2008 மும்பை தாக்குதலின் போது பாஜக வெளியிட்ட விளம்பரங்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அதன் இரட்டை நிலைப்பாட்டினை அம்பலப்படுத்துகின்றன.
2008 நவம்பரில் மும்பையை உலுக்கிய தீவிரவாத தாக்குதலின் நான்கு நாட்களின்போது, பாஜக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளை மீண்டும் பார்க்கும்போது, தேசியப் பாதுகாப்பை அரசியலாக்குவது அக்கட்சிக்குப் புதிதல்ல எனத் தெரிகிறது. நவம்பர் 26ல் இந்தத் தாக்குதல் துவங்கியது. நகரின் முக்கிய இடங்களைக் குறிவைத்த இந்தத் தாக்குதலின்போது, 29ஆம் தேதி காலைவரை ராணுவத்துடன் பயங்கரவாதிகள் மோதலில் ஈடுபட்டனர். தாக்குதலின் முதல் நாள் அன்று, இந்தியா மீதான முழு வீச்சிலான இந்தப் போரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவாக இருப்பதாக பாஜக தேசத்திற்கு உறுதி அளித்தது. ஆனால் 24 மணி நேரத்திற்குள் பாஜக தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்கியது. பயங்கரவாதத் தாக்குதலில் கட்சி மேற்கொண்ட தலைகீழ் மாற்றத்தின் முகமாக நரேந்திர மோடி விளங்கினார்.
நவம்பர் 28ஆம் தேதி, மும்பை தாக்குதலுக்கு எதிரான பொதுமக்கள் கோபத்தைச் சாதகமாக்கிக்கொள்ளும் வகையில் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிரான பிரச்சாரத்தைத் துவக்கியது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, மும்பைக்குச் சென்று, தாக்குதலுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான ஓபராய் டிரைடன் ஓட்டலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து, தாக்குதலைத் தடுக்க அரசு தவறியது தொடர்பாக விமர்சித்தார். நவம்பர் 29, டிசம்பர் 4 தேதிகளில் முறையே தில்லியிலும் ராஜஸ்தானிலும் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் மோடி இப்படிப் பேசினார். அன்றைய தினம், மும்பை தாக்குதல்களைத் தேர்தல் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான விளம்பரங்களை நாளிதழ்களில் பாஜக வெளியிட்டது. மும்பையில் ரத்தம் சிந்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் கறுப்புப் பின்னணியில் சிவப்பு வண்ணம் தெறிக்க, அந்த விளம்பரம் இப்படி அமைந்தது:
“நினைத்தபோது தாக்குதல் நடத்தும் கொடூர பயங்கரவாதம்.
பலவீனமான அரசு.
முனைப்பற்ற, திறமை அற்ற அரசு
பயங்கரவாதத்தை எதிர்ப்போம்.
பாஜகவுக்கு வாக்களிப்பீர்”
இந்த ஆண்டு பிப்ரவரி 14 அன்று 40 சிபிஆர்எப் வீரர்களை பலிவாங்கிய புல்வாமா தாக்குதல், அதன் பிறகு பாலக்கோட்டில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலுக்குப் பிறகு பாஜக பழைய வழக்கத்திற்குத் திரும்பிவிட்டதுபோலத் தோன்றுகிறது. கட்சியின் தலைவர்கள் பலியான சி.பி.ஆர்.எப். வீரர்கள் அல்லது விமானத் தாக்குதலை எதிர்வரும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரப் பேச்சில் குறிப்பிட்டனர். பாஜக, ராணுவத்தின் தியாகத்தைக் கட்சி அரசியலாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியபோது, மோடியும் பாஜகவும், கடந்த காலங்களில் தாங்களும் இதேபோலச் செயல்பட்டிருக்கிறோம் என்பதை மறந்து வரிசையாக பதிலடி கொடுத்தனர்.
இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் மோடி ஆற்றிய உரை மும்பை தாக்குதல் தொடர்பாக பாஜகவின் மறதியை உணர்த்தியது. “மோடி வெறுப்பால் உந்தப்பட்ட சில கட்சிகள் இந்தியாவை வெறுக்கத் துவங்கியுள்ளன” என்று மோடி குறிப்பிட்டார். புல்வாமா தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது பயிற்சி முகாம்கள் பாலக்கோட் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால் தொடர்ந்து வெளியான களத் தகவல்கள் இதைக் கேள்விக்குள்ளாக்கின. இதன் காரணமாக எதிர்கட்சித் தலைவர்கள் தாக்குதலின் தாக்கத்தைக் காட்டும் ஆதாரங்களைக் கேட்டனர். இந்த விமர்சனம் பற்றிக் குறிப்பிட்ட மோடி,“இவர்களுடைய அறிக்கைகள் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும், வானொலியிலும் மகிழ்ச்சியாக மேற்கோள் காட்டப்படுகின்றன. நம்முடைய ராணுவத்தை ஆதாரிக்கிறீர்களா அல்லது சந்தேகிக்கிறீர்களா என அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்” என்றார்.
ஆனால் பாஜகவோ மோடியோ, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு நடுவே ஐ.மு.கூ அரசை விமர்சித்தது சரிதானா என்பது பற்றிக் கவலைப்படவில்லை. புல்வாமா தாக்குதலின்போது, இதற்குக் காரணமான உளவுத் துறை தோல்வி தொடர்பாக மோடி அரசைக் கேள்வி எழுப்புவதில் எதிர்கட்சிகள் பொதுவாகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்ததற்கு மாறாக, 2008 நவம்பர் 27இல் மோடி, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் ஒன்றை எழுதினார். உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, அனைத்து முதல்வர்களின், குறிப்பாக கடலோர மற்றும் எல்லைப்புற மாநிலங்களின் முதல்வர்களின் கூட்டத்தை, கூட்ட வேண்டும் என மோடி கூறியிருந்தார். தீவிரவாதத் தாக்குதலுக்கு முன், தீவிரவாதிகளின் நுழைவாயிலாக மும்பை அமைந்ததைச் சுட்டிக்காட்டி, இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பின் பலவீனத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
மோடியின் கடிதம் அவர் எழுதிய மறுநாள் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. அதுவரையிலும் பாஜக, இந்தப் பிரச்சினையில் அரசுடன் இணக்கமான முறையில் பேசிக்கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். அன்றைய தினம், எதிர்க்கட்சித் தலைவரும், 2009 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான அத்வானி, மீடியாவிடம், “அமைதி, பொறுமை மற்றும் ஒற்றுமையான நாட்டுப்பற்று ஆகியவை மட்டுமே நமக்கான் முன்னுரிமையாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
ஆனால் மறுநாள், பாஜக தனது விளம்பரங்களை வெளியிட்டது. அதன் இந்தி மொழி விளம்பரங்கள் ஒன்றில், “உயிர்த் தியாகம் செய்தவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்’ என கட்சி குறிப்பிட்டிருந்தது. மற்றொரு இந்தி மொழி விளம்பரத்தில், முன்னாள் பிரதமர் வாஜ்பாயி எழுதிய திறந்த மடல் இடம்பெற்றிருந்தது. “தீவிரவாதம் ஏற்படுத்தியுள்ள சவாலை ஒற்றுமையாக இருந்துதான் எதிர்கொள்ள வேண்டும்” என வாஜ்பாயி குறிப்பிட்டிருந்தார். “மரபார்ந்த சகோதரத்துவத்துவத்தையும் அமைதியையும் கடைப்பிடித்து, தீவிரவாதத்தை உறுதியோடு எதிர்கொள்ளக்கூடிய அரசைத் தேர்வு செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார். தீவிரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக நிற்பது, மும்பை தாக்குதல் சோகத்தைப் பயன்படுத்தி வாக்குகள் பெற முயற்சிப்பது ஆகியவற்றுக்கு இடையே பாஜக தன்னுடைய பாதையைத் தெளிவாகத் தேர்வு செய்துகொண்டது. பீதியிலும், சோகத்திலும் ஒன்றுபட்டிருந்த இந்தியர்களைக் கட்சி அடிப்படையில் பிரிக்கப்பார்த்தது.
தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான ஐமுகூ தோல்விக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்க ஒரு முகம் தேவைப்பட்டபோது, மோடி அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார். நவம்பர் 28ஆம் தேதி குஜராத்திலிருந்து மும்பை வந்தவர், ஓபிராய் டிரைண்ட் ஓட்டலில் பேசிய போது, முந்தைய தினம் தேச மக்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் நிகழ்த்திய உரை ஏமாற்றம் அளிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரதமருக்கு எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டார். இந்தியாவின் கடலோரப் பாதுகாப்பு உள்ளிட்ட அதன் உள்ளடக்கம் பற்றியும் பேசினார். பாகிஸ்தான் நாடாளுமன்றமோ பாகிஸ்தான் வானொலியோ மோடியின் கருத்திற்கு என்ன எதிர்வினை ஆற்றியது என்பது பற்றி யாரும் விமர்சிக்கவில்லை.
இந்தியக் கடல் பகுதியில் பாகிஸ்தானின் சதி முயற்சிகள் தொடர்பான தனது எச்சரிக்கைகளை ஐமுகூ அலட்சியம் செய்ததாகக் குற்றம் சாட்டினார். பாகிஸ்தான் கடற்படை குஜராத் மீனவர்களைக் கைது செய்து, உரிமையாளர்களை விடுவித்த பிறகு படகுகளைப் பறிமுதல் செய்தது பற்றியும் குறிப்பிட்டார். “இந்தப் படகுகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு பற்றி மத்திய அரசிடம் தெரிவித்ததாக மோடி கூறினார். துர்திர்ஷ்டவசமாக மும்பையில் இதுதான் நடந்தது என்றும் கூறினார். ஆனால் புல்வாமா தாக்குதலில் உளவுத் துறை தோல்வி தொடர்பாகப் பேசியவர்கள், பாஜக மற்றும் ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அவர்களின் நாட்டுப் பற்றும் ராணுவத்திற்கான ஆதரவும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.
மோடி தனது உரையில், தாக்குதலில் பலியான காவலர்கள் குடும்பத்திற்கு வழங்க மகாராஷ்டிர அரசுக்கு குஜராத் அரசு ஒரு கோடி ரூபாய் அளித்ததாகக் குறிப்பிட்டார். அப்போது மகாராஷ்டிரத்தின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவராக இருந்த ஹேமந்த் கார்கரேவும் இந்தத் தாக்குதலில் பலியானவர்களில் ஒருவர். யாரும் தங்களைப் பார்க்க வர வேண்டாம் என கர்கரே குடும்பம் வேண்டுகோள் விடுத்திருந்தும் மோடி கர்கரே வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தார்.
மோடியும் பாஜக தலைவர்களும் கர்கரேவுக்கு அஞ்சலி செலுத்துவதில் இருந்த கசப்பான முரணைப் பல ஊடகங்கள் சுட்டிக்காட்டின. 2008 செப்டம்பரில் மகாராஷ்டிர மாநிலத்தின் மலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடர்பு கொண்டிருப்பதை தீவிரவாதத் தடுப்பு பிரிவு தலைவர் என்ற முறையில், கர்கரே அம்பலப்படுத்தியிருந்தார். ஐமுகூ அரசின் உத்தரவின்படி ஆர்எஸ்எஸ் மீது கர்கரே வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக பாஜக பிரமுகர்கள் கூறியிருந்தனர்.
காவி பயங்கரவாதத்தின் இருப்பை நிரூபிப்பதில் ஐமுகூ அரசு காட்டிய தீவிரம், மும்பை தாக்குதலுக்கான காரணங்களில் ஒன்று என கர்கரேயின் மரணத்துக்குப் பிறகும் பாஜக கூறிவந்தது. நவம்பர் 28ஆம் தேதி, செய்தியாளர்களுக்கு விடுத்த அறிக்கையில், “தீவிரவாதி வைத்திருந்த செல்போன் பாகிஸ்தானைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. இந்து பயங்கரவாதம் எனச் சொல்லப்படுவதன் மீது உளவுத் துறையின் கவனம் குவிக்கப்பட்டதுதான், மும்பை தாக்குதல் சதித் திட்டம் முன்கூட்டியே கண்டறியப்படாமல் போகவதற்குக் காரணம் என்பதை இது நிரூபிக்கிறது” என்று அத்வானி குறிப்பிட்டார்.
அதற்கு முந்தைய தினம், இந்திய அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் இருவரும் கூட்டாக மும்பைக்குச் சென்று, தேசத்திற்கு உரையாற்ற அத்வானிக்கு மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டு விஜயம் நிகழவில்லை. அத்வானி இதற்கு அளித்த விளக்கம் வருமாறு: “மும்பைக்கு ஒன்றாகச் செல்ல வேண்டும் என பிரதமர் யோசனை தெரிவித்திருந்தார். நான் உடனடியாக ஒப்புக்கொண்டு என பயணத் திட்டத்தைத் தள்ளிவைத்தேன். ஆனால் நன்பகலில், கமோண்டோ நடவடிக்கை முடியாத நிலையில், 28 வெள்ளிக்கிழமை சென்றால் நன்றாக இருக்கும் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது”. இந்தப் பயணம் நிகழாமல் போனதற்கான பழியை மன்மோகன் மீது போடுவதற்கான நுட்பமான முயற்சியாக இது அமைந்தது. மும்பை தாக்குதல் தொடர்பான பொதுமக்கள் கோபத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் பாஜக விளம்பரங்கள், பயங்கரவாதத்தைத் தடுக்க ஐமுகூ அரசு தவறிவிட்டது எனும் மோடியின் விமர்சனம் ஆகியவற்றுக்குப் பிறகு, அத்வானியைப் பிரதமர் உடன் அழைத்துச்செல்வார் என எதிர்பார்ப்பது கடினம்தான்.
மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தில் மிண்ட் நாளிதழ், ஐமுகூ அரசுக்கு அளித்த தனது வாக்குறுதியிலிருந்து பாஜக பின்வாங்கியதற்கான பின்னணி தொடர்பான செய்தியை வெளியிட்டிருந்தது. பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த பாஜக தலைவரும், எம்பியுமான ஒருவரை மேற்கோள் காட்டியது. “பாகிஸ்தானுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டையும், தீவிர இந்துத்துவ நிலைப்பாட்டையும் எடுக்க அத்வானி மோடியைப் பணித்தார்” என அவர் குறிப்பிட்டதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. “அத்வானிஜி உள்ளிட்ட எங்கள் மூத்த தலைவர்கள் யாரும் உடனடியாக மும்பை சென்று ஒரு நிலைப்பாடு எடுக்கத் தயாராக இல்லை. அவர்கள் தில்லியில் அதைச் செய்தனர் ஆனால், மும்பையில் தங்கள் கட்சியைச் சேர்ந்த யாரேனும் இருக்க வேண்டும் என்று விரும்பினர்” என்று அந்த எம்பி கூறினார். மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டே மோடியைத் தொடர்புகொண்டபோது அவர் இதற்கு உடனே ஒப்புக்கொண்டதாகவும் அந்த எம்பி மேலும் கூறினார்.
இப்போது பார்க்கும்போது, மோடி, அத்வானி, பாஜக ஆகியோர் ஒரு தெளிவான திட்டத்திடனே செயல்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது. நவம்பர் 27 அன்று தில்லியில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதற்குச் சில மணிநேரங்கள் முன், பாஜக முதல்வர் வேட்பாளர் விஜய் குமார் மல்ஹோத்ரா, மலேகான் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, இது கற்பனைத் தீவிரவாதிகளைக் கண்டறிவதற்கான செயல் எனக் கூறினார். “நம்முடைய முன்னேற்றத்தைத் தடுத்த நிறுத்த விரும்பும் உண்மையான தீவிரவாதிகளைக் கண்காணிப்பதற்கு பதில்… இந்து தீவிரவாதிகளைப் பிடிக்க நம்முடைய முயற்சி திசை மாற்றப்பட்டது. இதனால், புலனாய்வு அமைப்புகள் திக்குத் தெரியாமல் அலந்தன” என்று அவர் கூறினார்.
ராஜஸ்தானிலும், பாஜக மும்பை தாக்குதலை வாக்குகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தது. 2008 நவம்பர் 29ஆம் தேதி வெளியான இந்தியா டுடே செய்தி, தீவிரவாதத் தாக்குதலைத் தடுத்த நிறுத்த மத்திய அரசு செயலற்று இருப்பதைக் கண்டிக்கும் வகையில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் “தீவிரவாத கொடும்பாவி”களை எரிக்கத் திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. தீவிரவாதிகள் தாக்குதலை காங்கிரசின் சிறுபான்மை ஆதரவு நிலையுடன் தொடர்புபடுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உதாரணமாக, நவம்பர் 29 இந்தியா டுடேயில் வெளியான ராஜஸ்தான் மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் ராமதாஸ் அகர்வாலின் கூற்று. “காங்கிரஸ் கட்சி திருப்திப்படுத்தும் போக்கைக் கடைப்பிடித்துவருகிறது. தீவிரவாதத்தின் மீதான நோக்கிய மென்மையான அணுகுமுறை காரணமாக அவர்கள் தேசத்தைப் பாழடித்துவிடுவார்கள்” என அவர் கூறியதை இந்தியா டுடே மேற்கோள் காட்டியிருந்தது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலை, மோடி, அத்வானி, பாஜக வாக்குகளுக்காகப் பயன்படுத்திக்கொண்ட விதத்திற்கு மாறாக புல்வாமா தாக்குதலின்போது எதிர்கட்சிகள் அரசுக்கு உறுதுணையாக நின்றன. கடந்த ஒரு மாதத்தில் எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்திய முதிர்ச்சியை மக்கள் உணர்ந்துள்ளனரா என்று தெரியவில்லை. ஆனால், மும்பை தாக்குதலை பாஜக பயன்படுத்திக்கொண்ட விதம் ராஜ்ஸ்தான் மற்றும் தில்லி மக்களை ஈர்க்கவில்லை. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.
அஜாஸ் அஷ்ரஃப்
(அஜாஸ் அஷ்ரஃப், தில்லி பத்திரிகையாளர்)
நன்றி : தி கேரவன்
https://caravanmagazine.in/politics/bjp-ads-2008-mumbai-attacks-expose-hypocrisy-questioning-national-security
Please notify by email for new posts