அன்பார்ந்த டிடிவி தினகரன்,
இன்றைய இளம் தலைமுறை உங்களை இப்போதுதான் அறிகிறார்கள்.. ஆனால், என்னைப் போன்ற நடுத்தர வயதில் உள்ள வாக்காளர்களுக்கு, உங்களை தொண்ணூறுகளிலேயே தெரியும். சொல்லப்போனால் ஜெயலலிதாவின் முதல் பினாமியாகவே உங்களை நாங்கள் அறிவோம். லண்டன் விர்ஜின் தீவுகளில் நீங்கள் டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், பான்யன் கீ இண்டஸ்ட்ரீஸ், டர்ன் கீ இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் மூன்று நிறுவனங்களைத் தொடங்கி, ஹாப்ஸ்க்ராப்ட் ஹோல்ட் ஹோட்டல் மற்றும், ஸ்லேலி ஹால் எஸ்டேட்ஸ் என்ற இரு ஹோட்டல்களை 300 கோடி ரூபாய்க்கு (1995 மதிப்பில்) வாங்கியதும், அமலாக்கப் பிரிவு, இந்த முதலீடுகளை கண்டுபிடித்து, இது குறித்து வழக்கு பதிவு செய்ததும், பின்னர் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இதற்காக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்ததும், 1998ல் நீங்கள் இந்த ஹோட்டலை விற்று, தடயமே இல்லாமல் செய்ததும், இன்றைய இளைய தலைமுறை அறியாதது.
அதன் பின்பு, இந்த வழக்குக் காரணமாக ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு போடப்பட்டு அது 8 ஆண்டுகள் தாமதமானதும், பின்னர் திமுக அரசு, லண்டன் ஹோட்டல் வழக்கை வாபஸ் பெற்ற வரலாறையும் இன்றைய தலைமுறை அறியாது.
இன்று உங்களை உங்கள் ஆதரவாளர்கள் திராவிடச் செல்வர் என்று அழைக்கிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் மன்னார்குடி மாபியாவின் ஒரு பிரதிநிதியே.
ஜெயலலிதாவுக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும் மன்னார்குடி மாபியா கூட்டத்திலிருந்து ஒருவர் செல்லப் பிள்ளை ஆவார். அப்படி சில காலம் அவர் செல்லப் பிள்ளையாக இருந்தபோதுதான் நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனீர்கள். பின்னர் ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போனவர்கள் காணாமல் போவது போல நீங்களும் காணாமல் போனீர்கள்.
ஜெயலலிதா இறந்த பிறகு, ஓ.பன்னீரசெல்வத்தை, முதல்வராக்கினார் மோடி. அது வரை ஜெயலலிதாவின் பணிப்பெண்ணாக இருந்ததே போதும் என்று நினைத்திருந்த சசிகலாவுக்கு, நாம் ஏன் ஆளக் கூடாது என்ற எண்ணம் வந்ததனால், அவரை அதிமுகவின் அடிமைகள் அனைவரும் சேர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக்கினார்கள். அது வரை உச்சநீதிமன்றத்தில் மீளா உறக்கத்தில் இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பின் மேல் முறையீடு, திடீரென்று உயிர்த்தெழுந்து அந்த வாரமே தீர்ப்பு வந்தது. உங்கள் குடும்பத்தாரான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்ற தீர்ப்பு உறுதி செய்யப்பட்டு, மூவரும் சிறை சென்றனர்.
முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வம், உத்தமர் வேடமிட்டு, தர்மயுத்தம் தொடங்கினார். பன்னீர்செல்வம் பிஜேபியின் பிடியில் உள்ளார் என்பதை அறிந்து, ஆட்சியை ரிமோட் கண்ட்ரோல் மூலம் நடத்தலாம் என்ற எண்ணத்தில்தான், நீங்களும், சசிகலாவும் சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினீர்கள். எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது ஒரு குறுகிய கால ஏற்பாடு என்று நினைத்தே, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிட்டீர்கள். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட, நீங்கள் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டீர்கள்.
அந்த இடைத்தேர்தலில் பணம் எப்படி ஆறாக பெருக்கெடுத்து ஓடியது என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து கொண்டிருந்த போது அவரது உதவியாளர் வீட்டிலிருந்து கற்றைக் காகிதத்தை தூக்கி வெளியில் வீசினார். ஊடகங்கள் அந்தக் காகித விவரங்களை பதிவு செய்து கொண்டன. அவற்றை வெளியிடவும் செய்தன. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட, அனைத்து அமைச்சர்களும், வாக்காளர்களுக்கு எவ்வளவு பணம் விநியோகிக்க வேண்டும் என்ற அந்தக் காகிதத்தில் இருந்த பட்டியலே ஊடகங்களில் வெளியானது. இந்த லஞ்சப் பட்டியல் உங்கள் சம்மதம் இல்லாமல் தான் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதை நான் நம்ப தயாராக இல்லை. அதன் பிறகு, ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பது வரலாறு.
ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக அடிமைகள் எப்படி விசுவாசமாக இருந்தார்களோ, அதே போல எடப்பாடி பழனிச்சாமி மற்றும், இதர அமைச்சர்கள் விசுவாசமான அடிமைகளாக இருப்பார்கள் என்பது நீங்களும் சசிகலாவும் போட்ட தப்புக் கணக்கு. அந்த நம்பிக்கையில்தான், அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் மூன்று கோடியைத் தரத் தயாராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினீர்கள்.
ஆனால், ஜெயலலிதா இல்லாத நிலையில் கிடைத்த அதிகாரமும், பணமும், அதிமுக அமைச்சர்களை மதுவுண்ட குரங்குகளாக மாற்றியது. ஜெயலலிதா இருந்தபோது இருந்த நடைமுறை போலவே, அமைச்சர்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு 100 ரூபாயிலும், 75 ரூபாயை உங்கள் குடும்பத்துக்கு கொடுத்து விட்டு, 25 ரூபாயை அமைச்சர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய ஏற்பாட்டுக்கு அடிமை அமைச்சர்கள் தயாராக இல்லை. ஜெயலலிதா இல்லாத நிலையில், புதிதாக கிடைத்த சுதந்திரம், அதிகாரம் ஆகியவை அவர்களை இறக்கை கட்டி பறக்க வைத்தது. தலைகொழுத்து ஆடினார்கள். இன்று வரை ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படியாவது பிஜேபியோடு இணக்கமாகி விடலாம் என்று நீங்களும் கடும் முயற்சிகள் எடுத்தீர்கள். அந்த நம்பிக்கையில்தான், பிஜேபி கேட்காமலேயே, குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், நீங்கள் பிஜேபி வேட்பாளர்களுக்கு அளித்த ஆதரவு. அதன் பிறகு, மோடி, உங்கள் குடும்பத்தையே அழித்து விட வேண்டும் என்று 1300க்கும் அதிகமான வருமான வரித் துறை அதிகாரிகளை வைத்து, உங்கள் குடும்பம் மற்றும் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வைத்தார். உங்கள் மீது இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நீங்கள் கைது செய்யப் பட்டீர்கள்.
இதற்கு பின்னர்தான் நீங்கள் உறுதியான பிஜேபி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தீர்கள் என்று நான் அவதானிக்கிறேன். ஆர்.கே நகரில் டிசம்பர் 2018ல் நடந்த இடைத் தேர்தலில், 40 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்கு பெற்று, சுயேட்சையாக நீங்கள் பெற்ற வெற்றியை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆளும் அதிமுக, ஒவ்வொரு வாக்காளருக்கும் 6000 ரூபாயை கொடுத்தது என்பது எல்லோரும் அறிந்தது தான். திமுகவும் கடுமையாகத்தான் போராடியது. திமுகவை பின்னுக்கு தள்ளி, அதிமுகவையும் வீழ்த்தி, நீங்கள் பெற்ற வெற்றியை நான் உதாசீனப்படுத்தவில்லை.
ஆளும் அதிமுகவினர் உங்களை கண்டு எப்படி அஞ்சுகிறார்கள் என்பது ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தெரிந்தது. கிரிக்கெட் பேட் உள்ளிட்ட நீங்கள் கேட்ட பல சின்னங்களை தேர்தல் ஆணையத்தால் கொடுக்க விடாமல் தடுத்தார்கள். தினகரன் என்ற பெயரில் பல சுயேட்சை வேட்பாளர்களை நிறுத்தினார்கள். பிரச்சாரம் முடிந்ததும் தேர்தலுக்கு முதல் நாள், சசிகலா குடும்பம்தான் ஜெயலலிதாவை கொலை செய்தது என்ற துண்டறிக்கைகளை, தொகுதி மக்களிடம் விநியோகித்தார்கள். அதையும் மீறி நீங்கள் வெற்றி பெற்றது, மக்கள், உங்களுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்று நினைத்ததாலேயே.
இத்தனை இடர்களையும் கடந்து, இன்று 2019 தேர்தலில், இரண்டு பெரிய கூட்டணிகளையும் எதிர்த்து களம் காண முடியும் என்று நம்பிக்கையோடு களமிறங்கி உள்ளதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்.
நீதிபதி ஆறுமுகசாமியை வைத்து, ஜெயலலிதா இறந்ததற்கு காரணம், சசிகலாதான் என்று நிறுவ முயற்சி நடந்து வருகிறது. இரட்டை இலை சின்னம் வேண்டும், அல்லது குக்கர் சின்னம் வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்த வழக்குகளில், உங்களுக்கு எதிராக தீர்ப்பு வர வேண்டும் என்று பிஜேபி, அதிமுக இரண்டு கட்சிகளும், கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன. அந்த முயற்சிகளையெல்லாம் கடந்து இன்று பரிசுப் பெட்டி சின்னத்தை பெற்றுள்ளீர்கள்.
உங்களின் தேர்தல் அறிக்கை பல வர்வேற்கத்தக்க அம்சங்களை கொண்டுள்ளது. அதில் குறிப்பாக என்னைக் கவர்ந்தவை, காவிரி டெல்டா பகுதியில், எந்த விதமான திட்டங்களுக்கும் அனுமதி கிடையாது என்பது. நீங்களும் தஞ்சை பகுதியை சேர்ந்தவர் என்பதால், அப்பகுதி விவசாயிகளின் துயரங்களையும், விளை நிலங்கள், துரப்பண பணிகளால், விளை நிலங்கள் எப்படி பாழாகியுள்ளன என்பதையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் உணர்ந்ததால் இதை அறிக்கையில் சேர்த்துள்ளீர்கள் என்றே நான் கருதுகிறேன்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய பொருட்களுக்கு, தமிழகத்தில் அனுமதி கிடையாது என்பது என்னைக் கவர்ந்த மற்றொரு முக்கிய விஷயம். தாராளமயமாக்கலுக்கு பிறகு, மூன்றாம் உலக நாடுகளில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்பனை செய்ய, பன்னாட்டு நிறுவனங்கள் கடும் முயற்சி எடுத்து வரும் நிலையில், இந்தக் கோரிக்கை மிக முக்கியமானது.
தமிழகத்தில், மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி கிடையாது என்ற உங்கள் தேர்தல் அறிக்கை, துணிச்சலானது. ஆனால், தமிழகத்தின் டாஸ்மாக்குக்கு அதிக அளவில் மலிவு விலை மதுபானங்களை இன்று வரை வழங்கி வருவது, உங்கள் உறவினர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலை என்பது உறுத்தத்தான் செய்கிறது. மது விற்பனையை அரசு கையகப்படுத்தும் திட்டத்தை ஜெயலலிதா அறிமுகப் படுத்திய கையோடு மிடாஸ் மதுபான ஆலை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தமிழகத்தின் இரு பெரும் மது உற்பத்தி ஆலைகளை நடத்தி வரும், டி.ஆர்.பாலு மற்றும், ஜெகதரட்சகனை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான திமுக இந்த வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்பதையும் இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
உங்களுக்கு ஆதரவு தரலாம் என்று நினைக்கும் வாக்காளர்களை உறுத்துவது, நீங்கள் இன்னும் மன்னார்குடி மாபியாவின் பிரதிநிதி என்ற காரணத்தினால்தான். எண்பதுகளின் இறுதியில், வீடியோ கேசட் ப்ளேயர் மற்றும் வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு விடும் தொழில் மிகவும் பரபரப்பாக தமிழகமெங்கும் நடந்து வந்தது. அப்படி வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தவர்தான் சசிகலா என்பதும் அவர் கணவர் நடராசன், தமிழக அரசில் ஒரு பொதுத் தொடர்பு அதிகாரியாகத்தான் இருந்து வந்தார் என்பதும் தமிழகம் அறிந்தது. ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு கொடுத்து, நட்பாகியிய சசிகலாவுக்குத்தான் இன்று உலகம் முழுக்க எத்தனை சொத்துக்கள்? அவர் சொத்து வாங்காத மாநிலம் இந்தியாவில் உண்டா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். 1000 கோடி ரூபாய் ஜாஸ் சினிமா தியேட்டர்கள் உட்பட, மன்னார்குடி மாபியாவின் சொத்துக்களின் மதிப்பை பட்டியலிட்டால் தலை சுற்றுகிறது. உங்கள் பெயரில் அந்த சொத்துக்கள் இல்லாவிட்டாலும், அந்த சொத்துக்களுக்கும், எனக்கும் சம்பந்தமே இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?
ஆனால் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் நம்பிக்கையை பெற்றவன் சொல்வதுதான் வேதவாக்கு.
1996 சட்டப்பேரவை தேர்தலில், பர்கூரில் ஜெயலலிதாவே தோற்றபோது, ஜெயலலிதாவின் கதை இதோடு முடிந்தது என்றே கருதினேன். ஏனென்றால் அப்போது வீசிய ஜெயலலிதா எதிர்ப்பு அலை அத்தகையது. ஆனால் இரண்டே ஆண்டுகளில், 1998ல் நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், ஜெயலலிதாவுக்கு 18 எம்பி தொகுதிகளை அள்ளித் தந்தனர் தமிழக மக்கள்.
இரண்டு பெரிய கூட்டணிகள் தமிழகத்தில் வலுவாக அமைந்துள்ள நேரத்தில், கூட்டணி இல்லாமல் துணிச்சலாக களமிறங்கியதற்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள், ஆர்.கே நகரைப் போல தமிழமெங்கும் உங்களுக்கு ஆதரவு தருவார்களா என்பதை மே 23 விடை சொல்லும்.
இந்தியா ஜனநாயக நாடு. ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும், தவறிழைத்தவர்களை,, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை மக்கள் தண்டிக்கத் தவறுவதில்லை. அதே நேரத்தில் புதியவர்களுக்கு வாய்ப்புத் தரவும் தயங்குவதில்லை. நீங்கள் வெற்றி பெற்றால், நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே உங்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்ததைப் போல, மீண்டும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை கொள்ளையடிக்க அனுமதித்தீர்கள் என்றால், மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.
2019 தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்.
அன்புடன்
ஒரு பாமர வாக்காளன்.
சவுக்கு சங்கர் அவர்கள் முன்பு போல் சிரத்தையுடன் வேளையில் ஈடுபடுவதாக தெரியவில்லை. லண்டன் VIRGIN தீவு என்று UK விலோ, UK அருகிலோ எங்கு தேடினாலும் கிடைக்காது.லண்டன் சென்று ஆவணங்கள் தேடினால் கிடைக்காது.
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது 90 களின் இறுதி வரை மாபியாவின் சொத்து கணக்கு.
தற்போது உள்ள கணக்கை சரிபார்க்க இயலாது.
மாமிசம் சாப்பிட்டு காட்டில் வாழும் மிருகங்கள் சைவ உணவு சாப்பிடும் என நினைப்பது முட்டாள்தனம். சவுக்கு சங்கர் மீது நான் இதுவரை மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். சமீப காலமாக நீங்கள் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் மீது அவதூறு பரப்புவதாக அறிந்து வேதனை படுகிறேன். திருச்சியில் மக்கள் அதிகாரம் நடத்திய பொது கூட்டம் நடத்தியதை பற்றியும் எதுவுமே செய்தி வெளியிடவில்லை.! ஏன் ? எனது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என எதிர் பார்க்லாமா!.
சம்பத். கோவை.
advocatepsampath@gmail.com