சத்குரு ஜக்கி வாசுதேவ், ஒரு புதிரான மனிதர். இப்போது இந்துத்துவ தேசியவாதத்தின் ஆன்மிக, கலாச்சார அடையாளச் சின்னமாகியிருக்கிறார். நீண்ட வெண்தாடி மார்பில் புரள, மென்மையாக உரையாடுகிறார். பொறுமையாகவும் எதையும் அளந்துவைத்தும் பேசுகிறார். கால எல்லைகளைக் கடந்த ஞானத்தைப் பற்றி பிரசங்கிக்கிறார். சில சமயம் சர்வதேச அரசியல் குறித்தும் வியூகங்கள் குறித்தும் கருத்து உதிர்க்கிறார்.
இத்தகைய தோற்றமும் செயல்பாடுகளும் கொண்ட, சத்குரு, இந்தியாவின் அதிதீவிர தேசியவாதிகளுக்கும், பாஜக ஆதரவுக் குழுவினருக்கும் வரப்பிரசாதமாக விளங்குகிறார். தங்கள் அரசியலுக்கு ஆதரவு அளிப்பதற்கும், அவர்களைப் பரவலாகக் கொண்டுசெல்வதற்குமான பிரபலமான ஆன்மிக குரு இவர்களுக்குக் கிடைத்திருக்கிறார்.
இப்போது தேசியவாதம் உச்சத்தில் இருக்கும் நாட்டில், இவர் மிக விரைவில் அனைவரையும் கவந்துவிட்டதில் வியப்பில்லைதான்.
இந்துத்துவ அதிரடி தேசியவாதிகளுக்கு சத்குருவினால் ஆன பயன் தனித்தன்மை வாய்ந்தது; குறிப்பிட்ட நோக்கிலானது. நடைமுறைத்தன்மை கொண்டதும் குறுங்குழுவாதத்தன்மை கொண்டதுமான அரசியலுக்கு அவர் உலகு தழுவிய தத்துவார்த்த அடித்தளத்தை அளிக்கிறார். தார்மீகத் தத்துவம், ஆன்மிகச் சிந்தனை, சரியான செயல்முறை ஆகியவை குறித்துச் சற்றே அரூபமான ஆனால், அமைதியாக முன்வைக்கப்படும் உரைகளின் மூலம் சத்குரு, தீவிர இந்துத்துவ அரசியலுக்கான சாதகத்தை அளிக்கிறார்.
சத்குரு வெளிப்படுத்தும் சாந்தம் மிகவும் நேர்த்தியானது, நயமானது. இதில்தான் அவருடைய அணுகுமுறையின் முழுமை இருக்கிறது. அதனால்தான் இந்தியத் தொலைக்காட்சிகளில் அதிக சத்தம் போடும் தொகுப்பாளர்கள்கூட அவரை நேர்காணல் செய்யும்போது தங்கள் குரலைத் தணித்துக்கொள்கின்றனர்.
ஆனால், அன்பு ததும்பும் மனிதநேயப் பிரசங்கம் என்னும் தோற்றத்துக்குப் பின்னால், பழிவாங்கல், விலக்கி வைத்தல், சகிப்பின்மை ஆகியவை மறைந்திருக்கின்றன. டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் நவிகா குமாருடனான சத்குருவின் அண்மை நேர்காணலில் இது வெளிப்பட்டது.
இந்தியா, குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் தீவிரவாத வன்முறைக்கு ஒரு தீர்வு தேவை என்று இந்த நேர்காணலில் சத்குரு குறிப்பிட்டார். “உள்ளுக்குள் இருக்கும் எதிரியை 100 சதவீதம் எதிர்கொண்டாக வேண்டும் என்றார்.
காஷ்மீரில் கிளர்ச்சி செய்யும் மக்களை வன்முறை கொண்டு அடக்குவதென்பதே அவரின் ‘ஆன்மீகத்’ தீர்வாக இருக்கிறது. இவர்களில் கல்லெறிபவர்களுக்கும் இதே தீர்வு தான்.
மேலும், அவர் சாதாரணக் குடிமக்களைப் போலவே, தீவிரவாத அமைப்புகளுக்குப் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு ஆதரவு அளிப்பதாக இந்தியாவின் ‘இடதுசாரி தாராளவாதி’களைக் குற்றம்சாட்டினார்.
தொலைக்காட்சித் திரையின் பின்னணியில் பொருத்தமில்லாமல், உமர் கலித் மற்றும் கன்னையா குமார் ஆர்ப்பாட்டம் நடத்தும் காட்சிகள் ஒலியில்லாமல் தோன்ற, தன்னை நேர்காணல் செய்பவரின் உற்சாகத்திலிருந்து குறிப்பைப் பெற்ற சத்குரு, அரசுக்கு எதிரான குரல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
“சட்டத்தின்படி இவர்கள் வீதியில் நடமாடக் கூடாது” என்று இந்த ஆன்மிகக் குரு கருதுகிறார். ஆனால், அவருக்குச் சட்டத்தின் மீதுகூட நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. உமர், கன்னையா குமார் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனநாயக நீதி முறையிலிருந்து விலகிச் செல்வது பற்றியும் குறிப்பிட்டார்.
“இதுதான் அதற்கான நேரம். நாடு அதற்குத் தயாராக இருக்கிறது” என்கிறார் சத்குரு.
விடாப்படியான இடதுசாரி தாராளவாதக் குரல்கள் எப்படியாவது அமைதியாக்கப்பட வேண்டும் என விரும்பும் அதி தீவிர தேசியவாதிகளுக்கு இத்தகைய பேச்சு உதவிகரமானது. மிதமான வலதுசாரிகள், மதில் மேல் பூனைபோல இருப்பவர்கள், நடுவாந்தரமான மிதவாதிகள் ஆகியோர் பாஜகவின் ஆதாரமான செயல்திட்டத்தை ஆதரிக்க மாட்டார்கள். ஆனால், மென்மையாகப் பேசும் ஆன்மிக குருமார்களின் இத்தகைய பேச்சுக்கள் அவர்களை உணர்வுப்பூர்வமாக ஈர்க்கின்றன.
உண்மையைச் சொல்வது எனில், வீராவேசமாக மார்தட்டிக்கொள்பவர்கள், இணையத்தில் டிரால்களை மேற்கொள்வோர், மேஜர் கவுரவ், விவேக் அக்னிகோத்ரி அல்லது ராஜீவ் மல்கோத்ரா போன்ற யூடியூப் அறிவுஜீவிகள் ஆகியோரிடமிருந்து சத்குரு எந்த விதத்திலும் வேறுபடவில்லை. ஆனால், இது தவறான ஆன்மிகம், ஆழ்நிலை தியானத்தின் செழுமை போன்ற பூச்சுக்களால் மறைக்கப்பட்டுள்ளது.
இங்குதான் அவரது மக்கள் தொடர்பு வெற்றி அடங்கியிருக்கிறது. தார்மீக ரீதியாக அதிருப்தி அடைந்திருக்கும் பார்வையாளர்களைத் தத்துவார்த்த போதனையால் போர்த்தப்பட்ட தனது அரசியலை ஏற்றுக்கொள்ள வைக்கும் செயலாக இது அமைகிறது. அரசியல் சாராத பிம்பத்தை முன்னிறுத்துவது இந்தச் செயலின் முக்கிய அங்கம்.
தான் அரசியல் சாராத நபர் என சத்குரு தொடர்ந்து வாதிடுகிறார். ஆனால் அவர் சொல்லும் செய்திகளை மேலோட்டமாகப் பார்த்தால்கூட, அவர் அரசியல் நோக்கம் கொண்டவர் என்பது புரியும். சொல்லப்போனால் அவர், மோட்ச நிலை குறித்த தத்துவ போதனையில் ஈடுபடும்போதுகூட அரசியல் மட்டுமே கொண்டிருக்கிறார். கடந்த ஐந்தாண்டுகளில், தற்போதைய அரசின் கொள்கைகளையோ, இடதுசாரி தாராளவாதிகள் தேசத்தைத் துண்டாக்க நினைக்கின்றனர் என்னும் வாதத்தையோ அங்கீகரிக்காத அவரது உரை எதுவும் இல்லை.
ஒருவர் அரசியல் நிலைப்பாடு கொண்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லைதான். ஆனால் அந்த அரசியலை நேர்மையாக வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். மிகவும் ஆழமான அரசியல் கருத்துகளைக் கூறும்போதும் அரசியல் விவகாரங்கள் குறித்துத் தனக்கு ஆர்வமில்லை என்பதுபோல அவர் வெளிக்காட்டிக்கொள்ளும் வசீகரமான பாவனையில்தான் அவருடைய ஏமாற்று வேலை அடங்கியிருக்கிறது. ஆனால், அந்த வசியம் முழுமையானதாக இருக்கிறது எனச் சொல்ல வேண்டும்.
இந்த உத்திகளை எல்லாம் மீறி, தற்போதைய அரசின் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தினமும் அவர் ஏதேனும் தாக்குதல் தொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் சத்குருவின் வெளித்தோற்றம் மெல்லக் கலையத் துவங்கியுள்ளது. பிரச்சினையைத் “தீர்த்துவிட” வேண்டும் என்கிறார். அல்லது இடதுசாரி தாராளவாதிகளையும் அடங்க மறுக்கும் காஷ்மீர் மக்களை ஒரேயடியாக அகற்ற வேண்டும் என்கிறார். சகிப்புத்தன்மை இல்லாத தேசியவாதியாக அவர் இருப்பதையே இவையெல்லாம் உறுதி செய்கின்றன.
தீவிர இந்துத்துவர்களுக்கும், பாஜக ஆதரவுத் தரப்பினருக்கும் சத்குரு முக்கியமான சொத்தாக விளங்குவார். அதாவது, மதச்சார்பற்ற தன்மை கொண்டவர்களை விளிம்புக்குத் தள்ளி, இந்து மதத்தை மையமாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கான இந்துத்துவர்களின் கலாச்சார தேசியவாதத்திற்கு மிகவும் தேவையான ‘கண்ணியமான’ பிரச்சார சக்தியாக அவர் இருக்கிறார்.
அன்சஷுமன் சவுத்ரி
அன்ஷுமன் சவுத்ரி தில்லியைச் சேர்ந்த கோட்பாட்டு ஆய்வாளர். தற்போது இன்ஸ்டிடியூட் ஆப் பீஸ் அண்ட் கான்பிளிக்ட் ஸ்டடீஸ் அமைப்பில் மூத்த ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.
நன்றி: தி வயர் (https://thewire.in/politics/why-hindutva-nationalists-need-a-sadhguru)
What is wrong in it? This is a hindu country, if others want to live here they have to abide the rules of this country. Can u go and protest against Muslims or government in a Muslim country like Saudi? This must be a hindu country with all its spiritual treasures. And should be declared as a hindu nation.
சவுக்கு சங்கர் அவர்களே , சாதிகுருவை பற்றி எவ்வளவு எழுதினாலும் உங்களை தூற்ற ஒரு கும்பல் இருக்கிறது. உடனே காருண்ய பெயரை கொண்டு வந்து ஜகதேவின் செயல் பாடுகளை திசை திருப்பும். தமிழ் நாட்டிற்கு பிழைப்பிற்காக வந்த ஜெகதேவும் ரஜினியும் வந்தார்கள். ஒருவர் தந்தான் கடுவுள் என்கிற வகையிலே பேசுகிறார் இன்னொருவர் கடவுள் சொல்றார் தான் செய்றார் என்கிறர் இருவரும் தமிழ்நாட்டில் சொத்து சேர்த்து இங்கேயாயே ஆட்சி பிடித்து தமிழர்களை இழிவாக பேசி அதற்கு ஒரு கும்பல் வைத்து அதற்க்கு அரசியல் பின்புலம் , உங்கள் கட்டுரையை இவர்களை பற்றி எழுதி நேரத்தை வீணடிக்காதீர்கள் கண்டிப்பாக ஒன்றும் நடக்காது , வாழ்த்துக்கள்
ஜனநாயக வழியில் சட்டத்தின் ஆட்சி (Rule of Law under Democracy) என்ற பெயரில் நடக்கும் இந்திய ஆட்சிமுறை இந்தமாதிரி கபட கார்ப்பரேட் மதவாத சக்திவாய்ந்த நபர்களால் தீவிர வாத அமைப்புகள் ஏராளமாக தோன்றும். உண்மையான ஜனநாயகம் போலியானதாக மாறி இரத்த கிளரி ஏற்படும். காஷ்மீரில் நடப்பதை போல. காலசக்கரம் மாறிக்கொண்டே இருக்கும்.