புதன்கிழமை அன்று narendramodi.in வலைத்தளத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பதிவை வாசித்ததும், பழைய கதை ஒன்று நினைவிற்கு வந்தது.
அந்தப் பதிவு இப்படி அமைந்திருக்கிறது: மோடி இப்படி கூறுவார். “சீ, சீ, சீ, காங்கிரஸ் ஒரு வம்சாவளிக் கட்சி. ; சீ, சீ, சீ, காங்கிரஸ் ஊழல் கட்சி; சீ, சீ, சீ, காங்கிரஸ் நம்நாட்டின் அமைப்புகளை அவமதிக்கிறது (மோடி அவற்றை நிச்சயமாக மதிக்கிறார்!); சீ, சீ, சீ, நேரு; சீ, சீ, சீ, இந்திரா காந்தி; சீ, சீ, சீ, ராகுல் காந்தி.”
பத்துக் கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும், விவசாயப் பிரச்சினையைத் தீர்ப்பதாகவும், கறுப்புப் பணம் மொத்தத்தையும் மீட்கப்போவதாகவும், வாக்குக் கொடுத்த மோடி, ஐந்து ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு இன்று மோடி சொல்வதெல்லாம் மீண்டும் “சீ, சீ, சீ, காங்கிரஸ்”! தன்னுடைய செயல்பாடு குறித்தோ, கொடுத்த வாக்குகளை நிறைவேற்றியது குறித்தோ, தரவுகள் அல்லாத வெற்று முழக்கங்களைத் தவிர எதுவும் சொல்வதில்லை. வேலைவாய்ப்புகள் தொடர்பாகவோ, ஜி.டி.பி. தொடர்பாகவோ, ரஃபேல் தொடர்பாகவோ எவ்விதத் தரவுகளையும் வெளியிட மாட்டார். இது எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்துகிறது.
அந்தக் கதை இதுதான்: ஒரு சிறு நகரத்தில் ஒரு கோயில் இருந்தது. அங்குள்ள பூசாரி, தன்னை மிகவும் புனிதமானவர் என்றும், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரம பக்தர் என்றும் நினைத்துக்கொண்டிருந்தார். அந்தக் கோவிலுக்கு எதிரிலேயே பாலியல் தொழிலாளி ஒருவர் வசித்துவந்தார். ஒவ்வொரு முறை அவருடைய வாடிக்கையாளர் வந்து சென்றதும், அந்தப் பாலியல் தொழிலாளி வெளியில் வந்து கோயிலை நோக்கிக் கும்பிட்டபடி வேண்டுவார். “கடவுளே, நான் செய்ததற்கு என்னை மன்னித்துவிடு, எனக்கு வேறு வழியில்லை. இந்தப் பூசாரி என்னை உள்ளே அனுமதிக்க மாட்டார். என் உடல் பாவச் செயலில் ஈடுபடும்போதும், என் மனம் முழுவதும் உனக்கான பிரார்த்தனையாகவே இருக்கும்”.
ஒவ்வொரு முறை அந்தப் பூசாரி வெளியில் வந்து அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதும், “சீ, சீ, சீ, எவ்வளவு தரங்கெட்ட பெண்; சீ, சீ, சீ, இப்படியான ஒரு தொழிலில் அவளால் எப்படி ஈடுபட முடிகிறது; சீ, சீ, சீ, எப்படி இவளால் அதை என் புனிதமான கோவிலுக்கு முன் செய்ய முடிகிறது? இரவும் பகலும் அவள் தன் உடலை விற்றுக்கொண்டிருக்கிறாள்!” என்பார்.
ஒரே நேரத்தில் பூசாரியும் பாலியல் தொழிலாளியும் இறந்துபோயினர். எமனிடம் சென்றபோது, சித்திரகுப்தர் பாவ, புண்ணியக் கணக்குகள் குறிக்கப்பட்ட பேரேட்டிலிருந்து அவரவரது கர்ம வினைகளை வாசித்துக் காண்பித்தார். அதைக் கேட்டு, எமன் அந்தப் பெண் சொர்க்கத்திற்குப் போக வேண்டும் என்றும், பூசாரி நரகத்திற்குப் போக வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார். அந்தப் பூசாரி அதிர்ச்சியாகிவிட்டார். “நீங்கள் தவறாகச் சொல்லிவிட்டீர்களா, பிரபு? நான் ஒரு கோவிலின் பூசாரி, நான் புனிதமானவன். அந்தப் பெண் பாலியல் தொழிலாளி. அவள் ஒரு பாவி. என்னை நரகத்திற்கும் அவளை சொர்க்கத்திற்கும் உங்களால் எப்படி அனுப்ப முடியும்?”
எமதர்மர் சொன்னார், “ஒரு திருத்தம் பூசாரி அவர்களே! நிச்சயமாக நீங்கள் ஒரு பூசாரி, அவர் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாருங்கள், அவர் உடல் என்ன செய்துகொண்டிருந்தாலும் அவர் மனம் முழுவதும் கடவுளுக்காகஅர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உங்கள் உதட்டிலும் மனதிலும் எப்போதும் கடவுள் நிறைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், உங்கள் மனதிலும் உதட்டிலும் எப்போதுமே அந்த பாலியல் தொழிலாளியே நிறைந்திருந்தார். உங்களுக்கான இடம் நரகம்தான்.”
இன்னும் சில நாட்களில், தன்னுடைய செயல்திறனுக்கான தீர்ப்பைக் கேட்க ‘மக்கள் என்னும் இறைவனை’ப் பார்க்கப் போகையில் இந்தக் கதையின் நீதியை நினைவில் வைத்துக்கொள்வது மோடிக்கு நல்லது.
ஐந்து ஆண்டு காலத்தின் பெரும்பகுதியை, காங்கிரஸைத் தூற்றுவதிலேயே அவர் கழித்திருக்கிறார்; ஐந்து ஆண்டுகளில் செய்ததாகக் காண்பிக்க, சில கோஷங்களையும் பல பிரச்சாரங்களையும் தவிர அவரிடம் ஒன்றுமே இல்லை. இந்தியாவை அனைவரும் வாழத் தகுந்த இடமாக மேம்படுத்துவதற்குத் தான் என்ன செய்திருக்கிறேன் என்பது குறித்து அவர் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பிரதமராக இருந்த 100 நாட்களுக்குப் பிறகு, என் செயல்பாடுகள் குறித்த கணக்கை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கேளுங்கள், 100 நாட்களுக்குப் பிறகு அல்ல, அடிக்கடி கேட்காதீர்கள் என்று மோடி சொன்னார். ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இப்போது வரைக்கும் அவர் என்ன செய்தார் என்றோ, அதனால் மக்களுக்கு என்ன கிடைத்தது என்றோ நம்மிடம் எந்த கணக்கும் இல்லை. செய்தியாளர் கூட்டம் ஒன்றுகூட நடக்கவில்லை. ஊடகவியலாளர்களுடனோ, மக்களுடனோ, முன்பே தீர்மானிக்கப்பட்ட கேள்விப் பட்டியல் இல்லாத இரு தரப்பு உரையாடல் ஒன்றுகூட நடக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட சில ‘ஊடகவியலாளர்’களுடனான, முன்பே தீர்மானிக்கப்பட்ட கேள்வி பதில் கொண்ட, சில நேர்காணல்கள் மட்டுமே நடந்துள்ளன. இது எவ்விதமான பொறுப்புடமை பிரதமர் அவர்களே? உங்கள் பதிவுகளில் நீங்கள் பேசும் ஜனநாயகத்தின் அமைப்புகளுக்கு இது என்ன விதமான மரியாதை?
நான்கு ஆண்டுகள் ஆட்சிக்குப் பிறகு, மோடியின் பல்லவி மாறிவிட்டது, “நான் ஏன் எதுவும் செய்யவில்லை என்று கேட்கிறீர்கள்?! நான்கு தலைமுறைகளாக ஏன் காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை? அவர்கள் பதில் சொல்லட்டும். பிறகு நான்சொல்கிறேன், ஏன் அதை நான்கு ஆண்டுகளில் என்னால் செய்ய முடியவில்லை என்று” என்கிறார்.
2015-16 ஆண்டில், “ஓராண்டுக்கு இரண்டு கோடி வேலைகள்” என்பது மோடியின் பிரச்சாரமாக இருந்தது. மேலும், “ஸ்டார்ட்-அப் இந்தியா, ஸ்டேண்ட்-அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா….” என்று உரத்த குரலில் முழக்கங்கள் எழுந்தன. 2018 வாக்கில், பிரதமரின் பேச்சு இப்படி மாறியது “பக்கோடா கடை போடுபவர்கள்கூடத் தொழில்முனைவோர்கள்தான்”, “பாருங்கள், என் கண்காணிப்பின் கீழ், பலரும் வாகன ஓட்டுநர்களாக மாறியிருக்கிறார்கள்”. இன்று அவர் சொல்வது “நானும் காவலாளியே” (Main Bhi Chowkidhar).
2019ஆம் ஆண்டில் “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக” 2015-16ஆம் ஆண்டில் மோடி சொன்னார். 2017இல், அது 2022ஆம் ஆண்டில் என்று மாறியது. 2018இல், பிரதமர் – கிஸான் திட்டமாக மாறிவிட்டது! “காங்கிரஸைப் போல, நான் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடிகளோ, உதவித்தொகையோ வழங்க மாட்டேன். அவர்கள் மரியாதையுடன் வாழ என்னத் தேவையோ அதைச் செய்வேன்”, என்று சொன்ன அம்மனிதர் இன்று என்ன சொல்கிறார்? “ஆண்டொன்றுக்கு விவசாயிகளுக்கு ரூ. 6,000 உதவித்தொகையாக வழங்கப் போகிறேன். பாருங்கள், நான் காங்கிரஸைவிட மேலானவன்!”
வேலைகள், வருமானத்தை இரட்டிப்பாக்குதல், இந்தியாவை வல்லரசாக்குவது போன்ற விஷயங்களையெல்லாம் விட்டுவிடுங்கள், பிரதமரே. இப்போது அது தொடர்பாக ஒன்றுமே செய்ய முடியாது. வேலைகள் குறித்த தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (NSSO) ஆய்வறிக்கை, ரஃபேல் கொள்முதல் குறித்த இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கை ஆய்வாளரின் (CAG) அறிக்கை, தேர்தல் பத்திரத்தில் உங்கள் கட்சிக்கு யார் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவல், பணமதிப்பிழப்பின் தாக்கம் குறித்து நீங்கள் செய்திருக்கும் ஏதாவதொரு ஆய்வு ஆகியவற்றைக் குடிமக்கள் மற்றும் வாக்காளர்களாகிய எங்களிடம் கொடுங்கள். இந்தப் பொருளாதாரத்திற்கும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திற்கும் நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்று நாங்கள் பார்க்க வேண்டும்.
அடுத்த சில வாரங்கள் நடக்கும் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இவ்விஷயங்கள் பற்றிப் பேசலாம் பிரதமர் அவர்களே. கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது அல்லது செய்யவில்லை என்பதை அல்ல.
காங்கிரஸ் என்ன செய்தது என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமென்றால், உங்கள் வலைதளப் பதிவை புதனன்று பகிர்ந்த அருண் ஜேட்லியின் முகநூல் பக்கத்தில், சாதாரண மக்களின் பின்னூட்டங்களைப் பார்த்தாலே போதும். கடந்த 70 ஆண்டுக் கால வரலாற்றைப் பற்றிய விரிவானதொரு பாடத்தை சாதாரணக் குடிமக்களிடமிருந்தும், வாக்காளர்களிடமிருந்தும் நீங்கள் பெறலாம்.
அதற்குப் பிரதிபலனாக, ஐந்து ஆண்டுகளில் நாடு உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தபோது அதற்கு நீங்கள் என்ன செய்துள்ளீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புகிறார்கள்.
எஸ். ரகோத்தம்
நன்றி: டெக்கான் ஹெரால்டு
தமிழில்: ஆஸிஃபா