மார்ச் 16 அன்று #MainBhiChowkidhar என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ஒரு காணொளியைப் பதிவு செய்து, நானும் காவலாளி என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி. இந்தக் காணொளி, இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இந்தியாவின் இரண்டாவது பெரிய சமூகமான இஸ்லாமியர்களைத் தவிர.
மோடி ட்விட்டரில் தனது பெயரை ‘சௌகிதார் நரேந்திர மோடி’ என்று மாற்றியதைத் தொடர்ந்து, பெரும்பான்மையான பாஜக தலைவர்களும் தங்கள் ட்விட்டர் பெயர்களுக்கு முன்பு ‘சௌகிதார்’ என்ற அடைமொழியை இணைத்துக்கொண்டனர். இதன் நோக்கம் பிரதமராலேயே தெளிவாகச் சொல்லப்பட்டது, அதாவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்குள்ளும் உறங்கிக்கொண்டிருக்கிற காவலாளியைத் தட்டி எழுப்புவது. இங்கு காவலாளி என்பது, கடின உழைப்பிலும் குடிமை உணர்விலும் ஈடுபடும் சமூக நிலையைக் குறிக்கிறது.
இந்தக் காணொளியானது, முடிந்த அளவு இந்தியா முழுவதிலும் உள்ள வெவ்வேறு சமூகங்களை உள்ளடக்கிக் காட்சிபடுத்த முயல்கிறது. பல காட்சிகளுக்கு மத்தியில், ஆறுகளில் பிரார்த்தனை செய்யும் மக்கள், தெருக்களில் பிரேக் டான்ஸ் ஆடும் இளைஞர்கள், திருவிழாக்களில் நடனமாடும் பெண்கள் ஆகியோர் இடம்பெறுகின்றனர். அது மட்டுமல்ல. காணொளி முடியும் சமயத்தில் வீரத்தோடு தோள் கொட்டும் ராணுவ வீரர்களும், அதைத் தொடர்ந்து விமானப் படைத் தாக்குதல்களைக் காட்சிப்படுத்தும் படிமங்களும் வருகின்றன.
இந்த நான்கு நிமிட வீடியோவில், சிறிதளவுகூட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் காட்சிப்படுத்தப்படவில்லை. அப்படியே காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் அது நம் கண்ணுக்குத் தெரியும் விதத்தில் இல்லை. மக்களை அவரவருடைய இன அடையாளங்களோடு காண்பிப்பதன் மூலம், அனைவரையும் உள்ளடக்குதல் எனும் கருத்தை ஆழமாக நிறுவ முயலும் இந்தக் காணொளி சொல்ல வரும் செய்திக்கு முற்றிலும் எதிரானதாக இது இருக்கிறது.
அதேபோல, பாஜகவின் முதன்மையான வாக்கு வங்கிகளான இந்தி பேசும் மாநிலங்களில் இப்போதும் ஒதுக்கப்படும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களையும் இந்தக் காணொளியில் காணவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, இந்த இரு பிரிவினரும் (தலித்துகளும் முஸ்லிம்களும்) பட்டப்பகலிலேயே இந்துத்துவக் கூட்டத்தால் தாக்கப்படும், அழிக்கப்படும் சமூகத்தினர். அப்படியெல்லாம் நடக்கும்போது காவலாளிகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள் போலும்.
2014ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலின்போது, உத்தரப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூடத் தேர்தெடுக்கப்படவில்லை. இந்தப் பிரதிநிதித்துவப் பிரச்சினை பாஜகவோடு மட்டும் தொடர்புகொண்டதல்ல. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்த மாநிலத்தில் செயல்படும் இதர கட்சிகளிலும் இந்தப் போக்கு உள்ளது. ஸ்க்ரோல் இணையதளம் தரும் தகவலின்படி, 2014 தேர்தலில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் ஏழு முஸ்லிம் வேட்பாளர்களுக்கு மட்டுமே பாஜக போட்டியிட வாய்ப்பளித்தது.
இந்தத் தரவுகள், முஸ்லிம்கள் மற்றும் இந்தியாவிலுள்ள மற்ற சிறுபான்மையினரை உள்ளடக்குவதில் பாஜகவுக்கு இருக்கும் அலட்சியத்தையே காட்டுகிறது.
பிரச்சாரத்திற்கான இந்தக் காணொளி இப்படியான வசனத்துடன் முடிகிறது: தங்கள் நாட்டின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு இந்தியருக்குள்ளும் ஒரு காவலாளி இருக்கிறார்.
பாஜக சொல்ல வரும் செய்தியை உருவகப்படுத்தினால், இந்தியாவின் இரண்டாவது பெரும்பான்மைச் சமூகத்தையும் இன்ன பிற சிறுபான்மையினரையும் இந்தக் ‘காவலாளி பிரச்சாரத்தில்’ கண்டுகொள்ளவில்லை என்பது தெளிவாகும். இந்தக் காணொளியை உருவாக்கியவர்கள் தங்களுடைய ஸ்க்ரிப்ட்டில் பன்மைத்துவத்தை இணைக்க மறந்திருக்கலாம் என்றும் இதற்கு விளக்கம் அளிக்கலாம்.
இந்தக் காணொளி யூட்யூப்பில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து பகிரப்படுகிறது.
இது தவறுதலாக நடந்திருக்க வாய்ப்பில்லை. அனைவரையும் எளிதாகவே உள்ளடக்கி இருக்கலாம். ஆனால், சிறுபான்மையினரிடமும், பிற மக்களிடமும் பாஜக நெடுங்காலமாக நடந்துகொள்ளும் விதம்தான் இதற்குக் காரணம். அவர்கள் வெளியிடும் பிரசுரத்தின் முதல் பக்கத்திலோ, உருவாக்கும் காணொளியிலோ இவர்களை இடம்பெறச்செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்னும் அளவுக்குத்தான் பாஜகவின் கடந்த கால வரலாறு உள்ளது.
இறுதியில், மார்ச் 31 அன்று பிரதமருடன் இந்தப் பிரச்சாரத்தில் கைகோர்க்குமாறு பார்வையாளர்களிடம் கோருகிறது. இத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் காணொளி, பன்மைத்துவத்தைப் பற்றிய தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறது. சமூகத்தின் பல பிரிவுகளுடைய குரலாக பாஜக இருக்க வேண்டுமென்றால், பரவலான பிரதிநிதித்துவப்படுத்தலில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இன்னும் அதிகம் பேரை உள்ளடக்கியதாக இருந்திருக்க வேண்டும்.
கறுப்பின மக்கள், ஆசிய மக்கள், பிற சிறுபான்மையின மக்கள் என்று பல சமுதாயங்களைச் சேர்ந்த மக்களை விளம்பரங்களில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் காலம் இது. இந்தச் சமயத்தில்தான் அனைவரையும் உள்ளடக்கத் தவறும் இந்தக் காணொளி வந்திருக்கிறது. பலரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது ஸ்டீரியோடைப்பை வலுப்படுத்தும் செயல் அல்ல. மாறாக, மக்கள் பார்வையில் பலரையும் பிரதிநிதிப்படுத்துவதை இயல்பாக்கும் செயல். மக்கள் வரலாற்று நிகழ்வுகள் காரணமாக இத்தகைய சிறுபான்மையினரை வெளியாட்களாகவே பார்க்கிறார்கள்.
நமது பிராண்டுகளால் முதன்மைக் கதாபாத்திரங்களில் சிறுபான்மையினர் பங்குபெறுவதில்லை. இந்தப் பழக்கம் தொற்றுநோயைப் போன்றது. ஆனால், இந்தியா போன்ற ஒரு நாட்டின் அரசியல் பிரச்சாரத்தில் காட்டப்படும்போது இது இன்னும் மோசமாகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் வேர்கள், அனைவரையும் உள்ளடக்குவதிலிருந்து உருவாக வேண்டும்.
இந்தப் பிரச்சாரத்திற்குக் குறிப்பிடத் தகுந்த அளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீரவ் மோடி நாட்டை விட்டுத் தப்பிச் சென்றபோது பிரதமர் தன் காவல் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். வேலைவாய்ப்பில்லாமல் நிஜமாகவே காவலாளியாக வேலைபார்க்க வேண்டிய நிலையில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்றது இன்னொரு விமர்சனம்.
2019 மக்களவைத் தேர்தலானது, லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இணையத் தொடர்பு குறைந்த விலையில் கிடைக்கும் நேரத்தில் வருகிறது. குறைந்த செலவு மூலமாக மக்களை வேகமாகச் சென்றடைவதை இது எளிதாக்குகிறது. குறிப்பாக முதல் முறையாக வாக்களிக்கப் போகும் பெரும்பங்கான, 45 மில்லியன் வாக்களர்களை எளிதில் சென்றடையலாம். கடந்த மூன்று ஆண்டுகளில், டேட்டா விலை 93% குறைந்ததை அடுத்து, இணையத் தொடர்பு மிகவும் மலிவாகியிருக்கிறது.
மேலும், ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. eMarketer என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம், இந்த ஆண்டின் முடிவிற்குள், ஏறத்தாழ 380 மில்லியன் மக்கள்- அதாவது நான்கில் ஒரு பங்கினர்- ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்களாக இருப்பார்கள் என்று சொல்கிறது. இவ்வனைத்துமே 2019 தேர்தலில் முக்கியமான பங்கு வகிக்கும்.
சந்தேகத்திற்கு இடமின்றி, இந்தப் பிரச்சாரம் மேலும் விரிவுபடுத்தப்படும். எங்களுடைய அடுத்த ஆட்சியில் உங்கள் குரலை, பயத்தை, பதற்றத்தைத் தீர்க்க முயல்வோம் என்று என்றும், வரக்கூடிய தசாப்தத்தில் இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கும் சூழலை உருவாக்குவோம் என்றும் சிறுபான்மையினருக்கு உறுதி அளிக்க பாஜக இனிமேலாவது முயற்சி செய்யுமா என்று பார்ப்போம்.
ரிபு
நன்றி: தி வயர் (https://livewire.thewire.in/politics/how-modis-mai-bhi-chowkidar-video-failed-in-its-message-of-inclusivity/)
தமிழில்: ஆஸிஃபா