தற்கொலைத் தாக்குதல்களின் உடனடி அச்சுறுத்தலுக்கு எதிராகவே ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கை’ என்று இந்திய வெளியுறவுச் செயலர் பேசும்போது, சர்வதேசச் சட்டம் குறித்து அவர் தன் கவனத்தில் கொண்டிருக்கக்கூடும். ஆனால், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்திய வான்வழித் தாக்குதலின் ராஜதந்திர மற்றும் அரசியல் விளைவுகளை ஆராயும் எந்த ஒரு நேர்மையான ராணுவ அலசலும் உண்மையில் என்ன நடந்தது என்பதிலிருந்து தொடங்க வேண்டும்: மூன்று விதமானோருக்கு தலா ஒரு சேதியை அனுப்பும் நோக்கம் கொண்ட பழிவாங்கல் நடவடிக்கை அது.
‘உங்களுக்குப் பாதுகாப்பான சொர்க்கத்தை அளித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ராணுவம், உங்களுக்குப் பாதுகாப்பானது அல்ல’ என்பதை ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இதர பயங்கரவாத இயக்கங்களுக்குச் சொல்வது ராணுவ நோக்கம். பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு அணுகுமுறையின் காரணமாக, அந்நாட்டுடன் வழக்கமான வர்த்தக உறவைப் பெரும்பாலான உலக நாடுகள் வைத்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும் ராஜதந்திர ரீதியிலான நோக்கம். ‘எதையும் சரியாகச் செய்து மகத்தான இந்தியாவை மீண்டும் உருவாக்கக் கூடிய ‘அரசியல் வல்லமை’ மிக்க தலைவர் என்றால் அது பிரதமர் நரேந்திர மோடிதான்’ என்ற சேதியை பொதுத் தேர்தலையொட்டி மக்களிடம் கொண்டு செல்லும் அரசியல் நோக்கம்.
இம்மூன்றில், அரசியல் நோக்கத்தை மட்டுமே அடையலாம் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை கொள்ளலாம்.
இந்திய விமானப் படை மிகவும் கடினமானதும் ஆபத்தானதுமான பணியைச் செய்து முடித்தது. உறுதிசெய்யப்பட்ட எந்தத் தகவலையும் பகிராமலேயே, அதை வெற்றிகரமான நடவடிக்கையாக அரசு அறிவித்தது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தரப்பு அடக்கிவாசிக்கவே செய்தது. அப்படிச் செய்யாமல், மிகப் பெரிய அளவில் ஆர்ப்பரித்திருந்தால், அதற்கு உரிய பதிலைத் தர வேண்டிய கட்டாயத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் உள்ளாகியிருக்கும். எனினும், வான்வழித் தாக்குதல் தொடர்பான உறுதிசெய்யப்படாத மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கைகள் இந்திய ஊடகங்கள் வாயிலாகப் பரவலானதால் எதுவும் செய்ய முடியாத கடினமான நிலைக்கு பாகிஸ்தான் தரப்பு தள்ளப்பட்டது.
2016ஆம் ஆண்டு செப்டம்பரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் துல்லியத் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்தபோதும் சரி, இப்போது தாக்குதல் நடத்தப்பட்டபோதும் சரி, எவ்விதச் சேதமும் ஏற்படவில்லை என்றே பாகிஸ்தான் ராணுவம் உறுதிபடக் கூறியது. எனினும், இம்முறை அரசியல் மற்றும் ராணுவ அமைப்புகளும் ராணுவ பதிலடி இருக்கும் எனத் தெரிவித்தன. இந்த அச்சுறுத்தலை லேசாக எடுத்துக்கொள்ளவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
இந்திய விமானப் படையின் ஆற்றல் மீது எவ்வித சந்தேகமும் இல்லாதபோதும், ‘பாகிஸ்தானின் அணு ஆயுதப் பித்தலாட்டம்’ என்கிற ரீதியில் பேசுவதையே மோடி விரும்பினார். அத்துடன், கடந்த 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு எல்லையைத் தாண்டி இந்தியா தனது விமானப் படை வல்லமையைக் காட்டியிருப்பதும் கவனத்துக்குரியது.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளிலும், பாகிஸ்தானின் உள்புறமும் பயங்கரவாதிகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்த விமானப் படையை முந்தைய அரசுகள் பயன்படுத்ததத் தயங்கியது உண்மைதான். ஆனால், பாகிஸ்தான் அணு ஆயுதங்களுக்கு அஞ்சியோ அல்லது அரசியல் உறுதித்தன்மை இல்லாததாலோ அப்படியான நடவடிக்கைகளை அவர்கள் தவிர்த்தார்கள் என்பதல்ல. மாறாக, இத்தகைய நடவடிக்கையின் மூலம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் நடவடிக்கைகளைத் தடுத்துவிட முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள் என்பதுதான் காரணம்.
இந்தப் புரிதலின் அடிப்படையை உள்வாங்க, மிகவும் பின்னோக்கிச் செல்ல வேண்டிய அவசியமில்லை; செப்டம்பர் 2016 துல்லியத் தாக்குதலை உற்று நோக்கினாலே போதும்.
பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் குழுக்களின் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் துல்லியத் தாக்குதல்கள் படுதோல்வி கண்டிருக்கிறது. அவை, ஜெய்ஷ் மற்றும் லஷ்கரை ஊக்குவிப்பதாக அமைந்த விதத்தையே நக்ரோடா மற்றும் சஞ்சுவான் ஆகிய இடங்களிலுள்ள ராணுவ நிலைகள் மீதான அவர்களது தாக்குதல்கள் காட்டுகின்றன. 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியப் பாதுகாப்புப் படை மீது நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதலாகவே புல்வாமா சம்பவம் பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது, ஆர்ப்பரிப்பு மிக்க துல்லியத் தாக்குதலுக்குப் பின்புதானே தவிர, அதற்கு முந்தைய காலகட்டத்தில் இல்லை என்ற உண்மையை எப்படி அணுகுவது?
புல்வாமா தாக்குதலைத் தடுப்பதற்கு, 2016 துல்லியத் தாக்குதல்கள் எந்த விதத்திலும் உறுதுணையாக இருந்திருக்கவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது போலவே பாலகோட் வான்வழித் தாக்குதல்களும் எதிர்காலத்தில் பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து இந்தியாவைக் காத்திடாது எனலாம். பாலகோட் வான்வழித் தாக்குதலில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் 300 பேர் கொல்லப்பட்டதாக வெளியிடப்படும் அதிகாரபூர்வமற்ற தகவலைக் கேட்டு மிதக்கிறோம். இதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், ஒரு ராணுவம் போலவே தங்களைக் கட்டமைத்து பயங்கரவாதிகள் சண்டையிடுகிறார்கள் என்றும், அவர்களை அழிக்கப் பெரிய அளவில் இயங்க வேண்டியிருப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது எந்த அளவுக்கு சரி என்ற கேள்வியும் எழுகிறது.
பாகிஸ்தானின் பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட முதல் பிரதமர் மோடி அல்ல. இவருக்கு முன்பு பிரதமர் பதவி வகித்த மன்மோகன் சிங்கும், அடல் பிஹாரி வாஜ்பாயும் இந்த விஷயத்தில் நினைவுகூரத்தக்கவர்கள். 2001இல் நாடாளுமன்றத் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகும், 2008இல் மும்பைத் தாக்குதல் நடத்தப்பட்ட பிறகும் இவர்கள் தங்களது கமாண்டர்களுடன் உடனடியாக தீவிரமாக ஆலோசித்து, சரியான தீர்வை நோக்கிய பாதையைக் கண்டடைய முனைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ‘பேச்சுவார்த்தைகளும் பயங்கரவாதமும் ஒன்றாகப் பயணிக்க முடியாது’ என்பது புதிய மந்திரச்சொல். ஆனால், ஒருபக்கம் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக எதிகொண்டபடியே இன்னொரு பக்கம் பாகிஸ்தான் தனது கதவுகளை அடைத்தாலும், அந்நாட்டுடன் தொடர்ந்து கச்சிதமான வழிகளைக் கண்டறிந்து பேசியபடியே காஷ்மீரில் நம்பிக்கையை உருவாக்கியதில் வாஜ்பாயும் மன்மோகனும் மிகவும் சிறந்து விளங்கினர்.
பாலகோட் தாக்குதல் குறித்த பேச்சு இன்னும் அடங்கவில்லை. எப்போது அடங்கும் என்றும் தெரியவில்லை. ஆனால், பாகிஸ்தானையும், பயங்கரவாத பிரச்சினைகளையும் அணுகும் விதமாக ஒருமித்த அல்லது நீடித்து நிற்கக்கூடிய வியூகத்தை வகுப்பதற்கான எந்த அறிகுறியும் மோடியிடம் இல்லை.
2014இல் மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து பார்த்தோமெனில், நவாஸ் ஷெரீஃப் உடனான உஃபா சந்திப்பு, அவரது லாகூர் – ராய்விண்ட் கவன ஈர்ப்புப் பயணம், பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல், அதே ஆண்டில் பலுசிஸ்தானை முன்வைத்த பரபரப்புப் பேச்சு, 2016 துல்லியத் தாக்குதல்கள், சுஷ்மா ஸ்வராஜுக்கும் ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்து பின்னர் அதை ரத்து செய்தது, இதோ இப்போது பாலகோட்… இவைதான் இதுவரை நடந்தவை. இவற்றை ஆராயும்போது, கொள்கை வகுப்பதில் மிகப் பெரிய பங்கு வகிக்கக்கூடிய கடுமையான உள்விவகார முன்தயாரிப்புகள், பகுப்பாய்வுகள், கணக்கீடுகள் ஆகியவை மோடியின் ராஜதந்திர மற்றும் ராணுவ முன்முயற்சிகள் எதிலும் அறவே இல்லை என்பதை உணர முடிகிறது.
பாலகோட்டுக்குப் பிந்தைய சூழலைப் பொறுத்தவரையில், பாகிஸ்தான் ராணுவமும், அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கானும் தங்கள் உள்ளூர் அரசியலையும் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டிய கட்டாயத்தைக் கொண்டிருக்கின்றனர். வெறித்தனமும் மூர்க்கத்தனமும் இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே ஏகபோகமானது அல்ல. பாலகோட் சம்பவத்திற்குப் பிறகு பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிஃப் காஃபூர் தனது செய்தியாளர் கூட்டத்தில் முதலில் எதிர்கொண்ட கேள்வி: “இந்தியர்கள் குடிபோதையில் உள்ள குரங்குகள் போல ஊடகங்கள் அனைத்திலும் குதித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தக் குரங்குகளை அடக்க வேண்டிய தருணம் இல்லையா இது?”
பலுசிஸ்தானில் இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டும் அதேவேளையில், இந்தியாவில் தங்கள் நாட்டுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக ஒருபோதும் பாகிஸ்தான் சொன்னதில்லை. எனவேதான், பாலகோட் வகை இலக்குகளைத் தாக்கக்கூடிய சூழலை பாகிஸ்தான் பெறவில்லை. பாகிஸ்தானால் இந்திய ராணுவ நிலைகள் மீது மட்டும்தான் குறிவைக்க முடியும். ஆனால், அது மிகப் பெரிய அளவில் மோசமான விளைவுகளுக்குத் தூண்டிவிடும் என்பதால்தான் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதோ அல்லது ராணுவத்தினர் மீதோ குறிவைக்கக் கூடாது என்பதில் இந்தியா மிகுந்த கவனம் கொள்கிறது. பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இத்தகைய ஆபத்தான சூழல் உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் கடுமையாக குண்டுகளை வீசலாம் அல்லது தங்கள் பிரதிநிதிகள் மூலமாக ஜம்மு – காஷ்மீர் அல்லது வேறு பகுதிகளில் ராணுவத்தையோ அல்லது பொதுமக்களையோ குறிவைத்துத் தாக்குதல் நடத்தலாம்.
இதுபோன்ற எந்த வகையிலும் பதிலடிக்கான சாத்தியத்தையும் உண்டாக்காத வழிகளையே இந்தியா நாட வேண்டும். பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்று ராணுவச் செய்தித் தொடர்பாளர் கூறியதை அநேகமாக, இந்த அர்த்தத்தில்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
பயங்கரவாதம் குறித்த ஆய்வாளர் சி.கிறிஸ்டைன் ஃபேர் முன்வைக்கும் வாதத்தை இங்கே கவனிக்க வேண்டியிருக்கிறது. ஜெய்ஷ் மட்டுமே தனித்து இயங்கி இத்தகைய ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபடவில்லை என்று சொன்னால், இந்தியாவில் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், புல்வாமா தாக்குதல் மூலம் பாகிஸ்தான் ராணுவம் அடையக்கூடிய பலன்தான் என்ன? ராணுவ முன்னெடுப்பைத் தூண்டுவதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டிருக்கிறதா? இந்தியப் பொதுத் தேர்தலை தள்ளிவைக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறதா?
மோடி இம்முறை சூதாட்டத்துக்கு ராணுவச் சீட்டைக் கையிலெடுத்திருக்கிறார். ராணுவம் அல்லாத தேசியம் சார்ந்த செயல்பாடுகளைப் போலவே கடுமையான பாகிஸ்தானின் பதில்களும் அவரது கரங்களை மேலும் வலுப்படுத்தவே செய்யும். மோடி தேர்ந்தெடுத்துள்ள பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பாதையை இன்று விவாதப் பொருளாக்க ஊடகமும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பயங்கரவாதப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை என்பது மட்டுமல்ல, முன்பைவிடவும் சிக்கலானதாகவும் தீர்க்க முடியாததாகவும் ஆகியிருக்கிறது என்பதைச் சாமானிய இந்தியர்கள் உணரும் காலம் வரும். நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் விரைவிலேயே வரக்கூடும்.
சித்தார்த் வரதராஜன்
நன்றி: தி வயர்
https://thewire.in/security/the-air-strikes-had-three-targets-but-hit-bullseye-in-just-one
வாழி நஹி வழி.. வான்வழி.