2014ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், பெண்கள்தான் “தேசத்தை நிர்மாணிக்கிறார்கள்” என்று அறிவித்த பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய பெரும் பகுதி வாக்குறுதிகளைப் பெண்களுக்காகவே கொடுத்தது. பெண்களுக்கு அதிகாரிமளிப்பதற்கு முன் பெண்களின் பாதுகாப்பு அத்தியாவசியம் என்று கூறியது. பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பொருளாதார ரீதியில் அவர்கள் வலிமையாக இருப்பதற்காகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் பட்டியலையும் அந்தத் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
Scroll.in, பாஜக அரசின் கடந்த ஐந்து ஆண்டுகளில், அந்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை ஆராய்கிறது:
- அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, அதன் மூலம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குதல்.
இன்றைய நிலை: 2014இல், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதிலிருந்து, அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 11% மட்டுமே, 2014 தேர்தலில் பாஜக வெறும் 8% இடங்களையே பெண் வேட்பாளர்களுக்கு அளித்தது.
- பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகவும், கல்வி கற்பிப்பதற்காகவும் பேட்டிபச்சாவோ, பேட்டி படாவோ என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்குதல்.
இன்றைய நிலை: இந்தியாவில் குறைந்துவரும் குழந்தைகளின் பாலின விகிதத்தைச் சரிசெய்யும் நோக்கத்தோடு, 2015ஆம் ஆண்டில் பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது தொடங்கப்பட்ட நாளிலிருந்து அத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 648 கோடி பணத்தில், 56% விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 25% மட்டுமே திட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசுகளுக்கு அனுப்பட்டுள்ளது.
- பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிறுவனங்களை அமைத்தல். பிற நிறுவனங்களில் பெண்களுக்கான பிரிவுகளை ஏற்ப்படுத்துதல்.
இன்றைய நிலை: 2015ஆம் ஆண்டில், நாடு முழுவதும் புதிய தொழிற்பயிற்சிக் கூடங்கள் பெருகின. 2017ல், இந்நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக அரசு ரூ. 6,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது. ஆனால், பெண்களுக்கான தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைப்பதற்கான சிறப்பு ஒதுக்கீடுகள் எதுவுமே அறிவிக்கப்படவில்லை.
- பெண்கள் தொடர்பான சட்டங்களைக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்துதல். குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பானவற்றை.
இன்றைய நிலை: ஏப்ரல் 2018இல், 12 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், பெண்கள் தொடர்பான முந்தைய சட்டங்களை மேம்படுத்துவதற்கான குறிப்பிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல்.
இன்றைய நிலை: பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய அமைக்கப்பட்ட நிர்பயா நிதி, 2013 முதல் 2016 வரை, மோடி ஆட்சிக்கு வந்த பிறகும், செலவழிக்கப்படாமலே இருந்தது. 2018-’19 வரையில், அதன் மொத்தத் தொகை ரூ. 3,600 கோடி. 2018ஆம் ஆண்டில், “பாதுகாப்பான நகரங்களை” உருவாக்கும் திட்டத்துக்காக நிர்பயா நிதியிலிருந்து ரூ. 2,919 கோடியை அரசு அறிவித்தது. அந்த நிதி, காணொளிக் கண்காணிப்பு, பெண்களுக்கான பாதுகாப்பிற்காக ரோந்து செல்லும் வாகனங்கள், பொதுப் போக்குவரத்தைப் பாதுகாப்பாக மாற்றுதல் ஆகிய பணிகளுக்காக எட்டு நகரங்களுக்கு ஒதுக்கப்பட்டது. பாலியல் பலாத்காரக் குற்றங்களை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்களை அமைக்க இந்நிதியிலிருந்து செலவு செய்யவும் அரசு அனுமதியளித்தது.
- ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொதுநல நிதி அமைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கும், முக மாற்று அறுவை சிகிச்சைக்கும் உதவுதல்.
இன்றைய நிலை: 2015ஆம் ஆண்டில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மத்திய நிதியுதவி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் கீழ், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார் அளித்த நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை கொடுக்கப்பட வேண்டும். 2017ஆம் ஆண்டில், ஆசிட் வீச்சில் பிழைத்த ஒவ்வொருவருக்கும் உடனடி உதவியாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தது.
- காவல் நிலையங்களைப் பெண்களுக்கு இணக்கமான முறையில் மாற்றுதல், பல நிலைகளிலுள்ள பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
இன்றைய நிலை: இதற்கு முந்தைய காங்கிரஸ் – ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், இந்தியக் காவலர்களில் பெண்களின் எண்ணிக்கை, 2010இல் 4.2% ஆக இருந்தது. 2014இல் அது 6.1%ஆக உயர்ந்தது. மோடி அரசின் கீழ், 2017இல் 7.2%ஆக அதிகரித்துள்ளது. இது குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சி அல்ல.
- பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தற்பாதுகாப்பை அறிமுகப்படுத்தல்.
இன்றைய நிலை: 2015ஆம் ஆண்டு முதல் 2018 வரை, சமக்ரா சிக்ஷா திட்டத்திற்குக் கீழ் தற்காப்புக் கலையைப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்காக, நாடுமுழுவதும் 1.7 லட்சம் பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தற்காப்புப் பயிற்சிக்காக, ஒரு பள்ளிக்கு ரூ. 9,000 நிதி ஒதுக்கப்பட்டது.
- பெண்களுக்கான நடமாடும் வங்கியை (mobile bank)அமைத்தல்.
இன்றைய நிலை: 2013ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெண்களுக்காக பாரதிய மஹிளா வங்கியை அறிமுகப்படுத்தியது. மோடி அரசாங்கம், பெண்களுக்கான புதிய வங்கியையோ, நடமாடும் வங்கிகளையோ தொடங்கவில்லை. ஆனால், 2017இல் பாரதிய மஹிளா வங்கியின் வீச்சை விரிவுபடுத்துவதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் அதை இணைத்தது.
- பெண்களுக்கான வியாபார உதவி மையம் அமைத்தல்.
இன்றைய நிலை: அப்படி ஒரு மையம் அமைக்கப்படவே இல்லை.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் “பெண்களுக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்” கொண்ட தொகுப்பை அமைத்தல்.
இன்றைய நிலை: பெண்களால் நடத்தப்படும் மாவட்ட அளவிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொகுப்பு எதுவும் நிறுவப்படவில்லை.
- அங்கன்வாடி ஊழியர்களின் வேலை செய்யும் நிலையை மறுஆய்வு செய்தல். அவர்கள் ஊதியத்தை மேம்படுத்தல்.
இன்றைய நிலை: நவம்பர் 2018இல், அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பளம் ரூ. 3,000இலிருந்து ரூ. 4,500ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், பல ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. மேலும், அவர்கள் வேலை நிலையிலும் எவ்வித மாற்றமும் இல்லை. குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறும் வகையில் அரசு ஊழியர்களாகத் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்துவருகின்றனர். முந்தைய அரசுகளைப் போலவே, மோடி அரசும் இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து, அங்கன்வாடி ஊழியர்களைத் தன்னார்வலர்களாகவே வகைப்படுத்துகிறது.
- சொத்துரிமை, திருமண உரிமை மற்றும் சேர்ந்து வாழும் உரிமை (cohabitation rights) ஆகியவற்றில் பாலின வேறுபாடுகளை அகற்றுதல்.
இன்றைய நிலை: ஆகஸ்ட் 2018இல், திருமணத்திற்குப் பிறகு பெறப்படும் சொத்துக்களில் சமமான பங்கை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது, ஆனால் அதை அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. திருமண உரிமைகள் விஷயத்தில், முத்தலாக்கைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தவர்களை ஆதரித்தது. உச்ச நீதிமன்றம் முத்தலாக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று ஆகஸ்ட் 2017இல் தெரிவித்தது. ஓராண்டுக்குப் பிறகு, முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக ஆக்கும் சர்ச்சைக்குரிய அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இதைச் சில பெண்கள் குழுக்கள் எதிர்த்தன. இது தேவையற்றது என்றும், பாகுபாடானது என்றும், முஸ்லிம் பெண்களுக்கு இது ஒப்புதல் இல்லை என்றும் தெரிவித்தன.
- தலித்தின மக்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், குடிசைவாசிகள் ஆகியோர் மீது கவனம் செலுத்தும் வகையில் பெண்களுக்கான சிறப்பு வயதுவந்தோர் கல்வியறிவுத் திட்டத்தைத் தொடங்குதல்.
இன்றைய நிலை: அப்படி ஒரு முயற்சி எடுக்கப்படவில்லை.
- பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான கடன், குறைந்த வட்டியில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தல்.
இன்றைய நிலை: பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான வட்டி விகிதம் 11.5%-14%இலிருந்து 7%ஆக, 2013ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் 2016-’17 வழிகாட்டுதல்களின்படி, வட்டி விகிதம் 7% ஆகவே உள்ளது.
ஆரிஃபா ஜோஹரி
நன்றி: ஸ்க்ரால்.இன்
தமிழில்: ஆஸிஃபா