காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் காவல் படையினர் கொல்லப்பட்ட சம்பவம் தேசிய சோகம் மட்டும் அல்ல மனித சோகமும்தான்.
இந்தத் தாக்குதல் நாட்டில் ஏற்படுத்திய அதிர்ச்சி புரிந்துகொள்ளக்கூடியதே. எனினும் புரிந்துகொள்ள முடியாததும், மன்னிக்க முடியாததும் என்னவெனில், பிரதமர் மோடி, நாட்டை அமைதி காக்குமாறும், காஷ்மீரிகள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்ளுமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்ள மறுத்ததும், மத உணர்வுகளைத் தூண்டிவிடாமல் இருக்குமாறு தனது கட்சியினரைக் கேட்டுக்கொள்ளாமல் இருந்ததும்தான். மாறாக, அவர் இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது பாகிஸ்தான் எனக் குற்றம்சாட்டி, சர்வதேச அளவில் அந்நாட்டைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து, பாகிஸ்தான் மீது பொருத்தமான நேரத்தில், இடத்தில் பதில் தாக்குதல் நடத்த இந்தியப் பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தியுள்ளார்.
இத்தோடு நிறுத்துக்கொள்ளாமல், தனது செயல்களை விமர்சிக்கும் எவர் மீதும் சங் பரிவாரின் இணைய விஷமிகளை ஏவிவிட்டுள்ளார். பஞ்சாப் அமைச்சரும், மிகவும் ஈர்ப்புள்ள தொலைக்காட்சி ஆளுமைகளில் ஒருவருமான நவ்ஜோத் சிங் சித்து, மற்றவர்கள் சொல்லத் தயங்கும் விஷயத்தைச் சொன்னார். ஒரு சில தீவிரவாதிகளின் செயலுக்கான ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டைப் பொறுப்பாக்க முடியாது எனக் கூறும் துணிச்சல் இருந்தற்காக, கபில் சர்மா நிகழ்ச்சியிலிருந்து அவரை வெளியேற்ற சோனி டிவியை நிர்பந்திக்கும் அளவுக்கு இந்தப் பகைமை உணர்வு உச்சத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி அமைதியை நிலை நாட்டுவதில் மோடி அரசு அமைதி காப்பது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் ஜம்முவில் காஷ்மீர் வணிகர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு நகரில் குஜார் காலனியில் நுழைந்த கூட்டம் 15 கார்களை எரித்துள்ளது. டிவியில் இந்தத் தாக்குதல் பற்றிய செய்தி வெளியானதுமே, ஹரியானாவில், பல காஷ்மீர் மாணவர்கள் தங்குமிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். டேராடூனில் காஷ்மீர் மாணவிகளைச் சுற்றி வளைத்த கூட்டம் அவர்கள் அறைக்குள் புகுந்து தாளிட்டுக்கொள்ளும் நிலையை உண்டாக்கியது. சமூக ஊடகங்களில் காஷ்மீரிகள் நாடு முழுவதும் உள்ள தங்கள் உறவினர்களுக்கு, வெளியே வராமலும் கவனத்தை ஈர்க்காமலும் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளும் செய்திகள் வெளியாகத் துவங்கின.
வெள்ளிக்கிழமை அன்று மாலை மோடி வெளியிட்ட கருத்து திகைப்பின் விளைவா அல்லது நாடக நோக்கம் கொண்டதா? 2002இல் குஜராத் கலவரங்களை முன்னின்று நடத்திய முதல்வருக்கு, தன்னுடைய பக்குவமில்லாத, உணர்ச்சியமான கருத்துக்களை எத்தகைய உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது தெரியாதா? நினைவுத்திறன் உள்ள யாரும் இதை நம்ப மாட்டார்கள். 2002இல் அவர் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை ஒட்டுமொத்த அரசும் அறிந்திருந்தது.
2002 பிப்ரவரி 27இல், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ் 6 பெட்டி தீப்பிடித்து, 56 பேர் உடல் கருகி இறந்தபோது, காலை முழுவதும் கோத்ரா கலெக்டர் ஜெயந்தி ரவி, வானொலியிலும், டிவியிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இது விபத்து என்றும் அமைதி காக்குமாறும் கூறிக்கொண்டிருந்தார். ஆனால், நண்பகலில் கோத்ராவுக்கு வந்த மோடி, கருகிய உடல்கள் அனைத்தையும் அகமதாபாத் கொண்டு செல்ல உத்தரவிட்டார். ஜெயந்தி ரவி இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தான் அமைதியை நிலைநாட்டிய விதத்தை விளக்கி, இந்தச் சம்பவத்தை ஒரு விபத்தாகக் கருதுமாறு மோடியிடம் வலியுறுத்தினார். ஆனால் மோடி அவர் கூறியதை நிரகரித்து, அகமாதாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பிவைத்தார். அங்கு விஸ்வ இந்து பரிஷத் துணைத் தலைவர் ஜெய்தீப் பட்டேல், தனது தொண்டர்களோடு காத்திருந்து உடல்களை ஊர்வலமாகக் கொண்டு சென்றார். அதன் பின் நடந்தவை நாடறியும்.
ஜெயந்தி ரவியின் முயற்சி காரணமாக, குஜராத்தில் அமைதியாக இருந்த நகரங்களில் ஒன்றாக கோத்ரா இருந்தது. அவரது பெயரை பத்ம பூஷனுக்குப் பரிந்துரைப்பதற்கு பதிலாக, சில வாரங்களில் முக்கியத்துவம் இல்லாத பணிக்கு இடமாறுதல் செய்து மோடி அரசு அவருக்குப் பரிசளித்தது. அதன் பிறகு. அகமதாபாத் கலவரங்களைப் பயன்படுத்தி, அடுத்த சட்டமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்திப் பெரிய அளவில் வெற்றி பெற்றார்.
இன்று மற்றொரு முக்கியத் தேர்தல் நடைபெறச் சில வாரங்களே உள்ளன. அவர் கட்சி சரிவில் உள்ள சூழலில், மோடி வரலாற்றைத் திரும்பவும் நிகழச் செய்யும் முயசியில் ஈடுபட்டுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பாகிஸ்தான் மீதான அவரது தாக்குதல், ராணுவம் தீர்மானிக்கும் நேரம், இடத்தில் தாக்குதல் நடத்தும் என்னும் எச்சரிக்கை, ஹுரியத் தலைவர்களுக்கான அனைத்து பாதுகாப்புகளும் திரும்பப் பெறப்பட்டிருப்பது, காஷ்மீரிகளின் அந்நியத்தன்மையை மேலும் அதிகரிக்கச்செய்து, பாகிஸ்தானுடனான பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டுசெல்வதற்கான முயற்சியாகும். தனது மவுனம் மூலம், சங் பரிவாரின் பசு காவலர்களுக்கு, வாஹினிகளுக்கு, துணை அமைப்புகளுக்கு, முஸ்லிம்களுக்கெதிரான பதில் நடவடிக்கை எடுக்கத் தூண்டிவிட்டு, பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, அடுத்த தேர்தலில் பாஜக வெற்றி பெற வழி செய்ய வேண்டும் எனும் செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். 2014இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர் இதைத்தான் செய்துவருகிறார்.
இதைவிடப் புரிந்துகொள்ளக் கடினமானது என்னவெனில். மோடிக்கு எதிர்க்கட்சிகள் அளித்துள்ள விமர்சனம் இல்லா ஆதரவாகும். திட்டமிட்ட மவுனம் மூலம் சங் பரிவாரத்தின் அதிர்ச்சிப் படையினருக்கு அவர் எப்படி செய்தி தெரிவிக்கிறார் என்பதை மறந்துவிடும் அளவுக்கு எதிர்க்கட்சிகளின் கூட்டு நினைவுத்திறன் பலவீனமாக இருக்கிறதா? கர் வாப்ஸி, லவ் ஜிகாத், பசுப் பாதுகாப்புத் திட்டம் போன்றவற்றில் அவரது மவுனத்தை அவை மறந்துவிட்டனவா? முகமது அக்லக் ஜொலை, பெஹலு கொலை, ரக்பர் கான் கொலை ஆகியவற்றில் அவரது மவுனத்தை மறந்துவிட்டனவா? கடந்த 5 ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்களால் கொல்லப்பட்ட பல முஸ்லிம்கள் தொடர்பான மவுனம் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
மோடி, மோகன் பாகவத், அமித் ஷா, ராம் மாதவ் மற்றும் இவர்கள் சேர்த்துக்கொண்டுள்ள ஐந்து மில்லியன் தொண்டர்கள் தங்களை இந்து நம்பிக்கையின் காவலர்கள் என நினைத்துக்கொள்கின்றனர். மனித உயிர்களைக் கொல்வதைக் கொண்டாடுவதை விட்டுத்தள்ளுங்கள், அதை இந்து மதம் கண்டிக்கிறதா இல்லையா என்பதை அவர்கள் சொல்லட்டும்.
இது போன்ற கொடூரமான தீவிரவாதச் செயலைக் கண்டிப்பது தொடர்பாக எந்த கேள்வியும் இல்லை. மோடியின் கோஷ்டி கானத்தில் இணைவதை எதிர்க்கட்சிகள் கைவிட்டு, ஒரு காஷ்மீர் இளைஞர் மனித வெடிகுண்டாக மாறியது ஏன் என கேள்வி எழுப்பியிருக்க வேண்டாமா? காஷ்மீரில் 30 ஆண்டு காலத் தீவிரவாதத்தில் ஒரே ஒரு மனித வெடிகுண்டு தாக்குதல்தான் நடந்துள்ளது. 19 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் படாமி பாக் கண்டோன்மண்ட் கேட்டின் முன் தன்னை வெடிக்கச் செய்துகொண்டார். இதை எதிர்க்கட்சிகள் நினைத்துப் பார்த்திருக்க வேண்டாமா?
இடைப்பட்ட 18 ஆண்டுகளில் காஷ்மீரில் ஏன் இன்னொரு மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெறவில்லை? ஏனெனில், 2002இல் முஃப்டி முகமது சையதுவின் மக்கள் ஜனநாயகக் கட்சி காஷ்மீரில் ஆட்சிக்கு வந்த பின், 2003இல் பிரதமர் வாஜ்பாயி ஸ்ரீநகரிலிருந்து பாகிஸ்தானுக்கு நேசக்கரம் நீட்டியது முதல், ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக காஷ்மீரிகள் அமைதி திரும்பிக்கொண்டிருப்பதாக நம்பத் துவங்கினர்.
தான் ஆட்சிக்கு வந்த சில வாரங்களில் மோடி இதை எல்லாம் தலைகீழாக மாற்றினார். முதலில் அவர், ஹரியத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பாகிஸ்தான் தூதரை தில்லியில் சந்திக்க அனுமதி மறுத்து அந்த அமைப்பை வெளிப்படையாக அவமானப்படுத்தினார். இந்தச் சந்திப்பு வாஜ்பாயி அல்லது மன்மோகன் சிங் காலத்தில் தடுக்கப்பட்டது இல்லை. அதன் பிறகு கட்டுப்பாட்டுக் கோடு அருகே ஒன்றுக்குப் பத்து எனும் பதில் நடவடிக்கையைத் துவக்கினார். இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன.
அதன் பின், ஸ்ரீநகர் சென்று பிடிபி கட்சியுடனான கூட்டணிக்கான தனது திட்டத்தை பகிரங்கமாக தகர்த்து, முப்டி சயீதை அவமானப்படுத்தி, ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் முன்னிலையில் அவரது கட்சியின் நம்பகத்தன்மையை அழித்தார். மேலும், மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதைக் கைவிட்டுப் படிப்புக்குத் திரும்பாவிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என மறைமுக எச்சரிக்கை விடுத்து பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மூடினார்.
அதிலிருந்து அவர் பேச்சுவார்த்தை இல்லாத ஒடுக்குதல் எனும் ஒற்றை வழிப்பாதையை கடைப்பிடித்து வருகிறார். அதன் விளைவாக, அமைதி கைக்கு எட்டிய தொலைவில் இருக்கிறது என நம்பியதற்கு மாறாக, காஷ்மீரிகள், விடியல் சாத்தியமில்லாத முடிவில்லா வன்முறையில் சிக்கினர். இரண்டாவது மனித வெடிகுண்டுக்கான விதை இப்படித்தான் அமைந்தது.
ராகுல் காந்திக்கு இவை எல்லாம் தெரியவில்லை எனில் அவரிடம் நிலவரம் குறித்த தகவல்கள் மோசமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம். ஆனால், காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சிக்குச் சிறப்பு பொறுப்பு இருப்பதையாவது அவர் அறிந்திருக்க வேண்டும், ஏனெனில், அவரது கட்சிதான் மகாராஜ ஹரிசிங்கிடம் காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வலியுறுத்தியது. மகாத்மா காந்தி எந்தக் கொள்கைகளுக்காகத் தனது உயிரைத் தியாகம் செய்தாரோ, அந்த அகிம்சை, பன்முகத்தன்மை ஆகிய கொள்கைகளைத் தீவிரமாக கடைப்பிடிக்கும் கட்சியாக அது பெருமைப்பட்டுக்கொள்கிறது. பாகிஸ்தானுடனான அமைதியை நெருங்கி, காஷ்மீர் பிரச்சினைக்கு முடிவு காணும் நிலையை எட்டிய பிரதமர் மன்மோகன் சிங்கைக் கொண்ட கட்சியாக அது இருக்கிறது.
ஆனால், கடந்த ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலின் கடைசி நாட்களில், மணிசங்கர் ஐயர் மீதான மோடியின் தாக்குதலின்போது செய்தது போல, அவர் புயலுக்கு முன் நாணல் போல வளைந்து, இதை இந்தியாவின் ஆன்மா மீதான தாக்குதல் என வர்ணித்திருக்கிறார். காங்கிரஸ் மட்டும் அல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசு மற்றும் பாதுகாப்புப் படையின் செயல்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் தாமாக அறிவித்திருக்கிறார். காஷ்மீரத்திலும், மற்ற பகுதிகளிலும் உள்ள காஷ்மீரிகளுக்கு இது திகிலூட்டும் செய்தியைத் தெரிவித்துள்ளது: நிலைமை மோசமாகும்போது அவர்கள் பக்கம் யாரும் நிற்க மாட்டார்கள் எனும் செய்திதான் அது. ‘
பிரேம் சங்கர் ஜா
பிரேம் சங்கர் ஜா, தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர்
நன்றி தி வயர்
https://thewire.in/rights/pulwama-narendra-modi-bjp-2019-elections