சீன மாதிரியைப் பார்த்து அச்செடுக்கப்பட்ட தொழிற்கொள்கை பின்வரும் ஐந்து முக்கியக் காரணங்களால் தோற்றுப்போனது.
இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்குப் பதிலாக உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் உள்நாட்டு / சர்வதேச சந்தைகளைப் பொறுத்தவரை அவருக்கு மிகவும் பிடித்த தொழிற்கொள்கை திட்டங்களுள் ஒன்று. ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை துறைரீதியாக ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையே இது. கடந்த நான்கு தலைமுறைகளக சீனர்கள் அடைந்துள்ள வெற்றியால் உந்தப்பட்ட கொள்கைதான் இது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சர்வதேசச் சந்தையில் மிளிர இக்கொள்கை நமக்கு உதவியுள்ளதா?
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மோடி அரசு தனக்கு முன் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை (இரண்டாவது ஆட்சிக்காலம்) விடச் சிறப்பாகச் செயல்புரியவில்லை. சரக்குகள் / சேவைகள் ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்ட நடப்பு வருவாய் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு பங்கு) குறைந்து விட்டது. கடந்த மூன்று அரசுகளின் ஆட்சிக் காலங்களின்போது இது சீராக உயர்ந்து வந்ததே தவிர குறையவில்லை.
தமது ஆட்சியில் முதலீடு குவிவதாகவும் சர்வதேச அளவில் தொழில் புரிவோரிடையே இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து விட்டதாகவும் அரசு கூறிவந்தபோதிலும் நேரடி மற்றும் மறைமுகமான அந்நிய முதலீட்டிலும் இத்தகைய வீழ்ச்சிதான் காணப்படுகிறது.
மோடி அரசில் நிச்சயமாக அதிகரித்துள்ள விஷயம் என்னவென்றால் அந்நியச் செலாவணி கையிருப்புகள்தாம். ஆயினும், இத்தொகையால் அதிக விவரம் தெரியவருவதில்லை. சர்வதேச அளவில் அதிர்ச்சியூட்டும் நிகழ்வு ஏதாவது ஏற்படும் நிலையில் நாட்டின் பொருளாதார நிலை பாதிக்கப்படாமல், இருக்கும் நிலையில் இச்செலாவணியை வைத்துக்கொண்டு எத்தனை மாதங்கள் நம்மால் இறக்குமதிகளைச் சமாளிக்க முடியும் என்பதே அந்நியச் செலாவணி கையிருப்பை அளப்பதற்கான அளவுகோல்.
முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுகளை (முதல் ஆட்சிக்காலம்) விடவும் இறக்குமதி அளவு குறைவாகவே இருப்பதால் இவ்விஷயத்திலும்கூட மோடி அரசின் சாதனையாகக் குறிப்பிட எதுவுமே இல்லை.
சர்வதேசச் சந்தையை உருவாக்குவதைப் பொறுத்தவரையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோல்வியடையப் பல்வேறு காரணங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன்.
முதலாவது, அரசு – தனியார் கூட்டு முயற்சிக்கான (PPP- Public Private Partnerships) மாதிரிகள் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் காலத்திலும் அவ்வளவாக ஜொலிக்காத போதிலும் இத்திட்டம் அரசால் வழிநடத்தப்படும் மாதிரியை விட்டு விட்டு PPP கொள்கையை அதிகம் சார்ந்திருந்தது. இத்தகைய மாபெரும் திட்டங்களுக்கு அடிப்படையான உட்கட்டமைப்பு வளர்ச்சியானது PPP மாதிரிகளின் தோல்வியால் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது தவிர, PPP-யின் நிதிக்கொள்கையால் பொதுத்துறை வங்கிகளின் முதலீடு ஆதாரமே நிலைகுலைந்துவிடும் ஆபத்தும் உள்ளது; இதனால் பிற துறைகள் பெறும் கடன் வசதி பாதிக்கப்படும். ஐ.மு.கூ. அரசு மற்றும் மோடி அரசின் காலங்களில் அதிகரித்துவரும் பொதுத்துறை வங்கிகளின் செயல்புரியாச் சொத்துகளே PPP மாதிரி தோல்வியுற்றதன் குறியீடாகும். அரசின் கட்டமைப்பு வளர்ச்சியைப் பொறுத்தவரை மோடி அரசின் செயல்பாட்டைப் பார்த்தால் அதன் செயல்திறன் தானாகவே தெரிய வரும்.
துறை ரீதியாக இத்தகைய திட்டங்கள் அமலாகும் நிலையைப் பார்த்தால் நிறுத்தப்பட்டு / தாமதமாக வைக்கப்பட்டுள்ள மத்திய அரசுத் திட்டங்களின் பங்கு சராசரியாக இதுதான்: விமானப் போக்குவரத்துத் துறையில் 50%, அணுசக்தித் துறையில் 100% மற்றும் நிலக்கரித் துறையில் 45%.
‘கொள்கை முடக்கம்’ ஆகிவிட்டதாக அடிக்கடி கிண்டல் செய்யப்படும் ஐ.மு.கூ. (2) அரசின் காலத்தில் இவை (முறையே) 71%, 45% மற்றும் 44% ஆகத்தான் இருந்தன: நீங்களே ஒப்பீடு செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
இரண்டாவது, இத்திட்டம் அடிப்படையில் உள்நாட்டுத் தேவையைத் தீர்க்கும் அணுகுமுறையை ஒட்டி அமையவில்லை. ஏனெனில் சம்பளம் / கூலிச் செலவு உள்ளிட்ட உற்பத்திச் செலவு தொடர்ந்து குறைந்தாக வேண்டும்; அப்போதுதான் தொழிலில் எதிரிகளை பின்தள்ளி முன்னணியில் இருக்க முடியும்.
உத்தேச சம்பளச் செலவைக் குறைப்பதற்கான இரு வழிகள் சம்பளத்தைக் குறைப்பது மற்றும் / அல்லது தொழில் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் உற்பத்தித்திறனை அதிகரிப்பது. இரண்டிலும் பொருளாதார ரீதியாக சம்பளம் குறைய வாய்ப்புள்ளது (சீனாவிலும் பிற இடங்களிலும் இதுதான் நிகழ்ந்தது). இதனால் சம்பள வீழ்ச்சி அல்லது வேலையில்லாத் திண்டாட்டம் (தொழில் வளர்ச்சி காரணமாக வேலையாட்கள் குறைவது) ஆகியவை ஏற்பட்டு நீண்ட கால அளவில் பொருளாதாரத்தின் உள்ளூர்த் தேவைகள் நசிக்கப்படும்.
மூன்றாவதாக, வளர்ச்சி ஏற்படும் என்று ஒரு பேச்சுக்கு ஒப்புக்கொண்டாலும், உழைக்கும் வர்க்கத்தினருக்கு இது பொருந்தாததாகவே இருக்கும்.
இவ்வகை உத்திகளால் பலன் பெறும் கார்ப்பரேட்டுகளின் பிரச்சினைகளைப் பெரும்பாலான மக்களின் பிரச்சினைகளுக்கு நிகராக மோடி பார்க்கிறார்.
நான்காவதாக, செலவினத்தின் இதர பகுதியான மூலப்பொருளுக்கான விலைக்காக இயற்கை வள ஆதாரங்களைச் சுரண்ட கார்ப்பரேட்டுகளுக்கு அனுமதி கொடுத்தாக வேண்டும்; இதனால் பெரும் கார்பரேட் ஊழல்கள் வெடித்துள்ளன. உள்நாட்டு சுற்றுப்புறச்சூழல் சீர்கேட்டுடன் வள ஆதாரங்கள் அதிகமாகவும் அரசியல் ரீதியாக பலவீனமாகவும் இருக்கும் வெளிநாடுகள் சுரண்டப்படுவதும் கவலைக்குரிய அம்சங்கள். இவை ஏற்றுமதியை ஊக்குவிப்பவர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தக்கூடியவை.
இறுதியாக, இவ்வளர்ச்சி ஏற்பட்டால்கூட இறக்குமதி தரும் நாடுகளுக்கு நாம் கடமைப்பட்டிருக்க வேண்டும். இன்று நிகழ்ந்துள்ளது போல சந்தைகள் உருவாவதில் எப்போதாவது ஏதாவது தடைகள் ஏற்பட்டால், ஏற்றுமதியைச் சார்ந்துள்ள துறைகள் பெருமளவில் பாதிக்கப்படும்; இதன் பின்விளைவுகள் ஒவ்வொரு துறைகளிலும் உணரப்படலாம்.
‘மேக் இன் இந்தியா’ திட்டப் பிரசாரத்தின்போது உத்தரவாதம் தரப்பட்ட பொருத்தமான சர்வதேசச் சந்தையை உருவாக்க இந்தியா தவறி விட்டது. மூலப்பொருள் முதலீட்டுக்கான சரியான இடம் என்ற அந்தஸ்தையும் நாம் இழந்துவிட்டோம். சமீபகாலத்திய ஒட்டுமொத்த நடவடிக்கைகளால் ரூபாய் நோட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயின் கௌரவத்தை ‘திருப்பிக் கொண்டுவருவதாக’ மோடி முன்பு வாக்குறுதி அளித்திருந்தார். மாறாக, இந்தியப் பொருளாதார வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு ரூபாயின் மதிப்பு தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்தியாவிலிருந்து செல்லும் பணமுதலீட்டின் அளவு அதிகரித்திருப்பது ஏற்கனவே அந்தந்த நாடுகளிலிருந்து முன்னரே செய்யப்பட்டிருந்த முதலீடுகளின் மூலமாகப் பெறப்படும் லாபத்தினால்தான் என வாதம் செய்யலாம். எனவே, இது உலகளாவிய காரணங்களால்தான் நிகழ்ந்ததே ஒழிய இந்தியாவின் முனைப்பினால் ஏற்பட்ட நிலைமை அல்ல. வளர்ச்சியைச் சாதித்துக்காட்டுவதற்கான தனது திறனை இந்தியா தானே உருவாக்கும் என்றல்லவா மோடி நமக்கு வாக்குறுதி அளித்திருந்தார்?
இதெல்லாம் போதாதென்று இந்திய ரூபாயின் குறைந்துவரும் மதிப்பினால் (சர்வதேசச் சந்தையில் இந்தியப் பொருட்களின் டாலர் விலை இதனால் குறைகிறது) நாட்டின் ஏற்றுமதி வாய்ப்புகள் மேம்படவில்லை. ஏற்றுமதி செய்யும் நாட்டின் பொருட்களின் விலையை விட, சர்வதேச அளவில் வாங்குபவர்களின் வாங்கும் சக்தி நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுதும் என்பதால்தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
(‘எ க்வாண்டம் லீப் இன் த ராங் டைரக்ஷன்’ புத்தகத்திலிருந்து சில பகுதிகளை எடுத்து, அவற்றைத் தொகுத்துத் தந்திருப்பவர்கள்: ரோஹித் ஆசாத், ஷௌவிக் சக்ரவர்த்தி, ஸ்ரீனிவாஸ் ரமணி, தீபா சின்ஹா ஓரியண்ட் ப்ளாக்ஸ்வான்.)
நன்றி: தி ஸ்க்ரால்