பிரதமர் நரேந்திர மோடி, தன் மீது அதீதமான நம்பிக்கை கொண்டிருக்கிறார். தேசப் பாதுகாப்பு அம்சங்களை மீறி, ரஃபேல் விவகாரத்தில் புதிய தகவல்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் பரிசீலித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அவரது கட்சியின் #MainBhiChowkidar பிரச்சாரம் அரங்கேறியுள்ளது. ஆனால், பெரிய அளவு கடன் வாங்கி மோசடி செய்தவர்கள் பற்றிய ரகுராம் ராஜன் பட்டியல், நீரவ் மோடி விசாரணை போன்ற பல்வேறு ஊழல் புகார்கள் ஆகியவை இன்னமும் இந்தக் காவலாளியின் கவனத்தை ஈர்க்கவில்லை.
மோடியின் பிரச்சார வியூகிகள், அவரைக் காவலாளி என குறிப்பிடுவதன் மூலம் மோடியின் பிம்பத்தைத் தூக்கி நிறுத்த முயன்றுவருகின்றனர். கோடீஸ்வரத் தொழிலதிபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது அரசும் பிரதமர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்க உறுதியாக மறுத்துவருகிறது. ஊழலுக்கு எதிராக மோடி நடவடிக்கை எடுக்கும் லட்சணத்தை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம்.
பாஜகவினர் செய்யும் மோடி பஜனையைக் கொஞ்சம் மறந்துவிட்டுப் புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், மோடி பிரதமராகப் பதவி ஏற்ற எட்டு மாதங்களில், பெரிய அளவில் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்தவர்களின் பட்டியலை அனுப்பிவைத்தார். இந்த வழக்குகளில் பல்வேறு அமைப்புகளின் விசாரணையைக் கோரியதோடு, மற்றவர்கள் இது போல செய்யாமல் இருக்கும் வகையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
தேசத்தின் காவலாளி உடனேயே விசாரணைக்கு உத்தரவிட்டு, ஊழல் செய்தவர்களைக் கூண்டில் நிறுத்தியிருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம்.
அதுதான் இல்லை. பிரதமர் அலுவலகம் இந்தப் பட்டியலை மத்திய நேரடி வருமான வரி வாரியத்துக்கு அனுப்பி வைத்ததா, விசாரணைக்கு உத்தரவிட்டதா எனக் கேட்டு சவுரஸ் தாஸ் ஆர்.டி.ஐ. மனு தாக்கல் செய்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பட்டியலும் அனுப்பி வைக்கப்படவில்லை எனப் பிரதமர் அலுவலகத்திடமிருந்து இதற்குப் பதில் வந்துள்ளது.
பாஜக எம்பி முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு ஆறு முறை நினைவூட்டல் அனுப்பியும், பிரதமர் அலுவலகம், ரகுராம் ராஜன் பட்டியலையும், மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவலையும் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவில்லை.
குழுவுக்கு அளித்த தனது பதிலில் ரகுராம் ராஜன் பட்டியலைச் சமர்பித்தார். ஜோஷி தன் அறிக்கையை இறுதி செய்துகொண்டிருக்கிறார். ஆனால், பாஜக எம்பிக்கள், குழுவின் அண்மைக் காலக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவருகின்றனர். குழு அறிக்கையை ஏற்பதற்காக நடக்கும் கூட்டத்தில் போதிய உறுப்பினர் பலம் இல்லாத நிலையை அவர்கள் ஏற்படுத்திவருகின்றனர்.
பிரதமர் அலுவலகம் ரகுராம் ராஜனின் பட்டியலைப் பகிர்ந்துகொள்ளவோ, எந்தவித நடவடிக்கையையும் கோரவோ இல்லை என மத்திய தகவல் வாரியம், அமலாக்க இயக்குநரகம் ஆகிய அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் இந்த நிருபரிடம் தெரிவித்தனர். மோடி குழு இந்த அறிக்கையின் மீது எப்படிப்பட்ட ஒப்பனையைப் பூசினானாலும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் கேட்டுக்கொண்ட பிறகும் மோசடி செய்த கோடீஸ்வரர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற உண்மையை மறைக்க முடியாது.
பரபரப்பாகப் பேசப்பட்ட 2ஜி ஊழலைப் பயன்படுத்திக்கொண்டு மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அவரது அரசு இந்த வழக்கைத் தாமதமாகவும், மோசமாகவும், சிக்கலான முறையிலும் நடத்தியதன் விளைவாக, சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் விடுவித்தார்.
இதனால் விமர்சனத்திற்கு உள்ளான அரசின் வியூகிகள் நீதிபதி மீதும் அரசு வழக்கறிஞர் மீதும் பழி போட்டனர். சிபிஐ சடங்கிற்காக என்று சொல்லக்கூடிய வகையில் மேல் முறையீடு செய்தாலும், இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஒரு விசாரணைகூட நடைபெறவில்லை. அரசு எவ்வித ஆட்சேபணையும் இல்லாமல் வழக்கு தொடர்ந்து தள்ளிப்போடப்படுவதற்கு அனுமதிக்கிறது.
“தலைப்புச் செய்திகளில் இது பரபரப்பாக அடிபட்ட பிறகு, மோடிக்கு இதில் ஆர்வம் குறைந்துவிட்டது. போபர்ஸ் வழக்கில் சிலர் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானது போல, 2ஜி வழக்கில் ஒரு சக்தி வாய்ந்த நபர் பிரதமருக்கு நெருக்கமானவர். இதை வைத்து அமளி செய்தோம். இப்போது நாடகம் முடிந்துவிட்டது” என ஒரு மூத்த அமைச்சர் இந்தக் கட்டுரையாளரிடம் கூறினார்.
ரகுராம் ராஜன் பட்டியலைப் போன்ற மற்றொரு வழக்கில், நீரவ் மோடியைக் கைது செய்வது தொடர்பான இங்கிலாந்தின் தீவிரமான மோசடிகள் தொடர்பான அலுவலகத்தின் (Serious Fraud Office – SFO) கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு அமைதி காத்தது. நகைத் தொழில் அதிபரான நீரவ் மோடி இந்தியாவிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தபோது, அவர் கிரிமினல் குற்றம் செய்ததால் கைது செய்ய ஒத்துழைப்பதாக பிரிட்டன் அரசு கூறியது. பிரிட்டன் அதிகாரி, கடந்த அண்டு நீரவ் மோடி லண்டனில் இருந்ததை உறுதி செய்தது. அவரைக் கைது செய்வதற்கான ஆவணங்களைத் தயார் செய்ய அதிகாரிகளை இந்தியா அனுப்புவதாகவும் தெரிவித்தது.
இந்திய அரசு இது பற்றி வாய் திறக்காமல் மவுனம் காத்தது. இந்தக் கோரிக்கை பிரதமர் அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டு, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்குத் தெரிவிக்கப்பட்டதாக வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. இருப்பினும் மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதால் அவர் மோடி அரசால் நள்ளிரவில் மாற்றப்பட்டார். பழிவாங்கும் நடவடிக்கை, மிரட்டல் ஆகியவற்றில் ஈடுபட சர்ச்சைக்குரிய அதிகாரிகளை அனுமதித்தன் மூலம் மோடி அரசு, சிபிஐ, அமலாக்கப் பிரிவு ஆகிய அமைப்புகளின் தன்னாட்சியைக் குலைத்துவிட்டது.
இவை எல்லாம் ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. தலைப்புச் செய்திகளை ஆக்கிரமிக்க மோடியின் படை கடுமையாக உழைக்கிறது. ஆனால், ஊழலுக்கு எதிராக மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
ஸ்வாதி சதுர்வேதி
(ஸ்வாதி சதுர்வேதி, தில்லி பத்திரிகையாளர்)
நன்றி: தி வயர் (https://thewire.in/politics/narendra-modi-main-bhi-chowkidar-corruption)
True Modi campaign is not proper.
But all the parties claims and campaigns are all bogus.
We are a Demon Crazy nation