வானமெங்கும் தேசப்பற்று நிறைந்திருக்கிறது. நிஜமாகவே வானில் தேசபக்தி படர்ந்துதான் இருக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஒரு உத்தரவ இட்டுள்ளது அரசு. ஒவ்வொரு விமானப் பயணம் ஒவ்வொன்றிலும் மேற்கொள்ளப்படுகிற அறிவிப்புகளுக்குப் பிறகும் ஜெய் ஹிந்த் என சொல்லவேண்டும் என்பதே அந்த உத்தரவு. எதிர்பார்த்ததுபோலவே, இந்த உத்தரவு இணையத்தில் ஆயிரக்கணக்கான ஜோக்குகளையும், மீம்களையும் உருவாக்கியிருக்கிறது. விமான பணிப்பெண்கள் இனி, “இப்போது உணவு அறிவிப்பு நேரம், ஜெய் ஹிந்த், பன்னீர் அல்லது இட்லி, ஜெய் ஹிந்த்” என்று சொல்வர்களா?’. இனி பயணிகள் ‘டேக் ஆப்’ ஆவதற்கு முன் எழுந்து நின்று தேசிய கீதம் பாட வேண்டுமா… என்பது போலப் பல பதிவுகள்!
நகைச்சுவைத் துணுக்குகள் கேலி செய்யவும் கோபத்தைக் கொட்டித்தீர்க்கவும் நல்ல வழிதான். ஆனால் இதனால் எதையும் மாற்றிவிட முடியாது. பொதுக் கருத்தை, அதிலும், ஏற்றுக்கொள்ள முடியாததை, எரிச்சலாக அல்லது சதியாகப் பார்க்கக்கூடிய ஒரு அரசு, மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றி அதிகம் கவலைப்படப்போவதில்லை. தங்களின் கருத்தோடு ஒத்துப்போகும் கருத்தை மட்டுமே அரசு கவனத்தில் கொள்கிறது.
எனவே, எந்த விதமான அர்த்தமுள்ள எதிர்ப்பும், தாராளவாதிகள், மதச்சார்பற்றவர்கள் மற்றும் விஷமிகளின் செயலாகும். அதே நேரத்தில் அப்பட்டமான மதவாதத்தன்மை அல்லது மிதமிஞ்சிய தேசியவாதம் என்பது மக்களின் குரல் அல்லது உண்மையான இந்தியர்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடாகும்.
ஆக, நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் இந்த முடிவை அரசு மாற்றிக்கொள்ளப்போவதில்லை. மக்களின் தேசப்பற்றைத் தூண்டிவிடுவது என்பது ஆளுங்கட்சியின் ஆதாரமான திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதற்கேற்பவே இந்த முடிவும் அமைந்துள்ளது. பாரதமாதாவை அடிக்கடி அழைப்பது, நாட்டின் பல பகுதிகளில் தேசியக் கொடிகளை ஏற்றுவது, ராணுவத்தைப் போற்றுவது, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பதைக் கட்டாயமாக்குவது போன்ற உத்தரவுகள் இந்தத் திட்டத்தை வெகு தீவிரமாகவே பின்பற்ற வைக்கிறது.
ஏர் இந்தியா அறிவிப்பு தேர்தலுக்கு முன்பாக, நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் எப்படியும் இது நிகழ்ந்திருக்கும் என்பது வேறு விஷயம். பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு தேசியவாதத் திட்டத்திற்கு ஒரு அவசரத்தன்மை வந்திருக்கிறது.
அதே நேரத்தில், கட்சி அல்லது சங் பரிவாருக்குள் இருக்கும் செல்வாக்கு மிக்க குரல்களுக்கு மட்டும் அல்ல, அரசில் இருப்பவர்களுக்கும்கூட (அதன் ‘அறிவார்ந்த’ குரல்களுக்கு) கறாரான எல்லைக்கோடு வகுக்கப்பட்டுள்ளது. ராணுவம் பற்றிக் கேள்வி கேட்பது தேசப்பற்று இல்லாத செயல். ராணுவம் மட்டும் அல்ல, அரசையும் பிரதமரையும்கூடக் கேள்வி கேட்கக் கூடாது. இதன் நோக்கம் என்னவெனில், தேசம் எனும் அரூபமான கருத்தாக்கத்தை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடனும் பிரதமருடனும் சிவில் நிர்வாகத்தின் கீழ் வரும் ராணுவத்துடனும் தொடர்புபடுத்துவதாகும்.
இதன் மூலம், அதிகாரம் மக்களிடமிருந்து அரசுக்கு மாற்றப்படுகிறது. ஜனநாயக ஒழுங்கு தலைகீழானதைக் கேள்வி கேட்கும் யாரும் தேசத்திற்கு எதிராகச் செயல்படுவதாகக் கருதப்படுவார்கள். இது மிக மோசமான போக்கின் சாதுர்யமான நடவடிக்கையாகும். இத்தகைய போக்கு கடந்த கால வரலாற்றில் மோசமான துஷ்பிரயோகங்களுக்கு வித்திட்டுள்ளது.
கடந்த சில நாட்களின் உதாரணங்களை பாருங்கள்: அரசின் நம்பகமான அமைச்சரான பியூஷ் கோயல், நேரலை உரையாடலில், அவர் சங்கடமானதாக உணர்ந்த கேள்விகளை எழுப்பிய இந்தியா டுடே குழுமத்தின் பத்திரிகையாளர் மீது அதிருப்தி கொண்டு கோபத்தை வெளிப்படுத்தினார்.
அந்தப் பத்திரிகையாளர் கடந்த காலங்களில் இந்த ஆட்சிக்கு எதிரான மனப்பான்மை எதையும் வெளிப்படுத்தியவரில்லை. அவர் தன் வேலையை மட்டுமே செய்தார். பதில்களை நாடிக் கேள்விகளைக் கேட்டார். கோயல் கடுப்பாகி அந்தப் பத்திரிகையாளரை நோக்கி, “நம்முடைய ராணுவத்தைத் தரக்குறைவாகப் பேசும் போக்கில் நீங்களும் இணைந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார். இந்த வகையான சிந்தனை இந்தியாவில் பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்றார். இது போன்ற எண்ணம் கொண்ட இந்தியார்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாக இதற்குப் பொருள்.
இந்த அரசு விடுக்கும் செய்தி மிகவும் தெளிவாக இருக்கிறது: கேள்விகளைக் கேட்பது என்பது எதிரிகளுக்குச் சாதகமாகும் என்பதால், கேள்விகளைக் கேட்காமலே இருப்பது நல்லது. அந்தப் பத்திரிகையாளர் தேசியவாதம் தொடர்பாகத் தனக்குப் பாடம் தேவையில்லை என்று அமைச்சரிடம் தெரிவித்தார் (தமது தந்தை ராணுவத்தில் இருந்தவர் என்றும் அவர் கூறினார்). இந்த அரசின் பொறுப்பு மிக்க உறுப்பினர்கள் எப்படிச் சிந்திக்கின்றனர் என்பதற்கான சிறந்த உதாரணம் இது.
அதன் பிறகு, முன்னாள் ராணுவ தளபதியும், அமைச்சருமான வி.கே.சிங், கடந்த காலங்களில் பத்திரிகையாளர்களை பிரெஸ்டிடியூட்ஸ் (பாலியல் தொழிலாளிகளுடன் ஊடகத்தினரை ஒப்பிட்டுப் பேசும் அவதூறுச் சொல்) என்றும் மாணவர் தலைவர்களை அட்டைகள் என்றும் கூறியவர், பல்வேறு வகையில் கூக்குரல் எழுப்பும் உள்ளூர் அதிருப்தியாயாளர்களுக்கு எதிராக உள்நாட்டில் சர்ஜிகல் தாக்குதல் தேவை என்று கூறினார். இந்தியா இஸ்ரேல் போல் இல்லை என அவர் புலம்பினார். அங்கு ஒருவரும் ராணுவத்தைக் கேள்வி கேட்பதில்லை. இவர் இன்னமும் ராணுவ மெஸ்ஸில் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார் போலும். அங்கு தான் ஜூனியர் அதிகாரிகள் பாராட்டி கைத்தட்ட ஒருவர் சிவிலியன்கள் மீதான கோபத்தை வெளிப்படுத்தலாம். “அவர்கள் எல்லோர் மீதும் குண்டு போடுங்கள்” என்று அவர் சொன்னதுபோலவும் இருந்தது. சில நேரங்களில் ஜனநாயகம் மிகவும் தொல்லையானதுதான்.
எப்போதும் சரளமாகப் பேசக்கூடிய ரவிசங்கர பிரசாத்தும் சளைத்துவிடவில்லை. அவர் தெளிவாகவே கூறினார். தாக்குதல் பற்றி ஆதாரம் கேட்பதன் மூலமாக காங்கிரஸ் ராணுவத்தின் உறுதியைக் குலைப்பதாகத் தெரிவித்தார். எனவே காங்கிரஸ் “பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசுவதாக”க் கூறினார். அதாவது, வாயை மூடிக்கொண்டு நாங்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளுங்கள், இல்லை எனில் நீங்கள் ஒரு துரோகி.
துருவும் கேள்விகளை அரசுகளும் அரசியல்வாதிகளும் விரும்புவதில்லை என்பது உலகறிந்த விஷயம்தான். ஆனால், அசவுகரியமான கேள்விகளுக்கு எதிரான ஒவ்வாமையில் இந்த அரசு அதீதமான எல்லைகளுக்குச் சென்றுவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர் சந்திப்பை நடத்தியதில்லை அல்லது கடினமான கேள்விகள் கேட்கக்கூடிய செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்ததில்லை. வழக்கமான கேள்விகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலான கேள்விகள்கூட நிராகரிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம்கூட இந்த அரசிடமிருந்து பதில் பெறுவது கடினமாக இருக்கிறது. பிரதமரும்,. அரசும் எதைக் கண்டு தான் அஞ்சுகின்றனர்?
ஆனால், கேள்விகள் நின்றுவிடவில்லை. இந்தியர்கள் மிகவும் சந்தேகம் கொண்டவர்கள், அவநம்பிக்கைவாதிகள் என்று சொல்லலாம். அதிகாரத்தைக் கேள்வி கேட்பதைத் தன் தர்மமாகக் கொண்ட மீடியாவின் பெரும்பகுதி அமைதியாக இருந்தாலும், நாட்டின் சக்திவாய்ந்த பெயர்கள் மவுனமாக்கப்பட்டாலும், வீதிகளில் உள்ள மக்கள் இவ்வாறு செய்யப்போவதில்லை.
உயர் பதவியில் இருப்பவர்களுக்கு இந்தக் குரல் இன்னமும் கேட்காமல் இருக்கலாம். ஆனால், அதற்கான நேரம் வரும்போது மக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிப்பார்கள். அதற்கான வாய்ப்பு வெகு விரைவில் வரும். நாட்டுப்பற்றைக் காரணம் காட்டி அவர்கள் வாயை அடைத்துவிட முடியாது.
சித்தார்த் பாட்டியா
நன்றி: தி வயர் (https://thewire.in/politics/invoking-patriotism-as-a-way-of-shutting-down-questions)