2014 பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் உள்ளிட்ட இதரக் கட்சிகளை விட, பிஜேபி, சமூக வலைத்தளங்களை, குறிப்பாக ட்விட்டரை அதிகம் பயன்படுத்தியது. நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலம் முதலாகவே ட்விட்டரை பெருமளவில் பயன்படுத்தி வருகிறார். தனது ஆதரவாளர்களை வைத்து, பெருமளவில் ட்விட்டர் கணக்குகளைத் துவக்கி, அதனை ஒரு வலுவான பிரச்சார சாதனமாக பிஜேபி மாற்றியது. ஒருவகையில் காங்கிரஸ் கட்சி, சமூக வலைத்தளங்களின் வீச்சை அறியாமல் கோட்டை விட்டது என்றே சொல்லலாம்.
2014 தேர்தலோடு ஒப்பிடுகையில், இந்தத் தேர்தலில், இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் வரவு. இந்தியாவில் தற்போது செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.2பில்லியன் என்கிறது ஐடிசி (International Data Corporation) புள்ளிவிவரம். கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது 581 மில்லியன் பயனாளர்கள் செல்போன் வைத்திருந்தனர்
செப்டம்பர் 2016 முதல், இந்தியா முழுக்க ஜியோ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அது வரை, டேட்டாபேக்கின் விலை அதிகமாக இருந்தது. இதனால் செல்போன் பயன்படுத்துவோர் பெரும்பாலும் டேட்டாவை அரிதாகவே பயன்படுத்தினர். ஜியோவின் அறிமுகம், டேட்டாவின் விலையினை தாறுமாறாகக் குறைத்தது. இந்தப் போட்டியால், இதர செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களும் டேட்டாபேக்குகளின் விலையை கணிசமாகக் குறைத்தன. இதனால், டேட்டாவுக்கு செலவிடுவது ஒரு பெரிய விஷயமாகவே இல்லாமல் போனது. இதன் காரணமாக, இளைஞர்கள், நடுத்தர வயதுடையவர்கள், வயதானவர்கள்உள்ளிட்டோர், சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரம் கணிசமாகஅதிகரித்துள்ளது.
இன்று சமூகவலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் இந்தியாவில் 27 கோடி பேர்.
இவர்களில் ரிலையன்சின் அலைவரிசை சேவையான ஜியோவைப் பயன்படுத்துபவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வத் தகவலின்படி 284.44மில்லியன் (ஜனவரி, 2019 வரை) பேர். பத்துரூபாய்க்குக் கூட இவர்கள் இணைய சேவையைத் தருகிறார்கள்.
தொலைக்காட்சி செய்தி சேனல்கள் ஒரு செய்தியை ‘ப்ரேக்’ செய்வதற்கு முன்பாகவே, சமூக வலைதளங்களில் அந்தச் செய்தி பரவிவிடுகிறது. சமூக வலைதளங்கள் தவிர்த்து, வாட்ஸ்அப் இன்று ஒரு பெரிய வரவாக உருவாகியுள்ளது. வாட்ஸ்அப்பும் தேர்தல் காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் ஒரு பங்கை வகிக்கிறது.
சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை, ஜனவரி முதலாகவே, தேர்தல் பரபரப்புத்தொற்றிக் கொண்டது. கூட்டணி எப்படி அமையும், எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு போன்றவற்றோடு அரசியல் கட்சிகளின் சின்னச் சின்ன நகர்வுகளும் அலசப்பட்டன. நேர்த்தியான விமர்சனம், கூர்மையான அரசியல் அலசல் போன்றவற்றை சமூக வலைதளங்களில் எதிர்பார்க்க முடியாது. சொற்பமான பதிவர்கள் மற்றும் நன்கு அறிமுகமான எழுத்தாளர்களே மிகவும் தீவிரமான, ஆழமான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். பெரும்பான்மையானோர் நக்கல் நையாண்டியான பதிவுகளையே எழுதுகிறார்கள்.
இது போன்ற பதீவுகள் மற்றும் மீம்களை வெறும் பகடி என்று எடுத்துக் கொள்ளாமல் அரசியல் கட்சிகள் இவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்கின்றன. சமீபத்திய உதாரணமாக, பாட்டாளி மக்கள் – அதிமுகவும் கூட்டணி அறிவிப்பு வந்தவுடன், பாமகவை விமர்சித்து மீம்கள் நூற்றுக்கணக்கில் பறந்தன. அன்புமணியும், ராமதாசும், அது வரை அதிமுகவை விமர்சித்து பேசிய பேச்சுக்களின் வீடியோக்கள் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டன. வழக்கமாக, பாட்டாளி மக்கள் கட்சியையோ, ராமதாஸ் அல்லது அன்புமணியையோ விமர்சனம் செய்தால், பாமக தொண்டர்கள், அவ்வாறு விமர்சிப்பவர்களை, கடுமையாகத் திட்டுவார்கள். அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். ஆனால், பாமக-அதிமுக கூட்டணி உறுதியானதையொட்டி, எழுந்த விமர்சனங்களுக்கு எவ்விதமான எதிர்வினையையும் காண முடியவில்லை. பாமக தொண்டர்கள் அமைதியாகவே இருந்தார்கள்.
ஆனால் இந்த விமர்சனங்கள் அன்புமணியை அமைதியாக இருக்க விடவில்லை. இரண்டொரு நாளில், அவர் கூட்டணி குறித்து விளக்க, பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தார். அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்போ தலைவலி போய் திருகுவலியாக அவருக்கு அமைந்தது. பத்திரிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அன்புமணி அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட, அதுவும், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாயிற்று. பாமக-அதிமுக கூட்டணி தொடர்ந்து விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்கள் இல்லாது போயிருந்தால், இந்தக் கூட்டணி இத்தகைய விமர்சனத்துக்கு ஆளாகியிருக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
சமூகவலைதளங்களில் தொடர்ந்து அரசியல் சார்ந்த பதிவுகளை எழுதி வரும் சிலர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரியும் நம்பிக்கை ராஜ் என்பவர் அதிமுகவை ஆதரித்து, முகநூலில் தொடர்ந்து எழுதி வருபவர்.
“சமூக ஊடகங்களின் தாக்கம் இந்தத் தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும். 2013 வரை குஜராத்தைத் தாண்டி வேறு எங்கும் பெரிதாக தெரிந்திராத நரேந்திர மோடி என்ற பாஜக முதல்வரை, இந்தியா முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் கொண்டுபோய் சேர்த்தது சமூக ஊடகங்கள்தான். காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய தாக்கத்தையும், பல போட்டோஷாப் வித்தைகள் மூலம் குஜராத் என்ற ஒரு மாய உலகத்தை மோடிபடைத்திருப்பதாகவும் காட்டி, குஜராத் அல்லாத மற்றப் பகுதி மக்களை முட்டாளாக்கியதும் இதே சமூக ஊடகங்கள் மூலமாகத்தான். தற்போது அதே குஜராத் மாயைகள் அம்பலப்பட்டு நிற்பதும், அதை சமாளிக்க முடியாமல் பாஜகதிணறுவதும் அதே சமூக ஊடகங்களால்தான்.
“#GoBackModi #GoBackRahul போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்ட் ஆகி உலக அளவில் செய்தியானதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்களே. தற்போதையச் சூழலில், வீட்டுக்கு ஒருவராவது சமூக வலைதளங்களில் இயங்குகிறார். 2019 தேர்தலில், வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சமூக வலைதளங்கள் முக்கிய இடத்தை வகிக்கும்” என்றார்.
நம்பிக்கை ராஜ் சொல்வது மிக முக்கியமானது. பங்களாதேஷிலோ அல்லது உலகின் எங்காவது ஒரு மூன்றாம் உலக நாட்டிலோ, யாராவது ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ காட்சி கிடைத்தால், அதை இந்தியாவின் ஒரு இந்து தாக்கப்பட்டார் என்பதாய் சொல்லி பிஜேபி ஆட்சிக்கு வந்தால்தான் இது போன்ற தாக்குதல்கள் தடுக்கப்படும் என்கிற பச்சைப்பொய்யை பரப்பி பிரச்சாரம் செய்கிறார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, altnews, hoaxslayer, போன்ற இணையதளங்கள், ஒரு பொய்யான போட்டோஷாப் புகைப்படத்தையோ, எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசாத ஒன்றை பேசியதாக பிஜேபி ஆதரவாளர்கள் பரப்பினாலோ, ஒரு சில மணி நேரங்களில் உண்மை என்னவென்பதைக் கண்டுபிடித்து அம்பலப்படுத்துகின்றன. இதன் காரணமாக, 2014 தேர்தலை போல, பொய்களை எளிதாக பரப்ப முடியாமல் கடுமையான நெருக்கடியில் பிஜேபி ஆதரவாளர்கள் இன்று தவிப்பதற்கு ஒரே காரணம் சமூக வலைதளங்களே.
கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று மோடி, சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சித்து விட்டது என்று தமிழகம் நம்பியது. அன்றைய தினம் #GoBackModi என்ற ஹேஷ்டேக், நீண்ட நேரத்துக்கு ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. இது பிஜேபிக்கு கடுமையான தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு நான்கைந்து முறை மோடி சென்னை வந்தபோதெல்லாம், #GoBackModiட்ரெண்ட் ஆனது. மோடி மீதும், பிஜேபிமீதும், தமிழக மக்கள் எத்தனை கடுமையான வெறுப்பில் உள்ளனர் என்பதை சமூக வலைதளங்கள் மூலமாக இணைய பயன்பாட்டாளர்கள் பிஜேபிக்கு உணர்த்தினர். இதற்கு எதிர்வினையாக, பிஜேபி ஆதரவாளர்கள், #TNWelcomesModi என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய எடுத்த முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
முகநூலில் திமுகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவிடும், தேவி சோமசுந்தரம் என்பவர், “சோஷியல் மீடியா தந்த சுதந்திரம், அரசியலில் நிலவும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக் காட்ட உதவுகிறது. ஆஸ்திரேலியா பேருந்து நிலையத்தை, குஜராத் பேருந்து நிலையம் என்று இனியும் பொய் சொல்ல முடியாத நிலையை சமூக வலைதளம் உருவாக்கியுள்ளது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கில் 300 பேர் இறந்தனர் என்ற பொய்யை உடைக்க உதவுவதும் சமூக வலைதளங்களே. பொய்கள் உடைகையில், சௌகிதார் வேசம் போடும் நெருக்கடிக்குத் தள்ளப்படுக்கிறார்கள். இதன் காரணமாகவே, பிஜேபி இன்று சமூக வலைத்தளங்களை கண்டு அஞ்சுகிறது. பிஜேபி கட்டமைத்த இந்த மாயத்தோற்றத்தை நம்பியே ஒரு கட்டத்தில் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை மறுக்க முடியாது.
இவ்வாறு சமூக வலைதளத்தில் வரும் எதிர் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல்தான், பாராளுமன்ற குழுவை வைத்து, சமூக வலைத்தளங்களை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டு வருகிறது. பொய்களை நெடுநாள் அரங்கேற்றி வெற்றி பெற முடியாது என்பதை பிஜேபிக்கு உணர்த்தியதில் சமூக வலைதளங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
அதே நேரத்தில், சமூக வலைதளங்கள் அளிக்கும் இந்த கட்டுப்பாடற்ற சுதந்திரம் எதிர்மறை விளைவுகளையும் உருவாக்கி உள்ளது. எல்லாவற்றையும் கேலி கிண்டலோடு பார்க்கும் மனோபாவத்தால், மக்களிடம் அவசியமாக போய் சேரும் விவகாரங்கள், அதற்குரிய தீவிரத்தன்மையை இழந்ததையும் மறுக்க முடியாது” என்றார்.
பிஜேபி ஆதரவாளர்கள் பலர், ட்விட்டரில், பிஜேபியை விமர்சனம் செய்வோரை, குறிப்பாக பெண்களை, தரக்குறைவாக பாலியல் ரீதியாக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களில்பலரை, நரேந்திர மோடி பின் தொடர்ந்து வருகிறார். இது குறித்து நீண்டகாலமாக கண்டுகொள்ளாமல் இருந்த ட்விட்டர் நிறுவனம், இது போல பெண்களை பாலியல் ரீதியாக விமர்சனம் செய்யும் ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை சமீபத்தில் ரத்து செய்தது. இது பிஜேபியினரை கடுமையாக எரிச்சல் அடைய வைத்தது. கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்ற நிலைக் குழு மூலமாக, ட்விட்டர் சிஇஓக்கு சம்மன் அனுப்பியது இதையொட்டியே.
முகநூலில் கட்சி பாகுபாடில்லாமல் தனது கருத்துக்களை பதிவு செய்து வரும் ஷாஜஹான், இது குறித்து பேசுகையில், “சமூக வலைதளங்கள் என்று பொதுவாகச் சொல்வதை விட, சமூக ஊடகங்கள் என்பதே சரியாக இருக்கும். வலைப்பூ போன்றவை சமூக வலைதளங்கள். தேர்தலில் இவற்றின் தாக்கம் அதிகம் இருக்காது. ஏனென்றால் இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் ஆழமாகவும், நீளமாகவும் இருக்கும். இவற்றின் வீச்சு குறைவு. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவற்றின் தாக்கங்கள் அதிகம் இருக்கும். 2014 தேர்தல் சமயத்தில், போட்டோஷாப் மூலம் திருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான போலிப்படங்கள் வெகுவாகப்பரப்பபட்டன. ஜப்பானின் புல்லட் ட்ரெயின், சீனத்தின் பேருந்து நிலையங்கள், ஐரோப்பா வின் கட்டிடங்கள் போன்றவை, மோடியால் குஜராத்தில்உருவாக்கப்பட்டது என்ற செய்தி பரப்பபட்டது.
மோடி என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டதற்கு இது முக்கிய காரணியாக இருந்தது. குஜராத் பின் தங்கித்தான் உள்ளது என்ற உண்மைகளை இது போன்ற போலி கவர்ச்சிப்படங்களால் காட்ட முடியாது. கட்டுரைகளாலும், புல்ளிவிபரங்களாலுமே காட்ட முடியும். ஆனால், இது போன்ற ஒரு கட்டுரை வருவதற்குள் பத்து பொய் படங்கள்பரப்பப்படும். படங்கள் அளவுக்கு கட்டுரைகள் பாமரர்களை எட்டாது. அவர்களால் படிக்கவும் முடியாது. சமூக ஊடகங்களில் இது போன்ற பாஜகவின் போலி பிரச்சாரங்கள் மூலமாகவே பாமரர்களின் வாக்குகளை அவர்களால் பெற முடிந்தது. இத்தனைக்கும் இன்று உள்ளது போல 2014ல் ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் இல்லை.
ஆனால் இன்று பீகார்,உத்திரகாண்ட், ராஜஸ்தானிலிருந்து தமிழகத்துக்கு, புலம் பெயர்ந்து கூலித்தொழிலாளிகளாக வருபவர்களிடம் கூட ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 5 ரூபாய் செலவில், அவர்களுக்கு 2 ஜிபிடேட்டா கிடைக்கிறது. இதனால் வீடியோவோ, படங்களோ பகிர டேட்டா செலவு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இதை மனதில் வைத்தே, பிஜேபி தலைவர் அமித்ஷா, பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் “உண்மையோபொய்யோ வருகிற செய்திகளை பகிருங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறார். சத்தீஸ்கர் அரசு, 1500 கோடி ரூபாய் செலவில், ஜியோ இணைப்புடன் 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை இலவசமாக விநியோகம் செய்தது காரணம் இல்லாமல் இல்லை. மத்தியப்பிரதேசத்திலும், இது நடந்தது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பாஜக 50,000 வாட்ஸப் க்ரூப்புகளை உருவாக்கியுள்ளது. இதை மனதில் வைத்தே, ஏதாவதொரு ஐரோப்பியநதியின் மீது கட்டியபாலத்தை வைகை நதியின் மீதான பாலம் என்றும், ஏதோவொரு கட்டிடத்தை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை என்றும் பொய்ப்பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்தப்படங்கள் இந்தி வாசங்களுடன் வடக்கே பரப்பப்படுகின்றன. வடக்கில் உள்ள மக்கள் இந்த பிரசாரங்களை நம்பும் சாத்தியங்கள் அதிகம். ஆனால் தெற்கே இந்தப் படங்களைப் பார்த்து ஏமாறுவோர் குறைவு.
பிரமோத் மகாஜன் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, செல்போன் நிறுவனங்களிடம் தொலைபேசி எண்களைப் பெற்று, “மே வாஜ்பாய் போல் ரஹான்ஹூன்” (நான் வாஜ்பாய் பேசுகிறேன்) என்று தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார். அப்படியான கட்சி தான் பாஜக. சமூக ஊடகங்களின் மூலம் பரப்பப்படும் இத்தகைய பிரச்சாரங்கள் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். கவர்ச்சிகரமான பொய்கள் இன்னும் அதிக மக்களைச் சென்றடையும். இவற்றை வேறுபாடுபடுத்திப் பார்க்க பழக்கப்படாத பாமரமக்கள் தான் வாக்களிக்கப் போகிறார்கள்” என்றார் ஷாஜஹான்.
சமூக வலைதளங்களை தொடர்ந்து கவனித்து வரும், எழுத்தாளர் ஜா.தீபா, இது குறித்து விரிவாகவே பேசினார்.
“இந்தியா போன்ற அதிகளவு மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொரு குடிமகனிடமும் தங்களது பிரசாரத்தை கொண்டு செல்ல அரசியல் கட்சிகள் எதையும் செய்யத்துணிகின்றன. ‘போடுங்கம்மா ஓட்டு..சின்னத்தைப் பார்த்து” என்று தெருவுக்குத் தெரு கூவிய கோஷங்கள் இந்த டிஜிட்டல் சமூகத்தில் காணாமல் போய்விட்டன. கட்சியின் கடைநிலைத் தொண்டன் எந்த எதிர்பார்ப்புமில்லாமல் இரவும் பகலும் போஸ்டர் ஒட்டியும், நோட்டிஸ்களை விநியோகித்தும் வளர்ந்த கட்சிகள் இன்று தங்களுக்கென்று தனியாக ஐடிசெல்களை வைத்திருக்கின்றன. அதில் கட்சியின் கொள்கைகளை (?) , பிரசாரத்தை, மீம்ஸுகளை பரப்புபவருக்குத் தக்க சம்பளமும் தருகிறார்கள். அந்தக் கடைநிலைத் தொண்டன் இப்போது தனது கட்சியின் போக்கினை டிஜிட்டல் ஊடகங்களில் தான் பார்த்து தெரிந்து கொள்கிறான்,
வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வந்து கொட்டுகிற தகவல்களையும் செய்திகளையும் யார் நம்புவார்கள், அதனை யார் அதிகம் பகிர்வார்கள் என்பது அரசியல் கட்சிகளின் ஐடி செல் அறியும். அந்த மக்களை நோக்கியே தகவல்கள் கொட்டப்படுகின்றன. அவர்களை உணர்ச்சி மிகுதியில் வைத்துக் கொள்ளவே சில செய்திகள் பொய்யாக சொல்லப்படுகின்றன அதற்கு உதாரணமாக சமீபத்திய மாபெரும் பொய்யான பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் சொல்லப்பட்ட போலித் தகவல்களை சொல்ல முடியும். தேசபக்தி, மானியங்கள் குறித்த பொய்ப் பிரச்சாரங்களை அதிகம் பகிருவது பொருளாதாரத்தின் கீழ்நிலையில் உள்ளவர்களும், பெண்களும் தான்.
அதே போல் ஆன்மீகச் செய்திகள், பசு மாடு போற்றுவோம் போன்ற கருத்துகளும் தொடர்ந்து சில மாதங்களாக வெகு அதிகமாகப் பரப்பப்படுகின்றன, இப்போதெல்லாம் அப்படியான பதிவுகளின் கீழ் தவறாமல் ‘ஜெய் பாரத் மாதா’ என்கிற வாசகமும் சேர்க்கப்படுகிறது. இது திட்டமிடப்பட்ட பதிவு. கலாச்சாரம் தனது மதத்தின் மூலமாகவே காக்கப்படுகிறது என்று நம்புகின்ற ஆண்களும் பெண்களும் தான் இந்தச் செய்திகளைப் பகிர்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தேசத்துக்கு ஏதோ ஒருவகையில் சேவை செய்வதாகவே நினைக்கவைக்கப்படுகின்றனர். இவையெல்லாம் கூட தேர்தல்களைக் குறி வைத்து நகரத்தப்படுகிற பிரச்சாரங்களே.
சமூக வலைதளங்களின் மிகப்பெரிய பலமே உரையாடலுக்கான, விவாதத்துக்கான களத்தைக் கொண்டிருப்பது தான். முன்பெல்லாம் எதிர்க்கட்சியை மேடையேறி ஒருவர் தரக்குறைவாக பேசினாலும், அதற்கான கீழ்த்தரமான எதிர்வினை என்பது அரிதாகவே இருந்தது. இன்று அரசியல் கட்சிக்கு எதிராக மாற்றுக் கருத்தை நாகரீகமான முறையில் விமர்சனமாக முன்வைத்தாலும் இழிவான வார்த்தைகளால் தாக்கப்படுவது சமூக ஊடகங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை பெரும்பாலும் கட்சித் தொண்டர்களே செய்கின்றார்கள். இப்படி வசைபாடுதல் தவறு என்று ஒரு கட்சித்தலைமை கூட தொண்டர்களை இதுவரை வன்மையாகக் கண்டித்ததில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். எந்தக் கட்சியினர் இவ்வாறு அதிகமும் கீழ்த்தரமாக நடந்து கொள்கின்றனர் என்பதை சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் கவனித்துக் கொண்டு தானிருக்கின்றனர்” என்றார் ஜா.தீபா.
சமூக ஊடகங்களின் தாக்கம், உண்மை செய்திகளாகவோ, பொய் செய்திகளாகவோ, அதிகப்படியான மக்களைச் சென்றடைகிறது என்பதை மறுக்க முடியாது.
சமூக ஊடகங்கள் நிச்சயம் தேர்தலின் வெற்றியை கணிசமான அளவு தீர்மானிக்கும். இது மற்ற யாவரையும் விட பாஜகவுக்கு தெரியும். ஏனெனில் அவர்கள் சமூக வலைதளங்களை கடந்த 2014 தேர்தலில் வெகு விமரிசையாகப் பயன்படுத்தினார்கள், அது ஒரு கத்தி என்று தெரியாமல். கடந்த தேர்தலில் அந்தக் கத்தி அவர்களுக்கு கணிசமான வாக்காளர்களை அறுவடை செய்ய பயன்பட்டது. இந்தத் தேர்தலில் அந்தக் கத்தி பொய்ப்பிராசாரங்களால் அவர்களேயே பதம் பார்க்கத்தொடங்கியிருக்கிறது. .
நமது பணி, பொய்களைக் கூடுமான வரை களைந்து, உண்மைகளை மக்களிடம் சேர்த்து, விழிப்பான வாக்காளர்களை உருவாக்கி, அவர்களை இந்தத் தேர்தலில் சரியான வாக்காளர்களைத் தேர்ந்தெடுக்கச் செய்வதே.