பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடங்கும்போது இந்தியப் பொருளாதாரம் எந்த நிலையில் இருந்ததோ அதே மந்த நிலையில்தான் அவரது ஆட்சி முடியும் இந்தச் சமயத்திலும் இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. பொருளாதாரத்தைப் பொறுத்தவரை மோடி, தான் தொடங்கிய இடத்திலேயே நிற்கிறார்.
ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் உள்ளது. வேலையின்மை நாட்டின் வளர்ச்சியில் முள்ளாகிக் குத்திக்கொண்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறிச் செல்கின்றனர். இந்திய ரூபாய் பலவீனமாகிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கத்தில், அரசு, பணவீக்கத்தையும், நாட்டின் நிதிப் பற்றாக்குறையையும் கட்டுக்குள் வைத்துள்ளது.
பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதுதான் சிறந்த அரசியலா என்பதை மே 23 அன்று அறிவிக்கப்பட உள்ள தேர்தல் முடிவுகள் உணர்த்தும். இதனிடையே, மோடி அரசின் பொருளாதாரச் செயல்பாடுகள் குறித்து எண்கள் என்ன சொல்கின்றன என்று பார்க்கலாம்.
வளர்ச்சிக்கான தடைகள்
கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து தூக்கிவிட இந்தியா 7 சதவீதத்திற்கும் அதிக ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) வளர்ச்சியைப் பெற வேண்டும்.
2018 டிசம்பர் வரையிலான காலாண்டில் வளர்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக இருந்தது. நடப்புக் காலாண்டில் இது மேம்படுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே இந்தியாவின் மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் (சி.எஸ்.ஒ) இந்த நிதியாண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி எதிர்பார்ப்பை 7 சதவீதத்திற்குக் குறைவாக மதிப்பிட்டுள்ளது. மோடி ஆட்சியின் கீழ் இது மிகவும் மந்தமானது, முந்தைய கணிப்பு 7.2 சதவீதமாக இருந்தது.
2015 ஜனவரியில் இந்தியா தனது ஜிடிபி வளர்ச்சிக்கான தரவுகளை மாற்றி அமைத்தது. இதனடிப்படையில், புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (எம்.ஓ.எஸ்.பி.ஐ) ஆகஸ்ட் மாதத்தில் முந்திய ஜிடிபி எண்ணிக்கையை மாற்றி அமைத்தது. இந்தத் தரவுகள், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் கீழ் ஜிடிபி வளர்ச்சி 8.1 சதவீதமாக இருந்ததாகத் தெரிவிக்கிறது. தற்போதைய ஆட்சியின் முதல் நான்கு ஆண்டுகளில் இருந்த 7. 3 சதவீதத்தைவிட இது அதிகம்.
இது அரசியல் விவாதத்தை உண்டாக்கவே, எம்.ஓ.எஸ்.பி.ஐ. தரவுகள் இறுதியானவை அல்ல எனத் தெரிவித்தது.
நவம்பரில், அரசு திட்டமிடல் அமைப்பான, நிட்டி ஆயோக் மற்றும் சி.எஸ்.ஓ முந்தைய ஆட்சியின் கீழ் வளர்ச்சியைக் குறைத்துக் காட்டியது. தற்போதைய அரசின் முதல் நான்கு ஆண்டுகள், இப்போது 7.4 சதவீதமாக முந்தைய ஆட்சியில் இருந்ததை (6.7%) விட அதிக வளர்ச்சியைக் கொண்டிருந்ததாகக் கூறியது. மோடி அரசு. அதே நேரத்தில், ஆகஸ்ட் மாத தரவுகள் பரிசோதனையின் அடிப்படையிலானவை எனக் கூறித் தள்ளுபடி செய்தது. இது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
ஜிடிபி விவாதம் ஒரு பக்கம் இருக்க, குறைவான நுகர்வோர் செலவினம், மந்தமான முதலீடுகள், விவசாயம், உற்பத்தியில் மந்தமான வளர்ச்சி ஆகியவை வளர்ச்சியை பாதித்துள்ளன. தேர்தல் பிரச்சாரம் உச்சத்தைத் தொடும் போது இவை முக்கிய விஷயங்களாக இருக்கும்.
நிதிச் சிக்கல்கள்
ஐ.மு.கூ. ஆட்சி, நிதி நோக்கில் சரியாக நடந்துகொள்ளவில்லை என விமர்சிக்கப்பட்டது. 2004-05இல் அது ஆட்சிக்கு வந்தபோது, நிதிப் பற்றாக்குறை 3.88 சதவீதமாக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டின் 4.48 சதவீதத்தைவிட இது குறைவு. ஐ.மு.கூ. ஆட்சி முடிவடைந்த 2012-13இல் நிதிப் பற்றாக்குறை 4.9 சதவீதமாக உயர்ந்தது. நிதி பற்றாக்குறை என்பது, வருவாய்க்கும் அரசு செலவுகளுக்குமான வித்தியாசமாகும். இது பொருளாதார ஆரோக்கியத்தைக் கணிக்கும் முக்கிய அளவுகோல்.
ஒப்பீட்டு நோக்கில், இந்த நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறை இலக்கான 3.3 சதவீதத்தைத் தவறவிட்டிருந்தாலும்கூட, மோடி அரசு இவ்விஷயத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் இது 3.4 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டது. எனினும் இந்த இலக்கை அடைவதுகூடச் சாத்தியமா என்று வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது 3.5 சதவீதமாக இருக்கும் என்கின்றனர்.
2018-19ஆம் ஆண்டுக்கான இடைக்கால டிவிடெண்டாக ரிசர்வ் வங்கி ரூ.28,000 கோடி அளித்திருக்கவில்லை எனில், இந்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கைக்கூட அரசு எட்டியிருக்காது. இந்த நடவடிக்கை புத்திசாலித்தனமானது அல்ல என வல்லுனர்கள் கூறுகின்றனர். பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் முதலீடுகளைக் குறைத்துக்கொள்வதற்கான இலக்கை அடையவும், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அரசு கணக்கின் அடிப்படையில் விளையாடுவதாக ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.
“விவசாயிகள் கடன் தள்ளுபடி இருக்கிறது, பட்ஜெட்டில் கவர்ச்சி அறிவிப்புகள் உள்ளன, வருவாய் குறைந்துள்ளது. ஆனாலும் நிதி பற்றாகுறை கட்டுக்குள் உள்ளது. இது ஒரு அற்புதமாகும். இதை எப்படி அரசு சாத்தியமாக்கியது என யோசிக்க வைக்கிறது” என ரேட்டிங் அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத வல்லுனர் ஒருவர் கூறினார்.
குறையும் முதலீடுகள்
ஜிடிபி வளர்ச்சி தேங்கியதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று மந்தமான முதலீட்டுச் சூழலாகும்.
மோடி பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, புதிய திட்டங்களிலான முதலீடு 2018 டிசம்பரில் முடிந்த காலாண்டில், மிகவும் குறைவாக இருந்தது எனப் பொருளாதாரத் தரவுகளைக் கண்காணிக்கும் சென்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எகானமி அமைப்பு தெரிவிக்கிறது.
புதிய முதலீட்டைக் கொண்டுவருவோம், தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் துவக்கி வளர்ச்சியை ஊக்குவிப்போம் என பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியிலிருந்து இது மிகவும் விலகி இருக்கிறது. 2018 டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் முடங்கிய திட்டங்களின் மதிப்பு ரூ.3.18 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்த ஆட்சியின் கீழ், இது இரண்டாவது அதிகபட்சமாகும்.
இது தேர்தல் ஆண்டு எனும் நிலையில், நிச்சயமற்றத்தன்மை முதலீட்டாளர்களை விலகி நிற்கச்செய்யும் என்பதால் நிலைமை மேலும் மோசமாகும் என வல்லுனர்கள் கருதுகின்றனர்.
நாட்டை உற்பத்தி மையமாக மாற்றி, வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்ப்பதற்கான மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் அரசின் தோல்வியையும் இது உணர்த்துகிறது. “மேக் இன் இந்தியா திட்டம் மிகுந்த கோலாகலமாகத் துவங்கியது. ஆனால், அதன் பிறகு எதுவும் பெரிதாக நடைபெறவில்லை. உள்ளூர் உற்பத்தி அல்லது சேவைகளுக்கான விரிவான திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை” என்று எச்டிஎப்சி முதன்மைப் பொருளாதார வல்லுனர் அப்ஹிக் பரூவா கூறுகிறார்.
பணவீக்கம் கட்டுப்பாடு
கிராப்புற வளர்ச்சி மந்தமாவது, சர்வதேசப் பண்டக விலைகள் குறைவது, மோசமான பருவ மழை ஆகியவை குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்திய விவசாயிகளை மிகவும் பாதித்துள்ளன. விவசாய வருமானம் 14 ஆண்டுக் காலத்தில் ஆகக் குறைந்த எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. விவசாயம் சாராத வளர்ச்சி மேலும் மோசமான சித்திரத்தை அளிக்கிறது.
இவற்றை எல்லாம் மீறி, மோடி அரசு பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளது. “அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொடாமல் இருப்பது தற்போதைய அரசின் சாதனையாகும்” என இந்தியா ரேட்டிங்ஸ் முதன்மைப் பொருளாதார வல்லுனர் தேவேந்திர குமார் பந்த் கூறுகிறார்.
இந்திய அரசு தவிர ரிசர்வ் வங்கிக்கும் இதில் பங்கு இருப்பதைக் கவனிக்க வேண்டும். ரிசர்வ் வங்கி 4 சதவீதத்துக்கும் 2 சதவீதத்துக்கும் இடையில் பணவீக்கம் தொடர்பாக இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அதன் அடிப்படையில் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது.
வணிகம் செய்வதற்கான சூழல்
மோடி ஆட்சியின் கீழ், வர்த்தகம் செய்வதில் இந்தியா மேம்பட்ட நிலையைப் பெற்றுள்ளது. 2018இல் வர்த்தகம் செய்ய ஏற்ற நாடுகளுக்கான உலக வங்கியின் பட்டியலில் 190 நாடுகளில் இந்தியா 77ஆவது இடம் பிடித்தது. 2017இ ல் இருந்த நிலையோடு ஒப்பிடுகையில் இது 23 இடங்கள் முன்னேற்றமாகும்.
மோடி ஆட்சியின் கீழ் இந்தப் பட்டியலில் இந்தியாவின் இடம் மொத்தமாக 65 இடங்கள் முன்னேறியுள்ளது. வர்த்தகம் துவங்குவது, வர்த்தகப் பரிமாற்றம் ஆகியவை எளிதாக்கப்பட்டன. மின்சக்தி, கடன் வசதி பெறுதல், சிறுபான்மை முதலீட்டாளர்களைக் காத்தல் ஆகியவற்றில் இந்தியா முதல் 25 நாடுகளில் இடம்பெற்றுள்ளது.
இவ்விஷயத்தில் 2020இல் 39ஆவது இடத்தைப் பிடிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடு
இருப்பினும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுகின்றனர்.
2018இல் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவில் இருந்து வெளியேறிய வெளிநாட்டு முதலீடு ரூ.50,000 கோடி. பத்தாண்டுகளில் இது மிகவும் அதிகமாகும். இந்த நிலை இன்னமும் மாறிவிடவில்லை.
“வலுவான டாலர் மற்றும் அமெரிக்கப் பத்திரங்கள் தரும் பலன் அதிகரிப்பதால வளரும் பொருளாதாரங்களுக்கான முதலீடு குறைந்துவருவது சர்வதேச அம்சமாக இருக்கிறது” என்கிறார் பந்த். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தில் உள்ள பலவீனங்கள் இந்த நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
“வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசியல் அல்லது பொருளாதார ஸ்திரமின்மை இல்லாமல் இருக்கிறதா என கவனிக்கின்றனர், இந்த ஸ்திரமின்மை இப்போது இந்தியாவில் நிலவுகிறது. இகாமர்ஸ் கட்டுப்பாடு, தேவதை வரி போன்ற சொதப்பல்கள், சர்வதேச முதலீடுகளைக் குறைக்கக்கூடும் என்கிறார் அவர்..
வேலைவாய்ப்பு
2014ல் மோடி ஆட்சிக்கு வர உதவிய முக்கிய அம்சம், ஆட்சிக்கு வந்தால் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என அவர் அளித்த வாக்குறுதிதான். ஐந்து ஆண்டுகள் கழித்து, இந்தத் துறையில் அவரது தோல்வி அவருக்கு எதிராக அமையலாம்.
அரசின் இரண்டு முக்கிய முடிவுகள், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமலாக்கம் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
வேலையில்லாத் திண்டாட்டம் 6.1 சதவீதமாக 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயரும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது என அரசின் ஆய்வு கூறுவதாக அண்மையில் பிஸினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
2050இல் வேலைவாய்ப்புச் சந்தையில் மேலும் 280 மில்லியன் மக்கள் பிரவேசிக்கக்கூடிய நாட்டிற்கு இது மிகப்பெரிய எச்சரிக்கையாகும். தற்போதைய வேலைவாய்ப்பு நிலையைத் தக்க வைக்க, ஆண்டுக்கு 8.1 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும் என உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
“இந்தியா கடந்த ஆண்டுகளில் வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சியில் சிக்கி இருப்பதாலும் அரசால் இதைச் சரி செய்ய இயலாத நிலை இருப்பதாலும், இந்த அம்சம் வாக்காளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் பரூவா.
நுபுர் ஆனந்த்
நன்றி: குவார்ட்ஸ் இந்தியா
https://qz.com/india/1569803/election-2019-what-modi-did-for-indias-gdp-inflation-jobs/