1977 ஆம் ஆண்டு அவசரகால நிலை அமலபடுத்தப்பட்ட 21 கறுப்பு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்றது. அதன் பிறகு வருகிற 17ஆவது மக்களவைத் தேர்தல்தான் மிக முக்கியமான மக்களவைத் தேர்தலாகியுள்ளது. அப்போது, தேர்தல் செயல்பாடு என்பது சட்டத்திற்கு புறம்பான ஒற்றை அதிகாரமாக இருந்தவரிடமிருந்தும் அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்தும் தேசத்தின் அடிப்படை ஜனநாயகப் பண்புகள் மற்றும் அரசியல் சாசனத்தை, காப்பதற்கான வாக்குப் பதிவாக அமைந்தது.
அதே போன்றதான சோதனையான தேர்தல் காலம் தான் இதுவும். அரசியல் சாசன ரீதியிலான ஜனநாயகம் இப்போது பலவீனமாகியிருக்கிறது. அதோடு குடியரசின் மொத்த அடித்தளமும் சமரசத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
வாக்காளர்கள் முன்பு மீண்டும் அதே சவால் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு பாதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்று, நம்முடைய அரசியல் சாசனச் சிற்பிகள் தேர்வு செய்த பாதையை பின்பற்றுவது அல்லது புதிய பாதைக்கு விலகிச் செல்வது.
பாராளுமன்றம் மற்றும் அரசியல் சாசனத்தை பலவீனமாக்கும் முயற்சியை மேற்கொண்டார் என்பதற்காக 1977ல், வாக்காளர்கள் இந்திரா காந்திக்குப் பாடம் புகட்டினர். இந்த முறை, வாக்காளர்கள், புதிய குடியரசுக்கான ஆதரவு அளிக்கப்போகிறார்களா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். புதிய குடியரசு எப்படி இருக்கும் என்பதன் முன்னோட்டத்தை அவர்கள் 2014 மே மாதம் முதல் முடிவில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்?
இந்தியா வாக்களிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், 2015ல் எல்.கே அத்வானியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியை இப்போது நினைத்துப் பார்ப்பது பொறுத்தமானதாக இருக்கும். அவரிடம் அப்போது அவசரநிலை சட்டம் மீண்டும் இந்தியாவில் அமல்படுத்த வாய்ப்பிருக்கிறதா என்று கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், இத்தகைய ஒரு ஆட்சியை வெளிப்படையாக அமல் செய்ய இயலுமா எனக் கேட்டவர், “தற்போதைய நிலையில், அரசியல் சாசனம் மற்றும் சட்டப் பாதுகாப்புகளை மீறி, ஜனநாயகத்தை நசுக்கக்கூடிய சக்திகள் வலுவாக இருக்கின்றன, சிவில் சுதந்திரங்கள் மீண்டும் ரத்து செய்யப்படாது அல்லது அழிக்கப்படாது என உறுதி அளிக்கும் சூழல் இல்லை என நினைக்கிறேன்…” என்றும் கூறினார்.
அவசர நிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படவில்லை என்றாலும், குடியரசு மலர்ந்தபோதும், இப்போதும் பெரும்பான்மையினரால் கொண்டாடப்படும் விழுமியங்களும் கொள்கைகளும் கணிசமான அளவு மீறப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி புதிய திட்டங்களைத் துவக்கினார். அறிமுகம் செய்தார். அரசு விழாக்களை எல்லாம் முடித்துக்கொண்டார். பிறகே தேர்தல் கமிஷனால் மார்ச் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிகவும் தாமதமாகத் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டது. 2014லிருந்தே அரசியலமைப்பு பாழாக்கப்பட்டு வருகிறது என்பதற்கான அண்மைகால அறிகுறி இது.
மோடி அரசு பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பின், தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளின் நியாயம் குறித்து கேள்வி கேட்கப்படுவது இது முதல் முறை அல்ல. முந்தைய தருணங்களில் இமாச்சலப் பிரதேசம், குஜராத் தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட்டிருந்தன. ஆனால், கடந்த ஆண்டு இரு மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்த வேண்டிய நேரம் வந்தபோது குஜராத் தேர்தல் தனியே நடத்தப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் பாகுபாடில்லாத் தன்மை குறித்த கேள்வியை எழுப்பியது. ஆம் ஆத்மி உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கிலும் இவ்வாறு ஆனது.
சுயேச்சை அமைப்புகள் பாதிப்பு
தேர்தல்களில் பண பலத்தைப் பயன்படுத்துவது என்பது புதிய விஷயம் அல்ல. ஆனாலும் தேர்தல்களில் நிதிச் செல்வாக்கை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கண்மூடித்தனமான, பாகுபாடு கொண்ட கட்டுபாடுகள் தவறான பாதைக்கே கொண்டு செல்லும்.
இந்த அரசு அரசியலைப்பு சாசனத்தை எப்படி, எப்போதெல்லாம் தாக்கியிருக்கிறது என்பதற்கான மோடி அரசின் மீதான குற்றப்பத்திரிகை அல்ல இது. தேர்தல் பிரசாரத்தின்போதும், அதற்கு முன்னரும் எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய பணி இது. இருப்பினும், இந்த அமைப்புகளின் நடுநிலைத்தன்மையை பாதிப்பது, மாநில அரசுகளிடமிருந்து அமைப்புகளைப் பிரிப்பது ஆகியவை கவனத்திற்குரியதாகியிருப்பதை மறுக்க முடியாது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செயதியாளர்களைச் சந்தித்துப் பேசியது முன்னுதாரணம் அற்றதொரு நிகழ்வு. அந்தச் சந்திப்பிற்குப் பிறகு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்னமும் பதில் அளிக்கப்படவில்லை. 2018 ஜனவரியில் பிரச்சனைக்குரிய விஷயங்களை எழுப்பிய நீதிபதிகளில் ஒருவர்தான் தற்போதைய தலைமை நீதிபதி என்ற போதிலும், இப்போதும்கூடப் பொது உரையாடல்களில் உச்ச நீதிமன்றத்தின் சுயேச்சைத் தன்மை பலரால் சந்தேகிக்கப்படுகிறது.
மக்களவை சபாநாயகர், மாநிலங்களைத் தலைவர், சிபிஐ, இந்தியத் தலைமைக் கணக்காயர் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அமைப்புகள் / பதவிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் தொடர்பான விஷயங்களும் இதேபோலத்தான் இருக்கின்றன. பரவலாக இருக்கும் கட்டுப்பாட்டால் பாதிக்கப்படாமல் இருக்கும் அமைப்புகளைக் கண்டறிய வேண்டுமென்றால் ஒவ்வொரு அமைப்பாக ஆய்வு செய்தாக வேண்டும்.
1977க்குப் பிறகு 2019 தேர்தல் முக்கியம்
புல்வாமா தாக்குதல், பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்குப் பிறகான பிரதமரின் பேச்சுக்கள், அரசு மற்றும் நிர்வாகம் எந்த அளவுக்குத் தனிநபர் சார்ந்ததாக ஆக்கப்பட்டுள்ளன என்பதை உணர்த்துகின்றன. அண்மை உதாரணமாக, மோடி, விமான தாக்குதலுக்குப் பிறகு, மோடி தாக்கிவிட்டார் எனப் பாகிஸ்தான் புலம்புவதாகக் கூறினார். ஆனால், உண்மை என்னவெனில் பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் இத்தகைய குற்றச்சாட்டு எதையும் முன்வைக்கவில்லை.
1977 தேர்தலுக்குப் பிறகு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது ஏனெனில், வார்த்தைகளை அவற்றின் பொருளுக்காக அல்லாமல், அவை ஏற்படுத்தும் நாடகீயமான விளைவுகளுக்காகப் பயன்படுத்தும் ஒரு ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்கின்றனரா என்பதைப் பார்க்க வேண்டும். மக்களைக் கேள்விகள் கேட்காமல் இருக்கச்செய்வதற்காகப் புதிது புதிதாகக் கதையாடல்களை மாற்றிக்கொண்டே இருக்கும் போக்கை ஏற்றுக்கொள்கின்றனரா என்பதையும் பார்க்க வேண்டும். ஒரு கேள்வி எழுப்புவதற்குள், புதிய கவலைகளும் புதிய பிரச்சினைகளும் முளைத்துவிடுகின்றன. புதிய நம்பிக்கைகளும் உருவாகின்றன.
மக்கள் தங்களைச் சுற்றி வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் கிராமப்புறங்களில் நெருக்கடி அதிகரிப்பதையும் காண்கின்றனர். இருப்பினும், அவர்கள் கணிப்பு தவறு என உணர்த்தும் தரவுகள் முன்வைக்கப்படுகின்றன.
சராசரிக் குடிமகன் தன் சொந்தக் கணிப்பைச் சந்தேக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். யாரேனும் இந்த உத்திக்கு இரையாக மறுத்தால், அவர்களின் கருத்துரிமையும் வெளிப்பாட்டு உரிமையும் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.
எளிமையான கவுரமான வாழ்க்கையையும் சமூகப் பாதுகாப்பையும் கோருவது, கோபத்துடன் பார்க்கப்படுகிறது. ஏனெனில் தேசம் கற்பனையான ‘யாரிடமோ’ ‘அபாயத்துக்கு’ உள்ளாகி இருக்கிறது. குடிமைத்தன்மையின் அடிப்படையானதும் மையமானதுமான அம்சங்களையும் இந்தியத்தன்மையையும் மீண்டும் பெற விரும்புகின்றனரா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
மோடி எப்படி நாட்டுப்பற்றைத் தன் பாணி தேசியவாதத்துடன் இணைத்தார்?
கடந்த தேர்தலில் மோடி தனது பிரச்சாரத்தில் பெரிதும் வலியுறுத்திய ஊழல் என்னும் பிரச்சினை, இந்த ஆட்சியின் வாசலில் நீண்ட காலமாகத் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது. இருப்பினும், எல்லாக் குற்றச்சாட்டுகளும் வழக்கமான உத்தியால் நிராகரிக்கப்படுகின்றன. அதாவது பதில் குற்றச்சாட்டுகள். அதுவும் கடந்த காலங்களிலிருந்து தோண்டி எடுத்து வீசப்படுகின்றன. இந்த ஐந்து ஆண்டுகளில், எந்த மாநிலத்திலும் எந்த ஒரு எதிர்க்கட்சி ஆட்சி மீதும் எவ்விதமான முறைகேடுக்காகவும் ஒரு ஊழல் குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. மம்தா பானர்ஜியின் மீதான குற்றச்சாட்டுகூட, அவரது கடந்த கால நிதி முறைகேடுகள் தொடர்பானவை. மாறாக, இந்த அரசை உலுக்கி வருவது ரஃபேல் பிரச்சனை மட்டும் அல்ல.
சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் மதச்சார்பற்ற கொள்கையைப் புறந்தள்ளி இந்துத்வா கொள்கையை முன்வைத்தது ஒருபுறம் இருக்க, இந்த ஆட்சி தனது பாணியிலான தேசியவாதத்தை நாட்டுப்பற்றுடன் திட்டமிட்டுக் கலந்ததை அலட்சியம் செய்துவிட முடியாது.
இந்திரா காந்தியும் அடிக்கடி, தனது ஆட்சியையும் நாட்டையும் நிலைகுலைய வைக்க “அன்னிய சதி” நடப்பதாகப் பேசி பீதி சார்ந்த தேசியவாதத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால், இந்த ஆட்சி அதையும் கடந்து சென்றுள்ளது. இப்போது தேசத்தில் எது தவறாக நடந்தாலும் அதற்கு “இந்தியாவிற்குள் இருக்கும் சக்திகள்” காரணம் என மோடி கூறுகிறார். அரசு எங்கும் ஊடுருவும் தன்மை கொண்டதாக மாறியிருக்கும் நிலையில், தீவிரமான கண்காணிப்பு அமைப்பை உருவாக்கிக்கொண்டிருப்பது குறித்த அச்சம் அதிகரித்திருக்கும் நிலையில், மக்கள் தங்கள் ஒவ்வொரு அடியிலும் அச்சத்தை உணர்கின்றனர். இது போன்ற நேரங்களில் பலரும் தங்களுக்குள் எல்லாவற்றையும் போட்டு மூடிக்கொள்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, தங்கள் குரலை மீண்டும் கண்டடைய ஒரே வழி வாக்குச்சீட்டுதான். அவர்கள் வேதனை உண்மையானதா, இல்லையா என்பதைத் தேர்தல் முடிவு உணர்த்தும்.
மோடியிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இறுக்கமான சூழலுக்கு மத்தியில் அவர் புதிய ஆற்றலைக் கொண்டுவந்தார். மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கினார். மற்ற எந்த ஆட்சியையும்போலவே இந்த ஆட்சியிலும் ஓரளவு முன்னேற்றம் இருந்தாலும், மக்கள் சுவாசிக்கும் காற்று மிகவும் கனமாகியிருக்கிறது. மேலே குறிப்பிட்ட மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தவிர, சமூக ஊடகப் போராளிகளும் அரசின் மீடியா ஆதரவாளர்களும் இந்தியக் குடியரசை நிறுவியவர்களின் கனவுகளிலிருந்து இந்தியாவை வெகு தூரம் கொண்டுசென்றுவிட்டார்கள்.
பெட்ராண்ட் ரஸல் 81 வயது நிறைவானதை ஒட்டி, எப்படி மூப்படைவது என்னும் கட்டுரை எழுதினார். நிறைவான வாழ்க்கையின் மையம், ஒரு நதியைப் போல இன்னொன்றில் கரைந்துவிடும் தன்மை என்றார்:
“ஒரு மனிதனின் இருப்பு நதியைப் போல இருக்க வேண்டும். முதலில் குறுகலாக, கரைகளுக்கு உட்பட்டுத் துவங்கி, பாறைகள், அருவிகளைக் கடந்து ஓட வேண்டும். மெல்ல நதி பெரிதாகி, கரைகள் மறைந்து, தண்ணீர் அமைதியாகப் பாய்கிறது. இறுதியில் எந்தத் தடயமும் இல்லாமல், நதி கடலில் கலந்து, வலியில்லாமல் தன் தனித்த இருப்பை இழக்கிறது.”
ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகு, தன்னையே மையமாகக் கொண்ட இந்த அரசும் அதன் தலைவரும், ஆர்பரிக்கும் நீரோட்டமாக இருக்கிறார்கள். இந்த நீரோட்டம் எழுப்பும் ஒலியும் வேகமும் மிரட்சியை உண்டாக்குகின்றன. ஆனால், மலையிலிருந்து பாயும் நீரோட்டம்போல, இது பாய்ந்து வரும் பாதையெங்கும் கரைகள் அரிக்கப்பட்டுவிட்டன என்பது கவலை அளிக்கிறது. எதிர்காலத்தில் இவை பழுது பார்க்கப்படுமா இல்லையா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும்.
(கட்டுரையாளர், தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர், எழுத்தாளர். அவரது சமீபத்திய புத்தகங்கள்: ‘Sikhs: The Untold Agony of 1984’, ‘Narendra Modi: The Man, The Times’. இவரைத் தொடர்புகொள்ள: @NilanjanUdwin)
நன்றி: தி க்வின்ட்
https://www.thequint.com/voices/opinion/ecs-fairness-under-modis-rule-needs-to-be-questioned
Pls investigate pollachi matter and share the truth to us