பாஜக அரசு தன் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் தறுவாயில் உள்ள நிலையில், காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இதுவரை மோடி அரசு என்னதான் செய்தது என்பதை அறிய ‘இந்தியா டுடே டீவி’ மேற்கொண்ட முன்னெடுப்புகளில் கிடைத்த உண்மை நிலவரம் இது.
“காஷ்மீர் பண்டிட்கள் தங்களது முன்னோர்கள் வாழ்ந்த நிலத்துக்கு முழு மதிப்புடனும், பாதுகாப்புடனும், வாழ்வாதரத்தோடும் திரும்ப வேண்டும்” என்பது தான் பாஜகவின் முதன்மையான வாக்குறுதிகளில் ஒன்றாக இருக்கும். இதே வாக்குறுதி தான் 2014 மக்களவைத் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தது. அப்போது இதனை பல வருடங்களுக்கு முன்பு காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட ஒன்றரை இலட்சம் பண்டிட்டுகளும் அவர்களது தற்போதைய குடும்ப வாரிசுகளும் பெரிதும் வரவேற்றனர்.
ஆனால் ஐந்து ஆண்டுகளில் அரசு தங்களை மறந்தேபோனது என்றும், தாங்கள் தோற்றுப்போனதாகவும் நினைக்கிறார்கள் இந்த இனத்தினர்.
பாஜக அரசு தன் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் தறுவாயில் உள்ளது. இந்த நிலையில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு இதுவரை மோடி அரசு என்னதான் செய்தது என்பதை அறிய ‘இந்தியா டுடே டீவி’ சில முன்னெடுப்புகளை மேற்கொண்டது. இதன்படி ஜம்மு காஷ்மீர் விவாகரத்துரையின் கீழ் இயங்கும் தகவல் உரிமைச் சட்டத்திற்கு இரண்டு மனுக்களை அனுப்பியது. இந்தத் துறை இந்திய உள்துறை விவகாரத் துறைக்குக் கீழ் இயங்குகிறது.
முதல் ஆர்.டி.ஐ. விண்ணப்பத்தில், காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலை, அந்த வழக்குகளில் எத்தனை முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன, காஷ்மீரில் இதுவரை கொல்லப்பட்ட பண்டிட்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் விவரங்கள் கோரப்பட்டன. இதற்குக் கிடைத்த பதில்: “சி.பி.ஐ.ஓ (மத்திய பொதுத் தகவல் துறை அலுவலர்) வசம் இந்தத் தகவல்கள் இல்லை; ஜம்மு – காஷ்மீர் மாநில அரசிடம் கிடைக்கக்கூடும்.”
இரண்டாவது ஆர்.டி.ஐ. விண்ணப்பத்தில், காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்டுகளின் சரியான எண்ணிக்கையும், அவர்களில் எத்தனை பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது எனவும் கேட்கப்பட்டது. இதற்கும் பதில் இல்லை. காஷ்மீரில் இருந்து வெளியேறிய காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து மட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக மறுவாழ்வு பெற்ற புலம்பெயர்ந்த பண்டிட்டுகள் பற்றியும்கூட எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை என்று கூறிய மத்திய அரசு, இம்முறையும் மாநில அரசை நாடச் சொன்னது.
கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆர்.டி.ஐ. மூலம் கேட்கப்பட்டது. காஷ்மீர் பண்டிட்டுகளின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு மூன்று முக்கிய நலத் திட்டங்களை செயல்படுத்தியிருப்பதாகத் தகவல் தெரிவித்தது. அதாவது மாதாந்திர நிவாரணத் தொகை / உணவுப் பொருட்கள் வழங்குதல், பிரதமரின் நிவாரணத் திட்டம் (2008), பிரதமரின் தேவ் திட்டம் (2015) ஆகிய நலத் திட்டங்களைச் சுட்டிக்காட்டியது. இவற்றில் இரண்டு திட்டங்கள் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கொண்டுவரப்பட்டவை.
கடந்த 10 ஆண்டுகளில், காஷ்மீர் பண்டிட்டுகளின் மறு குடியேற்றப் பெயர்வுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை குறித்த விவரம் கேட்கப்பட்டதற்கு, “காஷ்மீர் பள்ளத்தாக்கில் 6000 குடிபெயர்வு பகுதிகள் அமைப்பதற்கு ஜம்மு காஷ்மீருக்கு பிரதம மந்திரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசு 2015 ல்அனுமதி வழங்கியுள்ளது என்றும் செப்டம்பர் 2016ஆம் ஆண்டு அதற்கான முன்தொகையாக ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசால் 115 கோடி வழங்கப்பட்டது” என்றும் தெரியவந்தது.
1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திடிரென்று வெடித்த தீவிரவாதத் தாக்குதல்களால் பண்டிட்டுகள் காஸ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். இப்போது வரையிலும் பண்டிட்டுகள் ஜனவரி 19ஆம் தேதியை பேரழிவு தினமாக அனுசரிக்கின்றனர்
ஆர்.டி.ஐ. குறித்து கருத்து தெரிவித்த ஜம்மு – காஷ்மீர் காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் சர்மா, “இதன் மூலம் பாஜக அரசின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. தரவுகளைக்கூட அவர்கள் நிர்வகிக்கவில்லை. கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்தும், தீவிரவாதிகளுக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் எந்த விவரமும் அவர்களிடம் இல்லை” என்றார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் கூட பதிவான வழக்குகள், நிர்வகிக்கப்பட்ட தரவுகள் முதலானவை சரியாக நிர்வகிக்கப்படவில்லை என்பதை அவர் வசதியாக மறந்து போயிருந்தார்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் மீது பழியைச் சுமத்தி, மோடி அரசைக் காக்க முற்பட்ட ஜம்மு – காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா, “மத்திய உள்துறை அமைச்சகத்தின் சில அதிகாரிகளுடைய அலட்சியப் போக்கையே இது காட்டுகிறது. நூற்றுக்கணக்கான பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர். பண்டிட்டுகள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை கமிஷன் ஒன்றுஅமைக்கப்பட வேண்டும். பண்டிட்டுகள் பற்றிப் பேசுவதற்கு காங்கிரஸுக்குத் துளியும் உரிமை இல்லை. பண்டிட்டுகள் விரட்டி வெளியேற்றப்பட்டபோது காங்கிரஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது” என்றார் ஆவேசமாக.
ஜம்முவின் உள்ள அகதிகள் முகாம்களில் வாழும் மக்களை இந்தியா டுடே டீவி நேரில் சந்தித்துப் பேசியபோது, அவர்கள் தற்போதைய மோடி அரசின் மீது கடும் வேதனையை வெளிப்படுத்தினர். அகதி முகாமில் வசிக்கும் ஜோதி என்பவர் கூறும்போது, “நரேந்திர மோடி பிரதமர் ஆனதும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். எங்களுக்கு அப்போது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால், இப்போது அவரை டீவியில் மட்டுமே பார்க்கிறோம். ‘சகோதர, சகோதரிகளே…’ என்ற அவரது முழக்கத்தை மட்டுமே கேட்க முடிகிறது. அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டார். காஷ்மீரில் நாங்கள் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். எங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவந்துவிட்டோம். இந்த முகாம்களில் நாங்கள் எண்ணற்ற பிரச்சினைகளைச் சந்தித்துவருகிறோம்” என்றார்.
காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக துயரம் அனுபவிக்கின்றனர். இதோ மக்களவைத் தேர்தல் வருகிறது. எண்ணிக்கையையும் திட்டங்களையும் சுமந்துகொண்டு வாக்குறுதிகளும் நிச்சயம் வலம் வரும். ஆனால், பாதிக்கப்படுவோரின் துயரம் மட்டும் கண்டுகொள்ளப்படாது. இதைத்தான் கடந்த முறை வாக்குகுறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைக் கைப்பற்றிய அரசின் செயல்பாடுகள் காட்டுகின்றன.
அஷோக் குமார் உபாத்யாய்
நன்றி: இந்தியா டுடே
https://www.indiatoday.in/india/story/kashmiri-pandit-exodus-modi-govt-2019-polls-1434026-2019-01-18