எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானி மோசடி செய்துள்ளதை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) கண்டுபிடித்துள்ளார்
எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்துள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை உடனடியாக மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்ம்ருதி இரானி எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் மோசடி செய்துள்ளார். அந்த நிதியிலிருந்து 5.93 கோடியை பாஜக தலைவர்களால் நடத்தப்படும் கூட்டுறவுச் சங்கத்திற்குப் பணமாகச் செலுத்தியுள்ளதை மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) கண்டுபிடித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, சக்திசிங் கோஹில் ஆகியோர் வெளியிட்டுள்ள ஒரு கூட்டறிக்கையில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இரானியின் மீது நடவடிக்கை எடுத்து அவரை அமைச்சரவையிலிருந்து உடனே நீக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.பி. என்ற வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஸ்ம்ருதி இரானி துஷ்பிரயோகம் செய்து பெருமளவில் மோசடி செய்துள்ளதை CAG அறிக்கை (அறிக்கை எண்: 04/2018) அம்பலப்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
ட்விட்டரில் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா:
ஸ்ம்ருதி இரானியின் பெருமளவிலான மோசடிச் செயல்கள் அம்பலமாகியுள்ளன.
எம்.பி.க்களுக்கான உள்ளூர் மேம்பாட்டு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை டெண்டர் ஏதுமின்றி ரூ.5.93 கோடிகளை செலவழித்ததுடன் ஏமாற்று வழியில் ரூ.84.93 லட்சம் தரப்பட்டுள்ளதை சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ம்ருதி இரானியை அமைச்சரவையிலிருந்து நீக்கும் தைரியம் மோடிக்கு உண்டா?
தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கான பணி ஒன்றுக்காக டெண்டர் எதுவும் வழங்காமல் தொகுதி மேம்பாட்டின் கீழ் ஒதுக்கப்பட்ட எம்பி நிதியிலிருந்து ஸ்ம்ருதி இரானி ரூ.5.93 கோடி செலவழித்துள்ளார். இது மட்டுமல்லாமல் மற்ருமொரு மோசடியையும் செய்துள்ளார்.
குஜராத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரானி எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவழிக்க ஆனந்த் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைத் தத்தெடுத்திருந்தார்.
எம்.பி.க்களின் மேம்பாட்டு நிதி தொடர்பான திட்டங்கள் ஆரம்ப காலத்தில் குஜராத் மாநில கிராம வளர்ச்சி கூட்டுறவுச் சங்கத்தின் (GSRDCL) மூலமாக மேற்கொள்ளப்பட்டுவந்தன. பொதுவாக எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை மாவட்ட அதிகாரிகள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் , கூட்டுறவுச் சங்கத்துடன் வேலைக்கான ஒப்பந்தம் முடிந்ததும் இரானி இப்பணிகளை கேடாவிலுள்ள சாரதா மஸ்தூர் காம்தார் சாகாரி மண்டலியிடம் ஒப்படைத்தார். இது நெறிமுறைகளை மீறிய செயலாகும்.
ஏனெனில் எம்பிக்களே திட்டத்தை அமலாக்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்தால் ஊழல் அங்கிருந்தே தொடங்கிவிடும் வாய்ப்புள்ளதால் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கக் கூடாதென்று தடைசெய்யப்பட்டுள்ளது.
இதற்கென உருவாக்கப்பட்டுள்ள எவ்விதமான நடைமுறைகளையும் பின்பற்றாமல் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் பரிந்துரைத்த ஒரே காரணத்தால் சாரதா மஸ்தூர் மண்டலி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்நிறுவனம் செய்துமுடித்த பணிகளில் எம்.பி.க்களின் உள்ளூர் மேம்பாட்டு நிதிக்கான தொகைகள் பெருமளவில் சீரற்று செலவாகி உள்ளதை CAG கண்டுபிடித்துள்ளார். பஞ்சாயத்துக் கட்டிடத்தைச் சீரமைக்க 2016-ஆம் ஆண்டில் ரூ.45.20 லட்சம் செலவானதாக சாரதா மஸ்தூர் காம்தார் மண்டலி கணக்குக் காட்டியுள்ளது. கொடுமை என்னவென்றால் அதே கட்டிடச் சீரமைப்புக்கு முந்தைய ஆண்டுதான் பணம் ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்திருந்தது.
சுற்றியுள்ள ஒன்பது கிராமங்களில் கல்லறைகள் / மயானங்கள், பள்ளிக்கூடங்கள், பிற கட்டிடங்களில் சுற்றுச்சுவர்கள் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்து முடித்ததாக மண்டலி கூறுகிறது. ஆனால் இவ்விடங்களில் ஆய்வு செய்ததில் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு செங்கல்கூடப் பதிக்கப்படவில்லை என்பது பின்னர் தெரியவந்துள்ளது.
ஸ்ரீ சாரதா மஸ்தூர் காம்தார் மண்டலி செய்து முடித்த பணிகளுக்காக தொகை செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பணிகள் பற்றிய ஆவணங்கள் கிராமப் பஞ்சாயத்திடமோ நகர் பாலிகாவிடமோ இல்லை.
ஜூன் 20, 2017 அன்று குஜராத் அரசின் பொது நிர்வாகத் துறையின் இணைச்செயலாளருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதித்தொகை செலவழிப்பதில் நடைபெறும் மோசடிகளை ஆனந்த் மாவட்ட ஆட்சியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது 04/2018 எண்ணுள்ள அறிக்கையில் சாரதா மஸ்தூர் காம்தார் மண்டலிக்கு எவ்வித டெண்டர் நிகழ்முறையும் இன்றி 232 வெவ்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டு அவற்றைச் செய்து முடிக்க ரூ.5.93 கோடி மதிப்பிலான தொகை (இதில் மோசடி என்று நம்பப்படும் ரூ.84.53 லட்சம் உட்பட) செலுத்தப்பட்டதையும் CAG குறிப்பிட்டுள்ளார்.
நசிகேத தேசாய்
நன்றி: நேஷனல் ஹெரால்ட்
rafale deal cag report???
“ஏனெனில் எம்பிக்களே திட்டத்தை அமலாக்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்தால் ஊழல் அங்கிருந்தே தொடங்கிவிடும் வாய்ப்புள்ளதால் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கக் கூடாதென்று தடைசெய்யப்பட்டுள்ளது.” how did she know? Whatever her PM Modi told she follows.