சென்னை, ஜூன் 16: அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மாற்றப்படுவது வாடிக்கையானதுதான் என்று முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
உள்துறைச் செயலாளர் மாற்றம்: உள்துறை செயலாளர் 24 நாள்களில் மாற்றப்பட்டார் என்றால், அந்தப் பதவிக்கு புதிதாக வந்திருப்பவரோ இந்த ஒரு மாதத்திற்குள் மூன்று பொறுப்புகளில் மாற்றப்பட்டுவிட்டார். மின்வாரியத் தலைவராக ஒருவரை நியமித்தார்கள். மூன்றாவது நாளே அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குவதாகச் சொன்னவர் ஆட்சிதானே இப்போது நடக்கிறது. இப்படி மாற்றப்படுவதெல்லாம் வேடிக்கை இல்லை; வாடிக்கை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செம்மொழி மாநாட்டு இலச்சினை மறைப்பு?… உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி தமிழகத்தில் உள்ள ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பாடப் புத்தகங்கள்தான் இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளன.
அந்தப் புத்தகங்கள் ஏற்கனவே தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் சார்பில் அச்சடிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டும் விட்டன. அந்தப் பாடப் புத்தகங்களில் வேதியியல், இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயன்ஸ் முதலிய பாடப் புத்தகங்களில் உள்ள அட்டைப் படங்களில் செம்மொழி மாநாட்டு இலச்சினை மற்றும் சில பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இதனை “ஸ்டிக்கர்’ ஒட்டி மறைக்கின்ற முயற்சி நடைபெற்று வருவதாக செய்திகள் வந்துள்ளன. அரசுக்கு இலச்சினையின் மீதுகூட வெறுப்பு ஏற்பட்டிருக்காது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று நான் கைப்பட எழுதிய வரிகளும் இலச்சினை மத்தியில் இடம்பெற்றுள்ளன. சம தர்மத்தைப் புறந்தள்ளும் இந்த ஆட்சியில் அந்த வார்த்தைகள் இருக்கலாமா? என்றுதான் அதனை அகற்றிடும் முயற்சியில் அலுவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்தால்தானே அரசுத்துறை அதிகாரிகள் நல்ல பெயரெடுக்க முடியும்.
தலித் நிலங்கள் மீட்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழில் “தமிழகத்தில் பறிபோன தலித் நிலங்கள் மீட்கப்படுமா?’ என்று ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது.
இதில் சிறுதாவூரில் ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள் தலித் நிலங்களைப் பறித்துக் கொண்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் திமுக ஆட்சியில் மனுவாக கொடுத்த விவரம் விடுபட்டுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் அந்தக் கோரிக்கையை வைப்பார்கள் என்றும், அதற்காக வாதாடுவார்கள் என்றும் நம்புகிறேன்.
தொடரும் அரிசி கடத்தல்: திமுக ஆட்சியில் அரிசி கடத்தல் தொடர்ந்து நடப்பதாக முதல்வர் ஜெயலலிதா ஒவ்வொரு அறிக்கையிலும் தெரிவித்திருந்தார். இப்போது வருகின்ற செய்திகள் அதிமுக ஆட்சியில் அரிசி கடத்தல் தொடருவதாகத்தான் தெரிவிக்கின்றன.
கேரள எல்லையை ஒட்டியுள்ள வாளையார், வேலாந்தா வளம் ஆகிய சோதனைச் சாவடிகளில் சிக்கும் அரிசி கடத்தும் வாகனங்கள் பெரும்பாலும் மதுரை, பழனி, திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அனுப்பப்படுவதுதான் என்றும், அது தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கிடங்குகளில் இருந்து நேரடியாக அரிசியை ஏற்றி வரக்கூடும் என்கிற சந்தேகம் வலுக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. திமுக ஆட்சியில் அரிசி கடத்தல் நடந்ததாகச் சொன்னவர்கள், இதற்கு விரைவில் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.