அன்பார்ந்த திரு. ஸ்டாலின்,
முதன்முதலாக ஒரு பெரிய பொதுத் தேர்தலை, உங்கள் தந்தை என்ற மாபெரும் ஆளுமை இல்லாமல் சந்திக்கிறீர்கள். இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றே ஆக வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. 2011 சட்டப்பேரவை தேர்தல், 2014 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து தோல்விகளை திமுக சந்தித்துள்ள நிலையில், இது திமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல்.
2016 தேர்தலில் நீங்கள் நூலிழையில் வெற்றியை தவற விட்டீர்கள். திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வேறுபாடு வெறும் ஒரு சதவிகிதமே. பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐயாயிரத்துக்கும் குறைவான வாக்குகளிலேயே திமுக தோல்வியைத் தழுவியது. ஆனால், அந்தத் தோல்விக்கான முழுப்பொறுப்பும் உங்களுடையதுதான். இந்தத் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளுடன் நீங்கள் காட்டும் இணக்கத்தை 2016க்கு முன்பாக நீங்கள் காட்டியிருந்தால் இன்று நீங்கள்தான் முதலமைச்சர்.
கலைஞரின் சிறப்பம்சம் என்னவென்றால், அவருக்கு, திமுகவின் பலம் நன்றாக தெரியும். அதிமுகவின் வாக்கு வங்கி, திமுகவை விட அதிகம் என்பது நன்றாகத் தெரியும். அதற்காகத்தான், சிறு சிறு கட்சிகளாக இருந்தாலும், அவர்களை புறக்கணிக்காமல் அரவணைத்துக் செல்வார். திமுகவின் முதல் பிரச்சார கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் மேடையேற்றி, ஒரு மாபெரும் கூட்டணி போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவார். ஆனால், நீங்கள், கூட்டணியை விட திமுகவின் பலத்தை கூடுதலாக மதிப்பிட்டதன் காரணமாகவே 2016ல் தோல்வியைத் தழுவினீர்கள்.
கடந்த காலத் தவறுகளில் இருந்து படிப்பினையை நீங்கள் கற்றுக் கொண்டு, இம்முறை, ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளதற்கு முதலில் வாழ்த்துக்கள். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி என்ற உங்கள் கூட்டணி பலமான கூட்டணியாகவே உள்ளது. ஆனால், இந்தக் கூட்டணி அமைவதற்கு முன்னதாக, நீங்கள், பாட்டாளி மக்கள் கட்சியையும், தேமுதிகவையும் கூட்டணிக்குள் இழுக்க எடுத்த முயற்சிகள், தேவையற்றதாக மட்டும் இல்லாமல் ஆபாசமாகவும் இருந்தது. ஒரு பெரிய தேர்தலை சந்திக்கையில், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை சேர்ப்பது பலம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை எப்படி செய்ய வேண்டும் ?
கலைஞர் கூட்டணியை எப்படி உருவாக்குவார் என்பதை ஒரு பார்வையாளராக நாங்கள் கவனித்திருக்கிறோம். தேர்தலுக்கு ஆறு மாதத்துக்கு முன்னதாகவே, ஆற்காடு வீராசாமியையோ, அல்லது வேறு மூத்த தலைவர்களையோ ராமதாஸை சந்திக்க அனுப்புவார். தேர்தலுக்கு நீண்ட நாட்கள் இருப்பதால், ராமதாஸ் வந்த தலைவரிடம் “என்ன விஷயம்?” என்று கேட்டால், “இல்லை தலைவர் சும்மா உங்களை பாத்துட்டு வரச் சொன்னார்” என்று பதில் கூறுவார்கள். இது போல நான்கைந்து முறை சந்திப்புகள் நடக்கும். இதற்குள், ராமதாசுக்கு திமுக மீது இருக்கும் கோபம் சற்று குறையும். ஆங்கிலத்தில் இதை Breaking the ice என்று சொல்லுவார்கள். இதன் நடுவே ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சி நடந்தால், குறிப்பாக இருவரும் அழைக்கப்பட்ட திருமணம் போன்ற நிகழ்ச்சி நடந்தால், அதில் கலைஞர் ராமதாஸை சந்திப்பது போன்ற சூழலை ஏற்படுத்துவார். அது பெரிய அளவில் செய்தியாகும்படி பார்த்துக் கொள்வார். இத்தகைய நகர்வுகள், இரு கட்சி தொண்டர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு பின் அமையும் கூட்டணி முரண்பாடுகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும்.
ஆனால் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட்டணி பேச்சு வார்த்தைத் தொடங்கப்படுகிறது. கூட்டணி என்னவோ வெற்றிகரமாகத் தான் அமையும். ஆனால் இரு கட்சி தொண்டர்களுக்கிடையே திடீரென்று இணக்கம் எங்கிருந்து வரும்? எந்தக் காரணத்துக்காக கூட்டணி அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தையே இந்தத் திடீர் கூட்டணி அமைவு சிதைத்துவிடும். அதிமுக தற்போது பாமக மற்றும் தேமுதிகவோடு அமைத்துள்ள கூட்டணி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
நீங்களும், இதுபோன்ற ஒரு கூட்டணியை அமைக்கத்தான் விரும்பினீர்கள். திரைமறைவில், பாமகவோடு கூட்டணி அமைக்க நீங்கள் எடுத்த முயற்சிகளும், தேமுதிக கூட்டணிக்காக நீங்கள் விஜயகாந்த்தை போய் சந்தித்ததும், உங்கள் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவே இருந்தது. உங்கள் கட்சியில் உள்ள சில சாதிவெறி பிடித்தத் தலைவர்களின் பேச்சினால், பாமக கூட்டணிக்கு வந்தால், விடுதலை சிறுத்தைகளை இழக்கக் கூடத் தயாராக இருந்தீர்கள் என்பதைக் கேள்விப்பட்ட போது மிக வருத்தமாக இருந்தது. திமுக ஒரு சமூக நீதிக்கான கட்சி. அந்த கட்சியே தலித்துகளை எப்படி புறக்கணிக்க இயலும்? விடுதலை சிறுத்தைகளுக்கு முறையான வாய்ப்பளித்து அவர்களை அதிகார மையத்துக்குள் அழைத்து வருவது தானே சமூக நீதிக் கட்சியான உங்களது நோக்கமாக இருக்க முடியும்? விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றி விட்டு, பாமகவோடு தேர்தலை சந்தித்திருந்தால் உங்கள் மீது தலித் விரோதி என்ற தீராத பழி விழுந்திருக்கும். பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக அணியோடு செல்ல முடிவெடுத்ததால், உங்களுக்கு உருவாக இருந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டது.
மிகுந்த உற்சாகமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளீர்கள். உங்கள் தொண்டர்களும், திமுக கட்சியினரும் உங்களுக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நடுநிலை வாக்களர்களும், இளம் வாக்காளர்களும் உங்கள் பக்கம் திரும்ப நீங்கள் இது வரை என்ன செய்திருக்கிறீர்கள் ? இளம் வாக்காளர்கள் உங்களை நம்பி வாக்களிக்க தயாராக உள்ளனரா என்றால் இல்லை என்பதே விடை.
இன்றைய இளம் வாக்காளர்களுக்கு, திராவிட இயக்க வரலாறோ, மொழிப்போரோ, இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் குறித்தோ, திமுக அதன் கடந்த கால ஆட்சி காலத்தில் தமிழகத்தைமுன்னேற்ற எடுத்த முயற்சிகளோ தெரியாது. அவர்களுக்கு, செய்தித்தாளோ, புத்தகம் வாசிக்கும் வழக்கமோ கிடையாது. அவர்களை பொறுத்தவரை செய்தி, வாட்ஸப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மட்டுமே. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை ஆழ்ந்து படித்து கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோருக்கு இல்லை. இது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம். திமுகவின் தொடக்க காலத்தைப் போல, ஏன் எண்பதுகள் வரை, திமுகவின் மாநாடுகளில் தலைவர்களின் உரைகளை கேட்க, பணம் கட்டி, வரிசையில் நின்று பங்கெடுத்தத் தொண்டர்களை இன்றைக்கு நீங்கள் காண முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இப்படிப்பட்ட ஒரு கடினமான காலகட்டத்தில் தான் நீங்கள் அரசியல் செய்கிறீர்கள் என்பதை உணர்ந்திருப்பீர்கள். மாறுபட்ட அரசியலை முன்னெடுத்து, இளம் வாக்காளர்களை கவர வேண்டிய நீங்கள், அவர்களை உங்களிடமிருந்து அந்நியப்படுத்தும் காரியத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
நேற்று கட்சி தொடங்கிய நண்டு சிண்டெல்லாம் உங்களை விமர்சனம் செய்யும் வகையில், உங்கள் குடும்ப உறுப்பினர்களை முன்னிறுத்துகிறீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியை, ஸ்டாலின் பிரைவேட் லிமிடெட் போல நடத்தி வருகிறீர்கள். இந்த பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் அனைவரும் உங்கள் குடும்ப உறுப்பினர்களே. டெல்லிக்கு ராகுலை சந்திக்கச் சென்றால் உங்கள் மருமகனை அழைத்துச் செல்கிறீர்கள். ராகுலோடு பேச்சுவார்த்தை நடத்த, உங்கள் தங்கை ஒருபுறம். மருமகன் ஒரு புறம்.
டெல்லியில் இப்படியென்றால், தமிழகத்தில் உங்கள் மகன். உங்கள் மகன் மிகப் பெரிய சினிமா நட்சத்திரம் அல்ல. மொழிப் போர் தியாகியும் அல்ல. உங்கள் கட்சி 2006ல் ஆட்சியில் இருக்காவிட்டால், உங்கள் மகனை நடிக்க வைக்க ஒரே ஒரு தயாரிப்பாளராவது முன் வந்திருப்பாரா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களைத் தயாரிக்கும் அளவுக்கு, உதயநிதி, பெரும் பணக்காரரா ?
திரைப்படம் போணியாகவில்லை என்றதும், உங்கள் மகனை கலைஞரின் உழைப்பில் உருவான முரசொலியின் நிர்வாக இயக்குநர் ஆக்கினீர்கள். முரசொலியின் நிர்வாக இயக்குநராவதற்கு திமுகவையே தன் உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்து வரும் ஒரே ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா என்ன ?
உங்கள் மகனின் படம், இன்று திமுகவின் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் இடம் பெற்றுள்ளது, அல்லது இடம் பெற வைக்கப்பட்டுள்ளது. உங்கள் மகனை, மூன்றாம் கலைஞர் என்று வர்ணித்து சுவரொட்டி ஒட்டுகிறார்கள்.
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து, நீங்களும் உங்கள் மனைவியும் “தம்பியை வைத்து கூட்டம் நடத்துங்கள்” என்று வற்புறுத்தினீர்கள் அவ்வாறே பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாவட்டந்தோறும் பல பேச்சாளர்களை உருவாக்கி திராவிடக் கட்சியை பாமரனுக்கும் அறிமுகம் செய்து கட்சியின் கொள்கைகளைப் பரப்பி பேச்சையே உணவாகவும், மூச்சாகவும் கொண்ட தொண்டர்களைக் கொண்ட கட்சி திமுக. இன்று 2019 தேர்தலில், பிரசாரத்துக்காக, உதயநிதியே முன்னணி பிரசார பீரங்கியாக முன்னிறுத்தப்படுகிறார். உதயநிதிக்கு, எழுத்தாற்றலும் இல்லை, பேச்சாற்றலும் இல்லை என்பது, அவர் சமீபகாலமாக கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் காண முடிகிறது.
தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில், தமிழச்சி போன்ற அழகான வேட்பாளரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று அவர் பேசியது, அறிவின்மையின் உச்சம். தமிழச்சி நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுகிறாரா? அல்லது அழகிப்போட்டிக்கு போட்டியிடுகிறாரா?
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். “கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வாக்கும் ரொம்ப நாளைக்கு வராது” என்று. உதயநிதியை ஒரு தலைவராக்கும் உங்களின் முயற்சி இது போன்றதுதான்.
நீங்கள் கலைஞரின் மகன். ஆனால் கலைஞரின் மகன் என்பதற்காக அல்லாமல், திமுகவின்தலைமையை அடைய நீங்கள் பல தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள். நெருக்கடி நிலை காலத்தில் சிறை சென்றிருக்கிறீர்கள். கட்சிக்காக உழைத்திருக்கிறீர்கள். அந்தக் காரணத்தினால்தான் உங்களை திமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உதயநிதிக்கு இதுபோன்ற எந்தத் தகுதியும் இல்லை. செல்வச்செழிப்போடு பிறந்து வளர்ந்து, வறுமை, ஏழ்மை, உழைப்பு, பசி இது போன்ற எதையுமே அறியாமல் வளர்ந்த செல்வச் சீமான் அவர். அவரை திமுக தொண்டர்கள் மீது நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ திணித்தால், காலம் உங்களுக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கும்.
திமுக என்பது பல தியாகங்களால் உருவான இயக்கம். அது உங்கள் காலத்தில் அழிந்தது என்ற அவப்பெயர் உங்களுக்கு வேண்டாம்.
1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முந்தைய அதிமுக ஆட்சியில் செய்த ஊழல்கள் தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டு , ஜெயலலிதா உட்பட அதிமுக அமைச்சர்கள் எப்படி சிறை சென்றார்களோ அதே போல தற்போது உள்ள அமைச்சர்களும் முதல்வர் மற்றும் துணை முதல்வரும் அவர்கள் செய்கிற ஊழல்களுக்காக சிறை செல்ல வேண்டும். இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அதிகாரத்தின் வழியாக இதை நீங்கள் செய்ய வேண்டும் என்பது தான் தமிழ்நாடு சீரழிவதைப் பார்த்து வேதனைப்படும் ஒரு வாக்காளனின் விருப்பம்.
அதற்காகவேனும் மீண்டும் மீண்டும் தவறிழைக்காமல், சரியான திசையில் கட்சியை வழிநடத்திச்செல்வீர்கள் என்று நம்புகிறேன்.
2019 தேர்தலில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஒரு பாமர வாக்காளன்.
As usual… Neer oru sombu ena nirubithu viteer… Stalin lam CM aagi ena panna porar nu ipo kutti karanam podringa???
Super Anna….. I accept you, DMK had supported TN people when it was starting. But, after later they killed our nature and they don’t have knowledge about environmental responsibility. So, how could I believe the will be help us?
Article posted in the right time.
திமுகவின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாதா?
DMK must lose and also AIADMK. If DMK lose this time it would split as like AIADMK which is good for Tamil nadu feature. This election is about whom we want to bring to power but this is about whom we need to send permanently away politics. golden chance for TN peoples to eradicate evil corrupt family party DMK and corrupt AIADMK. Let us do it. Savukku is joke. people know what to do
திமுக வாக்காளன் என்று போடாமல் — பாமர வாக்காளன் என்று போட்டதே தப்பு — இதே சவுக்கை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் அது எந்த மாதிரியான குடும்ப கட்சி என்பது — அதனால பொத்தாம் பொதுவா வாக்காளரின் மடல் என்று போட்டதை மாற்றுங்கள்
Yov Shankaru yen ya ollara… yennamo karunanidhi periya appa tucker maathri… jayalalitha kitta totha karunanidhi ya nee yennmo periya chanakiyan range ku build pannra…
Yov Shankaru yen ya ollara… yennamo karunanidhi periya appa tucker maathri… jayalalitha kitta totha karunanidhi ya nee yennmo periya chanakiyan range ku build pannra…
Stalin must read this……..just to strengthen DMK