்வுக்கு பிறகு, கடந்த காலங்களில் இருந்து பெறப்பட்ட அனுபவங்களைக் கொண்டு வகுக்கப்பட வேண்டியது. ஆனால் மோடியின் வெளியுறவுக் கொள்கைகள், குறிப்பாக பாகிஸ்தானுடனான கொள்கைகள், உள்நாட்டு அரசியலை கவனத்தில் வைத்தே மோடியால் எடுக்கப்பட்டு வருகிறது. இல்லையென்றால், குஜராத் தேர்தல் சமயத்தில், எனக்கு எதிராக சதி செய்ய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபரோடு விருந்துண்டார் என்ற பச்சை பொய்யை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொல்வாரா ?
நம்மைப் போலவே பாகிஸ்தானிலும் போர் முரசு கொட்டும் பத்திரிக்கையாளர்களும் அதிகாரிகளும் இருக்க மாட்டார்களா என்ன ? இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரல் ஆசிப் கபூரிடம் பத்திரிக்கையாளர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா ? “இந்தியர்கள், மது அருந்திய குரங்குகள் போல ஊடகங்களில் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த குரங்குகளின் வாயை நாம் மூட வேண்டாமா” என்பதுதான். இப்படி இரு தரப்பிலும் போர் போர் என்று கத்திக் கொண்டு இருப்பவர்களின் பேச்சை கேட்டு போரில் இறங்கினால் அதற்காக நாம் அளிக்கும் விலை மிக அதிகமாக இருக்கும்.
நம்பிக்கை அளிக்கும் விதமாக, முந்தைய தினம் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் உரையாற்றிய அதன் பிரதமர் இம்ரான் கான், நிதானமாக பேசினார். அவர் உரையின் முழுமையான மொழிபெயர்ப்பைத் தருகிறேன்.
“நேற்று காலை முதல் நடந்து வரும் சம்பவங்களை நாட்டுக்கு விளக்க விரும்புகிறேன். புல்வாமா சம்பவத்துக்கு பிறகு, இந்தியாவை அமைதிக்கு அழைத்தோம். புல்வாமா சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களின் வலியை நானும் உணர்கிறேன். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை நானும் மருத்துவமனைகளில் பார்த்துள்ளேன். பாகிஸ்தான் 70ஆயிரம் உயிர்களை இழந்துள்ளது. வன்முறை சம்பவங்களில் காயமடைந்தவர்களின் வலியை நான் உணர்ந்துள்ளேன்.
அந்த அடிப்படையில்தான், இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம் என்று கூறினோம். பாகிஸ்தானின் நலனின் அடிப்படையில்தான், எங்கள் நிலம் தீவிரவாதத்துக்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கூறுகிறோம். அதில் சந்தேகமே இல்லை. இருப்பினும், இந்தியா அதை நிராகரித்து தாக்குதல் தொடுக்கும் என்று அஞ்சினேன். அதன் காரணமாகவே தாக்குதல் தொடுத்தால் நாங்கள் திருப்பித் தாக்கும் கட்டாயத்துக்கு உள்ளாவோம் என்று கூறினேன். எந்த ஒரு சுதந்திரமான நாடும் இது போன்ற தாக்குதலை அனுமதிக்க முடியாது.
இந்தியா நேற்று காலை தாக்குதல் தொடுத்த பிறகு, நானும் ராணுவ தலைமைத் தளபதியும் கலந்தாலோசித்தோம். உடனடியாக பதில் தாக்குதல் தொடுக்கவில்லை. விசாரிக்காமல் தாக்குதல் தொடுத்திருந்தால் மறுமுனையில் உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கும். எங்கள் தரப்பில் சேதம் என்ன என்பதை முழுமையாக அறிந்த பிறகே தாக்குதல் தொடுத்தோம்.
இன்றைய தாக்குதலுக்கு ஒரே நோக்கம், எங்கள் நாட்டுக்குள் நீங்கள் வந்தால், எங்களாலும் உங்கள் நாட்டுக்கு வர முடியும் என்பதே.
இந்தியாவின் இரண்டு மிக் விமானங்கள் பாகிஸ்தான் விமானப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இங்கிருந்து நாம் எங்கே செல்கிறோம் என்பதுதான் முக்கியம். நம் மூளையை பயன்படுத்தி அறிவோடு செயல்படவேண்டும்.
எல்லாப் போர்களும் அது எங்கே செல்லும் என்பதை உணராமல்தான் தொடங்கப்படுகின்றன. முதல் உலகப்போர் தொடங்கியபோது சில வாரங்களில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது முடிய ஆறு வருடங்கள் ஆனது. இரண்டாம் உலகப் போரும் அப்படியேதான். ஆப்கானிஸ்த போர், 17 வருடங்கள் தொடரும் என்று அமெரிக்கா நினைத்திருக்குமா ?
இந்தியாவைப் பார்த்து கேட்கிறேன். உங்களிடமும் எங்களிடமும் உள்ள ஆயுதங்களை வைத்துக் கொண்டு, நாம் இப்படி ஒரு தப்புக் கணக்கு போட முடியுமா ? இது கைமீறிப் போனால் நிலைமை என் கட்டுப்பாட்டிலும் இருக்காது, மோடியின் கட்டுப்பாட்டிலும் இருக்காது.
மீண்டும் உங்களை அழைக்கிறேன். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார். இந்தியாவுக்கு புல்வாமாவில் நடந்த சோகத்தை புரிந்து கொண்டுதான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறேன். இரு தரப்பிலும் நிதானம் வேண்டும். வாருங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம்.”
இதுதான் இம்ரான் கானின் உரை. அவர் போர் வேண்டாம் என்று பேசுகிறார். ஆனால் பிஜேபி அமைச்சர்கள், தலைவர்கள் போர் போர் என்று கூக்குரலிடுகிறார்கள்.
கடந்த செவ்வாயன்று, உத்தரப் பிரதேசத்தில் பேசிய பிஜேபி தலைவர் அமித் ஷா, “பாகிஸ்தானுக்கு யார் சரியான பதிலடி கொடுக்க முடியும். தீவிரவாதத்தை யார் அடியோடு ஒழிக்க முடியும்.” என்று பேசினார். இந்தியா நடத்திய விமானத் தாக்குதலை முழுமையாக தேர்தலுக்கு பயன்படுத்த தீவிரமான திட்டத்தில் பாஜக இருந்தது. தற்போது மிக் விமானத்தை இழந்ததும், நமது விமானி அபினந்தன், பாகிஸ்தானியர்களால் சிறை பிடிக்கப்பட்டதும், அவர்கள் திட்டத்தில் மண்ணை அள்ளிப் போட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.
சிபிஐ, ரிசர்வ் வங்கி, உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், திட்டக் கமிஷன், புள்ளி விபர ஆணையம், பல்கலைக்கழகங்கள் என்று இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் சிதைத்து முடித்த மோடி, தற்போது ராணுவத்திலும் கை வைத்திருப்பதாகவே நான் இதை பார்க்கிறேன்.
இம்ரான் நீட்டியிருக்கும் அமைதிக் கரத்தை பற்றிக் கொண்டு, நமது விமானியை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும். போரில் ஈடுபட்டு போர் வெறியை தூண்டி விடுவதால், நாம் இழப்பதுதான் அதிகம்.
ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது போர் செய்து உறுதிசெய்யப்படுவது அல்ல, தேர்தல் மேடைப் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் வேற்று வார்த்தைகளால் ஆனது அல்ல, கட்சியை வளர்த்தெடுக்க சொல்லப்படும் ஜிகினா வார்த்தையும் அல்ல, அது ஒரு நாட்டின் ஆன்மா. நாட்டின் பாதுகாப்பு எனும் ஆன்மா தான் இந்தத் தேசத்தை வழிநடத்துகிறது. இதனை வாக்காளர்களாக மட்டுமே பார்க்கப்படும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இப்போதைய தேவை போரைத் தவிர்ப்பதும் மோடி தலைமயிலான பாஜவினை இந்தப் போரை தவிர்ப்பதும், பாஜகவை வீழ்த்துவதுமே நம் முன் உள்ள பிரதான கடமை. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், இந்தியா என்ன ஆகும் என்று நினைப்பதே ஒரு கொடுமையான கனவன்றி வேறென்ன?
அருமையான கட்டுரை.
போர் வந்துவிட்டால் யாராலும் தடுக்க முடியாது. விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்விடும். இது தெரிந்தும் மோடி தனது பதவியை நீடித்து க்கொள்ள போர் வெறியை பாமரமக்களிடம் தூண்டுவது பேராபத்து
Very true. போர் போர் னு சொல்ற எவன் குடும்பமும் போர்ல சாவ மாட்டான்.
உள்ளதை உள்ளபடியே கூறியுள்ளீர். மக்களிடம் போர் வெறியை தூண்டும் வகையில் நமது ஊடகங்கள் செயல்பட்டு தேசபக்தி என்கிற உளவியல் ரீதியான மூளைச்சலவை செய்யப்படுகிறது. காஷ்மீர் பிரச்சினை என்றால் என்ன என்று எத்தனை பேருக்கு தெரியும்? அரசின் தவறான போக்கின் விளைவாக நூற்றுக்கணக்கான ஏழை இராணுவ வீரர்கள் அநியாயமாக சாவதை வீரமரணம் , தேசபத்தி என்று சித்தரித்து அரசியல் செய்து நாட்டின் பட்ஜட்டில் பெருமளவு நிதியை இராணுவத்திற்கு ஒதுக்கி தளவாடங்கள் வாங்குவதில் கமிஷன் வாங்கி ஊழல் செய்து கல்வி, சுகாதாரம் போன்ற மக்கள் நல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் தனியார் முதலாளிகள் சம்பாதிக்க வழிவகுத்து ஏழை மக்கள் சுரண்டப்படுகிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் போலீசால் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு எந்த ஊரில் அஞ்சலி செலுத்தப்பட்டது? தினமலர் போன்ற ஊடகங்கள் அதையே கொச்சைப்படுத்தியது. ரஜினி காந்த் கொச்சை படுத்தியதை முக்கிய செய்தியாகபோட்டது.ஆனால் நீதிபதி ஹரிபரந்தமனின் கருத்தை வெளியிடவில்லை. ஆக ஜனங்கள் மடையர்களாக இருக்கும்படி கவனமாக அரசும் ஊடகங்களும் திட்டமிட்டு செயல் படுகின்றன.. இப்படிப்பட்ட நிலையில் சவுக்கு ,the wire போன்ற இணைய தளங்களில் மட்டுமே உண்மையான செய்தியை அறிய முடிகிறது.
நன்றி.