நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச், இந்தியாவின் புல்வாமா – உடனடி கவனம் தேவைப்பட்ட அந்தப் பொழுதுகளில் முற்றிலும் மாறுபட்ட இரண்டு அணுகுமுறைகள்
தில்லி சிறப்பு நிருபர்
பட்டப்பகல் நேரத்தில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில் 40க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்படுகிறார்கள். பிரதமர் உடனடியாகத் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களோடு உரையாடுகிறார். வெறுப்பை வளர்க்கும் சக்திகளுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் அவர், அனைவரையும் அரவணைக்கிற திட்டவட்டமானதோர் ஒற்றுமைக் கருத்தைக் கூறுகிறார்.
ஈவிரக்கமற்ற முறையில் ரத்தம் சிந்த வைத்த வகையில் கிறிஸ்ட்சர்ச், புல்வாமா இரண்டும் பயங்கரவாதத்தால் ஒன்றுபடுகின்றன. சம்பவம் நடைபெற்ற பின்பு வந்த சில மணிநேரங்கள் மிக முக்கியமானதொரு தருணமாகக் கருதப்படும். அரசின் உடனடி கவனம் தேவைப்படுகிற அந்தத் தருணத்தில் இந்தியா, நியூஸிலாந்து நாடுகளின் உயர் பொறுப்பில் இருப்போரது எதிர்வினைகள் முற்றிலுமாக மாறுபட்டன..
கிஸ்ட்சர்ச் மசூதிகள் தாக்கப்பட்ட முதல் இரண்டு மணி நேரத்திற்குள் நியூஸிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன் தன் நாட்டு மக்களுடன் இரண்டு முறை பேசுகிறார். ஊடகவியலாளர்களைச் சந்தித்து அவர்களது கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்.
உலக நாடுகளது அரசாங்கங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் மிக இளையர்களில் ஒருவரான, 38 வயதாகும் பிரதமர் ஆர்டெர்ன், தாக்குதலில் உயிரிழந்த பலர் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்லது அகதிகளாக வந்தவர்கள் என்றாலும் அவர்களை “நம்மவர்கள்” என்றும், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை “நம்மவர்கள் அல்ல” என்றும் திட்டவட்டமாக அறிவித்தார். அவர் இவ்வாறு அறிவித்ததன் மையப் பொருள் என்னவெனில், தனது நாடு “பன்முகத் தன்மையை, பரிவுணர்வை, அடைக்கலமளிக்கும் பண்பை” பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதுதான்.
இதற்கு நேர்மாறாக, புல்வமாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்ததைத் தொடர்ந்து உடனடியாக இங்கே நிகழ்ந்தவை தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன. அந்த நேரத்தில் இந்தியப் பிரதமர் உத்தராகாண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை அரசாங்கம் தீவிரமாக மறுக்கிறது என்றாலும், அந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஏனென்றால் தனது பேச்சாற்றலை எல்லாம் தேர்தல் பிரச்சாரத்துக்கென ஒதுக்கி வைத்திருந்தவராயிற்றே நரேந்திர மோடி.
ட்விட்டர் பதிவு ஒன்றைத் தவிர மோடி நாட்டு மக்களுடனும் பேசவில்லை, ஊடகவியலாளர்களுடனும் பேசவில்லை. 2014ஆம் ஆண்டுத் தேர்தலின்போது தனது தகவல் தொடர்புத் திறமையால் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஆதாயமடைந்தவர் அவர். தனக்கு முன்பாகப் பிரதமர் பதவியில் இருந்தவரை “மௌனமோகன் சிங்” என்று கிண்டலடித்துப் பேசத் தயங்காதவர். ஆனால், புல்வாமா தாக்குதல் தொடர்பாக நாட்டின் தலைவர் என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்தத் தருணத்தில் அந்த மேடை காலியாகவே இருந்தது.
2008ம் ஆண்டில் மும்பை நகரைப் பயங்கரவாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து, அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார், அமைதி காக்க வேண்டிக்கொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.
புல்வாமா படுகொலைக்குப் பிறகு நாட்டின் சில பகுதிகளில் காஷ்மீரிகள் தாக்கப்பட்டார்கள். அது பற்றிப் பேசுவதற்கு ஒருவார காலம் காத்திருந்தார் மோடி. அதன் பின்தான், “நமது போராட்டம் காஷ்மீருக்காகத்தானே அன்றி, காஷ்மீருக்கோ காஷ்மீரிகளுக்கோ எதிராக அல்ல,” என்று கூறினார்.
நியூஸிலாந்தில், நாட்டு மக்களுக்கு நம்பிக்கைக் கரம் நீட்டுகிற – குறிப்பாகச் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிற – உடனடிப் பணியில் முனைப்புடன் ஈடுபட்டார் ஆர்டெர்ன். “நமது பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் மிகப் பொருத்தமான முறையில் எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றன என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நமது எல்லைகளையும் உள்ளடக்கியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார் அவர்.
இரண்டு பிரதமர்களின் அணுகுமுறைகளில் உள்ள வேறுபாடுகளை இந்தியர்கள் சிலர் கவனிக்கத் தவறவில்லை. குறிப்பாக, மோடியை விமர்சிப்பவர்கள் அதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டார்கள் என்பதில் வியப்பில்லை.
“பிரதமர் ஜசிண்டா ஆர்டெர்ன் நியூஸிலாந்து மசூதிகள் தாக்கப்பட்டது தொடர்பாக. தாக்கப்பட்டவர்கள் (புலம்பெயர்ந்தோர் / அகதிகள்) பற்றி: ‘அவர்கள் நம்மவர்கள்’. தாக்கியவர்கள் பற்றி: ‘அவர்களுக்கு நியூஸிலாந்தில் இடமில்லை’. ஆக அவர் மோடியைப் போன்றவரல்ல,” என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சல்மான் சோஸ் தனது ட்விட்டர் தளத்தில் பதிவு செய்தார்.
ஆர்டெர்ன் தனது உரையில், “இந்தத் துப்பாக்கிச் சூட்டில் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பலர் நியூஸிலாந்துக்குப் புலம்பெயர்ந்து வந்தவர்களாக இருக்கலாம். அகதிகளாக வந்தவர்களாகவும் இருக்கலாம். நியூஸிலாந்தைத் தங்களது இல்லமாக அமைத்துக்கொள்ள முடிவு செய்து வந்தவர்கள் அவர்கள். இது அவர்களது இல்லம்தான்,” என்று கூறியிருந்தார்.
“அவர்கள் நம்மவர்கள். நமக்கு எதிராக இந்த வன்முறையை நிகழ்த்திய நபர் நம்மவர் அல்ல. அந்த நபர்களுக்கு நியூஸிலாந்தில் இடமில்லை. உச்சமான, முன்னெப்போதும் காணாத வன்முறைச் செயல்களுக்கு நியூஸிலாந்தில் இடமில்லை. அப்படிப்பட்ட ஒரு செயல்தான் இது என்பது தெளிவு.” என்றும் அவர் கூறியிருந்தார். அதைத்தான் சல்மான் சோஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
சில ஒப்பீடுகள் கருணையற்றவைதான். இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எந்தவொரு தடயமும் அதனைக் கண்டுபிடித்துப் பின்தொடர முடியாத அளவுக்கு முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை. நியூஸிலாந்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியப் பிரதமர் தாமதமாகவே கண்டனம் தெரிவித்தார். இது அப்பட்டமாக அனைவருக்கும் தெரிய வந்தது. சமூக ஊடகங்களில் செயல்படுகிற சிலரும் இதனை சுட்டிக்காட்டி விமர்சித்தனர். அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் வலதுசாரித் தீவிரவாதிகள் என்பதால்தான் இந்தத் தாமதமா என்றும் அவர்கள் கேட்டனர்.
வெள்ளியன்று (மார்ச் 15) ஆர்டெர்னுக்குக் கடிதம் அனுப்பிய மோடி அந்தத் தாக்குதல்கள் தொடர்பாகத் தனது துயரங்களைப் பகிர்ந்துகொண்டார். அன்று மாலை 7 மணியளவில்தான் அவருடைய கடிதம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அதாவது, தாக்குதல் நடந்த 12 மணிநேரம் கழித்து. அந்த வன்முறை குறித்து அவர் இவ்வளவு நீண்ட நேரம் மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் வலம் வந்த பிறகு.
பயங்கரவாதிகளின் தாக்குதல் நடக்கிறபோதெல்லாம் உடனடியாகக் கண்டனத்தைப் பதிவு செய்கிறவர் என்ற பெருமை மோடிக்கு உண்டு.
மோடி அனுப்பிய கடிதம், இந்தச் சிக்கலான தருணத்தில் நியூஸிலாந்துடன் ஒருமைப்பாடு தெரிவித்தது. அனைத்து வடிவங்களிலும் வருகிற பயங்கரவாதத்திற்கும், இத்தகைய வன்முறையை ஆதரிப்போருக்கும் இந்தியாவின் வலுவான கண்டனத்தை அக்கடிதம் வலியுறுத்திச் சொன்னது.
“பன்முகத் தன்மை வாய்ந்த, ஜனநாயகச் சமுதாயங்களில் வெறுப்புக்கும் வன்முறைக்கும் இடமில்லை என்று அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்,” என, மோடியின் கடிதம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தி டெலிகிராப்
தமிழில்: அ. குமரேசன்