ஜார்ஜ் ஆர்வெல் 1940இல் ’என் நாடு இடதா? வலதா?’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதினார். பிரிட்டனும், ஜெர்மனியும் போரில் ஈடுபட்டிருந்தது. லண்டனில், லூப்வாபே (ஜெர்மனிய விமானப் பிரிவு) குண்டு மழை பெய்துகொண்டிருந்தது. அவநம்பிக்கை மிக்க, அன்றாட நிகழ்வுகளோடு ஒட்டாத மனநிலை கொண்ட அந்த எழுத்தாளர், ஈடுபாடு மிக்க உணர்ச்சியமயமான தேசியவாதியாக மாறிக்கொண்டிருந்தார். இந்த கட்டுரையில் ஆர்வெல், இடதுசாரி அறிவுஜீவுகளின் அணுகுமுறையை விமர்சித்திருந்தார். ஒரு சோஷியலிசவாதியாக, ஆர்வெல் போரின் முடிவு குறித்து அச்சம் கொண்டிருந்தார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் எச்சரிக்கையும் மிதமான போக்கும் தேவை என வலியுறுத்தி அவர் நிறைய எழுதியிருந்தார். ஆனால் தாக்குதல் துவங்கியபோது ஆர்வெல், தான் மனதளவில் தேசப்பற்று மிக்கவர் என்பதை உணர்ந்தார். தனது தரப்புக்கு எதிராகச் செயல்பட முடியாது என்றும், போரை ஆதரிப்பேன், முடிந்தால் போரிடுவேன் என்றும் உணர்ந்தார். அப்போது ஆட்சியில் இருந்த கன்சர்வேடிவ் அரசுக்குத் தனது விசுவாசம் குறித்த உறுதி இருந்தது என்று எழுதினார்.
ஆறு ஆண்டுகள் கழித்து, நாஜிக்கள் வீழ்த்தப்பட்டு, நாட்டிலும் உலகிலும் அமைதி திரும்பியபோது, ஆர்வெல் ‘நான் ஏன் எழுதுகிறேன்’ எனும் கட்டுரையை எழுதினார். தனிநபர்கள் கட்டுரை அல்லது புத்தகங்கள் எழுதுவதற்கான நான்கு காரணங்களை அவர் பட்டியலிட்டார். தன்முனைப்பு, அழகியல் உத்வேகம், வரலாற்று ரீதியான தூண்டுதல், அரசியல் நோக்கம் ஆகிய நான்கு அம்சங்களை அவர் குறிபிடுகிறார். தனது சொந்த எழுத்துகள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்: “நான் ஒரு புத்தகம் எழுத உட்காரும்போது, ‘நான் ஒரு கலைப்படைப்பை உருவாக்குகிறேன்’ என எனக்கு நானே சொல்லிக்கொள்வதில்லை. நான் அம்பலப்படுத்த விரும்பும் சில பொய்கள் இருப்பதால், நான் கவனத்தை ஈர்க்க விரும்பும் சில தகவல்கள் இருப்பதால்… எழுதுகிறேன்…”
இன்றைய இந்தியாவுக்கு எந்த ஆர்வெல் பொருத்தமானவர்- மிகுந்த தேசப்பற்றாளரா? உண்மை பேசுபவரா? எழுத்தாளர்கள், நிருபர்கள், எடிட்டர்கள், டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆகியோர் ஆட்சியில் இருக்கும் அரசின் பின் நிற்க வேண்டுமா? அல்லது, அதற்கு மாறாக, அரசு மறைக்க விரும்பும் தகவல்களை வெளிக்கொணர்ந்து அரசு கூறும் பொய்களை அம்பலப்படுத்த வேண்டுமா?
என்னுடைய தனிப்பட்ட நிலையைப் பற்றிக் குறிப்பிட வேண்டும் எனில், புல்வாமா தாக்குதலின்போது, எனக்குள் இருந்த தேசப்பற்றாளர் தூண்டப்பட்டு, உணர்ச்சிமயமாகி, கோபம் கொண்டார். பாகிஸ்தான் குறித்தும் அது உருவாக்கிய பயங்கரவாத வலைப்பின்னல் குறித்தும் ஆழமாக மன்னிக்க முடியாத உணர்வைக் கொண்டேன். ஒரு காலத்தில் பாகிஸ்தானுக்கு நெருக்கமாகக் கருதப்பட்ட அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வன்மையான கண்டங்கள் வந்தது குறித்து நிம்மதி அடைந்தேன். நம் பக்கத்தில் இருந்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டபோது அது நியாயம் என உணர்ந்தேன்.
26/11 தாக்குதலின் போது நம்முடைய அரசு அமைதி காத்தது உலகின் பார்வையில் பாகிஸ்தானைத் தலைகுனிய வைப்பதாக இருந்தது. ஆனால் அந்த நாட்டுக்கும், அதை ஆண்டவர்களுக்கும் எந்த அவமான உணர்வும் இல்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தியா மீதான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் தடையில்லாமல் தொடரும் நிலையில் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்னைப் பொறுத்தவரை சரியானதே.
இருப்பினும், நான் ஏற்கனவே அறிந்திருக்க வேண்டியதை விரைவில் தெரிந்துகொண்டேன். அதாவது 1940இல் இருந்த பிரிட்டன் அல்ல 2019 இந்தியா என்பது. முதல் விஷயம் நாம் முழுப் போர்ச் சூழலை எதிர்கொள்ளவில்லை, லேசான தீவிரம் கொண்ட மோதலை எதிர்கொண்டுள்ளோம். மற்றொன்று, பொதுத் தேர்தல் வரவுள்ளது, எனவே, தில்லியில் ஆட்சியில் உள்ள அரசு, பாகிஸ்தானுடனான மோதலை, இதனால் இந்தியாவுக்கான விளைவுகள் மீது ஒரு கண்ணையும், பாஜக மீண்டும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பிற்கு என்ன விளைவு கொண்டிருக்கும் என்பதில் மறு கண்ணையும் கொண்டிருக்கும்.
பயங்கரவாதத்தைப் பயன்படுத்துதல்
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை ஆளும் கட்சி பயன்படுத்திக்கொள்வது வேகமாகவே நிகழந்தது. பாஜக எம்பிகளும் மத்திய அமைச்சர்களும் உயிர்த் தியாகம் செய்தவர்களின் சொந்த ஊருக்குச் சென்று, அவர்கள் சவப்பெட்டியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பாஜகாவால் நியமிக்கப்பட்ட கவர்னர் ஒருவர் டிவீட்களை வெளியிட்டார், பெரும்பான்மைச் சமூகத்தைத் தங்கள் பக்கம் சாய்க்க வைக்கும் முயற்சியாக பாஜக தலைவர் காஷ்மீரை, இதர இந்தியாவுக்கு எதிராக நிறுத்தும் வகையில் பேசினார். மேலும் தேசியப் போர் நினைவுச் சின்னமும், தாக்குதல் நடைபெற்ற 10 நாட்களுக்குப் பிறகு திறந்து வைக்கப்படும் வகையில் அமைந்தது. இது தேசிய ஒற்றுமை வெளிப்பாட்டிற்குப் பொருத்தமான நிகழ்வுதான் என்றாலும், ஆளும்கட்சி அதை அப்படிப் பார்க்கவில்லை. மூத்த அமைச்சர் ஒருவர், தனது தலைவரை குளிர்விக்கும் வகையில், “இந்தியாவின் முதல் போர் நினைவுச் சின்னத்தைச் சாத்தியமாக்க, தேசத்திற்கு 70 ஆண்டுகளும், PM @NarendraModi தலைமையும் தேவைப்பட்டது” என டிவீட் செய்தார். தலைவரும் தன் பங்கிற்கு இந்த நிகழ்வை, காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் முதல் குடும்பம் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்திக்கொண்டார். தானும், தனது கட்சியுமே தேசத்தை மேலும் பாதுக்காப்பாக உணர வைக்க எல்லாவற்றையும் செய்துள்ளதாகப் பிரதமர் தனது பேச்சில் பெருமைப்பட்டுக்கொண்டார்.
பயங்கரவாதம், பாகிஸ்தானுடன் போர் அபாயம் ஆகியவை நிலவும் சூழலில் இவை மிகவும் மோசமானவையாகும். இதை விடவும் மோசமான நிகழ்வுகள் தொடர்ந்தன. பிப்ரவரி 26 அன்று எல்லை தாண்டித் தாக்குதல் நடைபெற்ற பிறகு, பாஜக தலைவர் அமித் ஷா இவ்வாறு டிவீட் செய்தார்:“ @narendramodi யின் வலுவான மற்றும் தீர்மானமான தலைமையின் கீழ் இந்தியா பாதுகாப்பாக இருப்பதை இன்றைய நடவடிக்கை மேலும் உணர்த்துகிறது”. நாகரீகமும் முறையான நடத்தையும் அமித் ஷாவுக்கு அந்நியமானது. தேர்தலில் வெற்றிபெற அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பதால் இது எதிர்பார்க்கக்கூடியதே. PM @narendramodi ஜியின் தலைமை கீழ் உறுதிமிக்க, புதிய இந்தியாவின் அடையாளமாக விமான தாக்குதல் அமைகிறது என மத்திய அமைச்சராக இருக்கும் முன்னாள் ராணுவ தளபதி ஒருவர் டிவீட் செய்தது மேலும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்தது. அன்றைய தினம் மாலை, புல்வாமா தாக்குதல் தியாகிகள் படங்கள் பின்னணியில் இருக்க பிரதமர் ராஜஸ்தானில் அரசியல் உரை நிகழ்த்தினார்.
அச்சமும் பழிவாங்கும் உணர்வும்
ஜார்ஜ் ஆர்வெல் சொன்னதை மீண்டும் மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும். அவருடைய இரண்டு கட்டுரைகளிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன். இப்போது, அவரது இரண்டு புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். அவருடைய விலங்குப் பண்ணை (Animal Farm) புத்தகத்தில் நெப்போலியன் எனும் பாத்திரம் வருகிறது. இந்தப் பாத்திரம், இறந்துபோன நெப்போலியனை அல்லாமல் உயிருடன் இருந்த ரஷ்ய தளபதி ஒருவரை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்த சூப்பர் மனிதர் பற்றி, புனைகதையில் சூப்பர் விலங்காக மாற்றப்பட்டவர் பற்றி, ஆர்வெல் எழுதுகிறார்: “நெப்போலியன் ஒருபோதும் நெப்போலியன் என்று மட்டும் குறிப்பிடப்படவில்லை. அவர் எப்போதும், நம் தலைவர், தோழர் நெப்போலியன் என்றே மரியாதையுடன் குறிப்பிடப்பட்டார். மேலும், ஒவ்வொரு வெற்றிகரமான சாதனைக்கும், ஒவ்வொரு அதிர்ஷ்டகரமான நிகழ்வுக்கும் நெப்போலியனே காரணம் எனச் சொல்வதும் வழக்கமாகியுள்ளது”.
நினைவுக்கு வரும் ஆர்வெல்லின் மற்றொரு புத்தகம், எதிர்பார்க்கக்கூடியது போல, பொய்களைப் பரப்பும் உண்மை அமைச்சகம், துவேஷத்தைப் பரப்பி, எதிர்ப்பை ஒடுக்கும் அன்பு அமைச்சகம், அதன் புதிய பேச்சு, சிந்தனையைக் கண்காணிக்கும் காவலர்கள், உங்களை கவனித்து, கண்காணிக்கும் பெரிய அண்ணன் அகிய அம்சங்களைக் கொண்ட ’1984’தான். இந்தப் புத்தகம் இந்திய வலதுசாரி இணைய ட்ரோல் படையைக்கூட முன்கூட்டியே கணித்திருக்கிறது. இந்த நாவலில், இரண்டு நிமிட துவேஷம் எனும் பிரச்சாரப் படம் வருகிறது. “… அச்சம் மற்றும் பழிவாங்கும் உணர்வின் மறைத்துக்கொள்ள வேண்டிய ஏகாந்தம், கொலை செய்யும், சித்தரவதை செய்யும், சுத்தியால் முகங்களை அடித்து நொறுக்கும் விருப்பம் ஆகியவை மக்கள் கூட்டத்தில் மின்சாரம்போலப் பாய்கின்றன” என்று இந்த நாவலில் வருகிறது.
மோடியின் இந்தியா ஸ்டாலினின் ரஷ்யா அல்ல. அந்த நாடு ஒருவகையான சர்வாதிகாரத்திலிருந்து இன்னொரு வகைக்கு, ஜார் மன்னர் ஆட்சியிலிருந்து, கம்யூனிச சர்வாதிகாரி ஆட்சிக்குச் சென்றது. நம்முடைய நாடு, மத்திய மற்றும் மாநில அளவில் கட்சிகள், தலைவர்கள் மாற்றத்தைக் கொண்ட 70 ஆண்டுகள் சுதந்திரமான தேர்தலைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் என் இந்தியா ஆர்வெல்லின் இங்கிலாந்தும் அல்ல. நம்முடைய பத்திரிகைத் துறை மேலும் சமரசத்துக்கு உள்ளாகியிருக்கிறது. நம்முடைய அமைப்புகள் பலவீனமாகியுள்ளன, நம்முடைய அரசியல்வாதிகள் தங்கள் செயல்களில் பொது நலனைவிடச் சுய நலனை அதிகம் கொண்டுள்ளனர்.
இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது, புல்வாமா தாக்குதல் நடந்து 2 முழு வாரங்கள் ஆகின்றன. பிரதமர் இன்னமும் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசவில்லை. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவரது அரசு என்ன செய்ய உள்ளது என்பதை அவர்களுக்கு தெரிவித்தாக வேண்டும். அதே நேரத்தில், அவரது பாணி அரசியிலின் வெளிப்பாடாக நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பிரன்சில் பேசி, எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள், சந்தர்பவாதிகள் என்று கேலி செய்தார். பிரதமர் அதிகார்பூர்வ ட்விட்டர் முகவரியிலிருந்து ஒரு பக்கச் சார்புதன்மை மிக்க டிவீட்டும் மார்ச் 1 அன்று வெளியானது:
தேசப்பற்றா, பிரச்சாரமா?
இது போன்ற சூழலில் ஒரு எழுத்தாளர் அல்லது நிருபரின் பொறுப்பு என்ன? நம்முடைய எல்லைக்கு அருகே இருக்கும் நாடு மறைமுகப் போரை தொடுப்பதால், அவர் முழுவதும் அரசு நிலைப்பாட்டை ஒட்டிச் செயல்பட வேண்டுமா? பிரதமரின் அமைச்சரவை சகாக்களால் உண்டாக்கப்படும் ஆளுமை வழிபாட்டுக் கலாச்சாரத்தை, அரசுக்கு ஜார்லா போடும் மீடியாவை, பொய்ச் செய்திகளைப் பரப்பும் மீட்யாவை அவர் பின்பற்ற வேண்டுமா? அல்லது அரசின் தோல்விகள் மற்றும் தவறான அறிக்கைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுமா? நம்முடைய புலனாய்வு அமைப்புகள் ஏன் புல்வாமா தாக்குதல் பற்றி முன்கூட்டியே அறிந்துகொள்ளவில்லை என் நாம் கேட்க வேண்டாமா? தீவிரவாதத்திற்குத் தயாரான அதிக அளவிலான ஜே.இ.எம். தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் அழிக்கப்பட்டதாக ஆதாரங்களைச் சரி பார்க்காமலே, இந்த அரசு ஏன் கூற வேண்டும்? இந்த கருத்துகள் (இன்னமும் உறுதி செய்யப்படாதவை) நம்முடைய இந்திய விமானப்படையின் நம்பகத்தன்மையை, நேர்மையை பாதிக்கவில்லையா? சார்பு நிலையுடன் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அறிவிப்புகளை அம்பலமாக்குவது தேசப்பற்று மிக்க செயலாகாதா? மேலும், நம்முடைய கட்டுரைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடுத்த தேர்தல் பற்றிக் கவலைப்படுவதைவிட, மத்திய மற்றும் நீண்ட கால நோக்கில் இந்தியா எப்படித் தீவிரவாதத்தை அகற்ற முடியும் என யோசிக்க வேண்டாம்?
இந்தக் கேள்விகளுக்கு எந்தப் பொதுவான பதிலும் இல்லை. இவற்றை அறிந்திருந்து, நம்முடைய தனிப்பட்ட விருப்புகளின்படி (மனசாட்சி) இவற்றை அணுகினால் போதும். ஒருவருடைய நாட்டை, கலாச்சாரத்தை, சக மனிதர்களை நேசிப்பது இயல்பானது, போற்றுதலுக்குரியது. ஆனால், நாம் எல்லோரும் தேசப்பற்றாளராக இருக்க விரும்பினாலும், எழுத்தாளர்கள் (நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும்தான்) ஒருபோதும் அரசின் அல்லது ஏதேனும் ஒரு கட்சியின், எதேனும் ஒரு தலைவரின் பிரச்சாரகர்களாகிவிடக் கூடாது.
தி டெலிகிராபில் சனிக்கிழமை, மார்ச் 2 அன்று வெளியான கட்டுரையின் விரிவாக்கப்பட்ட வடிவம்.
ராமசந்திர குஹா
நன்றி; தி ஸ்க்ரால்
https://scroll.in/article/915200/ramachandra-guha-when-the-pulwama-attack-happened-the-patriot-in-me-was-stirred-moved-and-angered?fbclid=IwAR0Ay-mb9pKolkYtujMHbrbfBV6LoRfdVBUbI9ex6CkSHX9hk7YZ3HGMyo4