பதற்றத்தைக் குறைக்கும் முயற்சியாகச் சொல்லப்பட்ட நடவடிக்கையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிடிபட்ட இந்திய விமானப் படை விமானி அபினந்தன் வர்தமான், அமைதி காண்பதற்கான முயற்சியின் அடையாளமாக விடுவிக்கப்படுவார் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய காபினெட் குழு கூடுவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன், இந்திய முப்படைகள் ஊடகத்தைச் சந்திக்க திட்டமிட்டிருந்த ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, முப்படைகள் கூட்டம் இரவு 7 மணிக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
பல இந்திய டிவி சேனல்கள், இம்ரான் கானின் அறிவிப்பை, மோடி அரசின் வெற்றியாக சித்தரித்தன. அன்றைய தினத்தின் பெரும்பகுதியில், வெளியுறவுத் துறை தகவல்களை மேற்கோள் காட்டி, இந்தியா அபினந்தன் விடுவிக்கப்படப் பேச்சுவார்த்தை நடத்தாது என செய்தி வெளியிட்டு வந்தன. அபினந்தன் விடுவிப்பைக் காரணமாக வைத்துக்கொண்டு சாதகமான விஷயங்களைப் பெற்றுக்கொள்ள காந்தகார் கடத்தல் போன்ற நிலையை உருவாக்க முயல்வதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் இம்ரான் அறிவிப்புக்குப் பின், தலைப்புச்செய்திகள் மாறின. டைம்ஸ் நவ், மிரட்டல் எடுபடவில்லை எனச் செய்தி வெளியிட்டது. பாகிஸ்தான் பயத்தில் பணிந்தது என நியூஸ் எக்ஸ் செய்தி வெளியிட்டது.
இப்போது எந்த நாட்டுக்கு வியூகம் சார்ந்த சாதகம் இருக்கிறது என்பது விவாதத்திற்கு உரியது. மோடி அரசு ராஜாங்க வெற்றி பெற்றிருப்பதாக டிவி சேனல்கள் கூறினாலும், கிரிக்கெட் மொழியில் சொல்வது என்றால் பாகிஸ்தான், மக்கள் கருத்தில் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளது.
இம்ரானின் அமைதி நடவடிக்கை என்பது இந்தியாவின் பார்வையில் ஒரு நகைமுரண். ஏனென்றால்ல், பாகிஸ்தான் ராணுவ அரசாக அல்லது தோல்வி அடைந்த ஜனநாயகமாகச் சொல்லப்படுவது. அப்படிப்பட்ட நாட்டின் பிரதமர், இந்திய விமானி விடுதலையை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
இம்ரான் கானின் கணக்கு
பாலகோட்டில் ஜெயிஷ் இ முகமது முகாம்களில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய பிறகு பிரதமர்கள் கருத்து தெரிவித்த விதத்தில் பெரும் வேறுபாடு இருந்தது.
இம்ரான் கான் பாகிஸ்தானின் தேசியப் பாதுகாப்புக் குழு கூட்டத்திற்குத் தலமை வகித்தார். அதன் பிறகு சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்தவர், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திர நிலையை பாதிக்கும் வகையில், தேர்தல் சூழலில் உள்ளூர் நுகர்வுக்காக இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளாக தெரிவித்தார்.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கை, ‘இந்தியா தேவையில்லாத தாக்குதலை நடத்தியிருப்பதாகவும், இதற்கு பாகிஸ்தான் பொருத்தமான நேரத்தில், இடத்தில் பதில் அளிக்கும்’ என தேசியப் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது. நாடாளுமன்றக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதன்கிழமை காலை, பாகிஸ்தான் விமானங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து வந்து, ராணுவ நிலைகளைக் குறி வைத்ததாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இந்திய விமானங்கள் சீறிப் பாய்ந்தன. பாகிஸ்தானி எப்16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலில் அபினந்தன் விமானம் வீழ்த்தப்பட்டது. அவர் பாரசூட்டில் குதித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இறங்கினார். அங்கு கைது செய்யப்பட்டார். விமானி கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்படும் வீடியோவை ஜெனிவா நெறிமுறைகளை மீறி பாகிஸ்தான் வெளியிட்டதாக இந்தியா குற்றம் சாட்டியது.
சில மணிநேரங்கள் கழித்து, தேசத்திற்கு உரையாற்றிய இம்ரான் கான், அமைதிக்கு அழைப்பு விடுத்தார். அணு ஆயுதப் போர் அபாயம் பற்றிக் குறிப்பிட்டவர், இரண்டு நாடுகளும் தப்புக் கணக்குப் போட வாய்ப்புண்டா எனக் கேட்டு, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார்.
அதன் பிறகு, புல்வாமா தாக்குதல் தொடர்பான ஆவணத்தை இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கியதாகச் செய்தி வெளியானது. பாகிஸ்தானிடமிருந்து உறுதியான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தது.
வியாழன் அன்று, மோதலில் ஈடுபட்டிருக்கும் அண்டை நாடுகளை அமைதிப்படுத்தும் முயற்சியில் சர்வதேச சமூகம் ஈடுபடுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. வியட்னாமில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “அவர்களை நிறுத்த வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம், ஓரளவு நல்ல செய்தி இருக்கிறது” என கூறினார்.
காலையில், சவுதி அரேபிய தூதர் சவுத் முகமது அல் சடி, பிரதமர் மோடியைச் சந்தித்தார். பொதுவாக ராஜாங்க அதிகாரிகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சக அளவில்தான் தகவல்கள் தெரிவிகப்படும் என்பதால் இது முக்கியமான சந்திப்பாக அமைந்தது. இதனிடையே, தனது அரசிடமிருந்து முக்கியச் செய்தியோடு சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்லாமாபாத் வர இருப்பதாக பாகிஸ்தான் மீடியா செய்தி வெளியிட்டது.
மாலை 4 மணி அளவில் இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றி அமைதிக்கான அடையாளமாக இந்திய விமானி விடுவிக்கப்படுவார் என அறிவித்தார். அதே வேளையில், இந்தச் செயல் பாகிஸ்தான் பலவீனத்தைன் அடையாளம் அல்ல என்றும் கூறினார்..
நரேந்திர மோடியின் பதில்
பாகிஸ்தான் பிரதமர் நிலையை நேரடியாக எதிர்கொண்டதற்கு மாறாக, மோடி வெளியுறவுத் துறை அதிகாரிகள் மீடியாவை எதிர்கொள்ள வைத்தார். ரஃபேல் ஒப்பந்தத்தில் அரசைக் காத்துப் பேசுவதில் முன்னணியில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்கூட மவுனம் காத்தார்.
செவ்வாய் அன்று, பாலகோட் தாக்குதலுக்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு ராஜஸ்தானின் சுருவில் பேரணி ஒன்றில் பேசிய மோடி, “இந்த தேசம் பாழாக ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என இந்த மண்ணில் சபதம் செய்கிறேன்” எனக் கவிதை பேசிப் பார்வையாளர்களை ஆரவாரம் செய்ய வைத்தார்.
மாலையில் மோடி, தில்லி மெட்ரோவின் பயணம்செய்தார். இஸ்கான் கோயிலில் பகவத் கீதை நூலை வெளியிட்டார்.
புதன்கிழமை அன்று இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் விமானங்கள் தாக்கிய பிறகுகூட மோடியிடமிருந்து எந்த அறிக்கையும் இல்லை. இப்போதும், வெளியுறவுத் துறை அதிகாரிகளே பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். எந்தக் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுடன் இருந்த இந்திய விமானப் படை அதிகாரி வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தார்.
வியாழன் அன்று எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை மீறி, மோடி பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இருவருக்குமான வேறுபாடு
ராணுவச் செயல்பாடுகள் தொடர்பாக அனைத்துத் தகவல்களையும் அரசு வெளியிட வேண்டும் என யாரும் வாதிடவில்லை. அது தேச நலனின் வியூகத்திற்கு எதிரானது. இந்திய விமானியை பாகிஸ்தான் பிடித்ததால் இந்தியா சிக்கலான நிலையை எதிர்கொண்டது என்பதும் உண்மை தான். இது கவனமாக கையாளப்பட வேண்டிய பிரச்சனை. டிரம்ப் அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது பின் பக்கக் கதவு வழியே பேச்சுவார்த்தை நடப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இருப்பினும், பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையிலும் மோடி தேசத்திடம் உரையாற்றாமல் இருந்ததற்கு எந்த நியாயப்படுத்தலும் இருக்க முடியாது. எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியது போல, அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்குக்கூட மோடி தலைமை ஏற்கவில்லை. பாஜக தலைவர்களின் வெற்றிக் களிப்பு நிலைமையை மேலும் மோசமாக்கியது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாகிஸ்தான் மீதான தாக்குதல் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு உதவும் என்று கூறினார். உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளைச் சாட, பாஜக தலைவர் அமித் ஷா இதைப் பயன்படுத்திக்கொண்டார். “நாட்டின் பாதுகாப்பை யார் உறுதி செய்ய முடியும்?” என அவர் கேட்டார். “கூட்டணி மனிதர்களா அல்லது மோடிஜியா? பாகிஸ்தானுக்கு யாரால சரியான பதிலடி கொடுக்க முடியும்? யாரால் தீவிரவாதத்தை அழிக்க முடியும்?” என அவர் கேட்டார்.
பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க மூத்த அமைச்சரை அனுப்ப அரசு காட்டிய தயக்கம், முப்படைத் தளபதிகளைக் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சங்கடத்தில் ஆழ்த்தியது. இது சிவில் நிர்வாகத்தின் பொறுப்பாகும். உதாரணமாக, விமானப் படை தளபதியிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, ஜம்மு காஷ்மீரில் ராணுவ நிலைகளை பாகிஸ்தான் தாக்கியது போர்ச் செயலா என்பதாகும். அதிகாரி இதை ராஜாங்க நோக்கில் கையாண்டாலும், பொறுப்பான ஜனநாயகத்தில், சிவில் அரசே எது போர்ச் செயல் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
பிரதமர் தாமே முன்வந்து பதில் அளிக்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தால், அதிலும் அமெரிக்கா அளித்த ஆயுதத்தைத் தீவிரவாத்தை ஒடுக்குவதற்கு அல்லாமல் வேறு செயலுக்கு பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்த நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் இந்தியா முயற்சிக்கு வலு சேர்த்திருக்கும். இவ்வாறு முன்முயற்சி எடுக்காததன் மூலம், மோடி, பாகிஸ்தான் பிரதமர் மக்கள் கருத்தளவில் முதன்மை பெற அனுமதித்துவிட்டார்.
நன்றி: தி ஸ்க்ரால்
ஸ்ருதிசாகர் யமுனன்
https://scroll.in/article/914952/how-imran-khan-stumped-narendra-modi-in-the-perception-battle-over-air-strikes
Hi bro…enaku RTI epdi apply pannanum…enna reason ku apply pannanum nu sollunga