புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும் மோடி தன் ஆவணப்படத்தைத் தொடர்ந்தாரா அல்லது தோவல் தகவல் அனுப்பத் தவறிவிட்டாரா?
பிரதமர் நரேந்திர மோடியிடம் புல்வாமா தாக்குதல்களைக் குறித்து பேச வேண்டும் என்பதில் தனக்குத் தானே போட்டுக்கொண்ட ஒரு வாரக் கட்டுப்பாட்டை காங்கிரஸ் முடித்துக் கொண்டபோது, அவர்களின் விமர்சனம் பெரும்பாலும் கொள்கையைவிடவும் பார்க்கப்படும் கோணத்தை மையப்படுத்தியே இருந்தது. கடந்த வியாழனன்று, காங்கிரஸ் பேச்சாளர் ரந்தீப் சூர்ஜேவாலா செய்தியாளர்களின் கூட்டத்தை நடத்தி இதுபற்றிப் பேசினார். பிப்ரவரி 14 அன்று 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் இறந்துபோன தாக்குதலுக்குப் பிறகு மோடி ஆவணப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டிருந்ததாக அவர் சொன்னார்.
“நாடு முழுவதுமே வீரர்களின் மரணத்தால் துக்கம் அடைந்திருந்தபோது பிரதமர், கார்பெட் தேசியப் பூங்காவில் ஒரு ஆவணப் படப்பிடிப்பிலும், முதலைகளைப் பார்ப்பதற்கான படகு சவாரியிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்”, என்று குற்றம் சாட்டியது காங்கிரஸ். “அன்று மாலை 6.30 மணிவரை படப்பிடிப்பு நடந்தது. 6.45 மணிக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டார். தாக்குதலுக்கு நான்கு மணிநேரங்களுக்குப் பிறகு வரை, மோடி தன்னுடைய விளம்பரங்களிலும், படப்பிடிப்பிலும், சிற்றுண்டியிலும் கவனம் செலுத்தியது கொடூரமானது”.
வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு ஆகியோர் அரசின் செயல்பாட்டையும் புலனாய்வுத் தோல்விகளைத் தாக்கிப் பேசினார்கள். ஆனாலும், கடந்த வியாழன் முழுவதும் இந்தக் குற்றச்சாட்டே செய்திகளில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அரசிடமிருந்தும் பாரதிய ஜனதா கட்சியிடமிருந்தும் இதற்கான சுவாரஸ்யமான சில பதில்களும் கிடைத்தன.
தோவலின் தவறு?
முதலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசுடன் கை கோர்ப்பதாகக் கூறியபோதும், இந்த குற்றச்சாட்டானது காங்கிரஸின் உணர்ச்சியற்ற தன்மையை நிரூபிக்கிறது என்று சொன்னார் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் . அதன் பிறகு, பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் ஏறத்தாழ பாகிஸ்தான் போலவே பேசுகிறது என்று சொன்னார். ஆனால், இருவருமே குற்றச்சாட்டைப் பற்றி எதுவுமே கூறவில்லை.
இதைத் தொடர்ந்து, விசித்திரமாக, NewsX, CNN-News18 ஆகிய தொலைக்காட்சிகளிலும் ஊடகவியலாளர்களின் ட்விட்டர் பதிவுகளிலும் வெளியான தகவல்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மீது குற்றம் சாட்டுவதாக அமைந்தன. இந்தத் தகவல்களைத் தெரிவித்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
இந்தத் தகவல்களும் அதையொட்டிய சமூக வலைதளப் பதிவுகளும் தோவலின் மீது குற்றம்சாட்டின. சரியான நேரத்திற்கு புல்வாமா தாக்குதலைப் பற்றி தோவல் தெரிவிக்காததால்தான் மோடி படப்பிடிப்பில் ஈடுபட்டார் என்பதே இந்தப் பதிவுகளின் சாரம். மோசமான காலநிலையால் மோடிக்குத் தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றும் இந்தப் பதிவுகளில் சொல்லப்பட்டது.
மோடியிடம் தகவல் சொல்வதில் சிக்கல் இருந்தது என்பது, மிகப் பெரிய தேசிய இடரின்போது மோடி அசட்டையாக இருந்தார் என்பதைவிடவும் தீவிரமான பிரச்சினை. நாட்டின் பிரதமர் திட்டமிடப்பட்ட ஒரு பயணத்தில் இருக்கும்போது மொபைல் நெட்வொர்க் அவருக்குத் தகவல் போகாமல் செய்யவிடுமானால், நாட்டின் பாதுகாப்பைக் குறித்த பெரிய கேள்விகளை அது எழுப்புகிறது.
ஆதித்யா மேனன் என்பவரின் ட்விட்டர் பதிவு மூன்று சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டுகிறது:
- மோடி தொடர்ந்து ஆவணப்படப் படப்பிடிப்பில் இருந்தார்.
- பிரதமருக்குத் தெகவல் தெரிவிப்பதில் தோவல் தாமதமாகச் செயல்பட்டார்.
- மோசமான காலநிலை காரணமாகப் பிரதமரைத் தொடர்புகொண்டு புல்வாமா தாக்குதல் பற்றிச் சொல்ல முடியவில்லை.
இந்த மூன்று சாத்தியக்கூறுகளுமே கவலை தருபவை என்று ஆதித்யா மேனன் குறிப்பிடுகிறார்.
மோடி ‘சாப்பிடவில்லை’
மோடி ஆவணப்படம் தொடர்பான தகவல்கள் வெளியான அதே வேகத்தில் மறைந்துவிட்டன. NewsX அந்தத் தலைப்புச் செய்தியை மீண்டும் வெளியிடவில்லை. CNN-News18 ஊடகவியலாளர்களும் ட்வீட்களை அழித்துவிட்டனர்.
எதிர்பார்த்ததைப் போலவே, அமைச்சர் நிதின் கட்கரி, இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தானுக்கு நதி நீரை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னபோது அனைவரின் கவனமும் சிதறியது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்த அரசின் விளக்கம் இது என்று பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. இல்லையேல் இந்த நடவடிக்கை மிகப் பெரிய விஷயமாகப் பேசப்பட்டிருக்கும்.
அடுத்த நாள் மோடியின் நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல்களை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது. தோவலின் தவறு என்று சொன்னதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட திசையில் இத்தகவல்கள் இருந்தன. இதன்படி, கார்பெட்டில் இருக்கும்போதே மோடிக்குத் தகவல் போயிருக்கிறது. அவர் தொடர்ந்து அழைப்புகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார். இதனால் ருத்ராபூரில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தைக்கூட ரத்து செய்துவிட்டு, அங்கிருப்பவர்களுடன் தொலைபேசியில் மட்டுமே பேசியுள்ளார்.
கார்பெட் பூங்காவில் மோடி தேநீரும் சமோசாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டைப் பொய்யென்று நிரூபிக்க, பிரதமர் தாக்குதலுக்குப் பிறகு எதுவுமே சாப்பிடவில்லை என்று பாஜக தரப்பிலிருந்து இந்தியா டுடே இதழின் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர். “நாட்டில் அனைத்தும் இயல்பாக நடந்துகொண்டிருப்பதுதான் நல்லது. காங்கிரஸ் கட்சியோ முழு நாடும் ஸ்தம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறது” என்று பிரசாத் முன்னர் தெரிவித்த பதிலுக்கு முரணாக இந்தத் தகவல் இருந்தது.
பாஜகவின் செயல்பாட்டுத் தோல்விகள் குறித்து காங்கிரஸ் பேசவில்லை என்று சொல்ல முடியாது. இதில் மவுனத்தை உடைத்ததன் மூலம், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தாக்குதல் குறித்த கணிசமான கேள்விகளை எழுப்பினார் சூர்ஜேவாலா.
“மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் மன்னிக்க முடியாத இந்தத் தோல்விக்கு ஏன் பொறுப்பேற்கவில்லை?”, என்று கேட்டார். “எப்படி உள்ளூர் தீவிரவாதிகள் கிலோ கணக்கிலான RDX, M4 கார்பைன், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றைப் பெற்றனர்? மிகவும் பாதுகாப்பான ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலைக்குள் RDX நிறைந்த ஒரு வாகனம் எப்படி நுழைந்தது?”
காங்கிரஸும் எதிர்க்கட்சிகளும் தேசத் துரோகிகள் என்று பெயரெடுத்துவிடுவோம் என்று கவலை கொண்டிருந்ததும் தெளிவாகத் தெரிந்தது. இதனால்தான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோடியின் அசட்டை பற்றிப் பேச முடிவெடுத்தனர். மோடிக்கு இந்தியாவின் நலனைவிடத் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்வதில்தான் ஆர்வம் அதிகம் என்னும் பொதுக் கருத்தை ஒட்டியே இந்த விமர்சனங்கள் அமைந்தன.
இந்தத் தாக்குதலின் மையமாக இதை வைத்துக்கொண்டு, காங்கிரஸ் பாஜகவுடன் மோதுகிறது. இத்தகைய கண்ணோட்டங்கள் குறித்து மோடி அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. அவர் பொதுக்கூட்டங்களை நடத்தி, காங்கிரஸை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார். சவுதி அரேபியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது தெரிந்தும், அலுவலக ரீதியான நடைமுறைகளி மீறி, அந்நாட்டின் இளவரசரைத் தழுவிக்கொண்டார். தாக்குதல்களுக்கு ஒரு வாரத்துக்குப் பிறகு மோடி தென் கொரியாவில் சில ஜோக்குகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.
காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் முக்கியமான விஷயத்தைத் தாக்குமா, அல்லது மோடியிடமிருந்தும் அரசிடமிருந்தும் வலுவான எதிர்வினையைத் தூண்டுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரோஹன் வெங்கடராமன்
நன்றி: தி ஸ்க்ரால்.இன்
தமிழில்: ஆசிஃபா
Sorry to bring irrelevant subject here.
Any reaction on Jaffer Sait back to CB-CID ?