
கவுன்சில் நெறிமுறைகளின்படி தேசிய கங்கை கவுன்சில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் கூட்டப்பட வேண்டும். ஆனால், மோடி தலைமையில் ஒருமுறைகூட இந்தக் கூட்டம் நடக்கவில்லை.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இதுவரை ஒருமுறைகூட தேசிய கங்கை கவுன்சில் (NGC – National Ganga Council) கூட்டம் நடைபெறவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘தி வயர்’ பெற்ற விவரம் மூலம் அம்பலமாகியிருக்கிறது. தேசிய கங்கை கவுன்சில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் கூட்டப்பட வேண்டும் என்று நெறிமுறைகள் சொல்வது இங்கே கவனிக்கத்தக்கது.
கடந்த 2016 அக்டோபரில் தேசிய கங்கை கவுன்சில் உருவாக்கப்பட்டது. கங்கை நதி நீரைப் பேணுதல், பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவை இந்தக் குழுவின் நோக்கம். தேசிய கங்கை கவுன்சில் தனது முடிவுரிமைக்கு ஏற்ப, ஒவ்வோர் ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு முறை கூட்டம் நடத்த வேண்டும் என்று மத்திய நீர்வளம் மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கைப் புத்தாக்கத் துறை அமைச்சகம் 2016 அக்டோபர் 7 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், நீர்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய கங்கை கவுன்சில் இதுவரை ஒரு கூட்டத்தைக்கூட நடத்தவில்லை என்பதைச் சொல்லியிருக்கிறது. தேசிய கங்கை கவுன்சில் என்பது கங்கை நதியைத் தூய்மைப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பணிகளை மேற்பார்வையிடக்கூடிய மிகப் பெரிய குழுவாகும்.
தேசிய கங்கை கவுன்சிலின் தகவலின்படி, தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையம் (NGRBA) கலைக்கப்பட்டுவிட்டது. தேசிய கங்கை கவுன்சிலும் தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையத்தின் அதே செயல்பாடுகளையே கொண்டுள்ளது. அந்த அமைப்புக்கும் பிரதமர்தான் தலைமைப் பொறுப்பு வகித்துவந்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2009இல் தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 2009 அக்டோபர் 5ஆம் தேதியன்று அதன் முதல் கூட்டம் நடந்தது.
மன்மோகன் சிங் தலைமையில் 2009இலிருந்து 2012 வரை மூன்று முறை தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையக் கூட்டம் நடந்திருக்கிறது. அதன்பிறகு, 2014 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் மூன்று முறை கூட்டம் நடந்திருக்கிறது. அவற்றில் இரண்டு கூட்டங்களுக்கு நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தலைமையேற்றிருந்தார். 2015 மார்ச் 26இல் நடந்த ஆணையக் கூட்டத்துக்கு மோடி தலைமை தாங்கினார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவி சோப்ரா இவ்வாறு கூறுகிறார், “இதுதான் கங்கை நதி குறித்த இறுதி முடிவு எடுக்கும் அமைப்பு. எனவே, ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு கூட்டங்களையாவது நடத்தியிருக்க வேண்டும். ஒரு கூட்டத்திற்குக் கூட பிரதமரால் தலைமேற்று நடத்த முடியவில்லை எனில், இதுபோன்றதொரு முடிவெடுக்கும் அமைப்பு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது” என்றார். நதிகள் விஷயத்தில் பிரதமர் இந்த அளவுக்குத் தான் முக்கியத்துவம் தந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவருவதாகக் கூறிய ரவி சோப்ரா கங்கைத் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுவருபவர்.
மத்திய நீர்வளம் மற்றும் நதி மேம்பாடு மற்றும் கங்கைப் புத்தாக்கத் துறை அமைச்சர்தான் தேசிய கங்கை கவுன்சிலின் துணைத் தலைவர். இது தவிர பிஹார், ஜார்கண்ட், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், நிதி அமைச்சர், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் ஆகியோரும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.
2017 டிசம்பரில் வெளியிடப்பட்ட தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் மீதான கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர் (சி.ஏ.ஜி.) தனது அறிக்கையில் அரசு கண்டிக்கப்பட்டுள்ளது. நதியைத் தூய்மைப்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு நிறுவுதல் மற்றும் வீடுகளில் கழிப்பிடங்கள் கட்டுவது ஆகியவற்றில் தாமதமாக செயல்படுவதை அந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தது.
அதேவேளையில், கங்கையைத் தூய்மைப்படுத்துவதில் அரசின் முன்னெடுப்புகள் குறித்து பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற ஆய்வுக் குழு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இதற்கு பதிலளித்த அரசு, கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் ஐந்து அடுக்கு நுட்பமுறைகள் தயாரிக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளித்தது. இந்த நுட்பமுறைகளில் தேசிய கங்கை கவுன்சில் மிகவும் முக்கியத்துவம் வாயந்தது. ஆனால், கங்கையைத் தூய்மைப்படுத்துவதில் அக்கறை காட்டாத மோடி அரசின் மீது சி.ஏ.ஜி. மற்றும் நாடாளுமன்றக் குழு எழுப்பிய கேள்விகள் குறித்து விவாதிக்க ஒரு கூட்டம்கூடக் கூட்டப்படவில்லை என்பதே உண்மை.
நகரமயமாதல், தொழில்மயமாதல் மற்றும் மக்கள்தொகை பெருக்கத்தால் பல ஆண்டுகளாக கங்கை நதி மாசுபட்டு வருவது கடுமையாக அதிகரித்தவண்ணம் இருப்பதாக ஆய்வுக் குழு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்தது. வேளாண் நீர்ப்பாசனம், தொழிற்சாலைப் பயன்பாடுகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட காரணங்களுக்காக கங்கை நதியின் நீரோட்டமும் தடைபடுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், “கங்கையின் மைய நீராட்டத்தில் மட்டுமின்றி, 11 மாநிலங்களில் பாயும் ஒட்டுமொத்த கங்கை ஆற்றுப் படுகையிலும் கழிவுநீர் சுத்திகரிப்புத் திறன் மிகப் பெரிய அளவில் பற்றாக்குறையாகவே இருக்கிறது. கங்கையின் மைய நீரோட்டத்தை எடுத்துக்கொண்டால், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நாளொன்றுக்கு 7,301 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீர் உற்பத்தியாகிறது. ஆனால், அவற்றில் நாளொன்றுக்கு 2,126 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை மட்டுமே சுத்திகரிக்கும் வசதி உள்ளது” என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
நாளொன்றுக்கு 1,188 மில்லியன் லிட்டர்கள் கழிவு நீரைச் சுத்திகரிக்கக்கூடிய சுத்திகரிப்பு ஆலை ஒன்றினை உருவாக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் ஆய்வுக் குழு கூறியுள்ளது. அதன்படி பார்த்தால், அந்த ஆலை அமைக்கப்பட்ட பின்னரும் கூட தினமும் 3,987 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரைச் சுத்திகரிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என்பது தெளிவு.
இது தவிர, ஏழு ஐ.ஐ.டி.கள் இணைந்து தயாரித்த கங்கை ஆற்றுப் படுகை மேலாண்மைத் திட்டத்தில், 11 மாநிலங்களில் தினமும் 12,051 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீர் உருவாக்கப்படுவதாகவும், அவற்றில் தினமும் 5,717 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளதையும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தினமும் எஞ்சிய 6,334 மில்லியன் லிட்டர்கள் அளவிலான கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமலயே கங்கை நதியிலோ அல்லது இதர நீர் ஆதாரங்களிலோ கலக்கப்படுவது தெரியவருகிறது.
இது தொடர்பாக விவரிக்கும் நாடாளுமன்றக் குழு, “உலகிலேயே அதிகம் மாசுபடும் பத்து நதிகளில் கங்கையும் ஒன்றாகிவிட்டது மிகுந்த கவலைக்குரிய விஷயம். நகரமயமாதலில் சரியான நெறிமுறைகளைப் பின்பற்றாதது, அபாயகரமான அளவில் கழிவுகள் உற்பத்தியாவது, நதியில் வீட்டுக் கழிவுகள் கலப்பது போன்ற காரணிகளால் கங்கையின் தூய்மை பாதிக்கப்பட்டு மிக மோசமான அளவில் இழப்புகளை ஏற்படுத்துகிறது. பன்முக அமைப்புகளுக்கும், மத்திய, மாநில அளவிலான நிர்வாகிகளுக்கும் இடையில் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில், கங்கை நதியைத் தூய்மைப்படுத்த விரிவானதும் அதிகாரம் மிக்கதுமான ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தப் பரிந்துரையைத் தொடர்ந்துதான், தேசிய கங்கை கவுன்சிலை அரசு உருவானது. ஆனால், இதுவரை அந்தக் குழு கூடாதது, அரசின் அக்கறை குறித்த கேள்வியை எழுப்புகிறது.
கலைக்கப்பட்ட தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையத்தில் உறுப்பினராக இருந்தவரும், சமூக ஆர்வலருமான தண்ணீர் மனிதர் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் கூறும்போது, கங்கையைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, இந்த பொய் பேசும் மோடி நாட்டு மக்களிடம் தன்னை அக்கறை மிகுந்தவராகக் காட்டிக்கொள்வதோடு சரிஎன்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கங்கை நதி இதயக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பல் மருத்துவரை வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓர் அணையைக் கட்டி, நதியின் ஓட்டத்தையே அரசு நிறுத்திவிட்டது. அரசு நினைத்த இடங்களில் காடுகள், கால்வாய் மற்றும் நீர்த்தடங்களை உருவாக்குகிறது. நான்கு புனிதத் தலங்களை இணைக்கும் ‘சார் தம்’ திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த இமயமலையும் துண்டிக்கப்பட்டு கங்கை நதி பாதிப்புக்குள்ளாகிறது. இதுதான் கங்கைக்குச் சமாதி கட்டும் வேலை. கங்கை ஒருபோதும் தூய்மைப்படுத்தப்பட மாட்டாது” என்றார்.
கங்கை நதியைப் பாதுகாப்பதற்காக, மே 2015இல் நமாமி கங்கை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அந்தத் திட்டத்தின்படி, கங்கையைத் தூய்மைப்படுத்த நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன. நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மாசுபாட்டில் இருந்து கழிவுகளை சுத்திகரிப்பது, ஆற்று மேற்பரப்புகளை தூய்மை செய்வது, ஊரக சுகாதாரம், கால்வாய் மேம்பாடு, காடு வளர்ப்பு, சுடுகாடுகள் அமைத்தல், மரம் வளர்ப்பு மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பு ஆகியவையும் இவற்றில் அடங்கும்.
இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ.24,672 கோடி மதிப்பில் மொத்தம் 254 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, நவம்பர் 30, 2018இல் ரூ.19,772 கோடி மதிப்பிலான 131 கழிவு சுத்திகரிப்பு திட்டங்களுக்கு (கங்கை நதிக்காக 105 மற்றும் கிளை நதிகளுக்காக 26) ஒப்புதல் வழங்கப்பட்டது. இவற்றில் 31 திட்டங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.
கால்வாய் மேம்பாடு, காடு வளர்ப்பு, சுடுகாடுகள் அமைத்தல், நதியின் மேற்பரப்பை தூய்மைப்படுத்துதல், மரம் வளர்ப்பு மற்றும் ஊரகத் தூய்மை முதலானவற்றுக்காக 123 திட்டங்களுக்கு எஞ்சிய ரூ.4,930 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டது.
மோடி தொடங்கிவைத்த கங்கை திட்டங்கள் தொடர்பாக முன்பே கூட சர்ச்சைகள் எழுந்தன. பிரதமருக்கு, மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.டி. அகர்வால் எழுதிய கடிதங்களில், கங்கையைத் தூய்மைப்படுத்தும் அரசு ஒப்புதல் அளித்துள்ள திட்டங்களால் கார்ப்பரேட் துறையினரும், தொழில்நிறுவனங்களும் மட்டுமே பலனடையும் என்று கூறியிருந்தார்.
112 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட அகர்வால் தான் இறப்பதற்கு முன்பு கங்கை நதி தொடர்பாக மோடிக்கு மூன்று கடிதங்கள் அனுப்பியிருந்தார். அவற்றுக்கு பதிலே வரவில்லை.
ராஜேந்திர சிங் கூறும்போது, “நாங்கள் தேசிய கங்கை ஆற்றுப் படுகை ஆணையத்தில் இருந்தபோது, எங்கள் குரல் எப்போதுமே மதிக்கப்பட்டது. ஏதாவது பிரச்சினை என்றால், அப்போதைய பிரதமர் அழைத்து எங்களிடம் பேசுவார். ஆனால், இப்போதைய பிரதமர் நிபுணர்களிடம் பேசுவதே தேவையற்றது என்று நினைக்கிறார். கங்கைக்காக நேர்மையாகப் பேசும் எவரிடமும் இப்போது யாருமே ஆலோசிப்பது இல்லை. கங்கையின் பெயரில் ஆயிரக்கணக்கான தொகை விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவையான வேலைகள் எதுவுமே நடக்கவில்லை” என்றார்.
முன்பு எப்போதையும் விட எந்தப் பகுதியிலும் கங்கை தூய்மையாக இல்லை என்றும், 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, பல பகுதிகள் மிக மோசமாக அசுத்தம் அடைந்துள்ளன என்றும் கடந்த ஆண்டு அக்டோபரில் ‘தி வயர்’ செய்தி வெளியிட்டிருந்தது. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக 2014ஆம் ஆண்டில் இருந்து ஜூன் 2018 வரையிலும் ரூ.5,523 கோடி வழங்கப்பட்டு, அதில் ரூ.3,867 கோடி செலவிடப்பட்டிருப்பது இங்கே கவனத்துக்குரியது.
இது தவிர, 2018 மழைக்காலத்திற்குப் பிறகு, கங்கை நதி பாயும் 39 இடங்களில் ஒரு பகுதி மட்டும் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ‘கங்கை நதி உயிரியல் நீர்த் தர மதிப்பீடு (2017-18)’ என்ற தலைப்பில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஓர் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அதில், மழைக்காலத்துக்கு முன்பு கங்கை நதி பாயும் 47 இடங்களில் 37 பகுதிகளின் தண்ணீர் மாசுபாடு நடுத்தர – கடுமையான அளவில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீரஜ் மிஸ்ரா
நன்றி: தி வயர்