2014ஆம் ஆண்டு முதல், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு உள்ளும் வெளியுமாக அலைந்துகொண்டிருகின்ற வஞ்சப்புகழ்ச்சி இறுதியில் தந்து மூச்சினை ஒரேடியாக நிறுத்திக் கொண்டது. அப்படி நிறுத்தியது நரேந்திர மோடியின் #நானும்காவலாளி (#MainBhiChowkidar) என்கிற பிரச்சாரம் தான். வியப்பையும் கேலியையும் சம அளவு பெற்ற இந்த ட்வீட்டில், பிரதமர் அறிவித்தது என்னவென்றால்,
உங்கள் காவலாளி திடமாக நின்று நாட்டிற்கு சேவை செய்து வருகிறான்
ஆனால், நான் தனியாக இல்லை.
ஊழல், அழுக்கு, சமூகத் தீங்குகள் ஆகியவற்றுக்கு எதிராக போராடும் ஒவ்வொருவரும் காவலாளியே.
இந்தியாவின் முன்னேற்றத்திற்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளியே.
இன்று, ஒவ்வொரு இந்தியரும் சொல்கிறார் #நானும் காவலாளி என்று.
ராகுல் காந்தியின் “காவலாளியே திருடன்” என்ற வாதத்தை ஒன்றுமில்லாமல் செய்யவே பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. சில மணிநேரங்களுக்கு முதல் இடத்தைப் பிடித்த இந்த ட்வீட்டுடன், “நானும் காவலாளி தான்” (Main Bhi Chowkidhar Hoon) என்ற 3 நிமிடங்கள் 45 நொடிகள் கொண்ட பாடலும் வெளியானது. “நிம்மதியாக இருங்கள். உங்கள் காவலாளி எச்சரிக்கையுடன் இருக்கிறார்”, என்று மோடி சொல்வதிலிருந்து அந்த காணொலி தொடங்குகிறது.
இந்த வாக்கியத்தால் ஒருவர் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போனாரென்றால், ஒன்று அவர் இந்த ஓராண்டு காலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்துத் தெரியாதவராக இருக்க வேண்டும். அல்லது, பிரதமரின் வாய்ஜாலத்தில் முழுமையாக விழுந்துவிட்டவராகவோ இருக்க வேண்டும். ‘எப்போதும் விழிப்புடன் இருக்கும் ஒரு காவலாளி’, இந்திய மண்ணில், அதுவும் இந்தியாவிலேயே அதிகமான ராணுவப் படை மற்றும் பாதுகாப்பு நிறைந்த புல்வாமாவில், கடந்த சில ஆண்டுகளில் நடந்ததிலேயே மிகவும் மோசமான ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடக்க எப்படி அனுமதித்தார்?’ மேலும், ‘எப்போதும் விழிப்புடன் இருக்கும் ஒரு காவலாளி’ நீரவ் மோடி மற்றும் அவருடைய மாமா மெஹுல் ‘அண்ணனை’ கோடிக்கணக்கான பணத்துடன் நாட்டைவிட்டு ஓட எப்படி அனுமதித்தார்?
பிரதமரின் வரையறைப்படி, காவலாளியின் பொறுப்பு அதிகமாகியுள்ளது. இனிமேல் ‘சௌகிதார்’ என்றால், வாயிற்காப்போன் என்று மட்டும் அர்த்தம் இல்லை. மோடியின் கூற்றுப்படி, ஊழல், அழுக்கு மற்றும் சமுதாய தீங்குகளுக்கு எதிராகப் போராடுவதும் காவலாளியின் புதிய பொறுப்புகள்.
அந்தத் தர்க்கத்தின் அடிப்படையில், பிரசாந்த் பூஷண், அருண் சௌரி மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் காவலாளிகள்தானா? ஏனென்றால், அவர்கள் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான ரஃபேல் ஒப்பந்தத்தில் இருக்கும் பெரிய முறைகேடுகள் மற்றும் ஊழலைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தவறுகளையும் ஊழலையும் சுட்டிக்காட்டி, அதனால் உயிரிழந்த ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர்களெல்லாம் யார்? அவர்களும் காவலாளிகளாகக் கருதப்படுவார்களா? எல்லோருக்கும் ஒரே நியாயமா, இல்லை ஒருவரின் காவலாளி இன்னொருவரின் துரோகியாகக் கருதப்படுவாரா?
கங்கை ஆற்றின் மாசுபடுதலைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்காததால், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி இறந்துபோன பேராசிரியர் ஜி.டி.அகர்வால் (சுவாமி சனந்த் என்று பரவலாக அறியப்படுபவர்) யார்? அவரும் ஒரு காவலாளிதானா? சமூகத் தீமைகளுக்கு எதிராகப் போராடியே வாழ்க்கை முழுவதையும் கழித்த சுவாமி அக்னிவேஷ் யார்? பிரதமரைப் பின்பற்றுபவர்கள் அவரையும் காவலாளி என்று கருதுவார்களா? ஏனென்றால், அவரை அடித்து அவர் உடைகளைக் கிழித்து ஒரு துரோகியைப் போலவே அவரை நடத்தினார்கள். அதுவும், ரவுடிக் கும்பல்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்த கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இப்படி நடந்தது ஆகப்பெரும் முரண்.
‘நானும் காவலாளியாகதான்’ (‘Main Bhi Chowkidar’) என்ற பாடல் வரிகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்:
“Ye desh ye mera vatan, ye mera ghar mera chaman
Sabka vikas chaahta aur chaahta hoon bas aman
பொருள்:
இந்த நாடே என் வீடும் என் தோட்டமும் ஆகும்.
அமைதியும் முன்னேற்றமும் அனைவருக்கும் வேண்டும் என்பதே என் விருப்பம்.
புல்வாமா சோக சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரிகளைத் தாக்கியவர்களும், தங்கள் உணவுக் கடைகளில் “நாய்களுக்கு அனுமதியுண்டு, காஷ்மீரிகளுக்கு அனுமதியில்லை” என்ற பலகைகளைப் போட்டவர்களும் நிச்சயமாக இந்தப் பாடலைப் பாடக் கூடாது, அப்படிச் செய்தால் அது நேர்மையானதாக இருக்காது. அவர்களோடு சேர்த்து, முஸ்லிம்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று நினைப்பவர்களும், இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைக்கும் அத்தனை மந்திரி மற்றும் அமைச்சர்களும் இப்பாடலைப் பாடக் கூடாது. ஏனென்றால் இந்த வரி ‘அனைவருக்குமான’ அமைதி, முன்னேற்றம் பற்றிப் பேசுகிறது.
சாதி, சமயம் போன்ற எந்தவொரு பிரிவினையும் பார்க்காமல், அனைத்து இந்தியர்களுக்கும் அமைதி மற்றும் முன்னேற்றம் வேண்டும் என்று உண்மையாக நினைப்பவர்களுக்கு மட்டுமே அப்பாடலின் வரிகளை உச்சரிக்கும் உரிமை உள்ளது. ஆனால், அவர்களேதான் ‘தேசத்துரோகிகள்’ என்று முத்திரை குத்தப்படுகிறார்கள் என்பது இருப்பதிலேயே உச்சகட்ட முரண்பாடு.
“Vo ek akela chal padaa, mai uski hee katar hoon
Haan mai bhi chowkidaar hoon”
பொருள்:
அவர் தனித்து இந்த அணிவகுப்பைத் தொடங்கி இருக்கிறார், நான் அவர் பின்னால் நிற்கிறேன்.
ஆம் நானும் ஒரு காவலாளி.
இந்த இடத்தில், மோடி சிவப்புக் கம்பளத்தில் நடந்து வருவது, சல்யூட் அடிப்பது, திறந்த வாகனத்திலிருந்து கூட்டத்திற்குக் கை அசைப்பது ஆகியவை காண்பிக்கப்படுகின்றன. அதில் காட்டப்படும் காட்சிகளிலிருந்து ஒன்று தெளிவாகக் காட்டப்படுகிறது. அதாவது அவர் மட்டுமே தனித்து நேர்வழியில் நடக்கிறார், பிறருக்கான ஒரு வழித்தடத்தை உருவாக்குகிறார். நான், ஒரு நல்ல குடிமகனாக, முதன்மையான காவலாளி காட்டிய பாதையில் நடந்து செல்ல வேண்டும்.
“Vada kiya hai ab se khud kooda nahi phailaaoonga
Bhrashtachaar ka nidhan mai jad se yoon mitaaoonga”
பொருள்:
அழுக்கைப் பரப்ப மாட்டேன் என்று நான் சத்தியப் பிரமாணம் செய்திருக்கிறேன்.
ஊழலுக்குச் சாவு மணி அடிப்பேன், வேரோடு அதை அழிக்கவும் செய்வேன்.
திரையில் தெரியும் காட்சிக்கு அப்பாற்பட்டு, இரண்டு காட்சிகள் என் தலையில் ஓடுகின்றன. அவற்றில் ஒன்று, யாருடைய குரலை ஒடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்புவதையே ஒற்றை நோக்கமாகக் கொண்டு விளங்கும் ஆளும் கட்சியின் ட்ரோல் படை. அவர்கள் இதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களா என்று யோசிக்கிறேன். ஊழலுக்குச் சாவு மணி அடிப்பது குறித்து நினைக்கும்போது, நீரவ் மோடி சிறு சிரிப்புடன் “No comment” என்று சொன்ன காட்சி மட்டுமே மனதில் ஓடுகிறது.
“Mai nai bharat ki kalpana se sehmat vichaar hoon
Haan mai bhi chowkidar hoon”
பொருள்:
புதிய இந்தியா எனும் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன்.
காரணம், நானும் ஒரு காவலாளியே.
புதிய இந்தியா என்றால் என்ன என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். பாஜகவின் மந்திரி சாக்ஷி மகாராஜ் சொன்னது போல, இனிமேல் தேர்தலும் ஜனநாயகமும் இல்லாததா? மேலும், புதிய இந்தியா எனும் எண்ணத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஏன் இந்தக் கட்டாயம்?
“Laghu udyog hai mera, mehnat se karta kaam hoon
Ek ghar ka choolha mujhse hai, mai ujjwala sa naam hoon”
பொருள்:
நான் ஒரு சிறுதொழிலை நடத்துகிறேன். நான் கடினமாக உழைக்கிறேன்.
ஒரு வீட்டில் சமையல் செய்வது என் பொறுப்பு. நான் ஒளிமயமானவள்.
இந்த குறிப்பிட்ட வரி மிகவும் குரூரமானது, காரணம், எத்தனையோ சிறு, குறு தொழில்கள் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாக இழுத்து மூடப்பட்டது. இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் கூற்றுப்படி, 2017 ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கிடையில் மட்டும், பணமதிப்பிழப்பு காரணமாக 15 லட்சம் வேலைகள் இந்தியாவில் இல்லாமல் போய்விட்டன. இவற்றில் பலவும் சிறு, குறு தொழில்கள்.
“Vo ungliyaan utthaenge voh jhootth kehte jayenge
Sach ki parakh toh hai mujhe vo kyaa mujhe behkaaenge
Jhootth ke kapaal pe mai satya ka prahaar hoon”
பொருள்:
அவர்கள் குற்றம்சாட்டிப் பொய்களைச் சொல்லலாம்
ஆனால், என்னை ஏமாற்ற முடியாது, காரணம் எனக்கு உண்மை என்னவென்று தெரியும்
பொய்களின் நெற்றியில் நான் உண்மையின் தாக்குதலாக இருக்கிறேன்.
வன்முறையான வரிகளும், உருவகங்களும் இருப்பினும், இந்த வரி மற்ற அனைத்தையும் தோற்கடித்துவிட்டது. தவறான கருத்துக்களை உருவாக்கவும், தவறான தகவல்கள், பொய்கள், போலியான செய்திகள் ஆகியவற்றை வெளியிடவும் முழுமையான ஐ.டி. செல்லை வைத்திருக்கும் ஒரு கட்சி, உண்மையைப் பற்றிப் பேசுவதும், பொய்களால் ஏமாற மாட்டேன் என்று சொல்வதும் உண்மையிலேயே வளமான கற்பனைதான்.
ஒவ்வொரு வரியிலும் முரண்பாடு ஒளிந்திருக்கும் இந்தப் பாடலில், ஆழமான கவலைக்குரிய ஒரு விஷயமும் இருக்கிறது. இந்தப் பாடலின் மையக் கருத்து, அது சொல்லவரும் செய்தி ஆகியவை குறித்துதான் நாம் கவலை கொள்ள வேண்டும. சமீபத்தில் நடந்த இந்தியா டுடே சந்திப்பில், புற எதிரிகளின் ஆபத்து குறித்து மட்டுமல்லாமல், “அக எதிரிகளால்” வரும் ஆபத்துக் குறித்தும் மோடி பேசினார். புற எதிரிகளின் அடையாளம் நமக்குத் தெளிவாகத் தெரியும், ஆனால் அக எதிரி யார் எனும் வரையறைதான் தெளிவில்லாமல் இருக்கிறது.
இந்த அரசாங்கத்தின் வடிவமைப்பு, கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் பேசும் அனைவரும், விரிந்துகொண்டே போகும் இந்த வரையறைக்குள்தான் விழுவோம் என்பது நன்றாகத் தெரிகிறது. இப்போது பல்கலைக்கழக மாணவர்கள், தாராளவாதிகள், அறிவாளிகள், சுதந்திரமான ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் உட்பட, யாரெல்லாம் முழு மனதுடன் வலதுசாரிக் கதையாடலை ஏற்கவில்லையோ, அவர்கள் எல்லோரும் “அக எதிரிகள்” எனும் பட்டியலின் கீழ் வருகிறார்கள்.
எல்லோரையும் காவலாளி என்று அழைப்பதன் மூலம், குடிமக்கள் விழிப்புணர்வுக்கான ஒரு தேசிய அழைப்பை பிரதமர் விடுத்துள்ளாரா?
நன்றி: தி வயர்
ரோஹித் குமார்
https://thewire.in/politics/narendra-modi-main-bhi-chowkidar
தமிழில்: ஆஸிஃபா
சவ்கிதார் அதாங்க பாதுகாவலன் தான் மட்டுமே என்கிற எண்ணத்தில் மாேடி பதிவிட பாேய் …பாஜக தலைவரில் இருந்து காமெடி பீசு சேகர் வரை அனைவரும் ஏதாே பத்ம விருது பாேல தங்களின் பெயர்களில் சேர்த்து பெருமைப்பட கடைசியில் இது ஒரு தமாஷாக நாறிப்பாேய்விட்டது …தான் மட்டுமே என்கிற அவரின் நினைப்பை வீணாக்கியவர்கள் ..அவரது கட்சியினரே …அடுத்து வேற ஏதாவது புதுசா வருமா …?