முதலில் கேள்விகளை எழுப்பக்கூடிய ‘மாபெரும் நடவடிக்கை’யை அறிவித்தல், பிறகு அதன் வெற்றிகள் குறித்து மிகைப்படுத்துதல், இந்த வெற்றி குறித்து கேள்வி கேட்பவர்களை இந்தியாவின் எதிரிகள் என முத்திரை குத்துதல் – இதுதான் மோடி அரசின் போர்த் தந்திரம்.
பாலகோட்டில் இந்தியா விமானத் தாக்குதல் நடத்தியவுடன் அரசுக்கு ஆதரவாக எழுந்த பொதுமக்களின் ஆதரவு அலை கவர்ந்திழுப்பதாகவே இருந்தது. பிரபலங்கள் இந்த நடவடிக்கையைப் போட்டி போட்டுக்கொண்டு பாராட்டினர். சமூக ஊடகம் வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைத்தது. பிரதமரின் உறுதியான நடவடிக்கை என மீடியா புகழ்ந்தது. அனாமதேயத் தகவல்கள் மற்றும் ‘அறிவார்ந்த யூகங்களின்’ அடிப்படையில் மீடியாவில் மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகின.
பெரும்பாலான சேனல்கள் 250 முதல் 400 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பு கணிசமாக அழிக்கப்பட்டதாகவும் கூறின. ஒரு சில சேனல்கள் மவுலானா மசூத் அசாரின் சகோதரர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தன. தீவிரவாதத்திற்கு எதிரான சரியான பதிலடி என இது பரவலாகக் கருதப்பட்டது. இந்த நடவடிக்கையைக் கேள்வி எழுப்பிய ஒரு சிலர் மவுனமாக்கப்பட்டனர். அவர்கள் தெரிவித்த கவலைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. இவை அனைத்துமே பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஆரம்ப நாட்களைத் தான் நினைவுபடுத்தின.
டெபாசிட் செய்யப்படாத லட்சக்கணக்கான கோடி ரூபாய், அரசுக் கருவூலத்திற்குத் திரும்பும் என அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர்களும், செய்தித் தொடர்பாளர்களும் மக்களை நம்ப வைக்க முயன்றனர். புதிய ரூபாய் நோட்டில் ‘நமோ சிப்’ இருக்கிறது என்பது போன்ற விசித்திரமான தகவல்களை வெளியிடுவதில், செய்தித் தொகுப்பாளர்கள் வாட்ஸ் அப் வதந்திகளோடு போட்டியிட்டனர். பிரதமரின் ‘அபாரமான நடவடிக்கை’யால் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டுவிடும் என மீடியா அறிவித்தது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஆரம்ப கட்ட எதிர்வினையை இப்போது துல்லியமாக நினைவுபடுத்திக்கொள்வது கடினமானது. அப்போது நிலவிய மிதமிஞ்சிய மனநிலையின் தன்மையைச் சுட்டிக்காட்ட வேண்டுமெனில், இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை இந்திய அரசியல் வரலாற்றில் மிகச் சிறந்த நடவடிக்கை எனப் பாராட்டினார்.
அவர் மட்டும் அல்ல. திரைத் துறையைச் சேர்ந்த ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அனுஷ்கா ஷர்மா, ரிஷி கபூர், அனுராக் காஷ்யப், அஜய் தேவ்கன் மற்றும் பல நட்சத்திரங்கள் ட்விட்டரில் இதை ‘ஊழலுக்கு எதிரான அபாரமான நடவடிக்கை’ எனப் புகழ்ந்தனர். இப்போது ‘தீவிரவாதத்திற்கு எதிராக’ நடக்கும் நம்முடைய போரில் பயன்படுத்தப்படும் ‘மாபெரும் திருப்பு முனை’, ‘மாபெரும் மாற்றம்’ போன்ற வார்த்தைகள் அப்போது நம்முடைய ‘ஊழலுக்கு எதிரான’ போரின்போதும் பயன்படுத்தப்பட்டன.
ஒரே அதிரடி நடவடிக்கையில், எதற்கும் வளைந்து கொடுக்கும் மீடியா உதவியுடன், தனது பிரசங்கத்தின் மூலமாக மொத்தமாக தேசத்தின் கவனத்தை ஈர்த்துவிட்டார் மோடி. இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நேரம், உத்தரப் பிரதேசத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தற்செயலானதாக இருக்க முடியாது. அந்தத் தேர்தலில் ஊழல் மையப் பொருளானது. பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்தது.
பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இன்றைய நிலையில், பிரதமர் அதைவிட அதிகப் பொறுப்பற்ற சாகச நடவடிக்கையில் (இரு நாடுகளும் அணுசக்தி கொண்டவை) ஈடுபட்டிருக்கிறார். இதன் விளைவுகள் பற்றி எந்த கவலையும் இல்லாமல், குறுகிய கால அரசியல் நலனை அறுவடை செய்ய அது மீண்டும் தயாராகியிருக்கிறது. பணமதிப்பு நடவடிக்கைக்கான திரைக்கதை போலவே இதுவும் அரங்கேறியிருப்பதில் எந்த வியப்பும் இல்லை. அதிரடி நடவடிக்கையை அறிவிப்பது, அதை மாபெரும் வெற்றி என அறிவித்துக்கொள்வது, அதன் பிறகு முக்கியமாக, இதை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களை தேசத்திற்கு எதிரானவர்களாக முத்திரை குத்தித் தாக்குவது என்பதாகவே இந்த உத்தி அமைந்துள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஊழலைக் கட்டுப்படுத்தப் பயன்பட்டதா என்பதை அறிய முடியாமல் இருந்தது போல, வான் தாக்குதல்கள் தீவிரவாதத்தை ஒழிப்பதில் பலன் அளித்தனவா என்பதை அறிய முடியாமல் இருக்கிறது. பதில் தெளிவாகத் தெரிவதற்கு முன், ஏற்கனவே தேர்தல் ஆதாயத்தை அடைந்துவிட்டதாக மோடி நம்புகிறார்.
இப்போது பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றிய தீர்ப்பு தெரிந்துவிட்டது. பொறுப்பான பொருளாதார வல்லுனர்கள் பலரும் கணித்தது போல அது எல்லா விதங்களிலும் பெருந்தவறாக அமைந்துவிட்டது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர், வருமானம் குறைந்தது. ஆனால், பணபதிப்பு நீக்கம் என்னும் நடவடிக்கையை ஆதரித்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், வல்லுனர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு இந்தத் தோல்விகளால் எந்த பாதிப்பும் இல்லை.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை போலவே, பாலகோட் தாக்குதல் பற்றியும் எந்த ஆதாரமும் இல்லாமல், வெற்றிக் கருத்துகளும் மிகையான உணர்ச்சிகளும் வெளியிடப்பட்டன. தீவிரவாத முகாமை தாக்கி பெரும் சேதம் விளைவித்தாக அரசு கூறுவதை சர்வதேசச் செய்திகள், செயற்கைக்கோள் படங்கள்ஆகியவை கேள்விக்குள்ளாக்குகின்றன. பாஜக தலைவர் உள்ளிட்ட பலரும் 250 முதல் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவலை உலவவிட்டார்கள். அது ஆதாரமற்ற தகவலாகவே தோன்றுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, லட்சக்கணக்கான கோடி ரூபாய் மீட்கப்பட்டுவிடும் என்று சொன்னதைப் போலவே இதுவும் அமைந்திருக்கிறது.
உள்ளூர் மீடியா உற்சாகத்தில் திளைத்தாலும், சர்வதேச மீடியா, மக்கள் தொடர்புப் போரில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றுவிட்டதாகக் கூறியதுதான் இதில் மிகவும் மோசமான விளைவு. பிடிபட்ட இந்திய விமானி திரும்பி ஒப்படைக்கப்பட்டது இந்தியாவுக்கு ‘அவமானமான சம்பவம்’ என நியூயார்க் டைம்ஸ் எழுதியது. மற்றொரு கட்டுரையில், வான் வழி மோதலில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றதாக குறிப்பிட்டு, இது ராணுவம் தயார் நிலை அற்றிருந்ததை உணர்த்துவதாக அதே நாளிதழ் எழுதியது.
ஊழலுக்கு எதிரான போர் என்பது உண்மையில் ஊழலுக்கு எதிரானது அல்ல என்பதை நினைவில் கொள்வது நல்லது. ஆளுங்கட்சி ஊழலுக்கு எதிராகப் புனிதப் போரை நிகழ்த்துகிறது; எதிர்க்கட்சிகள், ஊழலுக்கு ஆதரவாக நிற்கின்றன என்னும் இருமை கட்டமைக்கப்பட்டது. “பணமதிப்பு நடவடிக்கையை எதிர்ப்பவர்கள் அரசு தயார் நிலையில் இல்லை என்பதற்காக எதிர்க்கவில்லை. மாறாக தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசு உரிய காலத்தைக் கொடுக்கவில்லை என்பதே அவர்களது பிரச்சனை” என்று பிரதமர் அப்போது கூறினார்.
அதுபோலவே, தீவிரவாதத்திற்கு எதிராக மோடி துவக்கியுள்ள போரின் பிரதான நோக்கம், ஆட்சியின் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்தி, அவர்களை தேச விரோதிகளாகச் சித்தரிப்பது தான். தாக்குதலை எதிர்க்கட்சியிலிருந்து யாரும் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே பிரதமர், எதிர்க்கட்சிகள் மீது முன்கூட்டியே தாக்குதலைத் துவக்கிவிட்டார். “சோகம் என்னவெனில், மோடி வெறுப்பால் உந்தப்படும் சில அரசியல் கட்சிகள், இப்போது இந்தியாவை வெறுக்கத் துவங்கிவிட்டன. மொத்த தேசமும் நம்முடைய ராணுவத்தை ஆதரிக்கும்போது, ஒரு சில கட்சிகள் சந்தேகிக்கின்றன. இவர்களுடைய கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு உதவுகின்றன. இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன” என்று பிடிபட்ட இந்திய விமானி திரும்புவதற்குள் மோடி எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுத்தார்.
பிரதமர் இப்படி முந்திக்கொண்டு எதிர்க்கட்சிகளைத் தாக்குவதைப் பார்க்கும்போது துவக்கத்திலிருந்தே இதுதான் அவருடைய திட்டம் எனத் தோன்றுகிறது. விமானத் தாக்குதல் வெற்றி தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட கருத்துகள் அரசால் வெளியிடப்பட்டன. இவை யாவும் எதிர்க்கட்சிகள் இந்த வெற்றிக் குறித்து கேள்வி கேட்க வைப்பதற்கான தூண்டுதலாகவே திட்டமிடப்பட்டிருந்தது. அப்படிக் கேள்வி கேட்கும்போது ராணுவத்தின் புனிதத்தன்மைக்குப் பின் ஒளிந்துகொண்டு, எதிர்க்கட்சிகளை தேச விரோதிகளாகச் சித்தரிக்கலாம் என்பதுதான் அரசின் திட்டம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது கடைப்பிடிக்கப்பட்ட அதே உத்திதான் இது. புள்ளிவிவரங்கள் முக்கியமல்ல என்பது மட்டுமல்ல, புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டுவதுகூட தேச விரோதம்தான். நீங்கள் இந்தக் கதையாடலின் எந்தப் பக்கம் இருக்கிறீர்கள் என்பதே முக்கியம். வான் தாக்குதலைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவில்லை எனில், நீங்கள் தேச விரோதி; எப்படி நீங்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரிக்கவில்லை எனில் ஊழல்வாதியோ அப்படித்தான் இதுவும்.
வான் தாக்குதலின் விளைவு குறித்து, அவை பாகிஸ்தானின் போக்கை மாற்றியதா அல்லது இந்தியாவில் தீவிரவாத சம்பவங்களைக் குறைத்ததா என்பது குறித்து, காலப்போக்கில் வல்லுனர்கள் தீர்மானிப்பார்கள். பாலகோட்டிற்கு முன்னோடியான யூரி சர்ஜிகல் தாக்குல், அதீத தேசபக்த உணர்வைத் தூண்டும் பாலிவுட் படத்திற்கு வித்திட்டது தவிர வேறு எந்த நீண்ட காலப் பலனையும் அளிக்கவில்லை என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் எல்லைக்குள் நிகழ்த்தப்பட்ட ஒற்றைத் தாக்குதல் – அதற்கு பாகிஸ்தானால் உடனடியாகப் பதிலடி கொடுக்கப்பட்டது – பாகிஸ்தானின் வியூகக் கணக்குகளை மாற்றப் போதுமானதுன்னும் கதையாடல் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டது. உயர் மதிப்புப் பண நோட்டுகளை ஒழிப்பது கறுப்புப் பணத்தை ஒழித்துவிடும் என்பதுபோலத்தான் இதுவும். ஆனால் எளிமையான கதையாடல்கள்தான் மிகவும் வசீகரமானவை. நாம் மீண்டும் இதற்கு மயங்குவோமா எனப் பார்க்க வேண்டும்.
அசிம் அலி
அசிம் அலி தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான ஆய்வாளர்.
நன்றி தி வயர்
https://thewire.in/politics/balakot-airstrikes-are-a-replay-of-modis-notebandi-strategy
Fieberthermometer Test https://fieberthermometer-test.info – More info>>>
We always believe you because you usually give the news based on facts or evidence…. please share the pollachi news
Can you write the real fact about pollachi