மகா கூட்டணியை வெல்வதற்கான பிரம்மாஸ்திரத்தை மோடி கண்டுபிடித்துவிட்டாரா? 2019 மக்களவைத் தேர்தல் முழுவதும் இனி புல்வாமா தாக்குதலைச் சுற்றியும், பாலகோட் தாக்குதலைச் சுற்றியுமே இயங்குமா?
கடந்த வாரம் செவ்வாயன்று, ராஜஸ்தான் சுருவில் பிரதமர் ஆற்றிய உரையை கேட்டிருந்தால், நீங்கள் இப்படித் தான் எண்ணுவீர்கள். தற்போதைய மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் அணிவகித்திருந்த பகுதியில், பாலகோட்டில் இந்திய விமானப் படையின் தாக்குதல் நிகழ்ந்த அன்று பேசும்போது (தற்செயலாக நடந்ததா?) மோடி, இந்த விவகாரத்தை வரப்போகும் தேர்தலுக்குப் பயன்படுத்தப்போவதைத் தெள்ளத் தெளிவாகத் தெரியப்படுத்தினார். அதற்கு அவர் புல்வாமா என்றோ பாலகோட் என்றோ சொல்லவேயில்லை. அப்படிச் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. புல்வாமா தாக்குதலில் இறந்துபோன 40 துணை வீரர்களின் புகைப்படங்களும் மேடையின் பின்புறத்தை அலங்கரித்திருந்தன.
இந்திய விமானப் படையின் தாக்குதல் குறித்த செய்திதான் அப்போது அனைவரது மனதிலும் இருந்தது. இது போன்ற சூழல் ஏறகனவே தயார்நிலையில் இருந்தது போல காணப்பட்டது. அதை அவர் முடிந்தவரை பயன்படுத்திக்கொண்டார். தன்னுடைய நடிப்புக் கலையின் மொத்தத் தேர்ச்சியையும் வைத்துக் கூட்டத்தைத் தூண்டிவிட முயன்றார். அங்கு அவர் பிரதம மந்திரி கிசான் திட்டத்தைப் பற்றியும் ஆயுஷ்மான் பாரத் பற்றியும் பேசினார் என்றாலும், அது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்கவே பேசப்பட்டது. ஆனால், அவர் சொல்ல வந்த விஷயம் மிகவும் தெளிவாக இருந்தது: தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் என்னை நீங்கள் நம்பலாம் என்றார் அவர். சிறிதும் வெட்கமில்லாமல், “தேசம் பாதுகாப்பான கைகளில் உள்ளது” என்றும் அவர் சொன்னார்.
தொலைக்காட்சிகள் தங்களது ஸ்டூடியோவுக்குள் தேசபக்தியை மொத்தமாக ஏலத்துக்கு எடுக்க போட்டிப் போட்டுக் கொண்டிருந்த சமயத்தில் மற்ற யாவற்றையும் மறந்து போயின. முன்னிடத்தைப் பிடிக்கப் போராடியதில், அனைத்தும் மறந்துபோயின. அதே நாளில், தான் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு ‘பாதம் கழுவும்’ நிகழ்வை மோடி அரங்கேற்றினார். சஃபாய் கர்மசாரி (துப்புரவுத் தொழிலாளர்கள்) அமைப்புகளும், தங்கள் உரிமைக்காகப் போராடுபவர்களும் இதற்குத் தீவிரமாக எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஆனால், அவை அனைத்தும் இந்திய விமானப் படையின் தாக்குதலுக்குப் பிறகு செய்தியிலிருந்து மறைந்துபோயின. இதற்கிடையில் சில நாட்களுக்கு விவசாயிகளின் பிரச்சினை பின்னுக்குத் தள்ளப்பட்டது. தேர்தலுக்கு முந்தைய நாளில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 2000 ரூபாயை, தேர்தல் நடத்தை விதிகளை மீறி வழங்குவதற்கான வழிகளை பாஜக அமைதியாகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பு விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது, எனவே வேலையின்மைக்கான மலையளவு ஆதாரங்களை மறைக்கும் வகையில் EPFO (தொழிலாளர் எதிர்கால வைப்பு நிதியமைப்பு ) தரவுகளை ‘உருவாக்க’ முற்படுகிறது. இந்தச் செய்தியும் தலைப்புச் செய்திகளை விட்டு வெளியேறிவிட்டது. ரஃபேல் விவகாரமும் இந்த மிராஜ் விமானத்தால் காணாமல் போய்விட்டது.
கடந்த மூன்று மாதங்களாக, தேர்தல் கதையாடல் பாஜகவின் கைகளை விட்டு நழுவியிருந்தது.
தேர்தல் பருவம் தொடங்கியபோது, விவசாயிகளின் பிரச்சினை, வேலையில்லா இளைஞர்கள் போன்ற தீவிரப் பிரச்சனைகளின் அடிப்படையில் நடக்கவிருக்கும் முதல் மக்களவைத் தேர்தலாக இது இருக்கும் என்னும் நிலை இருந்தது. புல்வாமா, பாலகோட் தாக்குதல்கள், இந்தக் குவிமையத்தைக் கலைத்துவிடும் எனத் தோன்றுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக நம்பியிருக்கும் ஐந்து ‘M’கள் – Modi (மோடி), Election Machine (பாஜக தேர்தல் இயந்திரம்), Money (பணம்), Mandir (கோவில்), Media (ஊடகம்) – இவற்றில் ஒன்றான மந்திர், இத்தேர்தலில் மிராஜ் என்று மாறிவிடும் எனத் தோன்றுகிறது. தேர்தலின் போக்கைத் தீர்மானிக்கும் நிலையில் பாரதிய ஜனதா மீண்டும் வந்துள்ளது.
தேர்தல் நடக்கும் நாள் வரை இது தொடரும் என்ற அவசியம் இல்லை. ஏற்கெனவே சொன்னதுபோல, பாஜக இந்த தேர்தலில் கடினமான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க, 2014ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் இந்தி பேசும் பகுதிகளில் பெற்ற வாக்குகளை இப்போது தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. தேர்தல் காலநிலை மீண்டும் சமநிலைக்கு வந்ததும், ஆதாரமான பிரச்சினைகளின் மீது கவனம் திரும்பியதும், பாஜகவிற்கு இது பின்னடைவாக இருக்கும். மீண்டும் காவிக் கட்சிகளுக்கு மாநிலத் தேர்தல்களில் ஆதரவாக இருக்காது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் ஒப்பிடுகையில் நரேந்திர மோடிக்கு இருந்த அனுகூலம் குறைந்துவிட்டது, மேலும் அது தீர்மானிக்கும் காரணியாகவும் இல்லை. அவர்கள் ஆட்சியின் மீது அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில் வென்ற 282 இடங்களில், 100 அல்லது அதற்கு அதிகமான இடங்களை இழக்க நேரிடும் அபாயத்தில் ஆளுங்கட்சி இருக்கிறது.
இம்ரான் கானோ ராகுல் காந்தியோ வேறு விதமாக நினைக்காத வரையில் இதுதான் நிலை.
பாகிஸ்தான் பிரதமர், எல்லையில் இருக்கும் பதற்றச் சூழலைத் தக்க வைத்துக்கொள்வதன் மூலம், மோடிக்கு இந்தத் தேர்தலைப் பரிசளிக்கலாம். ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்புக்கு ராணுவத்திடமிருந்தும் ஐ.எஸ்.ஐ. அமைப்பிடமிருந்தும் ஆதரவு கிடைக்கிறது என்பது இம்ரானுக்குத் தெரியும். இந்த உணர்தலோ, சர்வதேச ஆதரவின்மையோ அவரை நிதானப்படுத்தி, ராணுவத் தலையீடு இல்லாத அணுகுமுறையை மேற்கொள்ள வைத்தால் மோடிக்குக் கஷ்டமாகிவிடும். ஆனால், அது இம்ரான் கானின் ஆவேசமான பதான் என்னும் படிமத்திற்குள் அடங்காது. அதைவிட முக்கியமாக, பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய விமானத் தாக்குதல் என்னும் பகிரங்க அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே, பாகிஸ்தான் ஏதோ ஒரு வகையில் எதிர்வினை புரியும் என்றே நினைக்கிறேன். இது மேலும் தாக்குதலை ஏற்படுத்தி, அப்பகுதியைப் போரின் விளிம்புக்கு அழைத்துச் சென்றுவிடும் என்று தோன்றுகிறது. இதன் அர்த்தம், போர்ச் சூழலுக்கு நடுவில்தான் தேர்தல் நடக்கும். அல்லது தேர்தல் ஒத்திவைக்கப்படும். இரண்டுமே மோடிக்கு நன்மைதான்.
அப்படி நடக்கும் பட்சத்தில், எதிர்க்கட்சி சூழலை எப்படிச் சமாளிக்கிறது என்பதைப் பொறுத்துதான் அனைத்தும் இருக்கிறது. அதுவும் தன் பங்குக்கு ஒரு தவறைச் செய்து, இந்த தேர்தலை மோடிக்குப் பரிசளிக்கலாம். அது அசட்டையாக இருந்து தேர்தல் முடிவை அதன் போக்கில் விட்டுவிடலாம். அல்லது, தேர்தல் கதையாடலை மோடியிடமிருந்து கைப்பற்றிக்கொண்டு தேர்தல் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ளலாம்.
இப்போதைய சூழலைப் பொறுத்து, பாஜகவைத் தவிர்த்து மற்ற கட்சிகள் தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் சற்றே பின்வாங்கி இருக்கின்றன. அவர்களுக்குச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று அர்த்தமில்லை. ஏனென்றால், இந்தியாவின் இரண்டு வெற்றிகரமான ராணுவத் தாக்குதல்கள் – இந்திய – பாக் போர், 1965 & 1971 – காங்கிரஸ் அரசின் கீழ்தான் நடந்தன. மறுபுறம், போர் விஷயத்தில் பாஜகவிடம் சந்தேகத்துக்குரிய ஒரு சாதனை மட்டுமே உள்ளது. அதன் ஆட்சிக் காலத்தில் நடந்த கார்கில் போர் வெற்றியாகத்தான் அமைந்தது. ஆனால், பாதுகாப்பு விஷயத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இழைத்த தவறின் விளைவாகவே கார்கில் போர் நடந்தது என்பதை மறந்துவிட முடியாது. இப்போதைய பிரச்சினையின் மூல காரணமாக இருக்கும், தற்போது ஜெய்ஷ் – இ -முகம்மதுவின் தலைவரான மசூத் அசாரைப் பிணையக் கைதிகளுக்காக விடுவித்ததும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான்.
தேசியப் பாதுகாப்பில் கள நிலவரத்தில் முன்னேற்றம் நடந்ததாகச் சொல்வதற்கு மோடி அரசிடம் ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன. முதல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் முடிவுகள் என்ன என்பது இப்போதும் தெளிவாக இல்லை. அப்படி ஏதாவது இருக்கிறதென்றால், எல்லையில் ஊடுருவல், தீவிரவாதத் தாக்குதல்கள், ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் ஆகியவை, செப்டம்பர் 2016இல் நிகழ்ந்த சர்ஜிகல் தாக்குதலுக்குப் பிறகு, இரு மடங்காக, மும்மடங்காக அதிகரித்துள்ளன. புல்வாமா தாக்குதலில் நடைபெற்ற பாதுகாப்புக் குறைபாடுகள் சம்பந்தமான கேள்விகள் பல உள்ளன. பாலகோட் தாக்குதலில், தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று சொல்வது இருக்கட்டும், அங்கே செயல்பட்டுக்கொண்டிருந்த தீவிரவாத முகாம் அழிக்கப்பட்டது என்று சொல்வதற்கே அரசு மிகவும் சிரமப்பட வேண்டும். இத்தகைய தீவிரமான விஷயத்தில், ஒருமித்த கருத்தை உருவாக்குவதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. மாறாக, அது ஒரு பக்கச் சார்பு நிலையை எடுத்து, வரும் தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறது.
இருப்பினும், பாஜகவை இவ்விவகாரத்தில் தோற்கடிக்க காங்கிரஸால் முடியாது. இதற்கான காரணம், விடுதலைக்குப் பிறகு நாட்டின் மேல்தட்டு மக்கள் தேசியவாதத்திலிருந்து விலகிவிட்டனர். முற்போக்கு வட்டாரங்கள் தேசியப் பாதுகாப்பு என்ற விஷயத்தைக் கண்டுகொள்ளவில்லை. ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தத் தலைமுறையின் காங்கிரஸ் தலைவர்கள் தேசியப் பாதுகாப்பின் பாதுகாவலர்களாக மக்களால் கருதப்படவில்லை.
ராகுல் காந்தி இந்தத் தேர்தலின் வெற்றிக் கதையாடலைக் கைப்பற்ற நினைத்தால், மோடிக்கு எதிராகச் சின்னச் சின்ன வெற்றிகள் பெற வேண்டும் என்ற எண்ணத்தை அவர் கைவிட வேண்டும். பாஜகவைவிட மேலான தேசியவாதியாகத் தன்னை எதிர்க்கட்சியால் நிரூபித்துக்கொள்ள முடியாது. குறைந்தபட்சம், இந்தத் தேர்தலில் அது சாத்தியமில்லை. ராகுல் காந்தி இந்த விவகாரத்தை, தேசியக் கருத்தொற்றுமையுடன் இணைத்து, தேர்தலின் குவிமையத்தைப் பொருளாதாரத்தை நோக்கித் திருப்ப வேண்டும். அரசியல் களத்தில் ஜாம்பவானான மோடிக்கு எதிராக நிற்பதால், இது எளிதாக இருக்கப்போவதில்லை. ராகுலுக்கு அதிகமான நேரமும் இல்லை.
யோகேந்திர யாதவ்
(இந்த கட்டுரை பாலகோட் தாக்குதலுக்கும், விங் கமாண்டர் அபினந்தன் வர்த்தமான் கைதாகி, விடுதலை செய்யப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டது.)
நன்றி: தி ப்ரின்ட்
தமிழில்: ஆஸிஃபா