அரசியல் செய்தியைச் சொல்வதற்கான தனது பிரச்சாரத்தை முன்வைப்பதில் பாஜக சரியாகச் செயல்பட்டிருக்கிறதா? 2004 இந்தியா ஒளிர்கிறது பிரச்சாரத்தின் பாதகத்தைத் தவிர்ப்பது, ராகுல் காந்தியின் தொடர் விமர்சனத்தை எதிர்கொள்வது ஆகியவைதான் நோக்கம் எனில், தற்போதைய உத்தி சரியான பலன் அளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் கட்சி கையில் எடுத்திருக்கும் காவலாளி (செளகிதார் ) சித்திரம் சில காரணங்களுக்காகப் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது.
முதலாவதாக, காவலாளி என்பவருக்கும், தலைவர் என்பவருக்கும் வேறுபாடு உண்டு. வேலைவாய்ப்பு, கூலி மற்றும் விவசாயிகளின் இன்னல் போன்றவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகள் வருகிறதென்றால் காவலாளி என்பவர் ஒரு தலைமைக்கான நம்பிக்கை, உத்தரவாதத்தினைத் தருவாரா? அல்லது தூய்மை இந்தியா, பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை (பாலகோட் தாக்குதலைப் பயன்படுத்திக்கொள்வதற்காக), ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஆகிய முழக்கங்களை மட்டும் காவலாளி மேற்கொள்வாரா ?
இரண்டாவதாக, ஊழலுக்கு எதிரான கோஷத்துடன் கட்சியும் அதன் தலைமையும் மீண்டும் தேர்தலுக்குத் தயாராகிவரும் நிலையில், கேரவன் பத்திரிகை எடியூரப்பாவின் டைரி விவகாரத்தை வெளியிட்டிருக்கிறது. ரஃபேல் விவகாரத்தில் பணம் கைமாறியதற்கான தடயம் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், எடியூரப்பா விவகாரத்திலோ அது கொட்டிக் கிடக்கிறது.
2014இல் ஒரு வேட்பாளராக மோடி அளித்த பிம்பம் என்ன?
குஜராத் படுகொலைகளின் சுமை, பிராந்திய அரசியல்வாதி எனும் படிமம் ஆகியவற்றைச் செயலிழக்கச்செய்யும் வகையில் நல்ல நிர்வாகம், வளர்ச்சி ஆகிய சொற்கள் வலுவாக முன்வைக்கப்பட்டன. ஆப் கீ பார் மோடி சர்க்கார், அச்சீ தின் (நல்ல நாள்) போன்ற கோஷங்கள் ஈர்த்தன.
2014 தேர்தலுக்கு முன்பு, கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவதற்கு முன், பிரச்சாரத்திற்கான தொனியைத் தீர்மானித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக தில்லி ஸ்ரீராம் காலேஜ் ஆப் காமர்ஸ் நிகழ்ச்சி அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் அவர் குஜராத் வளர்ச்சி மாதிரி பற்றியும், அரசு முடிவெடுப்பதில் வேகம் தேவைப்படுவது பற்றியும், திறன் மேம்பாடு பற்றியும் பேசினார். இந்தப் பேச்சு மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது இளம் வாக்காளர்கள் மத்தியிலும் எதிரொலித்தது. தேசத்தை முன்னோக்கி அழைத்துச்செல்லக்கூடிய தொலைநோக்கு கொண்டவராக அவர் தங்களுக்குத் தெரிந்ததாக மாணவி ஒருவர் கூறியதாக நிகழ்ச்சி தொடர்பான செய்தி ஒன்று தெரிவித்தது.
தொலைநோக்கு கொண்ட தலைவர் என்னும் நிலையிலிருந்து காவலாளி என்பது அத்தனை விரும்பத்தக்க மாற்றம் அல்ல. மறுபடியும் தேர்வுசெய்யப்படுவது என்பது, ஆட்சியில் இருந்தபோது செய்தவற்றுக்கான ஆதரவைக் கோருவதாகும். மிகவும் புகழப்பட்ட அவரது துடிப்பான தன்மைகளில் எவை எல்லாம் மீண்டும் வலியுறுத்தப்படாமல் இருக்கின்றன என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமானது.
வணிக வர்த்தகத்திற்கு ஆதரவான ஆளுமை கொண்ட தலைவராக இருக்கும் இவர் தனது ‘சௌகிதார்’ பிரசாரத்தில் பொருளாதாரம் என்ற ஒன்றைப் பற்றியே பேசவில்லை. ஒருவேளை இது கோட் சூட் அணிந்தவர்களுக்கான ஆட்சி என்கிற விமர்சனம் பாதிக்கிறதோ?
காவலாளியைப் பற்றிய பிரச்சாரத்தில் புன்னகைக்கும் இந்தியர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. 2004ல் இந்தியா ஒளிர்கிறது என்னும் பிரசாரத்திலிருந்து இது பெரிதாக வேறுபட்டதல்ல. மோடியின் 2014 பிரசாரத்துடன் ஒப்பிடும் போது, 2019 பிரசாரத்தில், பொருளாதாரம், கிராமப்புறம், நகரம் பற்றிய பேச்சு இல்லை. மோடி ட்வீட் செய்த படத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது பற்றியும் பேச்சு இல்லை. ஏனெனில் இவை காவலாளி என்னும் சித்திரத்திற்குப் பொருத்தமாக இல்லை. நமக்குள் இருக்கும் காவலாளி என்னும் உணர்வைத் தூண்டுவதே முக்கியமாம்.
புதிய செய்தியின் சாரம் இதுதான்: தேசத்தை உருவாக்குவது, முன்னேற்றத்தின் அங்கமாக, ஊழலை, அழுக்கை, சமூக தீமையை எதிர்ப்பது. “இந்தியாவின் முன்னேற்றத்திற்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளிதான். இன்று அனைவரும், T #MainBhiChowkidar” (நானும் காவலாளிதான்) என்கிறனர்” என்று மோடி கூறினார்.
ஆக, இந்த வார்த்தைக்குப் புதிய அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை மோடி, மந்தமாகும் பொருளாதார வளர்ச்சி, புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமல் இருப்பது, பணவீக்கம் ஆகியவை பற்றியெல்லாம் முழங்கினார். இந்தப் பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசே காரணம் என்றார். இந்த பிரச்சினைகள் இளம் மற்றும் நகர்புற வாக்காளர்கள் மத்தியில் கச்சிதமாக எதிரொலித்தன. ஆனால் அவரே தன்னை மறுபடியும் தேர்ந்தெடுக்கும்படி கோரும்போது, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதற்கு யார் மீதும் பழி போட முடியாது.
உழைக்கும் மக்களுடனான ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்புகள் மோடியின் பிரச்சாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கும்பமேளாவில் துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களைக் கழுவியது, காவலாளி பிரச்சாரத்திற்குப் பின் பல்வேறு இடங்களில் இருந்த 25 லட்சம் காவலாளிகளுடன் ‘ஒலிப் பாலம்’ அமைத்தது ஆகியவை அரங்கேறின. மேலும் பல காவலாளி சந்திப்புகள் நிகழ உள்ளன. மார்ச் 31ஆம் தேதி அத்தகைய நிகழ்வொன்று நடக்கவிருக்கிறது.
இதனிடையே காவலாளிப் பணியில் இருப்பவர்கள் குறைந்த சம்பளம் பெறுவது அல்லது சம்பளமே பெறாமல் வேலைசெய்வது போன்ற கதைகளை ஊடகங்கள் வெளியிட்டுவருகின்றன. இவை எதிர்க்கட்சிகளுக்குத் தீனியாக அமைகின்றன. எழுத்தாளரும், தலித் உரிமைப் போராளியுமான காஞ்ச இலையா ஷெப்பர்ட் காவலாளி என்றால் பணக்காரர்களைப் பாதுகாத்து ஏழையாகவே இருப்பவர் எனக் கூறியுள்ளார்.
விளம்பரங்கள் மூலம் மட்டுமே தேர்தலை வெல்ல முடியாது. 2004 தேர்தலில் தேஜகூ 150 கோடி செலவிட்டது. 2014இல் ஐமுகூ மார்ச் மாதம் மட்டும் 308 கோடி செலவிட்டது. 2015 தில்லி தேர்தலில் பாஜக அதிக செலவு செய்தது. இந்த மூன்று முயற்சிகளும் வெற்றி தேடித் தரவில்லை. வாக்காளர்களை ஈர்க்கக்கூடிய பிரச்சாரமே வெற்றி தரும்.
காவலாளிக்கு வாக்களிப்பது என்னும் பிரச்சாரம் வாக்காளர்களைக் கவருமா?
செவந்தி நைனன்
(செவந்தி நைனன், தீ ஹூட் நிறுவனர்)
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/modi-visionary-to-chowkidar-political-messaging-2014-2019 –