மோடி நேருவின் மதிப்புகளைக் குறைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா மெல்ல பாகிஸ்தானின் பிம்பமாகிவருகிறது. இருப்பினும், இந்தியாவின் முதல் பிரதமரின் சாதனைகளை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்கிறார் பாகிஸ்தானின் முக்கிய அறிவியலாளர் பர்வேஸ் ஹூத்போய்
பாகிஸ்தானில் ஜவஹர்லால் நேரு நிச்சயம் அவ்வளவு விரும்பப்பட மாட்டார். அதற்கு முக்கியக் காரணம் அவர் எங்கள் தேசத்தின் உருவாக்கத்தையே எதிர்த்தார் என்பதுதான். ஆனால் வேறு எங்குமே இல்லாத அளவு அவர் வெறுக்கப்பட்டு, விமர்சிக்கப்படுவது தற்போதைய இந்தியாவின் ஆளும் கட்சியைச் சார்ந்த குழுக்களாலும் அவர்களின் விசுவாசிகளாலும்தான்.
நேருவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் திகைக்கவைப்பவையாக இருக்கும். அவர் ஒழுக்கம் கெட்டவர். சீரழிந்துபோனவர்; விபச்சார விடுதியில் பிறந்து இறுதியில் ‘ஸிபிலிஸ்’ நோயால் இறந்தவர். கத்தோலிக்க கன்னியாஸ்திரியை கர்ப்பமாக்கியவர்; காஷ்மீரி பண்டிட் என்று சொல்லிக்கொண்டு ரகசியமாக வெங்காயம் சாப்பிட்டவர். 19 வயதிலிருந்து காலை 9 மணி தொடங்கி முழு நாளும் குடிபோதையிலேயே இருப்பார். அமெரிக்காவின் வலதுசாரிகள் எப்படி பாரக் ஒபாமாவை ரகசிய முஸ்லிம் என்பார்களோ அது போல, இந்திய இந்துத்துவவாதிகள் நேருவின் தாத்தா காயாசுதீன் காஜி, ஒரு முஸ்லிம் என்கிறார்கள். அவர் முகலாய தர்பாரில் பணிபுரிந்தார் என்கிறார்கள்.
முகம் தெரியாத இணையத்தில் பைத்தியக்காரத்தனமாய் இப்படி உளறிக்கொட்டினால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்காது. ஆனால் மிகத் தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டு இந்தத் தாக்குதல்கள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களாலும் அவ்வமைப்பின் சித்தாந்த ரீதியான தாய் அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தினராலும் தொடுக்கப்படுகின்றன. நேருவை இந்திய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து நீக்கும் வேலையைத் தொடர்ந்து அவர்கள் செய்துவருகின்றனர். பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 8 ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்தில் இப்போதெல்லாம் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு என்றோ, நாதுராம் கோட்சே என்னும் இந்து தத்துவவாதிதான் மகாத்மா காந்தியைக் கொன்றார் என்றோ இல்லை. நேருவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘விதியுடன் ஒரு சந்திப்பு’ (Tryst With Destiny ) என்னும் உரை ஏற்கனவே பல மாநிலப் பள்ளிக்கூடப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்பதையெல்லாம் பெத்வா சர்மா 2016 இல் பதிவுசெய்திருக்கிறார். ஜியா உல் ஹக் காலகட்டத்தில் முஹம்மத் அலி ஜின்னாவின் பிரசித்திபெற்ற ஆகஸ்ட் 11, 1947 பேச்சு “காணாமல்போனதைத்தான்” இவை நினைவுபடுத்துகின்றன.
நேருவைத் தனிப்பட்ட விதத்தில் இழிவுபடுத்தும் இத்தகைய பிரச்சாரம் மதச்சார்பற்ற இந்தியா என்னும் கருத்தாக்கத்தின் மீதான மறைமுக யுத்தம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா என்பது பன்முகம் கொண்ட, தாராளப் போக்கு உடைய, பலதரப்பட்டோரின் தேசமாக இருக்கும் என்றும் அதன் பலம் பன்முகத்தன்மையில்தான் இருக்கும் என்றும் நேரு அறிவித்தபோது பாகிஸ்தானில் அதை நாங்கள் அதை ஒருபோதும் நம்பவில்லை. இவையெல்லாம் ஜனநாயகம் என்னும் போர்வையில் இந்துப் பெரும்பான்மைவாதத்தை நியாயப்படுத்தும் வார்த்தைகள் என்றுதான் நாங்கள் கருதினோம். ஆனால், இப்போது பாஜக இந்தியாவை மோசமான வகுப்புவாதச் செயல்திட்டத்தோடு ஆளும்போதுதான் மதச்சார்பின்மையின் இழப்பு என்பது என்னவென்பதையும், குறைபட்ட மதச்சார்பின்மையாக இருந்தாலும் அதன் மதிப்பு என்னவென்பதையும் பாகிஸ்தானியர்கள் உணர்கிறார்கள்.
பாகிஸ்தானியர்களோ முஸ்லிம் மக்களோ கடந்த காலத்தில் என்ன நினைத்திருந்தாலும் அல்லது நினைத்துக்கொண்டிருந்தாலும், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, நேரு என்ன சொன்னாரோ அதை அப்படியேதான் எடுத்துக்கொண்டிருக்கிறது. அதற்காக அவரைப் பார்த்து பயப்படவும் வெறுக்கவும் செய்தது. குறிப்பாக, காந்தி கொலை வழக்கு காரணமாக நேரு ஆர்எஸ்எஸ்ஐத் தடை செய்ததையோ, ‘இந்து ராஷ்டிரம்’ அல்லது ‘இந்து தேசம்’ என்னும் அவர்களின் கருத்தாக்கத்தைத் தீவிரமாக எதிர்த்ததையோ அவர்கள் மன்னிக்கத் தயாராக இல்லை. சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவைத் தகுதியான ‘சங்கிகள்’ கையில் தந்திருக்க வேண்டும் என்று இந்துத்துவச் செயல்பாட்டாளர் ஒருவர் ஏக்கத்தோடு எழுதுகிறார். அப்படியிருந்தால் இந்தியா இந்நேரம் ராம ராஜ்ஜியத்தை அடைந்திருக்கும். அதில் உள்ள 100 கோடி மக்கள் ஒரு நாளைக்குப் பன்னிரெண்டு முறையாவது ‘ஹனுமான் சாலிசா’ சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்கிறார்.
அழிக்க முடியாத தடங்கள்
எது எப்படி இருந்தாலும், நேருவை அழிக்கும் நோக்கம் கொண்ட இந்துத்துவம், இம்மாதிரியான பொருந்தாத, முரணான கருத்துக்களிடமிருந்து வெளியே வரப்போவதில்லை. வலதுசாரிகள் உட்பட எல்லா இந்தியர்களும் நாட்டின் அறிவியல் முன்னேற்றங்களில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் ஒரு நொடி கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். 1947இல் நேருவுக்குப் பதில் நரேந்திர மோடி இந்தியாவின் முதல் பிரதமராக ஆகியிருந்தால் அறிவியல் முன்னேற்றத்தில் இந்தியா இன்று எப்படி இருக்கும்?
தனித்துவமான விண்வெளிச் செயல்பாடுகள், அபாரமான ஸ்ட்ரிங் கோட்பாட்டாளர் அசோக் சென் போன்றோர் இந்தியாவில் உருவாகியிருக்க முடியாது. ஏகப்பட்ட கிறுக்குத்தனங்களின் குப்பைகள் அறிவியல் என்னும் பெயரால் இந்தியாவில் குவிக்கப்பட்டிருக்கும். எப்படி மாட்டு மூத்திரத்திலும் சாணத்திலும் எப்படி மருந்துகளை எடுக்கலாம் என்னும் ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும். ஆண் மயிலின் துறவறம் ஆராயப்பட்டிருக்கும். வானவியலுக்குப் பதிலாக ஜோதிடவியலும், உண்மையான கணிதத்துக்குப் பதிலாக வேத கணதம் கற்பிக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தானைப் போலவே, இந்தியாவிலும் டார்வினியப் பரிணாமக் கொள்கை சமூகத்திற்கு ஒவ்வாததாகவும் மத நம்பிக்கைகளை அழிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்பட்டிருக்கும்.
இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை, நேருவின் முத்திரையை, பரந்து விரிந்திருக்கும் இந்தியாவின் அறிவியல் நிறுவனங்களையும் பல்கலைக்கழங்களையும் பார்த்தாலே தெரியும். இவை அனைத்தும் அவராலேயே உருவானவை. சொல்லப்போனால் உலகிலேயே இந்தியா மட்டும்தான் தனது அரசியலமைப்புச் சட்டத்திலேயே ‘அறிவியல் ரீதியான உணர்வை’ வளர்க்க வேண்டும் என்பதைத் தன் இலக்குகளில் ஒன்றாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. நேரு சிறையில் இருந்த காலங்களில் அவருக்குள் உருவான சிந்தனைகளில் ஒன்று இது. சுருக்கமாகச் சொன்னால் பகுத்தறிவும் அறிவியலும்தான் நம்மைச் சுற்றியுள்ள புற உலகைப் பற்றி சரியான அறிவைத் தர முடியும். புனித நூல்கள் அல்ல.
2005இல் இந்தியாவில் தொடர் சொற்பொழிவுப் பிரயாணம் மேற்கொண்டேன். ஏழு நகரங்களில் 40க்கும் மேற்பட்ட இந்தியப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பேசினேன். எவ்வளவு பெரிய வித்தியாசத்தை நேரு தன் நாட்டில் ஏற்படுத்தியுள்ளார் என்பதை நான் அந்தப் பார்வையாளர்கள் வழியாகப் பார்த்தேன். நேரு என்ற ஒருவர் இல்லாமல் இத்தனை பெரிய அளவில் அறிவியலுக்கான ஆர்வமோ ஈடுபாடோ ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. இவை ஒரே நகரத்தில் அமைந்துள்ள பல அறிவியல் அருங்காட்சியகங்களில் வெளிப்படுகிறது. சாதாரண இந்தியர்களுக்கு அடிப்படை அறிவியலைக் கொண்டுசேர்க்க எண்ணற்ற அறிவியல் அமைப்புகள் வேலைசெய்துவருவதையும் பார்த்தேன். இந்துத்துவ ஆட்சியில் இவற்றில் எவ்வளவு மாறியிருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், அம்மாதிரியான ஈடுபாடுகளில் சிறிதுகூட பாகிஸ்தானில் அன்றோ இன்றோ நிச்சயமாகக் காணப்படவில்லை.
மக்கள் ஆட்சிக்கே அதிகாரம்
தனது ராணுவத் தளபதிகளின் செயல்பாடுகளின் மீது கட்டுப்பாடு வைத்திருந்த பெருமையும் நேருவுக்கு உரியது. ஜனநாயகத்தில் ராணுவம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் கட்டுக்குள் இருக்க வேண்டும். அரசுக்குப் பதில் சொல்லும் பொறுப்பும் அதற்கு இருத்தல் வேண்டும். இதற்கு மாறாக இருக்கக் கூடாது. பாகிஸ்தான் பிரிந்த பின்னர் நேரு, மாபெரும் மாளிகையில் ராணுவத் தளபதி தங்கிவந்ததை மாற்றினார். அந்த மாளிகை பிரதமருக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நகர்வு மிகப்பெரிய ஒரு குறியீட்டைக் கொண்டிருந்தது. யார் நாட்டின் தலைவர் என்பதை அது தெளிவாகச் சொன்னது.
இந்திய எல்லைக்கு அப்பால் அயூப் கானின் கலகம் 1958இல் அரங்கேறியபோது, தேசிய விஷயங்களில் இந்திய ராணுவத்தின் பங்கை மேலும் குறைக்கக்கூடிய விதிகள் உருவாக்கப்பட்டன. ஜெனெரல் கே.எம். காரியப்பா அந்தக் கலகத்தைப் புகழ்ந்தபோது அவர் அதைப் பற்றி பேசக் கூடாது என்று உத்தரவு வந்தது. ராணுவ அதிகாரிகள் – பணியிலிருப்பவர்களோ அல்லது ஓய்வுபெற்றவர்களோ – பொதுப் பிரச்னைகள், பொருளாதாரம் (முக்கியமாக அவர்களின் ஓய்வூதியம் ஓய்வுக்குப் பிந்தைய நலன்கள்) ஆகியவை பற்றிப் பொது வெளியில் பேசுவது அனுமதிக்கப்படவில்லை. ராணுவம் ஒரு தொழிலையோ, நிறுவனத்தையோ நடத்தும் வழக்கமும் இந்தியாவில் நடைமுறையில் இல்லை.
இவை அனைத்தும் தற்போது மாறக்கூடும். விரோதப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் பேசுவதற்குப் பேர்போன ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், தற்போது வெளியுறவுக் கொள்கைகளில் கருத்துக்கள் சொல்வதன் மூலம் ராணுவத்தின் பாரம்பரியத்தை உடைத்திருக்கிறார். ரோஹாங்கியா அகதிகள் பிரச்சினை, டோக்லாம் நெருக்கடியில் இந்தியா என்ன செய்ய வேண்டும், “பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் வெறும் வதந்தி” என்று எல்லாவற்றிலும் கருத்து கூறுகிறார். ராவத் விதிவிலக்கா அல்லது அரசின் அதிகார எல்லைக்குள் ராணுவம் தலையிடக்கூடிய புதிய ஏற்பாட்டின் அடையாளமா என்பதைக் காலம் சொல்லும். இந்திய ராணுவத் தலைமைத் தளபதியை விமர்சிப்பது தேச விரோதச் செயலாக இந்திய ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. இந்தப் போக்கு ஜனநாயகத்திற்க்கான அச்சுறுத்தல்.
மோடியாலும் அவர் சகாக்களாலும் நேருவின் இந்தியாவில் இன்னும் எத்தனை அம்சங்கள் அழிக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இன்றைய நிலையில், பாகிஸ்தானுக்குத் தன் பிம்பத்தை இந்தியாவில் காண்பது நாளுக்கு நாள் எளிதாகிக்கொண்டேவருகிறது.
பர்வேஸ் ஹூத்போய்
(பர்வேஸ் ஹூத்போய் லாகூரிலும் இஸ்லாமாபாதிலும் இயற்பியல் கற்பிக்கிறார்)
நன்றி: ஸ்க்ரால்.இன் (https://scroll.in/article/876410/as-nehrus-india-is-undone-by-modi-it-is-becoming-easier-to-see-it-as-pakistans-mirror-image)
(இந்தக் கட்டுரை பாகிஸ்தானின் டான் (Dawn) நாளிதழில் முதலில் வெளியானது.)
தமிழில்: இனியன்