தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புச் சங்கை ஊதிவிட்டது. ஆணையம் ஆட்சியாளர்களுக்குக் கடைசியாய் என்ன சகாயம் செய்ய முடியுமோ அதைச் செய்துகொடுத்தது. இன்னொரு பக்கத்தில், தேர்தல் அறிவிப்பைப் பொதுமக்களும் நிம்மதிப் பெருமூச்சுடன் வரவேற்றனர். இனிமேல் எங்கேயும் அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தமாட்டார்களே! அவசரச் சட்டங்கள் எதையும் அறிவிக்க மாட்டார்களே! அரைகுறையாக உருவாக்கப்பட்டு அரைகுறையாக நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்கள் எதையும் தொடங்க மாட்டார்களே! பிப்ரவரி 13 அன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி 155 திட்டங்களைத் “தொடங்கிவைத்தார்” அல்லது “அடிக்கல் நாட்டினார்” என்பது கவனிக்கத்தக்கது.
இதோ ஒரு வேடிக்கை: அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் நீண்டகாலமாக நகர்ந்துகொண்டிருந்தது. 2015 மார்ச் 14ல் தொடங்கிய அதற்கான பணிகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இதில் குஜராத் மாநில அரசாங்கம் எடுத்த முடிவு பரிகாசத்துக்கு உள்ளானது. திட்டத்தின் ஒரு பகுதியை மட்டும் “முடிப்பது”, அந்தப் பகுதியில் மட்டும் “சேவை” என்பதாக ஆரம்பிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, மெட்ரோ தடத்தில் 6.5 கி.மீ. மட்டும் அவசரமாக முடிக்கப்பட்டது. பிரதமர் அதை 2019 மார்ச் 4 அன்று தொடங்கிவைத்தார்.
கதை இத்தோடு முடியவில்லை. அந்த 6.5 கி.மீ. தடத்தில் இரண்டு மெட்ரோ நிலையங்கள் மட்டுமே உள்ளன. மற்ற நிலையங்களில் கட்டுமான வேலைகள் இன்னும் முடியவில்லை. தற்போது அந்த இரண்டு நிலையங்களுக்கிடையே ஓடிக்கொண்டிருப்பது சும்மா ஜாலி ரயில்தான். டிக்கட்டும் கிடையாது, கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசம்!
ஆமாவா இல்லையா?
இப்போது தீவிர விவகாரங்களுக்கு வருவோம். தேர்தலில் வாக்களிக்கும் தகுதி பெற்ற சுமார் 90 கோடி வாக்காளர்கள் பங்கேற்கப் போகிறார்கள். புதிய அரசைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இத்தேர்தலில் மையமான பிரச்சினையாக வருவது மோடி அரசின் செயல்பாடுதான். அதில் வாக்காளர்களுக்கான சில கேள்விகள் மிக முக்கியமானவை:
- சுதந்திர நாட்டின் சுதந்திரக் குடிமக்களில் ஒருவராக உங்களை உணர்கிறீர்களா? உங்களது மதம், சாதி, மொழி காரணமாக நீங்கள் அடித்துக் கொல்லப்படலாம், ஆடைகளை உருவி அம்மணமாக்கப்படலாம், உதைத்து நொறுக்கப்படலாம், புறக்கணிக்கப்படலாம், பாகுபடுத்தப்படலாம் என்ற அச்சங்கள் உங்களுக்கு இல்லையா? நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பீர்களானால், துன்புறுத்தப்படலாம், பாலியல் வன்மங்களுக்கு உட்படுத்தப்படலாம் என்ற பயம் உங்களுக்கு இல்லையா?
- நீங்கள் மற்றவர்களோடு உரையாடுவதோ, மற்றவர்களுக்கு அனுப்புகிற செய்திகளோ அரசாங்கத்தால் வேவு பார்க்கப்படவில்லை என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
- கடந்த ஐந்து ஆண்டுகளில் உண்மையிலேயே ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்று நினைக்கிறீர்களா? நீங்கள் பெற்றோர்கள் என்றால் உங்கள் மகனுக்கோ மகளுக்கோ விரைவில் வேலை கிடைத்துவிடும் என்று நம்புகிறீர்களா? (2019 பிப்ரவரி இறுதியில் 312 லட்சம் பேர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவிக்கிறது.)
- நீங்கள் ஒரு விவசாயி என்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை நிலை உயர்ந்திருக்கிறது என்று கருதுகிறீர்களா? உங்கள் வருமானம் அதிகரித்திருக்கிறதா? ஒரு விவசாயியாக இருப்பது உங்களுக்கு மகிழ்ச்சிதானா? உங்கள் மகனோ மகளோ விவசாயத்தில் ஈடுபடுவதை ஊக்குவிப்பீர்களா?
- பணமதிப்பிழப்பு ஒரு நல்ல நடவடிக்கைதான் என்று நினைக்கிறீர்களா? அந்த நடவடிக்கையால் நீங்கள் பயனடைந்ததாக நினைக்கிறீர்களா? அந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்திற்கு நன்மை கிடைத்ததாக நீங்கள் கருதுகிறீர்களா?
- பல அடுக்கு வரி விகிதங்கள் கொண்ட, மாதாமாதம் மூன்று முறை கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டிய ஜிஎஸ்டி குறுந்தொழில்களுக்கும் சிறுதொழில்களுக்கும் நடுத்தரத் தொழில்களுக்கும் நன்மை செய்திருப்பதாக நினைக்கிறீர்களா? சிறியதொரு தொழிலில் ஈடுபடுகிறவரால் ஜிஎஸ்டி சட்டத்திற்கு உட்பட்டுச் செயல்பட முடியும் என்று நினைக்கிறீர்களா? ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுகிற விதத்தால் தொழில்முனைவோர் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கருதுகிறீர்களா?
- ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் மீட்கப்படும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியப் பணத்தின் மதிப்பு ரூ.40 ஆக உயர்த்தப்படும், பயங்கரவாதம் ஒழிக்கப்படும் – குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டப்படும், பொதுப்படையாகச் சொல்வதானால் இந்தியாவுக்கு அந்த ‘அச்சே தின்’ வந்துவிடும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றியதா?
- ஜம்மு காஷ்மீரில் மோடி அரசின் புஜபலம், ராணுவ நடவடிக்கை, பெரும்பான்மைவாதம் ஆகிய அணுகுமுறைகள் வன்முறைக்கு முடிவுகட்டும், அந்த மாநிலத்தில் – குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் – அமைதியைக் கொண்டுவரும் நீங்கள் நினைக்கிறீர்களா?
மோடியும் அவரது நண்பர்களும்
- விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி ஆகியோர் அரசாங்கத்திற்குத் தெரியாமல்தான் வெளிநாட்டுக்குப் பறந்தார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
- மோடி அரசின் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் கொஞ்சம் கூட அப்பழுக்கற்றது என்று நம்புகிறீர்களா? அரசுக்குச் சொந்தமான எச்ஏஎல் நிறுவனம் கைவிடப்பட்டு ஒரு தனியார் நிறுவனத்திற்குச் சாதகம் செய்யப்படவில்லை என்று நினைக்கிறீர்களா? விமான விலை, விமானங்களின் எண்ணிக்கை குறைப்பு, நிபந்தனைகள் தளர்வு, விமானங்களை விநியோகிப்பதற்கான கால அட்டவனை, பிரான்ஸ் நாட்டுக் கம்பெனிக்கான இந்தியக் கூட்டாளி – இன்ன பிற விவகாரங்களில் விசாரணை எதுவும் தேவையில்லை என்று கருதுகிறீர்களா?
- மத்தியப் புலனாய்வு நிறுவனம் (சிபிஐ), அமலாக்கத் துறை (ஈடீ), வருமான வரித்துறை (ஐடி) உள்ளிட்ட, நாட்டின் முதன்மையான விசாரணை அமைப்புகள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் இயங்குகின்றன என்று நினைக்கிறீர்களா? சிபிஐக்குள் நடக்கும் அதிகாரச் சண்டை அந்த நிறுவனத்தின் நம்பத்தன்மையை உயர்த்தியிருக்கிறதா?
- அகமதாபாத், குவாஹாத்தி, ஜெய்ப்பூர், லக்னோ, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய ஆறு விமான நிலையங்களுக்குமான தனியார் ஒப்பந்தங்கள் குஜராத்தைச் சேர்ந்த ஒரே நிறுவனத்திற்குத் தரப்பட்டுள்ளன. இது சரிதானா? இது வழக்கமானதொரு நடைமுறைதான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அறிவுடைமையா அவசரப்புத்தியா?
நாடு எதிர்நோக்குகிற உண்மையான பிரச்சினைகளை இந்தக் கேள்விகள் பிரதிபலிக்கின்றன. நாட்டின் குடிமக்களில் ஒருவராக உண்மைப் பிரச்சினைகளில் உங்களுக்கு அக்கறை இருக்குமானால் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கேட்டுக்கொள்கிறேன். ஆம், இல்லை என்று எந்தப் பதிலையும் நீங்கள் சொல்லலாம், ஆனால் இந்தக் கேள்விகளைக் கண்டுகொள்ளாமல் விட முடியாது. மோடி அரசின் கடைசி நம்பிக்கை நீங்கள் இந்தக் கேள்விகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்கள், அல்லது பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப் படையினர் (ஐஏஎப்) நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கிளப்பிவிடப்பட்ட தேசியவாத உணர்ச்சி அலையில் அடித்துச்செல்லப்பட்டுவிடுவீர்கள் என்பதுதான்.
ஐஏஎப் இந்த நாட்டுக்குச் சொந்தமானது. அதன் நடவடிக்கையால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்கிறார்கள். ஆனால், புல்வாமா தாக்குதல் இந்த அரசின் தோல்வி. பாலக்கோட் நடவடிக்கை இந்திய விமானப் படையின் வெற்றி. மறுநாளே பாகிஸ்தான் நடத்திய தாக்குதலோ மோடி அரசின் மற்றொரு தோல்வி.
மேலே பட்டியலிடப்பட்டுள்ள கேள்விகளில் எதற்குமே புல்வாமா – பாலக்கோட் பதிலாகாது. இதனால் முதலில் குறிப்பிட்ட அச்சங்கள் நீங்கிவிடப் போவதில்லை. வேலைகள் கிடைத்துவிடப்போவதில்லை. விவசாயிகளைத் துயரங்களிலிருந்து விடுவித்துவிடப்போவதில்லை. குறுந்தொழில்களும் சிறுதொழில்களும் நடுத்தரத் தொழில்களும் மறுவாழ்வு பெற்றுவிடப்போவதில்லை. மல்யாவையோ நீரவ் மோடியையோ சோக்ஸியையோ இங்கே கொண்டுவரப்போவதில்லை. புலனாய்வு அமைப்புகளைக் கட்டுப்படுத்தப்போவதில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதியை நிலைநாட்டப்போவதில்லை.
திருவாளர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரப் பேச்சுகள் பாலக்கோட் பகுதியில் ஐஏஎப் மேற்கொண்ட நடவடிக்கையைச் சுற்றியே வருகின்றன. வாக்காளர்களிடையே உணர்ச்சிகளைக் கிளறிவிடுகிற நோக்கமே அந்தப் பேச்சுகளில் மையம் கொண்டிருக்கிறது.
பாலக்கோட்டிலிருந்து தனக்கு வெற்றி வந்து சேரும் என்பது அவரது நம்பிக்கை. இந்திய மக்கள் அறிவார்ந்து சிந்திப்பவர்கள் என்பது எனது நம்பிக்கை.
ப. சிதம்பரம்
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
தமிழில்: அ.குமரேசன்
ப சி க்கு பவர் பசி