நட்பில் அரசியல் கலக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், வெறுப்பைப் பரப்பி ஒட்டுமொத்த தேசத்தையே சீர்குலைக்கும் முயற்சியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவரோடு எப்படி நட்பாக இருக்க முடியும்?
நான் பல மாதங்களாக எழுத விழைந்த கடிதம் இது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், முடிவாக இப்போது எழுதியே தீர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டதாகக் கருதுகிறேன்.
நம் இருவருக்கும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல பழக்கம். இது ஒரு நீண்ட காலம். உன் வீட்டில் நானும், என் வீட்டில் நீயும் இருந்திருக்கிறோம். நாம் கணக்கற்ற தேநீர்க் கோப்பைகளைப் பகிர்ந்துகொண்டே வாழ்க்கை, பிரபஞ்சம் மற்றும் எல்லாவற்றையும் குறித்து நீண்ட நேரமாகப் பேசிக் களித்திருக்கிறோம். உன் இல்ல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்திருக்கிறாய். அதுபோலவே, என் இல்ல நிகழ்ச்சிகளுக்கு உன்னை அழைத்திருக்கிறேன். என் இன்ப, துன்ப தருணங்களில் என்னோடு நீ இருந்திருக்கிறாய். உனது இத்தகைய தருணங்களில் நானும் உன்னோடு இருந்ததாக நம்புகிறேன்.
எனக்கு இது எழுதுவதற்கு இதம் தரக்கூடிய கடிதம் அல்ல. ஆனால், நான் இதைச் செய்தே ஆக வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.
உனக்கு நினைவிருக்கலாம், ஓராண்டுக்கு முன்பு எனக்கு நீ குறுந்தகவல்களையும் வீடியோக்களையும் அனுப்பத் தொடங்கியிருந்தாய். அவை காங்கிரஸ் “நம் நாட்டை 70 ஆண்டுகளாகக் கொள்ளை அடித்த விதம்” குறித்தானதாக இருந்தது. அவற்றுடன் யோகா, தியானம், நேர்மறை சிந்தனைகள், நட்புறவு முதலானவை குறித்த ஏனைய குறுந்தகவல்களையும் எனக்குத் தட்டிவிட்டாய். ஃபார்வேர்டு மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் வழக்கம் இல்லாததால், நீ அனுப்பியவற்றுக்கு பதிலளிப்பது குறித்து யோசித்ததே இல்லை. (நீயும் என்னிடம் பதிலை எதிர்பார்த்திருப்பாய் என்று நான் நினைக்கவில்லை.)
அதன் பிறகு, நரேந்திர மோடி அரசு எப்படியெல்லாம் அற்புதமாகச் செயலாற்றுகிறது என்கிற ரீதியிலான குறுந்தகவல்களைக் குவியலை எனக்கு அனுப்பத் தொடங்கினாய். என் நினைவாற்றல் சரியாக வேலை செய்கிறது எனில், அதுபோன்ற தகவல்களுக்கு ஒரு ஸ்மைலியை மட்டும் உனக்குப் பதிலாக நான் அனுப்பியிருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அரசியல் பார்வை உண்டு. உனக்கென ஒரு பார்வையும், எனக்கென ஒரு பார்வையும் இருக்கும். அந்த வகையில், ‘வாழு, வாழ விடு’ எனும் பண்பின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு.
ஆனால், நீ அடுத்து அனுப்பிய குறுந்தகவல் குவியல்களின் தன்மையோ, என் அணுகுமுறையையே கடுமையாக அசைத்துப் பார்த்துவிட்டது. “இந்திய மக்களின் நலனுக்கு முஸ்லிம்கள் எப்படி பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்” என்ற செய்திகளைத் தாங்கி வந்தன, அந்த வாட்ஸப் குறுந்தகவல்கள். நீதான் இவற்றையெல்லாம் அனுப்புகிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ‘உன் போனை வேறு யாராவது எடுத்து இதுபோல் அருவருக்கத்தக்க வகையில் கலாய்த்து விளையாடுகிறார்களா?’ என்று உன்னிடமே கேட்டதை நீ மறந்திருக்க மாட்டாய். “நான்தான் அனுப்புகிறேன்” என்று நீ பதில் சொன்னாய்.
அதன் பின்னர், முஸ்லிம்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவர்கள், இந்தியாவின் பிரச்சினைகளுக்கு அவர்கள் வேர்க்காரணியாக இருப்பது எப்படி என்று விவரித்து, ஒரு நீண்ட தகவலை எனக்கு நீ அனுப்பினாய். அந்தக் குறிப்பிட்ட தருணத்தில், என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “நீ எப்போதும் வாசிக்கக்கூடிய ஆன்மிகம், அமைதி மற்றும் நேர்மறை சிந்தனைகள் சார்ந்த புத்தகங்கள் அனைத்தும் என்னவாயிற்று?” என்று உன்னிடம் கேட்டேன். அதற்கு, “ஆன்மிகம் என்பது வேறு. நாம் யதார்த்தமாக நடந்துகொள்ள வேண்டும்” என்று நீங்கள் பதிலளித்தாய்.
இந்த சங்கடமான உரையாடல் பரிமாற்றம் எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெளிவாகத் தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, என் போனை தூரக் கடாசிவிட்டு, என் அன்றாடப் பணியில் மூழ்க முயன்றேன்.
அடுத்த சில நாட்களுக்கு, பாஜகவும் மோடியும் மட்டுமே இந்தியாவின் ஒரே நம்பிக்கை எனும் விதமாகவும், அவர்களால் மட்டுமே ‘முஸ்லிம் பிரச்சினைக்குத் தீர்வு’ காண முடியும் என்கிற ரீதியிலும் தகவல் சொல்லும் வீடியோக்களையும் குறுந்தகவல்களையும் நீ தினமும் எனக்கு அனுப்பிவைத்து, என்னை சமாதானப்படுத்த முயன்றாய்.
உன் கருத்துகளை என்னுள் திணித்து, என் பார்வையை மாற்றுவதை ஒரு செயல்திட்டமாகவே கருதி நீ தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தாய். ‘எவரையுமே மோசமானவர்களாகவும் தவறானவர்களாகவும் சித்தரிப்பது தவறு, நேர்மையற்றது, ஆபத்தானது என்று மட்டுமின்றி, எல்லாவற்றுக்கும் மேலாக நாம் ஒவ்வொருவரும் சக மனிதர்கள் என்ற பார்வையைக் கொண்டிருக்க வேண்டியதுதான் இப்போதைய அதிமுக்கிய தேவை’ என்று உன்னிடம் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல முயற்சி செய்தேன்.
ஆனால், அது வேலைக்கே ஆகவில்லை. கடைசியில், தகாத வார்த்தைகள் ஏதுமின்றி, இதுபோன்ற வெறுப்பு நிறைந்த மதவெறித் தகவல்களை எனக்கு அனுப்புவதை தயவுசெய்து நிறுத்திக்கொள் என்று உன்னிடம் கேட்டுக்கொண்டேன். அதன் பிறகு நம் உறவு என்பது வெறுமையானதாகிவிட்டது. நாம் அரிதாகச் சந்தித்துக்கொள்ளும்போது சம்பிரதாயமான முகமன்களோடு நிறுத்திக்கொள்கிறோம். நம்மிடையேயான உறவு மாறிவிட்டது. இது நம் இருவருக்குமே தெரிந்திருக்கிறது. இதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.
நட்பு விஷயத்தில் அரசியல் நுழைவதை அனுமதிக்கக் கூடாது என்று என்னிடம் நம் நண்பர்கள் கூறினர். அந்த அறிவுரையின் தேவை எழுந்ததற்கான காரணமே எனக்குச் சரியாக பிடிபடவில்லை. நான் நட்பை மதிக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். ஏனெனில், ஒரு நல்ல நட்பு என்பது அரிதானதும் அற்புதமானதுமான விஷயம். ஆனால், ஒரு நல்ல நட்பானது பகிர்தலையும், பொதுவான மதிப்பீடுகளையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை நீ ஏற்கிறாயா? ஓர் ஒட்டுமொத்த சமுதாயத்தையே மிக மோசமாகச் சித்தரிப்பதில் தவறில்லை என்று நீ கருதினால், என்னால் எப்படி உன்னுடன் நல்ல நண்பனாக இருக்க முடியும்? இது உண்மையான அக்கறைமிகு கேள்வியே தவிர, வெற்றுப் பேச்சுக்கானது அல்ல.
இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் உறுதிபடச் சொல்ல விரும்புகிறேன். உனக்கு என்னிடம் இருந்து ஏதேனும் ஒர் உதவி தேவைப்பட்டால், நான் அந்த இடத்தில் நிச்சயம் உனக்காக இருப்பேன். நம்முடையது 15 ஆண்டு கால நட்பு என்பதை மறக்க வேண்டாம். நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே இருக்க முயற்சி செய்கிறேன். ஆனால், ஒருமித்த சிந்தனையும், ஒரே மாதிரியான சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான தோழமை உணர்வை 15 ஆண்டு காலம் நாம் பகிர்ந்துகொண்ட நிலையில், இனி எப்படி இதை முன்னெடுத்துச் செல்வது என்று உண்மையிலேயே தெரியவில்லை.
நாம் இப்போதே மிகப் பெரிய அரசியல் உரையாடலை நிகழ்த்த வேண்டும். நீ முழு மனதோடு ஆதரிக்கும் உங்களது கட்சி மற்றும் தலைவர் குறித்து என்னால் நிறைய கேள்விகள் கேட்க முடியும். பொருளாதார நிலை, கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குறையாத விவசாயிகளின் தற்கொலைகள், தூய்மைப்படுத்துவதாக மோடியால் வாக்குறுதி அளிக்கப்பட்ட கங்கை நதி தொடர்ந்து நாசப்படுத்தப்படுவது, இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவது, கம்பீரமாக வீற்றிருக்கும் வீணான சிலைகள், ட்விட்டரில் கேலிகளையும் கிண்டல்களையும் பிரதமர் பின்தொடர்வது என்பன பற்றியெல்லாம் எந்தக் கேள்வியையும் என்னால் உன்னிடம் கேட்க முடியும்.
ஆனால், முக்கியத்தும் வாயந்த அந்தக் கேள்விகளை எல்லாம் இப்போதைக்கு ஓர் ஓரமாக வைத்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக உன்னிடம் நான் முன்வைக்கும் மூன்று கேள்விகள்:
1) பாஜக – ஆர்எஸ்எஸ் – இந்துத்துவா கூட்டு சேர்ந்து இந்திய அரசியலமைப்புச் சட்டங்களைத் திருத்த யத்தனிப்பதும், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படக்கூடிய இந்து ராஜ்ஜியமாக இந்தியாவை ஆக்கமுயற்சி உனக்குச் சரியாகப் படுகிறதா?
2) சமூக ஊடகங்களிலும் வீதிகளிலும் முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டு, தாக்கப்பட்டு, விசாரணையின்றி கொல்லப்படுவது உனக்குச் சரியாகப் படுகிறதா?
3) கடைசியாக, இத்தகைய ஒரு தேசத்தில் உன் பிள்ளைகள் வளர்வது என்பது உனக்குச் சரியாகப் படுகிறதா?
இவை அனைத்துமே ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று பதிலளிக்கத்தக்க தெளிவான கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கான என்னுடைய பதில், எவ்வித சந்தேகமுமின்றி ‘இல்லை’ என்பதே. உன் பதில் என்ன?
தயவுசெய்து எனக்கு உன் பதிலைச் சொல். உனக்காக மட்டுமின்றி, அடுத்த இரு மாதங்களில் ஒட்டுமொத்த தேசமே இந்த மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டி காத்திருக்கிறேன்.
ரோஹித் குமார்
(கட்டுரையாளர் ரோஹித் குமார் நேர்மறை உளவியல் சார்ந்த பின்புலத்தைச் சேர்ந்த கல்வியாளர். பள்ளி மாணவர்களிடையே உணர்வெழுச்சித் திறனை மேம்படுத்துவதிலும், வளரிளம் பருவத்தினரின் சிக்கல்களைக் களைவதிலும் செயலாற்றும் இவர், வன்முறையில்லாப் பள்ளிச் சூழல் உருவாக உறுதுணைபுரிபவர்.)
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/letter-to-a-friend-who-happens-to-be-a-modi-supporter