மக்களவைக்கு அதிக எம்பிகளை அனுப்பி வைக்கும் சில மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான வாய்ப்பு மோசமாக இருக்கிறது. இது, மக்களவை தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு உள்ள தலைவலிகளில் ஒன்று தான்.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பிகார், தமிழகம் ஆகிய ஐந்து மாநிலங்கள், மக்களவை இடங்களில் 249 தொகுதிகள் அதாவது 45 சதவீத இடங்களைக் கொண்டிருக்கின்றன. 2014ல் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்த மாநிலங்களில் 187 இடங்களை வென்றன. இப்போது புதிதாக தேஜகூவில் இணைந்திருக்கும் அதிமுக வென்ற இடங்களும் இதில் அடங்கும்.
சி-ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், பிகார் ஆகிய மாநிலங்களில், பிரதமர், முதல்வர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எனப் பல்வேறு மட்டங்களில் பாஜக அதிருப்தியை எதிர்கொண்டிருப்பதை உணர்த்துகிறது. இந்த மாநிலங்களில் தேஜகூவுக்கு 85 இடங்கள் வரை குறையும் வாய்ப்பிருப்பதாக சி.-ஓட்டர் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
மேற்கு வங்கத்தில், பாஜகவின் எழுச்சி, மாநில முதல்வர் மம்தா பானர்ஜியாலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்காலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் ஒரே பெரிய மாநிலம் பிகார்தான். இங்கு பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமாரின் செல்வாக்கு தேஜகூவுக்கு அனுகூலமாக இருக்கலாம். ஆனால் இங்குகூட, தேஜகூவின் வெற்றி மேம்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
ஐந்து மாநிலங்களின் நிலையை விரிவாகப் பார்க்கலாம்:
உத்தரப் பிரதேசம்
2014இல் தேஜகூ ஆட்சியைப் பிடிக்கக் காரணம், உத்தரப் பிரதேசத்தை முழுமையாகக் கைப்பற்றியதுதான். மாநிலத்தின் 80 இடங்களில் 73 இடங்களைக் கூட்டணி வென்றது.
ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சிக்கு எதிரான தன்மையைப் பல்வேறு மட்டங்களில் பாஜக எதிர்கொள்கிறது. மோடி மீதான திருப்தி 43.9 சதவீதமாக இருப்பதாக சி-ஓட்டர் தெரிவிக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, மோடியின் செல்வாக்கு விஷயத்தில் உத்தரப் பிரதேசம் 16ஆவது இடத்தில் உள்ளது.
எனினும் 43.9 சதவீத திருப்தி விகிதம் என்பது கணிசமானதுதான்.
மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மோசமான செல்வாக்குதான் பாஜகவுக்கு உண்மையில் கவலை அளிக்கும் விஷயமாகும். அவர் மீதான திருப்தி 22.2 சதவீதமாக இருக்கிறது. கருத்து கணிப்பு நடத்தப்பட்ட 25 மாநில முதல்வர்களில் அவர் 21ஆவது இடத்தில் உள்ளார்.
உத்தரப் பிரதேச எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் – இவர்களில் பெரும்பாலானோர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். இவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது. இவர்கள் மீதான திருப்தி முறையே 8.2 சதவீதம், 11.8 சதவீதமாக இருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு இன்னொரு பெரிய பிரச்சினை, 2014 மக்களவைத் தேர்தல், 2017 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது பெருமளவு ஒன்றுபட்ட எதிர்கட்சிகளை அது சந்திப்பதுதான். மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைத்துள்ளன.
இது தவிர, கிழக்கு உத்தரப் பிரதேசப் பொதுச் செயலாளராக காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவின் வருகை காங்கிரஸ் கட்சியின் நிலையை மேம்படுத்த வாய்ப்புள்ளது.
பாஜகவுக்கு எதிரான அதிருப்திகள், எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, 2014, 2017 தேர்தல்களில் பெற்ற வாக்கு விகிதம் இப்போது குறைய வாய்ப்புள்ளது.
2014 தேர்தலில் பெற்ற இடங்களில் 44 இடங்கள் குறைந்து பாஜக வெல்லக்கூடிய தொகுதிகள் 29ஆக இருக்கும் என சி-ஓட்டர் தெரிவிக்கிறது.
மகாராஷ்டிரம்
48 எம்பிகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலம், தேஜகூவுக்கு உத்தரப் பிரதேசம் போல அத்தனை மோசம் அல்ல. இங்கு பிரதமர் மீதான திருப்தி 47.9 சதவீதமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் மகாராஷ்டிரா 14ஆவது இடத்தில் உள்ளது.
மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 33.9 சதவீதத்துடன் மோசமான நிலையில் இருக்கிறார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள 48 எம்பிக்களில் 41 பேர் பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சியான சிவ சேனாவையும் சேர்ந்தவர்கள். இந்த மாநிலத்தின் எம்பிக்கள் மீதான திருப்தி 35.8 சதவீதமாக, மாநிலங்களில் 4ஆவது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது. சி-ஓட்டர் கருத்துக் கணிப்பின்படி, மாநிலத்தில் தேஜகூ 35 இடங்களை வெல்லலாம். 2014 தேர்தலைவிட இது ஏழு இடங்கள் குறைவு.
தமிழ்நாடு
தேஜகூவுக்கான மோசமான மாநிலமாக தமிழகம் அமைகிறது. இங்கு பிரதமர் மீதான திருப்தி 2.2 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. மாநிலங்களிலேயே இதுதான் மோசமானது.
பாஜக தவறான கூட்டணியை அமைத்திருப்பதாகவும் கருதப்படுகிறது. மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான திருப்தி நாட்டிலேயே மிகவும் குறைவாக 7.7 சதவீதமாக இருக்கிறது.
எம்பிகள் மீதும் அதிருப்தி இருக்கிறது. அனைத்து 39 எம்பிகளுமே இப்போது தேஜகூவைச் சேர்ந்தவர்கள். எம்பிகள் மீதான திருப்தி -1.5 சதவீதமாகும். நாட்டிலேயே எதிர்மறை திருப்தி விகிதம் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு.
எம்எல்ஏக்கள் விஷயத்தில் இது கொஞ்சம் பரவாயில்லை. 9.9 சதவீதம். ஜம்மு காஷ்மீருக்கு அடுத்த நிலை இது.
தமிழகத்தில் தேஜகூ மண்ணைக் கவ்வலாம் என சி-ஓட்டர் கருத்துக் கண்ப்பு தெரிவிக்கிறது. ஐந்து இடங்களை மட்டுமே பெறலாம். கடந்த தேர்தலில், அதிமுக, பாஜக, பாமக ஆகியவை வென்ற இடங்கள் 39.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 85 இடங்களை இழக்கலாம்.
மேற்கு வங்கம் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களின் சாதக நிலை மிகவும் சொற்பமானதாகவே இருக்கிறது.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கம் பாஜகவுக்கு வேறு விதமான பிரச்சினையை அளிக்கிறது. இங்கு மோடியின் மீதான திருப்தி பரவாயில்லை. பாஜகவும் வளர்ந்து வருகிறது. ஆனால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் அவரது கட்சி திரிணாமூல் காங்கிரஸும் பாஜகவுக்கு வலுவான எதிர்ப்பை முன்வைக்கின்றன.
சி-ஓட்டர் கருத்துக் கணிப்பின்படி, பிரதமர் மீதான திருப்தி இங்கே 43.2 சதவீதம். இது மகாராஷ்டிரத்தைவிடச் சற்று குறைவு. ஆனால், ஆனால் தென் மாநிலங்களைவிட அதிகம். எனினும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, 45.6 சதவீத திருப்தியுடன் முதல்வர்கள் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளார்.
எம்பிக்கள் மீதான திருப்தி – பெரும்பாலானோர் திரிணாமூல் கட்சியினர் – 34.3 சதவீதமாக இருக்கிறது. தேசிய அளவில் இது 8ஆவது இடம்.
சி-ஓட்டர் கருத்துக் கணிப்பின்படி, மாநிலத்தில் பாஜகவின் நிலை 2 இடங்களிலிருந்து 8ஆக உயரலாம். திரிணாமூல் காங்கிரஸ் 2014இல் வென்ற 34 இடங்களை வெல்லலாம்.
ஆனால், இந்தி பேசும் மாநிலங்களில் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய இந்த மாநிலத்தை பாஜக எதிர்பார்ப்பதால், கட்சி வெறும் 6 கூடுதல் இடங்களுடன் திருப்தி அடைய முடியாது.
பிகார்
இருப்பினும், பிகாரில் மோடி, நிதிஷ் குமார் இருவருமே செல்வாக்கு பெற்றுள்ளனர். மோடி மீதான திருப்தி 50. 3 சதவீதமாகவும், நிதிஷ் குமார் மீதான திருப்தி 55. 3 சதவீதமாகவும் இருக்கிறது. முதலவர்கள் பட்டியலில் நிதிஷ் 6ஆவது இடத்தில் உள்ளார்.
எம்பிக்களைப் பொறுத்தவரை, பிகார் 23.7 சதவீதத்துடன் 14ஆவது இடத்தில் உள்ளது. பெரும்பாலான எம்பிகள் தேஜகூவைச் சேர்ந்தவர்கள்.
மோடி, நிதிஷ் ஆகியோரின் செல்வாக்கு தேஜகூவுக்கு உதவும் எனும் நிலை இருந்தாலும், 2014இல் கட்சி வென்ற 31 இடங்கள் என்னும் நிலையைப் பெரிதாக மேம்படுத்திக்கொள்ள முடியாது.
சி-ஓட்டர் கணிப்பின்படி, பிகாரில் பாஜக 40இல் 36 இடங்களை வெல்லலாம். 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது கூட்டணி சாதகமான நிலையில் உள்ள வெகு சில மாநிலங்களில் ஒன்றாக இது உள்ளது.
ஐந்து பெரிய மாநிலங்களில் தேஜகூ 113 இடங்களை வெல்லலாம்.
புல்வாமா தாக்குதலின் தாக்கம் தீவிரமாக இருந்தபோது இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு தேஜகூ நிலை மோசமாகியிருக்கலாம். மேலும் ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத்துக்கு வாக்குறுதி அளித்ததன் மூலம் காங்கிரஸின் நிலை சற்று மேம்பட்டிருக்கிறது.
ஆதித்ய மேனன்
நன்றி: தி க்வின்ட்