தன்னைத்தானே காவலாளி என்று பறைசாற்றிக்கொள்ளும் மோடியின் தலைமையின் கீழ், குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காக நம்பகத்தன்மை மிக்கதான லோக்பால் பலிகொடுக்கப்பட்டுவிட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தாக் சட்டத்திற்கு, 2014ஆம் ஆண்டு ஜனவரி 1ல் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். உயர் மட்ட அரசுத் துறைகளில் மிகப் பெரிய அளவில் நடக்கும் ஊழல் வழக்குகளை எவ்வித அச்சுறுத்தலும், சார்புநிலையும் இல்லாமல் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஊழலுக்கு எதிரான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் அந்த அமைப்பு சுதந்திரமானதும் அதிகாரமிக்கதுமானதாக இருக்க வேண்டும் என்கிற மக்களின் வலுவான கோரிக்கைகளின் விளைவாக உருவானது தான் இந்தச் சட்டம்.
ஆளும் கட்சியினரின் சொல்லுக்கு ஏற்ப ஆடும் கூண்டுக் கிளிகள் போலவே மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) பரவலாகப் பார்க்கப்படுகிறது. இந்த விசாரணை அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கை மங்கியதன் எதிரொலியாகவே லோக்பால் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டது.
ஊழலுக்கு எதிரான வாக்குறுதிகளுடன் பாஜக 2014 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பின்னர், லோக்பால் நியமனம் விரைந்து நடைபெறும் என்றும், அந்த அமைப்பு மீதான நம்பிக்கை விதைக்கப்படும் என்றும் மோடி அரசிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது.
லோக்பால் சட்டத்தின் உத்வேகத்தை உறுதி செய்யும் வகையில் ஒரு வலுவான அமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கையைத் தற்போதைய அரசு ஏற்படுத்தத் தவறிவிட்டது. அரசின் நடவடிக்கைகள் மூலமாகவே அது நம்பிக்கையை இழந்திருக்கிறது. இது துரதிருஷ்டவசமானது. 2019 பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்புதான் ஒரு வழியாக லோக்பால் தலைவரையும், அதன் உறுப்பினர்களையும் இந்த அரசு நியமனம் செய்கிறது. இந்த நியமனத்திற்கான நடைமுறைகளில், இரண்டு வழிகளில் முழுக்க முழுக்க சமரசம் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பெயர்களைப் பரிந்துரைக்கும் பொறுப்புக்கான தேர்வுக் குழுவில் அரசுப் பிரதிநிதிகள் மற்றும் பரிந்துரையாளர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது முதல் விஷயம்.
சுதந்திரமான அமைப்புகளை உறுதி செய்யும் வகையில், நியமனங்களில் பொறுப்பு வகிக்கும் தேர்வுக் குழுவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிகளவில் இருக்கக் கூடாது என்பதே லோக்பால் சட்டத்தின் மிக முக்கியமான கொள்கை. எனவேதான் பிரதமர், மக்களவை சபாநாயகர், மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர், இந்தியத் தலைமை நீதிபதி அல்லது இந்தியத் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இந்நால்வரால் பரிந்துரைக்கப்படும் சிறந்த சட்ட நிபுணர் ஆகியோரைக் கொண்ட சமநிலையான தேர்வுக் குழுவை உருவாக்க லோக்பால் சட்டம் வகை செய்தது.
2014 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கும் கிடைக்கவில்லை. எனவே, மக்களவைத் தேர்தலில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சியிலிருந்து அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை லோக்பால் தேர்வுக் குழுவில் சேர்க்கும் வகையில் மோடி அரசு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அதேவேளையில், சிபிஐ இயக்குநர் நியமனம் போன்ற சட்டங்களுக்கு மட்டும் உடனடியாக அதைப்போன்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து, அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது மோடி அரசு.
லோக்பால் சட்டத்தில் 10 பக்கங்களைக் கொண்ட திருத்த மசோதாவை மோடி அரசு அறிமுகப்படுத்தியது. லோக்பால் தேர்வுக் குழு அமைக்கும் நடைமுறையில் மாற்றத்துக்கு வழிவகுக்கும் அந்தத் திருத்தமானது, மூலச் சட்டத்தையே நீர்த்துப்போகும் வகையிலான அம்சங்களைக் கொண்டிருந்தது. இவை அனைத்துமே வலுவான லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதில் மோடி அரசு உறுதியாக இருந்ததையே தெளிவாகக் காட்டியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பின் எதிரொலியாக, நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஒப்புதலுக்காக அந்தத் திருத்த மசோதா அனுப்பப்பட்டது. அது, இறுதி வடிவம் பெறாமல் இன்னும் அங்கேயே கிடக்கிறது.
லோக்பால் நியமனம் செய்யப்படாததை எதிர்த்து ஏப்ரல் 2017ல் உச்ச நீதிமன்றத்திடம் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்கள் முறையிட்டனர். அதன் எதிரொலியாக, எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத தேர்வுக் குழுவாலேயே லோக்பால் நியமிக்கப்படும் நிலை உருவானது. அதன் பிறகும் கூட, லோக்பால் நியமிக்கப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பிறகுதான், பாஜக ஆட்சிப் பொறுப்பேற்று 45 மாதங்களுக்குப் பிறகு, முதல் முறையாக பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமர், மக்களவை சபாநாயகர் மற்றும் இந்தியத் தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்ட முகுல் ரோஹத்கி ஆகியோர் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இதில், சட்ட நிபுணராகத் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த முகுல் ரோஹத்கி, மோடி ஆட்சியின் முதல் மூன்றாண்டு காலம் அட்டர்னி ஜெனர்லாக பொறுப்பு வகித்தவர்.
அதன் பிறகு, முடிவு எடுப்பதில் எவ்வித அதிகாரமும் அளிக்காமல், மக்களவையின் தனிப்பெரும் எதிர்க்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குத் தேர்வுக் குழு பலமுறை அழைப்பு விடுத்தது. அதிகாரமே இல்லாமல் பங்கேற்கச் சொல்வதை வெறும் அடையாளபூர்வமான நடவடிக்கையாகவே பார்க்க முடியும். அந்த அழைப்புகளை மறுத்த மல்லிகார்ஜுன கார்கே ஒரு கூட்டத்தில்கூடப் பங்கேற்காததில் வியப்பு ஏதுமில்லை.
முடிவாக, லோக்பால் நியமனம் செய்யும் தேர்வுக் குழுவில் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களின் பங்களிப்பே ஆதிக்கம் செலுத்தியதால், அரசுக்கு ஆதரவானவர்களே பரிந்துரைக்கப்பட்டனர். இது, வலுவான லோக்பால் சட்டத்தின் ஆதாரமான நோக்கத்தையே சிதைத்துவிட்டது.
இரண்டாவதாக, லோக்பால் தேர்வுக் குழுவின் செயல்பாடுகள் அனைத்துமே ரகசியமாக மூடி மறைக்கப்பட்டது. ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலும், மக்களின் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையிலும், லோக்பால் தேர்வுக் குழு தனது நடைமுறைகளில் கண்டிப்பாக வெளிப்படைத் தன்மை கொண்டிருருக்க வேண்டும் என்று லோக்பால் சட்டப் பிரிவு 4(4) கூறுகிறது.
“லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையுடன் தேர்வுக் குழு இயங்க வேண்டும்” என்கிறது அந்தச் சட்டப் பிரிவு.
இந்தச் சட்டப் பிரிவை முழுமையாக மீறும் வகையில், தேர்வுக் குழு நடவடிக்கைகளில் எந்த வித வெளிப்படைத்தன்மையும் இல்லை. எந்த மாதிரியான விதிகளைப் பின்பற்றி, லோக்பால் நியமனத்திற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டது என்பது குறித்து மக்கள் மன்றத்திடம் விளக்கம் அளிக்கப்படவில்லை. மேலும், லோக்பால் தேர்வுக் குழு கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டபோது, அரசு உரிய விவரங்களை மக்களுக்கு அளிக்க மறுத்துவிட்டது. அந்தக் கூட்டங்களில் நடந்த அனைத்தும் ரகசியமான தகவல்கள் என்று விளக்கம் தரப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரே இல்லாத வலுவிழந்த தேர்வுக் குழு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ளாதது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, லோக்பால் குழுவின் தேர்வுமுறையில் சமரசம் செய்ததன் மூலம், செயல்படத் தொடங்குவதற்கு முன்பே அந்த அமைப்பை மோடி அரசு வலுவிழக்கச் செய்துவிட்டது. இப்படித்தான் மற்ற விசாரணை அமைப்புகளைப் போலவே ஊழலுக்கு எதிரான அமைப்பும் நோஞ்சானாக்கப்பட்டுள்ளது. தன்னைத் தானே காவலாளி என்று பறைசாற்றிக்கொள்ளும் மோடியின் தலைமையின் கீழ் குறுகிய கால அரசியல் ஆதாயங்களுக்காகத் தன்னிச்சையானதும் நம்பகத்தன்மை மிக்கதுமான லோக்பால் பலிகொடுக்கப்பட்டுவிட்டது.
அஞ்சலி பரத்வாஜ்
அஞ்சலி பரத்வாஜ், ஊழலுக்கு எதிரான செயல்பாட்டாளர். வெளிப்படைத் தன்மைக்காகக் குரல் கொடுப்பவர். தகவல் பெறுவதில் மக்களின் உரிமைக்கான தேசிய இயக்கம் (National Campaign for Peoples’ Right to Information) மற்றும் சதர்க் நாக்ரிக் சங்கடன் (குடிமக்கள் விழிப்புணர்வு இயக்கம்) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றிவருபவர்.
நன்றி: தி வயர்
https://thewire.in/government/how-not-to-appoint-a-lokpal
அரசின் இது போன்ற செயல்பாடுகள் பெயரளவில் இருக்கும் ஜனநாயக நெறிமுறைகள் முற்றிலும் கருகி எதேச்சிகார சர்வாதிகாரத்துக்கு இட்டு செல்லும். இறுதியில் மக்கள் புரட்சி வெடித்து இரத்த களரி நிலை காஷ்மீரில் ஏற்பட்டதை போலவே ஏற்படும். மோடியின் பேரக்குழந்தைகளும் நிம்மதியாக வாழமுடியாத சூழ்நிலை உருவாகும். அனைவரின் எதிர்காலமும் இருள் சூழ்ந்த கால கட்டத்திற்கு இவர்கள் கொண்டு செல்கிறார்கள்.