2014ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்து வருவதாக கவலை இருந்தது, ஆனால் வலுவான எதிர்ப்புகள் காரணமாக அரசாங்கம் தனது முடிவுகளில் பின்வாங்கிய தருணங்களும் உள்ளன.
2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜனநாயக அமைப்புகள் வலுவிழந்துவருவது குறித்த கவலை அதிகரித்துவருகிறது.
2017ஆம் ஆண்டில், ஊடகங்களை அரசாங்கம் கட்டுப்படுத்தக்கூடும் என்ற பயத்திற்கு மத்தியில், உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா மூன்று இடங்கள் கீழே இறங்கி 136ஆவது இடத்திற்குச் சென்றது. ஜனவரி 2018இல், நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர் கூட்டம் நடத்தியபோது, நீதித்துறையின் சுதந்திரம் குறித்த எச்சரிக்கை மணி ஒலித்தது. சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் பதவியை உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்தது, ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் குறித்த சந்தேகங்களை எழுப்பியது. இந்திய அமைப்புகளைக் கவிழ்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளால், இந்தியாவின் ஜனநாயக இயந்திரங்கள் உருக்குலைவதாகத் தோன்றுகிறது.
இந்தச் சிக்கலான சூழலில், அரசாங்கம் தனது தீர்மானங்களில் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சூழல்களை நினைவுபடுத்திப் பார்க்கலாம். பொதுமக்களின் போராட்டங்கள், ஆக்கபூர்வமான ஊடகங்களின் பங்கேற்பு, நீதிமன்றங்களின் தலையீடு ஆகிய ஜனநாயக ரீதியான அழுத்தங்களின் காரணமாகவே இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன (இவற்றில் சில, ஒரு சில நாட்களில் நடந்தவை). இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து போரிட்டு, வெற்றியைம் காண்கின்றன.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத் திருத்தங்கள்
2014ஆம் ஆண்டின் மத்தியில், ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே, மோடி அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தில் ஒரு மாற்றத்தை முன்வைத்தது. நாட்டின் 200 ‘மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில்’ மட்டும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சொன்னது. தொழிலாளர் – பொருள் விகிதத்தை 60:40 என்ற அளவிலிருந்து 51:49 என்று குறைக்கலாம் என்ற பரிந்துரையை முன்வைத்தது.
இது இந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்கிறது என்பதை அறிந்து, அக்டோபர் 2014இல், 28 தலைசிறந்த பொருளாதார வல்லுனர்கள் மோடியைச் சந்தித்தனர், குறைந்துவரும் ஊழல், பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகளுக்கான ஆதரவு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் சொத்து ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, அரசாங்கம் முன்வைத்த திருத்தங்களை இவர்கள் எதிர்த்தனர்.
அரசாங்கம் தன் தவறான ஆலோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படாமல் அமைதியாகத் திரும்பப் பெறப்பட்டன.
வனவிலங்குகளுக்கான தேசிய வாரிய அமைப்பு
2014ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், ஒரே ஒரு அரசு சாரா அமைப்பையும் (குஜராத் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை), இரண்டு வல்லுனர்களையும் மட்டும் கொண்டு வனவிலங்குகளுக்கான தேசிய வாரியத்தை உருவாக்கியது மோடி அரசு. வனஉயிரிகள் பாதுகாப்புச் சட்டம், 1972இன்படி, ஐந்து அரசு சாரா அமைப்புகளும் பத்து நிபுணர்களும் நியமிக்கப்பட வேண்டும். மேலும், முதல் சந்திப்பிலேயே, இந்த குழு நிலுவையிலுள்ள 130க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அனுமதி அளித்தது.
இந்த நியமனத்தை ரத்து செய்யக் கோரி, பிரதமர் மோடிக்கு, 50க்கும் அதிகமான அமைப்புகளும் தனிநபர்களும் கடிதங்கள் எழுதினர். இது குறித்துச் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டத்தை நேரடியாக மீறியதற்காக அரசை விமர்சித்ததோடு, அந்தக் குழு மேலும் முடிவுகளை எடுக்கத் தடை விதித்தது. அதன் பிறகு, குறைந்த காலத்திலேயே, அந்தக் குழுவைச் சீரமைக்க அரசு முடிவு செய்தது.
நிலம் கொள்முதல், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் (LARR) சட்டத் திருத்தங்கள்
டிசம்பர் 2014இல், நிலம் கொள்முதல், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் (LARR) சட்டம், 2013-ஐத் திருத்துவதற்கான ஒரு அவசரச்சட்டத்தை அரசு வெளியிட்டது. அனுமதி பெறுதல், சமூக தாக்கத் மதிப்பீடு ஆகியவற்றிலிருந்து ஐந்து சிறப்பு பிரிவுகளுக்கு அந்தத் திருத்த மசோதா (LARR திருத்த மசோதா, 2015) விலக்கு அளித்திருந்தது.
இந்தத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போராட்டங்கள் (அண்ணா ஹசாரே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்), நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு ஆகியவை நடந்தன. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியினரான சிவசேனா, அகாலி தளம், ஸ்வாபிமானி பக்ஷா ஆகிய கட்சிகளும் இம்மசோதாவிற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மாநிலங்களவையின் ஒப்புதலுக்காகக் காத்திருந்த நிலையிலேயே மூன்று முறை இந்த அவசரச் சட்டம் திருத்தப்பட்டது. இறுதியாக ஆகஸ்ட் 2015இல், பிகார் தேர்தலுக்கு முன்பு, இச்சட்டம் கைவிடப்படுகிறது என்று மோடி அறிவித்தார்.
கால்நடைகள் விற்பனைக்குத் தடை
மே 2017இல், விலங்குகள் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், விலங்குச் சந்தைகளில் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்குக் கால்நடைகள் விற்பனையைத் தடை செய்வதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்தது. (கால்நடை வர்த்தகத்தைச் சீர் செய்யவும், கால்நடைத் திருட்டைத் தடுக்கவுமே இது கொண்டுவரப்பட்டதாகச் சொல்லப்பட்டது.)
இந்த தடுப்புச் சட்டத்திற்கு எதிரான அரசியல் எதிர்வினைகள் மிகவும் வலிமையாக இருந்தன. மேற்கு வங்கம், கேரளம், மேகாலயா போன்ற மாநிலங்களில், இந்தச் சட்டமானது அவர்களின் அதிகார எல்லைக்குள் நடக்கும் அத்துமீறல் என்று கருதப்பட்டது. கேரளத்திலும் கர்நாடகத்திலும், எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் ‘மாட்டிறைச்சித் திருவிழாக்கள்’ கொண்டாடப்பட்டன.
கால்நடை வர்த்தகப் பொருளாதாரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் இத்தடை, கருத்தியல் அடிப்படையில் போடப்பட்டதாகவும் கால்நடை வணிகப் பொருளாதாரத்துக்குத் தடையாக இருக்கும் என்றும் கருதப்பட்டது. பசுப் பாதுகாப்பு (கண்காணிப்பு) குழுவினருக்கு உதவுவதற்கான மறைமுக சமிக்ஞையாக இந்தத் தடை இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
ஜூலை 2017இல், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தத் தடைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதை நாடு முழுவதிற்கும் உச்ச நீதிமன்றம் விரிவுபடுத்தியது. மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில், 2018, ஏப்ரல் மாதத்தில் இத்தடையை நீக்கப் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.
நிதித் தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதா
ஆகஸ்ட் 2017இல், நிதித் தீர்மானம் மற்றும் வைப்புத்தொகை காப்புறுதி மசோதாவை (FRDI Bill) அரசு மக்களவையில் அறிமுகம் செய்தது. இந்த மசோதா வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் திவால் ஏற்படும் நிலைக்குத் தீர்வு காண்பதற்கான கட்டமைப்பை உருவாக்க முற்பட்டது. ஒரு வங்கியானது தோல்வி அடையும் அல்லது திவாலாகும் பட்சத்தில், வைப்புத் தொகையாளர்கள் அதன் சுமையில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் சர்ச்சைக்குரிய பிரிவும் இந்த மசோதாவில் இருந்தது.
எதிர்க்கட்சிகள் பலவற்றிடமிருந்து இம்மசோதா விமர்சனங்களை எதிர்கொண்டது (திருணமுல் காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கு வெளியே இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது). அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் இத்துறையைச் சேர்ந்த அஸ்ஸோசம் (Assocham) என்னும் அமைப்பும் எதிர்ப்பைத் தெரிவித்தன. சமூகவலைத்தளங்களில், #NoBailIn போன்ற ஹேஷ்டேகுகள் பிரபலமாகி, பொதுமக்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தன.
இந்த எதிர்ப்புகளை எதிர்கொள்ள அரசாங்கம் தீவிரமாக முயன்றும், வங்கிகளில் தங்கள் வைப்புத் தொகையின் பாதுகாப்பு தொடர்பான மக்களின் பயம் குறையவில்லை. எனவே, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து அரசாங்கம் இந்த மசோதாவைத் திரும்பப் பெற்றது.
பொது விநியோக அமைப்பில் பலனை நேரடியாக பட்டுவாடா செய்தல் (நாகரி, ஜார்கண்டில் தொடங்கப்பட்டது)
அக்டோபர் 2017இல், பொது விநியோக அமைப்பின் மூலம் வழங்கப்படும் பொருள்களுக்குப் பதிலாக அந்தப் பொருள்களின் மதிப்புக்குச் சமமான பணத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் போட்டுவிடுவது என்னும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஜார்கண்டிலுள்ள நாகரி என்னும் பகுதியில் இது அறிமுகம் செய்யப்பட்டது.
பிப்ரவரி 2108இல், நாகரியிலுள்ள 13 கிராமங்களில் உணவு உரிமைகள் இயக்கம் நடத்திய ஆய்வில், இந்தப் புதிய நடைமுறை மக்களுக்குப் பலனுள்ள விதத்தில் அமையவில்லை என்பது தெரியவந்தது. ஏறத்தாழ 97% மக்கள் பழைய முறைக்கு மாற வேண்டும் என்று விரும்பினர். இந்த ஆய்வின் முடிவுகளை அடுத்து, நாகரியிலிருந்து, ராஞ்சியிலுள்ள ஆளுனர் இருப்பிடம் வரை ரேஷன் பச்சாவோ மஞ்ச் என்னும் பொது வினியோக அமைப்பைக் காப்பதற்கான அமைப்பு (ஐந்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி) பாதயாத்திரை சென்றது.
இத்தகைய எதிர்ப்பினை அடுத்து, ஆகஸ்ட் 2018இல், இந்தப் பரிசோதனை திரும்பப் பெறப்பட்டது.
ECRக்கு ஆரஞ்சு அட்டை பாஸ்போர்ட்
2018இன் ஆரம்பத்தில், குடும்பம் மற்றும் இருப்பிடத் தகவல்களோடு ECR (Emigration Check Reguired – குடிபெயர்வுப் பரிசோதனை தேவை) தகவலும் அச்சடிக்கப்படும் பாஸ்போர்ட்டின் கடைசிப் பக்கத்தை அச்சடிக்க வேண்டாம் என்ற முடிவை அரசாங்கம் அறிவித்தது. ECR தகவல் இனி ஆரஞ்சு நிற அட்டை மூலம் தெரிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. இது, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் குறைந்தவர்களைத் தனித்துக் காட்டுவதாகத் தெரிந்தது.
புதிய சாதி அமைப்பொன்றை உருவாக்குவது போன்றது இது என்று காங்கிரஸ் சொன்னது. கேரள உயர் நீதிமன்றம், இதற்கு எதிரான பொதுநலன் வழக்கை விசாரித்தது. தனியுரிமை மற்றும் மரியாதைக்கான அடிப்படை உரிமை மீறலாக இதைக் கருதி, வெளியுறவுத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது. அரேபிய நாடுகளில் உள்ள பல செய்தித்தாள்களிலும் இது தொடர்பான கட்டுரைகள் வெளியாயின. எனவே, இரண்டு வாரங்களுக்குள், வெளியுறவுத் துறை பின்வாங்கியது.
சமூக வலைதளத் தொடர்பியல் அமைப்பு (Social Media Communication Hub)
2018, ஏப்ரல் மாதம் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், சமூக வலைதளங்களில் கிடைக்கும் தரவுகளைக் கண்காணிக்க ஒரு தொடர்பியல் அமைப்பை நிறுவக் கோரிக்கை வைத்தது. அது, குடிமக்களின் டிஜிட்டல் ப்ரொஃபைலை உருவாக்க 360 டிகிரி கண்காணிப்பு செய்யும் ஒரு “சமூக வலைதளத் தொடர்பியல் அமைப்பை” முன்வைத்தது. (இமெயில் ஆகியவற்றைக் “கவனிக்கும்” திறன் கொண்ட கருவியாக அது இருக்கும் என்று சொல்லப்பட்டது).
‘நாட்டிற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்’ நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் காணப்படும் குடிமக்களின் தகவல்களை அலசி ஆராய இது வகை செய்யும் என அரசாங்கம் நினைத்தது.
இந்தத் திட்டத்தைத் திருமபப் பெறக் கோரி அமைச்சகத்திற்கு சட்டபூர்வ அறிக்கையை இணைய சுதந்திர அறக்கட்டளை அனுப்பியது. திருணமுல் காங்கிரஸ் அமைச்சர் மொஹுவா மொய்த்ரா போட்ட பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மையமானது “அரசைக் கண்காணிக்கும் அமைப்பாக” ஆக்குவது போன்றது எனக் கூறியது. இதைத் தொடர்ந்து, திட்டம் பின்வாங்கப்பட்டது.
போலிச் செய்திகள் தொடர்பான வழிகாட்டுதல்கள்
ஏப்ரல் 2018இல், போலிச் செய்திகளை சமாளிப்பதற்காக, பத்திரிக்கையாளர்களை அங்கீகரிக்கும் வழிகாட்டு நெறிகளை மாற்றியமைத்ததாகத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதன்படி, எந்தப் பத்திரிக்கையாளருக்கு எதிராகப் போலிச் செய்தி தொடர்பான வழக்கு பதியப்படுகிறதோ, அவருடைய அங்கீகாரம் வழக்கு விசாரிக்கப்படும் வரை ரத்து செய்யப்படும்.
ஊடக சுதந்திரத்தில் அத்துமீறல், “போலிச் செய்தி” ஆகியவற்றுகான தெளிவான வரையறை இல்லை, வழிகாட்டு நெறிகளில் இல்லை என்பது உள்படப் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் அரசியல் மற்றும் ஊடகங்களின் ஆவேசமான எதிர்ப்பைச் சந்தித்தது. இந்தச் சீற்றத்தால், வழிகாட்டு நெறிகள் வெளியான 24 மணி நேரத்திற்குள் பிரதமர் அலுவலகத்திலிருந்தே அவை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டன.
இணைய வழி நீட் தேர்வு
ஜூலை 2018இல், மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், நீட் தேர்வினை ஆன்லைன் மூலமாக, ஆண்டுக்கு இருமுறை நடத்தப்போவதாகத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு தமிழக அரசின் விமர்சனத்தை எதிர்கொண்டது. திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கணினிகள் இல்லாத கிராமப்புறக் குழந்தைகளுக்கு மருத்துவக் கல்வி கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.
சுகாதாரத் துறையும், தங்களுடன் “முறையான கலந்துரையாடல்” இல்லாமல் இத்திட்டத்தை வெளியிட்டது குறித்தும், இது மாணவர்களுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கக்கூடும் என்பது குறித்தும் தன் கவலையைக் குறிப்பிட்டு மனித வளத்துறைக்குக் கடிதம் அனுப்பியது. இரண்டு அமைச்சகங்களும் கலந்து பேசிய பிறகு, மனிதவளத் துறை வழக்கமான முறையில் பரீட்சை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டது, குறைந்தபட்சம் 2019ஆம் ஆண்டிற்கு மட்டுமாவது.
பொதுமக்கள் அணிதிரண்டது, அரசியல் கட்சிகளின் மீது கொடுக்கப்பட்ட அழுத்தம், ஊடகம், நீதித்துறை ஆகியவற்றின் மூலம் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக ஏற்பட்ட பின்னடைவுகளின் ஒரு பகுதி மட்டுமே இது.
பல பிரச்சினைகளுக்கு மத்தியில், போராட்டங்கள் சில உறுதியான முடிவுகளைப் பெற்றன, பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டின் சிறந்த உதாரணம், ஆதார் அட்டை முடிவு. உச்ச நீதிமன்றம் ஆதார் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதுதான் என்று உறுதிசெய்தாலும், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கேட்க அனுமதிக்கும் பிரிவு 57ஐ ரத்துசெய்தது.
மற்றொரு விஷயம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் முன்வைக்கப்பட்ட மாற்றங்கள். போராட்டம் காரணமாக அரசாங்கம் அம்மோசாதாவை அறிமுகப்படுத்தவே இல்லை.
இந்த இணைப்பில் (https://www.scribd.com/document/401510805/Modi-Government-Pushbacks-pdf#from_embed) காணப்படும் ஆவணத்தில் இம்மாதிரியான வழக்குகள் தொடர்பான மேலதிகமான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன, ஆனால், அவையும் முழுமையாக இல்லை. கொள்கை சார்ந்த கேள்விக்குரிய நடவடிக்கைகள் அனைத்துமே கிட்டத்தட்ட எதிர்க்கப்பட்டன. இருப்பினும், பணமதிப்பிழப்பு போன்ற சில கொள்கைகளை அரசு நடைமுறைப்படுத்தவும் செய்தது.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான வெளிப்பட்ட இந்திய ஜனநாயக அமைப்புகளின் மொத்தமான ஆற்றல், ஆக்கபூர்வமான சமூக மாற்றங்களைக் கொண்டுவரப் பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்திற்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தற்போது அது ஈடுபட்ட வேண்டியிருப்பது துரதிருஷ்டவசமானது.
மேக்னா யாதவ்
நன்றி: தி வயர் (https://thewire.in/government/modi-government-pushback-democratic-institutions?fbclid=IwAR0UhtvXFsFXYx8R3n0aj8a9SRbqpCDK0445K3HpSlrg_UB9orUA7iQgJKU)
தமிழில்: ஆஸிஃபா