பிப்ரவரி 14ஆம் தேதி, இந்தியத் துணை ராணுவப் படையின் வாகனம் புல்வாமாவில் தாக்கப்பட்டது. அதன் விளைவாக 40 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கம் உடனே இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக, இந்திய விமானப் படை, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகள் பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ‘பெரிய தீவிரவாத முகாம் தாக்கப்பட்டதாகவும்’, ‘அதிக அளவில்’ தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் வி.கே.கோகலே தெரிவித்தார்.
இந்திய அரசு பலியானவர்களின் எண்ணிக்கைத் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடாத நிலையில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அரசு வட்டாரங்களில் இருந்து இந்தத் தகவலைப் பெற்றதாக அவை குறிப்பிட்டிருந்தன. ஆனால் பாகிஸ்தான் இந்தச் செய்தியை மறுத்தது. இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது காடுகள் அடர்ந்த பகுதியில் என்றும், எந்த உயிருக்கோ, அந்தப் பகுதிக்கோ கூட எந்தச் சேதமும் இல்லை என பாகிஸ்தான், அசோசியேடட் பிரஸ்ஸிடம் தெரிவித்தது.
மிகத் தவறான செய்திளை பொதுமக்களிடம் ஊடகங்கள் பரப்புகின்றன என்பதற்கு இந்தத் தாக்குதலைப் பற்றி அவை வெளியிட்ட முரண்பாடான தகவல்களே ஒரு உதாரணம்.
புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளைக் கொண்டு நாங்கள் ஒரு ஆய்வு செய்தோம். அதன்முடிவாக, பல செய்திகள் முரணாக, ஒருசார்பு கொண்டதாக, பரபரப்பைத் தூண்டிவிடுவதாக, ஆதாரங்கள் அற்றதாக இருந்ததை நாங்கள் கண்டுகொண்டோம். செய்தி நிறுவனங்களான இந்தியா டுடே, என்டிடீவி, நியூஸ் 18, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பர்ஸ்ட் போஸ்ட், மும்பை மிரர், ஏஎன்.ஐ, போன்றவை தங்களுக்குக் கிடைத்ததாகச் சொல்லப்படும் தகவல்களை பெயர் வெளியிட விரும்பாத அரசு வட்டாரத்தினரிடமும், தடயவியல் வல்லுனர்கள், காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறையினர் போன்றவர்களிடமிருந்து பெற்றதன் அடிப்படையில் வெளியிடுவதாகத் தெரிவித்திருந்தன. இந்த செய்தி நிறுவனங்கள் சுயமாக எந்த விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. உளவுத்துறையின் தோல்வி பற்றிய தீவிரமான கேள்வி குறித்த பதிலும் பெறப்படவில்லை.
இதற்கு இந்திய அரசு பொறுப்பேற்றிருக்க வேண்டும். போர் நெருக்கடி சூழல் கொண்ட அணு ஆயுதம் தாங்கிய இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் சூழலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தேசத்திடம் நேரடியாக உரையாற்றவில்லை. வெளியுறவுத் துறை செயலர் மற்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நடத்திய இரண்டு செய்தியாளர் சந்திப்புகளிலும் கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், ரகசியமான, முரணான தகவல்களை அளிக்க எண்ணற்ற பெயர் வெளியிட விரும்பாத வட்டாரங்கள் தயாராக உள்ளன. அவற்றின் உண்மைத்தன்மையை சோதிக்காமல் வெளியிட நிருபர்களும் தயாராக இருக்கும் நிலையில் தான் இது போன்ற அதி தீவிரமான நெருக்கடிகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.
பரபரப்பு சற்று அடங்கிய பிறகு தான் புல்வாமா தாக்குதல் மற்றும் அதற்கடுத்து நடந்தவை குறித்து இந்திய மக்களிடத்தில் அதிகமாய் எந்தத் தகவல்களும் இல்லை என்பதே நமக்குத் தெரிய வந்தது. பாலகோட்டில் எத்தனை உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கின்றன என்கிற துல்லியத் தகவல் நமக்கு வந்து சேரும் முன்னரே செய்தி நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராமலேயே தங்கள் இஷ்டப்படி 25 முதல் 250 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டதாகத் விதவிதமாய்த் தெரிவித்தன. புல்வாமா தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் என்பதாக ஒவ்வொரு செய்தி நிறுவனமும் ஒவ்வொருவரை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தன.
தாக்குதல் நடைபெற்ற இரண்டு வாரங்களுக்குப் பிறகு நாங்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்தது என்னவென்றால் எந்த ஒரு செய்தி நிறுவனமும், தாங்கள் வெளியிட்டது தவறான செய்தி என்று சொல்லவுமில்லை, தவறான தகவல்களைத் திருத்திக் கொள்ளவுமில்லை. ஒரு பொது ஆவணமாக அந்தத் தவறான செய்திகளை அப்படியே தொடர அவை அனுமதித்திருக்கின்றன.
இதற்கு பதிலாக இந்திய ஊடகங்கள் போர் நெருக்கடி கொண்ட இரு நாடுகளுள் இந்திய அரசின் பிரச்சார ஒலிபெருக்கியாகும் வேலையைத் தான் செய்து கொண்டிருந்தன. பெரும்பாலான செய்தி ஒளிபரப்பு அறைகள் இராணுவக் கட்டுப்பாட்டு மையத்தின் கேலிச்சித்திரம் போல் மாறிக் கொண்டிருந்தது. அங்கு அமர்ந்து கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ராணுவ தொழில்நுட்பம் மற்றும் வியூகங்களை (சில நேரங்கள் தவறாக) விவரித்துக் கொண்டிருந்தனர். ஒரு சிலர், இராணுவ உடைகூட அணிந்திருந்தனர். ஊகங்களும், கணிப்புகளும் கணக்கின்றி தொடர்ந்து வெளியிடப்பட்டன. சில பத்திரிகையாளர்கள் தங்கள் பங்குக்கு இந்திய ராணுவத்தை ஊக்குவிக்கும் செயலை ட்விட்டர் மூலமாக நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.
ஊடகங்களின் இந்தப் போக்கினால் முக்கியமான இரண்டு அரசியல் செயல்பாடுகள் இல்லாமலாயின. ஒன்று, காஷ்மீரில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கிளர்ச்சி நடவடிக்கைகள். இந்தக் கிளர்ச்சியினால் காஷ்மீரில் நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். காஷ்மீர் மக்கள் பலர் துப்பாக்கிச் சூட்டினால் கொல்லப்பட்டிருக்கின்றனர். எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்கிற சரியான எண்ணிக்கை கூட நம்மிடம் தரப்படுவதில்லை. வெகு காலங்களாக காஷ்மீரிகளிள் போராடி வருகிற சுயநிர்ணய போராட்டத்தை இது மௌனமாக்குகிறது. பல இந்திய ஊடங்கங்கள் காஷ்மீரிகளை சுயநிர்ணயப் போராளிகளாக கருதாமல் தீவிரவாதிகளாகவும் மனித வெடிகுண்டுகளாகவும் சித்தரிக்கின்றன.
இரண்டாவதாக, இந்தப் பிரச்சனையை ஊடகங்கள் தீவிரமாகக் கையிலெடுத்ததன் மூலமாக மற்ற அரசியல் குழப்பங்கள் நம்முடைய கண்களில் இருந்து மறைக்கப்படுகின்றன. . ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சையும், அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டும் திடீரெனப் பின்னுக்குத் தள்ளப்பட்டன. அதே போல பத்து இலட்சத்துக்கும் அதிகமான வனவாசிகளை வெளியேற்ற அரசு முடிவு செய்ததும் (பின்னர் தடை விதிக்கப்பட்டது) அதை ரத்து செய்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றதும் பின்னுக்குத் தள்ளப்பட்டன.
இந்த மொத்த நிகழ்வுமே, இந்திய ஊடகப் போக்கின் ஒரு அடையாளம் தான். பெரும்பாலான செய்தி சேனல்கள், அரசியல் செல்வாக்கு கொண்ட குடும்பங்களால் நடத்தப்படுகிறது அல்லது அவர்களின் முதலீட்டினைக் கொண்டிருக்கிறது. பல நேரங்களில் தங்கள் சார்ந்த கட்சியின் நிலைபாட்டை முன்னிறுத்தும் வகையில் செயல்படுகின்றன. 2013 முதல் 2019 வரை, சில சேனல்கள் மற்றும் நாளிதழகளின் ஆசிரியர்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் பாஜகவின் கருத்தை எதிர்த்தது தான்.
சில ஊடகங்களால் மட்டுமே இந்திய அரசியல் தலைவர்களின் செல்வாக்கிற்குப் பணியாமல் இருக்க முடிகிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு கலவரங்களையும் , கூட்டு வன்முறையையும் அவை நியாயபடுத்துவதைப் பார்க்கையில் ஊடகங்கள் இதழியலில் ஈடுபட்டுள்ளதா அல்லது இந்துப் பெரும்பான்மைவாதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதா எனும் சந்தேகம் வலுவாக எழுகிறது.
அரசியல் தீர்வு காணப்படாமலேயே மீண்டும் காஷ்மீர் செய்திச் சுழலில் சிக்கவிருக்கிறது. காஷ்மீரின் மனித உரிமைப் பிரச்சனையையும், மனித உரிமை மீறல்களையும் இந்திய ஊடகம் நுட்பமாய் உள்வாங்கி சித்தரிக்க முன்வர வேண்டுமே தவிர . காஷ்மீரை, மரணங்கள், சேதம், அவசரநிலைச் சட்டங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகச் சுருக்கிவிடக் கூடாது. மிகவும் முக்கியமாக, “உலகின் மிகவும் ராணுவமயமாக்கப்பட்ட பகுதியை” கையாள்வது என்றால் என்ன என்பதை நிருபர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
அப்போதுதான் தேசம், ஒரு அடிப்படையான கேள்விக்கான விடையைத் தேட இயலும். அந்தக் கேள்வியானது : காஷ்மீர் மக்கள் தங்கள் வழியைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளக்கூடிய நிலையை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்பது.
இது ஒன்று தான் இந்தப் பகுதியின் எதிர்கால அழிவைத் தடுப்பதற்கான ஒரே வழி.
சுசித்ரா விஜயன், வசுந்தரா சிர்னதே டிரேனன்
நன்றி; வாஷிங்டன் போஸ்ட்
இந்த கட்டுரை மிக கவனமாக பொறுப்புடன் பத்திரிகை தர்மத்தை நிலைநாட்டும் வகையில் உள்ளது. பாரபட்சமற்ற வகையில் ஊடகங்கள் செயல்பட்டால்தான் மனித உரிமைகள் ஜனநாயக பண்புகள் இந்த நாட்டில் இருக்கும். பொறுப்பான ஊடகங்கள் இருந்தால்தான் பொறுப்பான கண்ணியமான மக்களை எதிர்பார்க முடியும்.