பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் ஐந்த துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவி, நன்றி கூறி அவர்களை கவுரவப்படுத்தினார். இந்த தருணத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன் எனப் பின்னர் இது பற்றி டிவிட்டரில் செய்தி வெளியிட்டார்.
இந்தச் செயல் பலரால் விமர்சிக்கப்பட்டது. இது சரியானதும்கூட. “எங்கள் பாதங்களை அல்ல உங்கள் மனதை தூய்மையாக்கிகொள்ளுங்கள், திருவாளர் பிரதமரே! என சபாய் கர்மாசாரி அண்டோலன் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ட்விட்டரில் கூறியிருந்தார். இந்தச் செயல்முறை முழுவதும் அவமானகரமானது என அவர் கூறினார்.
உண்மையைச் சொல்வது என்றால், துப்புரவுப் பணியாளர்கள் பாதங்களை சுத்தம் செய்வதன் மூலம் மோடி அவர்களை கவுரவிக்கவில்லை.
தூய்மைப்படுத்தும் செயல்
இந்த விடியோ காட்சியை அலசுவதில் இருந்து துவங்கலாம்.
மோடி வரும்போது ஐந்து துப்புரவுப் பணியாளர்கள் காத்திருக்கின்றனர். அவர் அமர்வதற்கு முன்னரே அவர்களை டிரேயில் பாதங்களை வைக்குமாறு கூறுகிறார். இது பொறுமையின்மையின் அடையாளம்.
ஒருவர் பாதங்களைக் கழுவியதும் மோடி, இரண்டாவது நபருக்குச் செல்கிறார். டிரேவில் உள்ள தண்ணீரை மோடியோ அல்லது அவரது உதவியாளர்களோ அகற்றாததால், அந்தப் பெண்மணி கால்களை எப்படி வைத்திருப்பது எனத்தெரியாமல், சங்கடமாக கால்களை தொங்க விட்டிருக்கிறார். இரண்டாவது நபரிடமும் இதே போல நிகழ்கிறது.
மேலும், பணியாளர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, மோடி குஷன் வைத்த மர ஸ்டூல் மற்றும் தாமிரப் பாத்திரங்களைப் பெற்றிருப்பதை கவனிக்கவும்.
கவுரவம் அல்ல அவமானம்
கும்பமேளா பகுதியைத் தூய்மையாக வைத்திருப்பதற்காகவும், அதன் மூலம் தூய்மை இந்தியா திட்டத்திற்கு உதவுவதற்காகவும், இந்தத் துப்புரவுப் பணியாளர்களை கவுவரவிப்பதாகத் தனது செயலுக்கு மோடி விளக்கம் கூறினார்.
“கும்பமேளாவில் இந்தப் பணியாளர்கள் செய்யும் உழைப்பை யாரும் அறிய மாட்டார்கள். கும்பமேளாவின் அடையாளம் சுத்தம்” என்று மோடி கூறினார்.
ஆனால், ஐந்து துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவுவது இவர்கள் சமூகத்திற்கு எதுவும் செய்துவிடாது. இந்த மக்களுக்கு அதிகாரம் அளிக்க மோடி அரசிடம் எந்த திட்டம் இல்லை என்பதால் இது அவமானப்படுத்தும் செயலே ஆகும்.
பாதங்களைக் கழுவுவது என்பது சாதிய முறையை மேலும் கவுரவிக்கவே செய்கிறது. அதன் இருப்பை நியாயப்படுத்துகிறது. இது பணியை உயர்த்தி, பணியாளர்களுக்கு அவர்கள் அடையாளத்தை நிராகரிக்கிறது. இந்தியாவில் கழிவுகளை அள்ளுவது தொடர்பாக நீடிக்கும் பிரச்சினை இது. துப்புரவுப் பணியாளர்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கழிவுகளுடன்தான் அவர்கள் காட்டப்படுகிறார்கள். அல்லது இந்த வீடியோவில் இருப்பதுபோலத் துப்பறவுப் பணிக்கான சீருடையுடந்தான் அவர்கள் காட்டப்படுவார்கள்.
துப்புரவுப் பணியாளர்கள் தொடர்பான தனது அணுகுமுறையில் மோடி சீராக இருக்கிறார். பணி மூலமே அவர்களை வரையறுக்கிறார்.
குஜராத் முதல்வராக இருந்தபோது, துப்புரவு செய்வது வால்மீகி சமூகத்திற்கு ஆன்மிக அனுபவம் என அவர் எழுதினார். இது வால்மீகி சமூகத்தை அவர்கள் செய்யும் பணியாகச் சுருக்கி, சாதியப் படிநிலையை மீண்டும் வலியுறுத்துவதாகும்.
மேல் சாதி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் அதே சமயத்தில், மற்றவர்களின் பாதங்கள் கழுவப்படுகின்றன. அவர்களுடைய பணி ஆன்மிகமானது எனக் கூறப்படுகிறது.
ஸ்வச் பாரத் நாயகர்கள்
தூய்மை இந்தியா கனவை நிறைவேற்றுவது என்று வரும்போது துப்புரவுப் பணியாளர்கள் முன்னே நிற்பதாக அவர் கூறினார். இதில் கொஞ்சமும் உண்மை இல்லை.
தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களாக, நடிகர்கள், விளையாடு வீரர்கள் மற்றும் அதிகாரிகள்தான் இருந்துள்ளனரே தவிர, துப்புரவுப் பணியாளர்கள் அல்ல. இந்தத் திட்டம் சக்தி படைத்தவர்களுக்கான புகைப்பட வாய்ப்பாக இருக்கிறது.
இவர்கள் எல்லாம் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்ய நேரம் கிடைக்காத பிரபலங்கள். பொது இடங்களையும், கழிவுகளையும் மறந்தவர்கள்.
2014இல் ஆட்சிக்கு வந்ததும், மோடி கையில் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, 2019 அக்டோபர் 2இல் தூய்மையை இந்தியாவை அடைவோம் என்று கூறினார். அப்போதும் துப்புரவுப் பணியாளர்கள் கவனத்தில் வரவில்லை.
தூய்மை இந்தியா திட்டம் துப்புரவுப் பண்யாளர்களை விடுவிக்கவில்லை. மாறாக அவர்கள் இப்போது அரசு மேற்பார்வையாளர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். அதைவிட முக்கியமாக, இந்த திட்டம், துப்புரவுப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பழைய வழக்கத்தை வலியுறுத்துகிறது. .
துப்புரவுப் பணியாளர்கள், குப்பை அள்ளுபவர்களுக்குச் சீரான பணி நேரமோ வார விடுமுறையோ கிடையாது. அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனம் அல்லது மேற்பார்வையாளர்களைப் பொறுத்து இது அமையும். அவர்கள் அரசுப் பணியாளர்கள் என்றாலும், இந்த வேலையை மட்டும்தான் அரசு, பணியாக அல்லாமல் சமூக சேவையாகக் கருதுகிறது.
இது சமூக சேவை என்பதால் அரசு துப்புரவுப் பணியாளர்களின் உரிமைகள் பற்றிக் கவலைப்படுவதில்லை; அல்லது இந்தத் துறையில் இயந்திர அறிமுகம் பற்றியும் யோசிப்பதில்லை. மோடியின் கொள்கை ஒருபோதும் துப்புரவுப் பணியாளர்களை மேம்படுத்தும் வகையில் இருந்ததில்லை.
மற்ற அரசியல் கட்சிகள்
பாஜக சாதியத் தன்மை கொண்ட கட்சி என்றால், மற்ற கட்சிகளும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவில்லை.
நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி சுகாதாரத் துறையில் எந்த சீர்திருத்தமும் கொண்டுவரவில்லை. உதாரணமாக, இந்தியாவில் தண்ணிர் பயன்படுத்தும் கழிவறைகள் 19ஆம் நூற்றாண்டில் அறிமுகமாயின. ஆனால் அதிகாரபூர்வமாகத் தடை செய்யப்படும் வரை 1993 வரை அரசு உலர் கழிவறைகளைப் பயன்படுத்தியது. இன்றும் இது தொடர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி சுகாதாரத் துறையைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக, இந்தப் பணியாளர்கள் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
துப்புரவுத் தொழிலாளர்கள்தான் பிரச்னையே தவிர, துப்புரவுப் பணி அல்ல.
கேரளாவில் மார்க்சிஸ்ட் அரசு, சாக்கடைகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களுக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்த அனுமதித்தது.
தமிழகத்தில் திமுக, துப்புரவுப் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்து, அவர்களுக்குத் தனி ஒதுக்கீடும் அளித்தது. இது, இந்தச் சமூகத்தினர் தங்கள் பிரச்சனையை பொதுவெளியில் பேச வழி வகுத்தது.
ஆனால், இந்தக் கட்சிகள் துப்புரவுப் பணி தொடர்பான இழிவான எண்ணத்தை அகற்ற எதுவும் செய்யவில்லை. இதைச் செய்வது தொலைதூரக் கனவாக இருக்கிறது. அந்தக் கனவு நிறைவேறும்வரை இதுபோலப் புகைப்பட வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
பி.ரவிச்சந்திரன், தலித் கேமிரா@dalitcamera நிறுவனர்
நன்றி: தி ப்ரின்ட்
https://theprint.in/opinion/by-washing-feet-pm-narendra-modi-was-honouring-himself-not-safai-karamcharis/197909/