புல்வாமாவில் நடந்த மிகவும் சோகமான சம்பவத்தை, பாகிஸ்தானுக்கு எதிரான மிகப் பெரிய அரசியல் மற்றும் ராணுவ வெற்றி என்று, பெரும்பான்மையான அரசியல் வர்க்கத்தினரை பிரதமர் மோடி நம்ப வைத்துவிட்டார். இதனால், அரசியலில் தங்கள் பைகளை நிறைத்துக்கொள்ள நினைக்கும் பலரும் இந்தக் கடைசி நேரத்திலும் பாஜக கூட்டணியில் இணைந்துகொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கின்றனர். பிப்ரவரி 14 முதல் மோடி செய்த அனைத்துமே நாடகம்தான் என்று இவர்களுக்குப் புரியவில்லை. அரசின் பக்குவமற்ற செயல்பாட்டாலும், சட்டத்தின் மீதான மிகக் குறைந்த மரியாதையாலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையாலும் தோற்கவிருந்த ஒரு தேர்தலில் எப்படியேனும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் மோடி நிகழ்த்திய இந்த நாடகத்தின் ஒரே நோக்கம்.
2014ஆம் ஆண்டில், பாஜகவின் வாக்குகள் 18%இலிருந்து 13% அதிகரித்து 31% ஆக உயர்ந்ததால்தான் பாஜக ஆட்சிக்கு வந்தது. இதற்கான காரணம், 2011ஆம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி சரிவதைக் கண்ட வாக்காளர்கள் “நல்ல நாளை” (acche din) கொண்டுவருவேன் என்ற மோடியின் மகத்தான வாக்குறுதியை நம்பியதுதான். அதாவது, பொருளதார வளர்ச்சியை மீண்டும் கொண்டுவந்து, அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதாகச் சொன்னார். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்ததெல்லாம் பொருளாதாரத் தரவுகளை முடக்குவதும் பொய்யான தரவுகளை உற்பத்தி செய்வதும்தான்.
புதிய வேலைகள் உருவாக்கப்படவேயில்லை, தொழில் துறையில் 11 மில்லியன் வேலைகள் காணாமல் போயுள்ளன. இது தவிர, கட்டுமானத் துறையிலும் வேலைகள் இல்லாமல் போயின. சுத்தமாக வேலையில்லாமல் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை 6.2% உயர்ந்து, கடந்த 45 ஆண்டுகளில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. இந்தத் தகவல்களெல்லாம் மோடியால் மறைத்து வைக்கவோ திரித்துக் கூறவோ முடியாதவை.
பரவிவரும் இந்த அதிருப்தியானது, சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களிலும் இடைத் தேர்தல்களிலும் பாஜக பெற்ற தோல்விகளின் மூலம் பிரதிபலித்தது. தன்னால் தனியாக வெற்றிபெற முடியாது என்று மோடிக்குத் தெரியும். எனவேதான் அவர் “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடமான” தேசபக்தியைத் தேர்ந்தெடுத்தார். அவர் எதிர்பார்த்த வாய்ப்பை புல்வாமா அவருக்குக் கொடுத்தது. அதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொண்டார். இந்தத் தன்மை 2002ஆம் ஆண்டில் குஜராத் கலவரங்களுக்குப் பிறகு அவர் நடந்துகொண்ட ஈவிரக்கமற்ற தன்மையை நினைவுபடுத்துகிறது.
போர் முரசு கொட்டும் மோடி
பெரிய ஊடகங்கள் கவனிக்கத் தவறும் முரண் என்னவென்றால், மிக விரைவில் ஒரு தாக்குதல் நடக்கக்கூடும் என்று உளவுத் துறையிடமிருந்து மூன்று எச்சரிக்கைகளும், காஷ்மீர் காவல் துறையிடமிருந்து விரிவான ஒரு எச்சரிக்கையும் அரசிற்குக் கொடுக்கப்பட்டது என்பதுதான். இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து ஒரு தகவல் பெறப்பட்டிருந்தால் அந்தத் தகவலைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது, உலகம் முழுவதிலும் உளவுத் துறை செயல்பாடுகளில் கடைப்பிடிக்கப்படும் மிக முக்கியமான விதி. புல்வாமா தாக்குதலுக்கு முந்தைய இந்த எச்சரிக்கை அப்படிப்பட்டதுதான்.
சி.ஆர்.பி.எஃப். அதிகாரிகள் இந்த எச்சரிக்கைகளைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, வீரர்களைச் சாலை வழிக்குப் பதிலாக விமானம் மூலம் கொண்டு செல்ல அனுமதி கேட்டனர். பனி அதிகமாக விழுந்ததால் இரண்டு பயணக் குழுக்கள் ஒன்றாக மாட்டிக்கொண்டு, இதனால் அவர்கள் வேகம் மேலும் குறைந்துவிடும் என்பதனால்கூட இவ்வாறு கேட்டிருக்கலாம். காரணம் எதுவானாலும், அவர்கள் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளனர், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு கோரிக்கையை நிராகரிக்கும் அதிகாரம் யாருக்கு இருந்தது? இவ்வளவு முக்கியமான விஷயத்தில், உள்துறை அமைச்சகம் தானகவே நிராகரிப்பது அநேகமாக நடக்காத காரியம். அப்படியே செய்திருந்தாலும், தாக்குதலைத் தொடர்ந்த நாட்களில் குற்றச்சாட்டுகளும் மறுப்புகளும் எழுந்திருக்கும். ஆனால், ஒரு முழு மாதம் கடந்த பின்னரும், அமைதி மட்டுமே நிலவுகிறது. எனவே, அக்கோரிக்கை பிரதமர் அலுவலகத்தாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. அதாவது மோடியால். அவர் ஏன் அதைச் செய்ய வேண்டும்? அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
மோடி, பெரிய அளவிலான மரணங்களைத் தனக்கான அரசியல் ஆதாயமாக மாற்ற முற்படுவது இதொன்றும் முதல்முறை அல்ல. கோத்ரா தீ விபத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த திட்டமிடப்பட்ட கொலைகளையும் நான்கு மாதங்கள் பயன்படுத்தி, வெற்றி பெற்று குஜராத் முதலமைச்சர் ஆனதோடு, அடுத்த 12 ஆண்டுகள் அப்பதவியை தக்கவைத்துக்கொண்டார். ஆக, சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் மரணம் கொடுத்த ‘வாய்ப்பை’ அவர் பயன்படுத்திக்கொண்டது அவர் இயல்புக்குப் பொருத்தமானதுதான்.
அதைத் தொடர்ந்து நடந்த அனைத்துமே அற்புதமாகத் திட்டமிடப்பட்ட நாடகமே. முதலில், பதிலடியாக ஒரு ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்தப்போவதாக மோடி வாக்களித்தார். அது 12 நாட்கள் கழிந்து, பிப்ரவரி 26 அன்று நடத்தப்பட்டது. பாகிஸ்தான் பாலகோட்டில் நடந்த இந்திய விமானப் படையின் தாக்குதல் நடந்த சில மணி நேரத்திற்குள், மிக முக்கியமான ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் பயிற்சி முகாம்களை மொத்தமாக அழித்துவிட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் தெரிவித்தார். 300 முதல் 400 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக பாஜக அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால், அதைத் தொடர்ந்து வெளியான செயற்கைக்கோள் புகைப்படங்களும் குண்டுவெடிப்பு ஆய்வுகளும் பாலகோட்டிலுள்ள மதரஸா அப்படியேதான் இருக்கிறது என்பதோடு, மிகக் குறைவான பாதிப்பே அடைந்துள்ளது என்று கூறின. அரசியல்வாதிகள் சொல்வதைவிட காயம் பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கின்றன. விமானப் படைத் தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை இப்போதே சொல்ல முடியாது என்று விமானப் படையே சொல்கிறது.
அனைத்தும் நாடகமே
செயற்கைக் கோள் மூலம் கிடைத்த புகைப்படங்கள் ஒருபுறம் இருக்க, மிகவும் நம்பகமான ஆதாரம் தொலைபேசி மூலம் வந்ததாக மதரஸாவில் படிக்கும் ஒரு மாணவர், நிருபமா சுப்பிரமணியம் என்ற மிகவும் மதிப்பிற்குரிய ஊடகவியலாளிடம் தெரிவித்துள்ளார். இவர், முன்பு தி இந்து நாளிதழின் இஸ்லாமாபாத் நிருபராகப் பணிபுரிந்தவர். தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பணிபுரிகிறார். மதரஸா அருகே ‘பெரிய’ குண்டு விழுந்ததாகவும், அதன் பிறகு அனைவரும் வேகமாக ராணுவத்தால் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் அம்மாணவர் தெரிவிக்கிறார்.
ஆனால், இம்முடிவிற்கு வருவதற்கு ஒருவர் வெவ்வேறு தரப்பினர் தரும் முரண்பாடான தகவல்களை நம்புவதா, செயற்கைக்கோள் பகுப்பாய்வை நம்புவதா என்று தடுமாற வேண்டிய அவசியமில்லை. உயிரிழப்பு ஏதும் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் பிரதமர் இம்ரான் கான் கூறியதுகூட ஆணித்தனமான ஆதாரம் இல்லை. அவர் அதை எங்கே சொன்னார் என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஏனென்றால் அவர் சொன்னது பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில். பாலகோட் கைபர்-பக்டூவாவில் இருக்கிறது. அவர் சொன்னது உண்மை இல்ல என்றால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூடவா அவருடன் முரண்படாமல் இருந்திருப்பார்? இறந்துபோன சில பெயர்களைக் குறிப்பிட்டு, இந்தியாவை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத கோழையாக இம்ரான் இருக்கிறார் என்றும் சொல்லாமலா இருந்திருப்பார்கள்? தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு பிரதமரும் இப்படியான ஒரு ஆபத்தான முடிவை எடுக்க மாட்டார். அதுவும் பாகிஸ்தானில் அது பன்மடங்கு ஆபத்தானது.
அப்படி ஒருவர்கூடக் கொல்லப்படவில்லை என்றால், அதற்குக் காரணம், மிகப் பெரிய கட்டிடம் போன்றதொரு இலக்கை, ஒன்றுக்கு நான்கு வெடிகுண்டுகள் வைத்துக்கொண்டு, தவறவிடும் அளவிற்கு இந்திய விமானப் படை திறமையற்றதா? இல்லவே இல்லை. எனில், இதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டுமே எஞ்சியிருக்கிறது: அதாவது, இந்தத் தாக்குதல்கள் தவற வேண்டும் என்றே திட்டமிடப்பட்டன.
இந்த அனுமானம் ஒன்று மட்டுமே வழக்கத்திற்கு மாறான இரண்டு விஷயங்களை விளக்குகிறது: ஒன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தாக்குதலுக்கு ஒரு நாள் முன்பு வெளியிட்ட அறிக்கை. இந்தியா எதிர்த் தாக்குதல் நடத்தும் என்று தான் நம்புவதாகவும், அப்படி இந்தியா செய்யுமாயின் தன்னால் அதைப் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறியிருந்தார். இரண்டு, பாகிஸ்தானின் பதில் தாக்குதல் நடந்த முறை. இந்த பதில் தாக்குதல், கட்டுப்பாட்டு எல்லையை தாண்டக் கூடாது என்ற பாகிஸ்தான் விமானப் படையின் கவனத்தை வெளிப்படுத்தியது. அதே சமயம் ‘பாகிஸ்தான் விமானப் படையின் திறமையை’க் காண்பிக்கும் வகையில் குடியிருப்பில்லாத இடத்தில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் போராக மாறிவிடக் கூடாது என்பதற்காக, அமெரிக்கா இவ்விரண்டு எதிர்வினைகளும் அரங்கேற உதவியிருக்கலாம் என்பது சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட விஷயம் கிடையாது.
மசூத் அசார் விவகாரம்
எனவே, மோடியின் பார்வையின்படி, இந்த முழு நடவடிக்கையுமே மிகப் பெரிய வெற்றி. ஆனால் தேசத்திற்கு, இது எதிர்பாராத ஒரு பேரிடர். இருப்பினும், இந்த ஒரு விஷயத்தை மோடியால் பலன் பெற்றுவிட முடியுமா என்று விமர்சகர்கள் கேட்கலாம். முடியாதுதான். ஆனால், ஆனால், இந்த விமானப் படைத் தாக்குதலானது பல நிகழ்வுகளுக்குப் பின் நடந்தது. தவிர, மசூத் அசாரைச் சர்வதேசத் தீவிரவாதி என்று அறிவிக்க வேண்டும் என்று மோடி உரக்கக் குரல் கொடுக்கிறார். புல்வாமா தொடர்பாக ஐநா பாதுகாப்பு சபை சந்திப்பதற்கு முன்பே இதைச் செய்ய வேண்டும் என்று மோடி முயற்சித்தார். ஆனால், அதில் தோல்வி அடைந்துவிட்டார். உண்மையில், ஐநா பாதுகாப்பு சபை ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பிற்கு எதிராக நேரடியாகக் கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லை. மாறாக, அவ்வமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது என்று மட்டும் ஒப்புக்கொண்டது. பழிக்குப் பழி விமானப் படைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த மசூத் அசார் விவகாரத்தை மீண்டும் கொண்டுவந்தார், ஆனால், எதிர்பார்த்த விதமாக சீனா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை முறியடித்தது.
அசாரைச் சர்வதேசத் தீவிரவாதி என்று அறிவித்து அவரைத் தடை செய்ய வேண்டியது அவசியம்தான். இந்த விஷயத்தில் சீனாவின் மறுப்பு கள யதார்த்த அரசியலின் குரூரமான வெளிப்பாடு. ஆனால், களத்தில் எவ்வித மாற்றத்தையும் கொண்டுவர வாய்ப்பற்ற, முற்றிலும் குறியீட்டான ஒரு அறிவிப்பிற்கு இந்தியா எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மசூத் அசார் 2000-ல் பாகிஸ்தான் வந்ததிலிருந்து வெளிநாட்டிற்குச் செல்ல எவ்வித விருப்பமும் தெரிவிக்கவில்லை. எனவே இந்தத் தடை அவருக்கோ, இஸ்லாமாபாத்திற்கோ ஒரு பொருட்டே அல்ல. இம்மாதிரியான ஒரு அறிவிப்பிலிருந்து இந்தியாவிற்கு என்ன கிடைக்கப் போகிறது? ஒன்றுமே இல்லை. ஆனால், மோடியின் இரும்பு மனிதர் என்ற பிம்பத்திற்கு இதனால் வலு கூடும். மிக வலிமையான அண்டை நாட்டுடனான இந்தியாவின் உறவை ஆபத்திற்குள்ளாக்க அவர் துணிந்தது இதற்காகத்தான். இவருடைய இந்த ராஜதந்திரமானது, புல்வாமா விஷயத்தைவிடவும் பல வழிகளில் இவருடைய பொறுப்பற்றதன்மையைக் காட்டுகிறது.
நடுக்கடலில் தத்தளிக்கும் காங்கிரஸ்
இந்திய விமானப் படையின் வெடிகுண்டுகள் மதரசாவிற்குள் இருந்த 300 மாணவர்களைக் கொன்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? அம்மாணவர்கள் ஜிஹாதியில் இணைய நினைக்கும் தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி, பள்ளிக்குக் கொடுக்கக்கூடிய அளவு பணம் இல்லாத ஒரு ஏழையின் மகனாக இருந்தாலும் சரி. அப்படி நடந்திருந்தால், பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள காலியிடத்தில் நடத்திய நான்கு தாக்குதல்கள் மூலம் எதிர்வினை ஆற்றாதிருக்குமா? அதைவிட அதிகமான தாக்குதலைச் செய்திருந்தால், மோதல் பெரிதாவதற்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்கும்? மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஈவிரக்கமற்ற முயற்சியில், மோடி எடுக்கத் துணிந்த ஆபத்தான முடிவு இதுதான். இருப்பினும், காங்கிரஸால் இதைச் சுட்டிக் காட்ட முடியவில்லை.
இன்று, சங்க பரிவாரித்தனர் மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க ஒரே வழி, காங்கிரஸ் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பலமான ஒரு எதிர்த்தரப்பை உருவாக்குவதும், பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதும் மட்டுமே ஆகும். பொது அறிவுக்கு உகந்த இந்த உத்திக்கு எதிராக நிற்பது காங்கிரஸின் உள்ளூர்த் தலைவர்கள்தான். தேர்தல் செலவுகளுக்காக வசூல் செய்வது, நிதி உதவி செய்தவர்களுக்குக் “கைம்மாறு” செய்வதாக உறுதியளிப்பது என்றிருக்கும் அவர்கள், தங்கள் தொகுதி கூட்டணிக் கட்சிக்கு என முடிவானதும் காணாமல் போய்விடுவார்கள். தொகுதிப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். இத்தகைய சிந்தனை, உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்தியப் பிரதேசம், பிகார் மற்றும் பிற மாநிலங்களில் மும்முனைப் போட்டியை உருவாக்கிவிடக்கூடும். இதனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவும் கூடும்.
தற்கொலைக்கு ஒப்பான இந்த அணுகுமுறையை மாற்றக்கூடிய வாய்ப்புள்ள ஒரே நபர் ராகுல் காந்தி. தனது கட்சியை மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் அவர் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது. டெல்லியில் 5% வாக்குகளையும், உத்தரப் பிரதேசத்தில் 8-10% வாக்குகளையும் மட்டுமே காங்கிரஸ் பெற்று, மஹகட்பந்தனின் தோல்விக்குக் காரணமாக இருக்குமேயானால், கட்சி மீதான நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டின் முடிவாக அது அமைந்துவிடும். அது மட்டுமல்ல. அந்தத் தொகுதிகளில் காங்கிரஸ்காரர்களுக்கு இருக்கும் ஆதரவையும் இது குலைத்துவிடும்.
பிரேம் சங்கர் ஜா
நன்றி: தி வயர் (https://thewire.in/politics/modi-is-all-theatre-and-the-congress-is-making-it-easier-for-him-to-pull-off-his-act)
தமிழில்: ஆஸிஃபா