மக்களவைத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துகிற சக்திகளோடு உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இணைந்தாக வேண்டும்
மோடி அரசுக்கு இரங்கல் குறிப்பு எழுதப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் வரலாறு எழுதப் போகிறவர்கள், வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் போன்றதொரு சிறந்த சட்ட அறிஞர், பாதுகாப்புத் துறை சார்ந்த ஒரு மோசமான ஒப்பந்தத்தை நியாயப்படுத்தி வாதாடுகிறவராகிப்போனது பற்றிய தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே செய்வார்கள்.
இந்தியத் தலைமை வழக்குரைஞர் என்ற பொறுப்பில் இருப்பவர் அவர். அரசியல் கூட்டத்தின் அற்பமான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டிய அரசமைப்பு சாசன அடிப்படையிலான பதவி அது.
உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம், தலைமை வழக்குரைஞரகம் போன்ற அமைப்புகளின் தலைமை இடங்களில் இருப்போர் மீதான எதிர்பார்ப்பு ஒன்று இருக்கிறது. மிகச் சாதாரணமான நேரங்களிலேயே கூட ஒரு குறைந்தபட்ச சட்டப்பூர்வ நேர்மையை உறுதிப்படுத்துவது சார்ந்த எதிர்பார்ப்பு அது. அரசியல்வாதிகளின் சில்லறைத்தனங்களிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதே அந்த எதிர்பார்ப்பு. நாடு தழுவிய தேர்தல் அறிவிக்கப்பட்ட அதற்கான நடைமுறைகள் தொடங்குகிற தருணத்திலிருந்து அந்தப் பொறுப்பு ஒரு கடமையாகவே மாறுகிறது.
குடியாட்சி மாண்புகளையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தேர்தல் கால நடத்தை விதிகள் சட்டபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை இவர்களுக்கு இருக்கிறது. அதாவது, சம்பந்தப்பட்ட அனைவருக்குமான சம வாய்ப்பை இவர்கள் உறுதிப்படுத்தியாக வேண்டும்.
இதனைச் சொல்வது எளிது, செய்வது கடினம்தான்.
குறிப்பாகக் கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய அரசின் அனைத்து அமைப்புகளும் ஆணவம் நிறைந்த, வீம்பு மிகுந்ததொரு பிரதமரின் முன் மண்டியிடச் செய்யப்பட்டன. பல உயரதிகாரிகள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், படைத் தளபதிகள் ஆகியோர் பிரதமரை மையமாகக் கொண்டு கட்டிவிடப்பட்ட வார்த்தைப் பிம்பங்களில் தாங்களும் போய்ச் சிக்கிக்கொண்டனர். சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட குடியரசாகவே இன்னும் நம் நாடு நீடிக்கிறது என்பதை மறந்துவிட்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட இந்தப் பொழுதிலாவது இந்தியாவின் அரசமைப்பு சாசனம் ஒன்றும் நெறியற்ற அரசியல்வாதிகள் தங்கள் விருப்பப்படி வளைத்துக்கொள்ளக்கூடிய சீரற்ற ஏற்பாடல்ல என்பதை அதிகார வர்க்கத்தினர் ஒவ்வொருவரும் – உயரதிகாரியானாலும் சரி கீழ்நிலை அதிகாரியானாலும் சரி – உணர்ந்திட வேண்டும்.
பயங்கரவாதம் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் உளவியல் பீதி, உலகெங்கும் அரசுகளின் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது கையாளப்பட வேண்டிய சட்டபூர்வக் கட்டுப்பாட்டையும் நேர்மையையும் அரித்துள்ளது. இந்தியாவில் நமக்கு வலிமையான தலைவர்கள் என்ற கருத்தாக்கத்தின் மீது ஒரு புதிய மயக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துமீறும் காவல் துறையினர் மீதான தனது கண்காணிப்பை நீதித் துறை தளர்த்தியுள்ளது. அதிகார வர்க்கத்தினர் “தேசப் பாதுகாப்பு” என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, பிரதமரின் மிதமிஞ்சிய நாட்டாமைக்குப் பரவசத்தோடு தங்களை ஒப்படைத்துக்கொண்டுவிட்டார்கள்.
ஆனால், குடியாட்சி மாண்புகளின் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இல்லாமல் தெளிவான சிந்தனையோடு இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தின் குழப்பங்களைக் காரணமாக்கி, வலிமையான அரசு என்ற மாயையைப் பரப்புகிற எந்தவொரு சர்வாதிகாரத்திற்கும் சாதகமாகச் சாய்ந்துவிடக் கூடாது.
அடுத்த இரண்டு மாத காலத்திற்கு சட்டபூர்வ அலுவலர்கள் அனைவரின் முன்னால் இருக்கிற மிகப் பெரும் சவால், தேர்தல் நடைமுறையின் நேர்மையையும் நியாயத்தையும் எப்படி உறுதிப்படுத்துவது என்பதுதான். சுதந்திரமான, நேர்மையான தேர்தல் என்பது ஏதோ தெய்வீகமயமாக்கப்பட்ட வெற்றுரை அல்ல. அரசமைப்பு சாசனத்தின் அடிப்படைக் கட்டுமானத்தில் மையக் கல்லாக அமைய வேண்டிய கட்டாயமான தேவை அது. ‘அடிப்படைக் கட்டுமானக் கோட்பாடு’ என்பது சட்டபூர்வ அமைப்புகளின் செயல்பாட்டில் சமநிலையையும், அரசமைப்பு சாசனப்படியான சமத்துவ நிலையையும் பராமரிப்பதற்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. ஜனநாயக நடைமுறையை அரசியல் வழிப்பறிக் கும்பல்கள் அத்துமீறுவதற்கோ கடத்திச் செல்வதற்கோ அனுமதிக்கப்பட மாட்டாது என்ற நம்பிக்கையோடும் நிறுவப்பட்ட கோட்பாடு அது.
அதிகாரவர்க்கத்தினர் இந்தத் தலைவர் அல்லது அந்தத் தலைவரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருப்பது உண்மைதான். இதிலே சிலர் தங்களுக்கு மேலே உள்ள அரசியல் தலைவர்கள் மீது ஒரு ஈர்ப்பை வளர்த்துக்கொள்கிறார்கள். சிலர் குறிப்பிட்ட வட்டத்தின் அங்கமாகிப்போகிறார்கள் (அதிலே இவர் அந்தத் தலைவரின் ஆள் அல்லது இந்தத் தலைவரின் ஆள் என்று அடையாளம் பெற்றுவிடுகிறார்கள்). சிலர் குறிப்பிட்ட தலைவரின் விருப்பு வெறுப்புகளோடும் அவர் எதற்கு முன்னுரிமை அளிக்கிறார் என்பதோடும் தங்களை நோக்கங்களோடும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். குஜராத் போன்ற பல மாநிலங்களில் அதிகாரிகள் குறிப்பிட்ட அரசியல் கட்சியோடு நீண்ட காலம் நெருங்கியிருந்து, அதிகாரிகளுக்கான நடுநிலைத்தன்மை என்றால் என்பதே தெரியாதவர்களாகிவிடுகிறார்கள்.
மாநிலங்களிலோ, மத்தியிலோ ஆட்சியில் இருக்கிறவர்கள் அதிகாரியின் சிறந்த ஆலோசனைகளைப் பெற்று, அவர்களது சிறந்த செயல்பாடுகளோடு இயங்குவது அடிப்படையான ஏற்பாட்டுடன் இணைந்ததாக இருப்பது உண்மைதான். ஆனால், அதிகாரிகள் எந்தக் காலத்திலும் – குறிப்பாகத் தேர்தல் காலத்தில் – ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் வம்புகளிலும் வன்மங்களிலும் சம்பந்தப்பட்டுவிடக் கூடாது. சோகம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளில் அப்படி சம்பந்தப்படாதவர்களாக இருக்க அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை.
அதிகாரிகள் தங்களது உண்மைக் குரலையும், முடிந்தால் தங்கள் முதுகெலும்பையும் கண்டுபிடித்து மீட்பதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. இதற்காக அவர்கள் எதிர்க்கட்சிகளோடு சேர்ந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அல்லது, அரசியலுக்கே எதிரான கலகக்காரர்களாகிவிட வேண்டும் என்பதுமில்லை. மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிசெய்கிறவர்களாக இருந்தால் போதும். கடந்த சில ஆண்டுகளாக அடிமைத்தனமாக, சரணடைந்திருந்த நிலைமையை சரிப்படுத்துவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. குறிப்பாக உயர்நிலை அதிகாரிகள் இப்போது அதற்கான வழியைக் காட்டியாக வேண்டும். அப்போதுதான் அவர்களால், வாக்குப் பதிவு நாளில் களத்தில் பணிபுரிகிற தங்களது இளநிலை அலுவலர்களிடமிருந்து நடுநிலையான, சமநிலையான செயல்பாட்டை வலியுறுத்த முடியும்.
ஒருவேளை அதிகாரிகள் இப்போதும் முதுகெலும்பற்றவர்களாகவே இருப்பார்களானால், ஆட்ட மைதானத்தின் நடுவர் பொறுப்பில் உள்ள இரண்டு அமைப்புகளாகிய உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அரசமமைப்பு சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள கடமையை நிறைவேற்றியாக வேண்டும். அதாவது, அத்துமீறும் ஆட்டக்காரர்களுக்கு மஞ்சள் கொடி காட்டி எச்சரிக்க வேண்டும்.
1990இல் தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் களத்திற்குள் நுழைகிற வரையில், தங்குதடையற்ற அரசியல் அத்துமீறல் இருந்துவந்தது. அந்த நாட்களிலிருந்து வெகுதொலைவு விலகி வந்திருக்கிறோம் என்பது பெருமிதத்திற்கும் மனநிறைவுக்கும் உரியதுதான். தற்போது ‘நிர்வாச்சன் சதன்’ (தேர்தல் ஆணையம்) தலைமையில் இருக்கிற மரியாதைக்குரிய மூன்று ஆணையர்களும் அந்த மரபைப் பாதுகாப்பதற்கும் மேலாகச் சென்று செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. பொதுத்தேர்தலை நடத்துவதில் உன்னதமான நோக்கம் ஒன்று இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டாக வேண்டும். ஆணைய அதிகாரத்தின் நம்பகத்தன்மையைப் புதுப்பித்துக்கொள்வதே அந்த நோக்கம். தேர்தல் நடைமுறைகளின் நேர்மைத்தன்மை மீது படிந்துள்ள சந்தேகங்களைப் போக்குவதற்குத் தாங்கள் கடமைப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தாக வேண்டும்.
அண்மை ஆண்டுகளாக நிர்வாச்சன் சதன் இதில் சறுக்கியிருக்கிறது என்பதை நினைவுகூர்வது முக்கியமாகிறது.
எடுத்துக்காட்டாக, குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது நடந்த விதிமீறல்களுக்குப் பிரதமரைப் பொறுப்பாக்கத் தவறியது தேர்தல் ஆணையம். கடைசி நாளில் சாலைப் பிரச்சாரங்களுக்கு (நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவருக்குமே) அனுமதியளிக்க ஆணையம் மறுத்தது. அந்தத் தடையை ஓரங்கட்டுவதற்காகக் கடல் விமானம் ஒன்றைப் பயன்படுத்தினார் மோடி. அவருடைய இந்த அத்துமீறல் ஆணையத்தைப் பார்த்து நடுவிரல் காட்டுவது போன்றதுதான். இதை ஆணையம் கண்டுகொள்ளாமல் விட்டது. அதே போல், சாமியார் மொராரி பாபு, புனித ஒப்பனை செய்யப்பட்ட தனது ‘பர்வாச்சன்’ யாத்திரையை மதவாத அரசியல் நோக்கத்திற்காக நடத்த அனுமதிக்கப்பட்டார். பாஜக இப்படிப்பட்ட விதிமீறல்களைச் செய்துகொண்டிருந்தபோது தேர்தல் ஆணையம் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருந்தது என்று நடுநிலையான பார்வையாளர்கள் வருத்தத்தோடு சுட்டிக்காட்டினார்கள். அதற்கு இப்போது ஆணையம் ஏதேனும் பரிகாரம் செய்தாக வேண்டும்.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஜனநாயகபூர்வமான கவலைகளைத் தேர்தல் ஆணையம் பொருட்படுத்த மறுக்கிறது என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி, அந்தத் தோற்றத்தை மாற்ற வேண்டிய கடமை ஆணையத்திற்கு இருக்கிறது. நிர்வாச்சன் சதன் அலுவலகத்தில் இப்போது ஒரு புதிய தலைமை பொறுப்பேற்றிருக்கிறது. அது இந்த நிறுவனத்தின் கம்பீரத்தையும் நம்பக உறுதியையும் மீட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புல்வாமா, பாலக்கோட், பாகிஸ்தான், மசூர் ஆஸார், இம்ரான் கான், சீனா ஆகிய அனைத்துக்கும் மத்தியில், நமது ஜனநாயகத்தின் உன்னதத்திலிருந்து நாம் தடம் மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஆகவே, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது ஜனநாயகபூர்வமாகவே நடக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் எழக் கூடாது என்று நாம் கோருகிறோம். ஒருவேளை, “புதிய இந்தியா” என்பதாக ஒன்று அறிவிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம், அப்போதுகூட, நமது சொந்த அரசமைப்பு சாசன அமைப்புகளும் நெறிகளும் வழிகளும் மாறிவிடாமல் இருந்தாக வேண்டும்.
ஹரிஷ் காரே
நன்றி: தி வயர்
https://thewire.in/government/listen-up-bureaucrats-the-time-for-bhakti-is-over
தமிழில்: அ. குமரேசன்